மே 2025
வலிதீரா வடுக்கள் – மே 18
ஏவுகணைச் சோதனை
எளியவர் மீதோ!
வானத்தில் பொழிந்ததே
வெடிகுண்டு மழையும்!
சதுரங்க வேட்டையில்
செத்தது எம்மினமே!
மறந்து போகலாமோ
மறத் தமிழினமே?
சிதறுண்ட கட்டிடமும்
சவப்பெட்டி ஆனதே!
செம்பொழில் தேசமும்
சீர்குலைந்து போனதே!
சிறுபிள்ளையும் பசியால்
பாலுக்கு ஏங்கியதோ?
சிங்களரின் தோட்டாவிற்கது
இரையாகிப் போனதே!
பூக்காட்டில் ஆடிய
பிஞ்சுகள் சாக்காட்டிலே!
தமிழீழமே சிதைந்தது
நயவஞ்சகர் வேட்டிலே!
வெள்ளைக் கொடியேந்தி
எம்மக்கள் நின்றனரே!
அறமில்லா மாந்தரோ
அநியாயமாய்க் கொன்றனரே!
பிணந்திண்ணி கழுகிற்குப்
பிடித்ததெம் உறவுகளினுடலோ!
தாகந்தீர்க்கத் தேவை
தமிழர் குருதியோ!
மனிதநேயம் போற்றியோர்
மாண்டு போனதேனோ?
அவர் உயிர்வலியை
உலகத்தார் மறந்ததேனோ!
இரவுபகல் பாராதொலித்த
மரணத்தின் ஓலங்கள்!
இனியேனும் ஒழியட்டும்
இதுபோன்ற இனவழிப்புகள்!
உலகத் தமிழினமே
ஒன்றிணைவோம் வாருங்கள்!
நம் மண்ணிற்குப் பெற்றுத்தருவோம்
நலந்தரும் தீர்வுகள்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.