பிப்ரவரி 2024
பொங்கலோ பொங்கல்
தை பிறந்தால் வழி பிறக்கும்!
கை கொடுத்துத் தூக்கி நிறுத்தும்!
நா வெல்லாம் கரும்பு இனிக்கும்!
மா பலாவாழை பசி தணிக்கும்!
வயலில் பயிர் வளர்ந்து செழிக்கும்!
கயலும் நீரோடு துள்ளிக் குதிக்கும்!
நாரையும் கொக்கும் நின்று வெறிக்கும்!
நண்டும் கரையோரம் வளை பறிக்கும்!
நாடும் நானிலமும் வளம் கொழிக்கும்!
பாடும் தமிழ்ப்பாக்கள் சந்தம் இசைக்கும்!
மாடும் மலையேறும் கனலி இயற்கைக்கும்
ஓடும் மனமகிழ்ந்து நன்றி தெரிவிக்கும்!
உணவுதரு உழவர் நெகிழும் வரையும்!
வணங்கத் தமிழர் விரல் குவியும்!
பொழுதுமினி கூடிவர இருள் முடியும்!
அமுதுநிகர் தமிழர்க்கு நன்னாள் விடியும்!
துன்பமே விளைவித்த சதிக்கூட்டம் இளைக்கும்
இன்பமே நிரந்தரமென தமிழர்படை திளைக்கும்
சென்று சேரும்புகழ் எட்டுத் திசைக்கும்!
ஒன்று கூடும்தமிழர் பகை திகைக்கும்!
புலரி புகுந்திடப் போயிற்று கங்குல்!
அலரி தணியப் பொழிந்தது மங்குல்!
வளமை நிறையப் பிறந்தது தைத்திங்கள்!
இனிமை பெருகப் பொங்கட்டும் புதுப்பொங்கல்!
பானையில் பொங்கும் புத்தரிசிப் பொங்கல்!
தேனையே மிஞ்சும் தித்திப்புப் பொங்கல்!
தமிழ்ப் புத்தாண்டில் தையொன்றில் பொங்கல்!
தமிழர் தேசியத் திருவிழாவாம் பொங்கல்!
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.