சூலை 2025
மலையரசி
வானூயர்ந்த வடிவான
சோலைமலை நாடே!
வளம்பல செழிக்கும்
வண்ணத்தமிழ்ச் சேரநாடே!
மலையது மனதை
கொள்ளை கொள்ளுதே!
அந்தி வேளையில்
மதியும் மயங்குதே!
கணப்பொழுதில் கார்முகிலும்
கண்களைப் பறிக்குதே!
காண்போர் நெஞ்சையும்
அள்ளிச் சென்றதே!
தென்றலுக்குத் தூது
வான் மேகமோ!
மலையழகைத் தீண்டித்
தவழ்ந்து செல்லுதே!
பார்க்கும் திசையாவும்
பறவைகளின் பாட்டுச் சத்தம்!
பாடம் நூறு படிக்கலாம்
அதனிடம் நித்தம் நித்தம்!
வெண்மேகம் கார்முகிலாய்
உருமாறி நிற்குதே!
பொன்மாரி பொழிய
பூமியிடம் வரம் கேட்குதே!
கோடையில் பொழிவாய்!
குளிர் மழை தருவாய்!
குடகுமலைச் சாரலை
கொஞ்சம் தூவிச் செல்வாய்!
அருவியும் காவிரியாய்க்
கரைபுரண் டோடுதே!
நீரோடையும் நிலத்தின்
வளத்தைக் காக்குதே!
பட்டாடைப் பூட்டிய
பழந்தமிழர்ப் பெட்டகமே!
சோலைகளும் சூழ்ந்திருக்கும்
மலைகளின் கற்பகமே!
வாழ்வாங்கு உமது புகழ்
தரணியில் நிலைகட்டும்!
வருங்காலத் தலைமுறையும்
உன்னைப் போற்றட்டும்!
வாழியவே!
வாழியவே! மலையரசி வாழியவே!
வளமாய் நலமாய்
வையத்துள் நீயும் வாழியவே!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.