அக்டோபர் 2022
முதலும் முற்றும்!
தாயினுள் கருவாகி பனிக்குடம் நம்பைச் சுமந்ததுவே
அதுவுடைந்து தரணியில் தோன்றினோம் நாம்!
உள்ளம் களிப்புற்றாள் ஈண்டெடுத்த அன்னை
கைகளில் ஏந்தியே உவகைக்கொண்டார் தந்தை!
இரவெனப் பகலென உறங்குமாம் பிள்ளை!
உறங்காது விழிப்புடன் எப்போதும் காவாள் அன்னை!
பிணியறிந்து மருந்தும் பசியறிந்து புகாவும்
தன்னலமற்ற தாயவள் புகட்டுவாள்!
எவர் தேற்றினும் தணியாத பிள்ளையின் அழுகுரல்
அன்னையவன் ஆராரோ பாடிடவே அகமகிழ்ந்து அடங்குமாம்!
அன்னையின் கைகளில் உழன்றும் தவழ்ந்தும்
அமர்ந்தும் எழுந்தும் நடந்தும் நித்தம் வளருமாம் பிள்ளை!
நம் பிள்ளைப்பருவமதில் கண்ணிற்கு
அழகாய் வண்ண மையிட்டாள்
கார் கூந்தல் அதை வகிடெடுத்தாள்
நடைபயில காற் சலங்கை அணிவித்து
கொஞ்சும் ஒலி கேட்டுக் களித்தாள் அன்னை!
அறியாப் பருவம் அழகான மழலையாக
அடுத்த பருவம் துரு துரு குழந்தையாக
இளமைப் பருவமோ இளங்குமரராக
இல்லறம் பேணி இனியதாய் பிள்ளைகள் பிறக்க
பிறந்த பிள்ளையும் வளர்ந்து நிற்க
பெற்றோர் ஆகி பிறைநிலவாய் கண்கள் சுருங்கி
வரவாய் ஊன்றுகோலும் துணையாய் வந்தனவோ
முதுமை எய்தியும் தாயவள் இன்றி தவித்திடும் பிள்ளையாய்
தாயின் ஆரோரோ கேட்ட
செவிகள் இன்று யாராரோ பாடக் கேட்கின்றதோ
சலங்கையொலி கேட்டகால் நரம்பும்
இங்கே சங்கொலிக்கு மயங்கி மாண்டுபோனதோ
தாய்ப்பால் உண்ட தேகத்திற்கு இனி பசும்பாலோ !
மரணத்தின் பரிசு மரக்கட்டைத் தேரோ
தூக்கிச் சுமப்பதும் எவரெவரோ பாரமும் கூடவே இறக்கினரோ
பனிக்குடம் சுமந்து வந்த உடலைச்சுற்றி
நீர்ப்பானைக் குடம் சூழவே கிடத்தி வைத்தனரோ !
மரணக் குழியில் உடல்
கிடக்க மண்மூடி மானிட வாழ்க்கை முடிக்க
அன்று மண்ணை உண்டு வளர்ந்த உடல்
இறுதியில் மண் உண்ணும் நிலைதானோ !
அன்னையுள் துவங்கிய பயணம்
இயற்கையன்னையின் மடியில் முற்றுமோ !
நன்றி.
திரு. பா. வேல்கண்ணன்
துணைத்தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.