நவம்பர் 2022
மறுவுரு நீ!
மறுவுரு நீ
தீப்புண் வலிகள் ஏற்று
தமிழரெமை நீங்கிச் சென்றாய் நீ
உளைக் காக்க இயலா ஆற்றாமைத் தீ
எம்முள் என்றும் தணியாது!
மூவுயிர் காக்க தன்னுயிர்
நீத்த அணங்கு நீ!
ஈகையின் மறுவுரு நீ!
ஊன் உயிர் பொருள் மறந்து
தன்னலம் துறந்த தூயவள் நீ!
துறவின் மறுவுரு நீ!
இனவுணர்வற்று உறங்கிக் கிடந்த
தமிழர் நெஞ்கள் காரிருள் நீக்கிய
புரட்சிப் பாவை நீ!
எழுச்சியின் மறுவரு நீ!
வலுவிழந்த அறமன்றத்தில் அறத்தின்
செப்பம் உரைத்தவள் நீ!
அறத்தின் மறுவுரு நீ!
தீயோர் நிறைவுலகில் தீமை வெல்ல
தீக்குள் இறங்கி தீயின் பாவங்கள்
நீக்கிய தீயினும் மேலான
தூய நிலை அடைந்தாய் நீ!
தூய்மையின் மறுவுரு நீ!
தமிழர் உள்ளத்துள் எஞ்ஞான்றும்
வைத்துப் போற்றும் நன்னிலை
அடைந்தாய் புளிதமகளே நீ!
உயர்நிலையின் மறுவுரு நீ!
தமிழர் மறவா ஓங்கு புகழ்
எமது கொற்றவையாய்
செல்வி செங்கொடி நீ!
தமிழின் மறுவுரு நீ!
திரு. மறைமலை வேலனார்,
சுபைல் மண்டலம்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.