மே 2025
மீண்டு எழுவோம் !
காரிருள் சூழ்ந்த காணிநிலத்தே
எம் குருதியில் சிவந்த மண்ணில்
வெறும் கால்களில் விடுதலை தேடி
ஓடிக்கொண்டிருந்தோம்!
வயிற்றுப் பசியோ பிழைக்க
வழியோ தேடியில்லை
விடுதலை முதன்மை!
உயிர்த்தல் அடுத்து!
வீரம் விளைந்த எங்களது மண்
இன்னமும் அதே வீரத்தை
விளைவித்துக்கொண்டு
தான் இருக்கிறது!
தொடரும் எம் போராட்டத்தை அடக்க
உங்களது ஒடுக்குமுறைகளால்
ஓய்வற்ற அதிகார ஆதிக்கத்தால்
அதிநவீன ஆயுதங்களால் இயலாது!
எமக்கான விடுதலையின் வாயிலாகவே
அமைதிபெறும் எம் துவக்கு!
அடிமை வாழ்வினும்
விடுதலைச் சாவே எங்களது இலக்கு!
தமிழ் ஒலித்த வீதியெல்லாம்
தமிழர்களின் அவல ஓலங்கள்
ஓடியாடி திரிந்த குழந்தைகள்
ஒடுங்கிக் கிடக்கின்றன பதுங்குகுழிகளில்!
பொன்மேகம் சூடிய எம் வானில்
பலகாலமாய் போரிருள் சூழ்ந்தது!
அமைதியான எங்களின் தாய்நிலம்
ஆயுதங்களின் தேசமானது!
காக்கை குருவிகளின்
கூட்டுக்கத்தல்களில்
விடிந்த பொழுது – இப்போது
வெடிச்சத்தங்களில் தொடங்கியது
நந்திக்கடலின் மென்னலைகள்
தாலாட்ட ஈழத்திற்கே
உறக்கம் பிடிக்கவில்லை
மக்களோடு சேர்த்து மண்ணுக்கும்
அடிமைத்தனம் ஒவ்வாமை தான்!
ஆறிரண்டு மாதங்கள்
ஆறு தனி பருவங்கள்
வருசமெல்லாம் வசந்தம்
நிலமெங்கும் பசுமை
இருந்ததோர் பழநினைவாய்!
வயல்வெளிகளும் வன்னிக்காடுகளும்
உயர்ந்த பனை மரங்களும்
அலைபுரளும் கடற்கரைகளுமாக
எழில் ததும்பிய ஈழநிலமோ
பொலிவிழந்த பாதிக்கனவாய்!
அதனினூடே பாடினோம் அன்று
துவக்கிலும் இலக்கியத்திலும்
எம் விடுதலைக் கவிதைகளை!
பதுங்குகுழியினுள் மாணவர்கள்
புறநானூற்றில் புரட்டிக் கொண்டிருந்தார்கள்
எம் புலிகளின் வீரத்தை!
எல்லாவற்றிற்கும் பழகினோம்
ஏர் பிடித்த கை
துவக்கேந்திப் போர் புரிய !
வீரத்தை விதைத்து
வெற்றியை முளைக்க வைத்து
அறுவடை செய்தோம் விடுதலையை !
போர் செய்த கைகள்
மீண்டும் ஏர் பிடிக்க
துவக்கேந்திய தங்கைகள்
கைகளில் அறிவு விளக்கேந்த
நந்திக் கடலெங்கும் தமிழ்மீனவன்
வலை விரிக்க – போர்க்களங்கள்
வயல்வெளிகளாகச் செழிக்க
பதுங்குக் குழிகள் மூடிப்
பள்ளிகள் திறக்க – ஈழப்
பனைகளில் தேன் வழிய
பயமின்றி பட்டாம்பூச்சிகள் பறக்க
விடுதலைக் காற்றோடு வீதியெங்கும்
தமிழ் மட்டும் மணக்க – எம்
மாவீரத் தெய்வங்களின்
கனவெல்லாம் நனவாக
அதற்காகவேனும் நாங்கள்
மீண்டு எழுவோம்!
மீண்டு எழுவோம்!
மீண்டு எழுவோம்!
திரு. ப. காந்திமோகன்
செந்தமிழர் பாசறை – ஓமன்.