மே 2023
முள்ளிவாய்க்கால் முடிவல்ல!!!
மண்ணில் விழும் விதைகளெல்லாம்
புதைக்கப்படுவதில்லை! மாறாக அவை
விதைக்கப்படுகின்றன!
எம் வீரப்போராட்டமும்
புதைக்கப்படவில்லை! இங்கே
விதைக்கப்பட்டுள்ளது!
வேர்கொண்டு எழுவோம் மீண்டும்!
முள்ளிவாய்க்கால் முடிவல்ல!
தமிழின விடுதலையின் தொடக்கம்!!!
மண்ணில் விழும் சருகுகளெல்லாம்
வீணாவதில்லை! மாறாக அவை
மண்ணிற்கே வீரியந்தரும் உரமாகின்றன!
அது போல இம்மண்ணில்
உதிர்ந்த ஒவ்வொரு உயிரும்
விடுதலை விருட்சங்களை
வீறுகொண்டு வளர்க்கும் உரமாகியது!!
வேர்கொண்டு எழுவோம் மீண்டும்!
முள்ளிவாய்க்கால் முடிவல்ல!
தமிழின விடுதலையின் தொடக்கம்!!!
மண்ணில் விழும் எதுவும் மண்ணோடு மண்ணாகி,
மண்ணைப் பொன்னாக்கும் – அதுபோல
யாம் சிந்திய கண்ணீரும் செந்நீரும்
நாளை மலரும் ஈழப்பூக்களுக்கான தண்ணீரே!!
வேர்கொண்டு எழுவோம் மீண்டும்!
முள்ளிவாய்க்கால் முடிவல்ல!
தமிழின விடுதலையின் தொடக்கம்!!
திரு. காந்தி மோகன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.