ஏப்ரல் 2023
பெருநாள் நல்வாழ்த்துகள்!
முப்பது நாட்கள் முழுமதியாய் நோன்பிருக்க!
முழு மூச்சாய் இறைவனை நினைத்திருக்க!
நாவினில் இறைவனை முன் மொழிந்து!
நடுவானில் முதல் பிறையும் பார்த்து!
முத்தாய் முதல் நோன்பும் துறக்கும்!
முடிவில்லாப் பற்பல தொண்டுகளும் நடந்திடுமே!
ஐந்து வேளைத் தொழுகையென நாட்களும் நகர்ந்திட!
கனிந்த உள்ளத்துடன் முப்பதாம் நோன்பும் நெருங்கிட!
அந்தி வேளையும் அருகே வந்திட!
கதிரவன் மேற்கே மெல்லென மறைந்திட!
வண்ண மேகங்களும் வானில் தவழ்ந்திருக்க!
விண்மீனும் கண் சிமிட்டிக் காத்திருக்க!
நோன்பர்கள் நெடு வானைக் கணப்பொழுதும் பார்த்திருக்க!
வான்பிறையின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்க!
விண்ணில் பிறை மதியும் மெல்லெனத் தோன்றி வரும் வேளை!
மண்ணில் நோன்பர்கள் உள்ளத்தில் காண்பாரே ஈகைத் திருநாளை!
இறைவனின் பெருமை இறையில்லத்தில் ஒலித்திடுமே!
இறைவன் மிகப்பெரியவன் எனும் திருமந்திரம் விண்ணையும் எட்டுமே!
மக்கள் ஒருவரை யொருவர் ஆரத்தழுவிடுவார்!
அங்கே அவருள்ளமும் இறைவனைத் தொழுதிடுமே!
மாசில்லா மற்றற்ற மகிழ்ச்சியும் உள்ளத்தில் பெருகிடுமே!
உலகின் உயிர்களும் நலமுடன் உய்ய உள்ளமும் வேண்டிடுமே!
இறைவனின் அருளால் இயற்கையின் கருணையால்!
பிணியின்றி குறையின்றி இவ்வுலகமும் செழித்திடுமே!
வையத்தார் இதயத்தில் இடைவிடாத அன்பும் மலரட்டும்!
ஈகைத் திருநாளில் இல்லங்கள் தோறும் இன்பங்கள் சேரட்டும்!
நெஞ்சம் நிறைந்த பெருநாள் நல்வாழ்த்துகள்!!!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.