ஏப்ரல் 2023
பனை தனைப் பாடும் பாட்டு…
பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய் பனைமரமே?
நான் வளர்ந்த காரியத்தை நாட்டாரே சொல்கிறேன்!
அறியாவிட்டால் சொல்லுகிறேன்! தெரியாவிட்டால் சொல்லுகிறேன்!
பாராமுகமா யிருக்காமல் பட்சமுடன் கேட்டிருங்கள்!
படுக்கப் பாய் நானாவேன்! பாய்முடையத் தோப்பாவேன்!
வெட்ட நல்ல விறகாவேன்! வீடுகட்ட வாரையாவேன்!
பட்டுப்போற பயிர்களுக்குப் பலத்த நல்ல ஏற்றமாவேன்!
அட்டடுக்குப் பெண்களுக்கு அடுப்பெரிய மட்டையாவேன்!
கட்ட நல்ல கயிறாவேன்! கன்று கட்டத் தும்பாவேன்!
பசுவணைக்குங் கயிறாவேன்! பால்தயிருக்கு உறியாவேன்!
வாருமட்டை நானாவேன்! வலிச்சல்களுந் தானாவேன்!
தொட்டிலுக்குக் கயிறாவேன்! துள்ளியாட ஊஞ்சலாவேன்!
கிணத்து சலம் மொண்டுவரக் கைத்தாம்புக் கயிறாவேன்!
பலத்த சுமை பாண்டங்கட்குப் புரிமனையுந் தானாவேன்!
ஏழைநல்ல மங்கலிக்கு ஏற்றகா தோலையாவேன்!
மங்கலியப் பெண்களுக்கு மஞ்சள்பெட்டி நானாவேன்!
பாக்கியமுள்ள பெண்களுக்குப் பாக்குப்பெட்டி நானாவேன்!
விருப்பமுள்ள பெண்களுக்கு வெற்றிலைப்பெட்டி நானாவேன்!
குணமுள்ள பெண்களுக்குக் குங்குமப்பெட்டி நானாவேன்!
பெரியோர்கள் தோள்மேலே திருப்புக்குடை நானாவேன்!
எழுதுகின்ற பிள்ளைகட்கு வண்ணநல்ல தடுக்காவேன்!
ஓதுகின்ற பிள்ளைகட்கு ஓலைத் தடுக்காவேன்!
நனைந்து வருவார்க்கு தம்பக்குடை நானாவேன்!
பசித்து வருவார்க்குப் பனம்பழமும் நானாவேன்!
பாலர் பெரியோர்க்குப் பனம்பதநீர் நானாவேன்!
சித்திரைக் கோடையிலே சிறந்த நல்ல நுங்காவேன்!
காளையர்க்கும் கன்னியர்க்கும் களைதீர்க்கும் விசிறியாவேன்!
கைப்பிள்ளைத் தாய்மார்க்குக் கருப்பங்கட்டி நான்தருவேன்!
வேலிகட்டக் கயிறாவேன்! விறகுகட்ட நாராவேன்!
மாலைபோட்டு சந்தனம்பூசி மடிநிறைய புத்தகம் வைத்துப்
பசங்கள் படித்துவர மங்களங்கள் பாடிவரக்
காம்பு நறுக்கியவர் கணுக்காம்பு வேரறுத்துப்
பக்கமிரு புறம்வாரிப் பல்வரிசைக் காம்பரிந்து
என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைபிடித்து,
வெள்ளிநெட் டெழுத்தாணி விவரமாய்ப் பிடித்தெழுதும்
அரிச்சுவடி என்னாலே! அடுக்காய்ப் பாடம் என்னாலே!
எண்சுவடி என்னாலே! குழிமாற்றும் என்னாலே!
தர்க்கங்கள் என்னாலே! சாத்திரங்கள் என்னாலே!
மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மனமறிவதும் என்னாலே!
வர்த்தகரும் வணிகருமே வழியறிவதும் என்னாலே!
காசுகூட்டிக் கழித்துவிடும் கணக்கறிவதும் என்னாலே!
பலசரக்கு மண்டிகளில் பத்திரமாய் நானிருப்பேன்!
கொடுக்கல் வாங்கல் உள்ளவர்க்குக் குறிப்புச்
சொல்லிக் கடனின்றிக் கச்சிதமாய் வாங்கி வைப்பேன்!
பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்!
காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்!
தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்!
கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்!
சீமந்த வாசலுக்குச் சீருடனே நான் போவேன்!
பிள்ளையொன்று பிறந்ததென்றால் பெருமையுடன் நான் போவேன்!
அரண்மனையில் நானிருப்பேன்! அரியணையில் நானிருப்பேன்!
மச்சுள்ளே நானிருப்பேன்! மாளிகையில் நானிருப்பேன்!
குச்சுள்ளே நானிருப்பேன்! குடிசைக்குள் நானிருப்பேன்!
எருமூட்டை குதிரையெல்லாம் ஏந்திக்கொண்டு நானிருப்பேன்!
ஏரிக்கரை மேலே நான் எந்நாளும் வீற்றிருப்பேன்!
எமலோகம் போனாலும் எல்லவர்க்குந் தெரியவைப்பேன்!
சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன்!
சகலமான காரியத்துக்கும் சாக்கிரதை யாயிருப்பேன்!
இத்தனைக்கும் உதவியென்று என்னை அவன் சிருட்டித்தான்!
கற்பக விருட்சமென காரண காரியத்தோடே பெயரிட்டான்!
ஊழியூழி காலமட்டும் உலகுதனி லேயிருந்து,
வாழிவாழி என்றுசொல்லி வரமளித்தார் வடிவேலும்!
(தென்மாவட்ட நாட்டுப்புறப்பாடல்)