மே 2025
நிமிர்ந்து வா தமிழா !
உலகம் கைவிரிக்க
துரோகம் தலையெடுக்க
பகை நாடுகள்
படை கொடுக்க
பன்னாடுகள் கூடிப்
படையெடுத்த நேரம்…
பிஞ்சுக் குழந்தைகளையும்
பிய்த்துப் போட்ட கோரம்…
நச்சுக் குண்டுகளால்
நரகமான தேசம்…
நெல்லாடிய நிலமெங்கும்
நிறைந்துகிடந்த தேகம்…
பாய்ந்து வரும்
பாதரச குண்டுகளால்
பதுங்கு குழிகளும்
சவக்குழிகள் ஆனதே !
உடமையிழந்து உரிமையிழந்து
உயிரையுமிழந்த துயரம்
உறவிழந்து உணர்விழந்து
அலறித்துடித்த சோகம்
ஏதுமற்றவர்களாக ஏதிலிகளாக
செய்வதறியாத் தமிழ்ச்சமூகம்
ஆழிப்பேரலையிலும் நிகழவில்லையே
இதுபோன்றதொரு சேதம் ?!
தந்தையை தாயை
தமையனை தமக்கையை
தம்பியை மனைவியை
கனவனை மக்களை
மழலைகளை மழையாய்
பொழிந்திட்ட வேதிக்குண்டுகளுக்கு
இரையாய்க் கொடுத்து
தனியாய்த் தவித்த தவிப்பு !
வீடு காக்குமா
கூரை காக்குமா
காடு காக்குமா
மரம் காக்குமா
மறைவிடம் தேடிப்
பதறித் துடித்தவரைக்
காக்க இறைக்கு கூட
இரக்கமில்லையே ?
எந்த இனமும்
எமக்காக அழவில்லை !
எந்த மன்றமும்
எமக்காக வரவில்லை !
இனப்படு கொலைக்கு
நீதி கிடைக்குமா ?
ஈழத் தமிழருக்கு
நிம்மதி கிடைக்குமா ?
உலகம் நமக்காக
இறங்கி வராது !
உரிமைக் குரலின்றி
மாற்றம் நிகழாது !
பேசிக்கொண்டே இருப்போம்
உலகம் அறிந்திட !
உழைத்துக்கொண்டே இருப்போம்
ஈழம் விடிந்திட !
ஆறாத வடுக்களோடு
இந்திய ஒன்றியத் தமிழர்கள்…
தீராத துயரோடு
தமிழீழத் தமிழர்கள்…
அதிகாரம் நோக்கிய
பெரும் ஓட்டம்
அதுவே தந்திடும்
தமிழருக்கு ஏற்றம் !
தமிழர்கள் எல்லாம்
துணிவோடு ஒன்றிணைவோம் !
தலைமுறை வாழ்ந்திட
செயல்கள் செய்வோம் !
அகப்பகையால் அன்றாடம்
வீழ்ந்தது போதும் !
அறியாமையால் அடிமையாக
வாழ்ந்தது போதும் !
தலைவர்தந்த புலிக்கொடியை
ஏந்தித் திரள்வோம் !
தலை நிமிர்ந்து
நாம் தமிழராகத் திகழ்வோம் !
என்றிணைவோம் ஒன்றாக?
அன்றிருப்போம் நன்றாக!!
ஆழமாகச் சிந்திப்போம்!
ஈழத்தில் சந்திப்போம்!
திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.