விடியல் ஆட்சி!
காட்டிற்குள் காய்ச்சி நாட்டிற்குள்
வருவது கள்ளச்சாரயம்!
நாட்டிற்குள் காய்ச்சி
வீட்டிற்குள் வருவது நல்லச் சாராயம்!
அரசிற்கு வருமானம் வந்தால்
நல்லச் சாராயம்!
அமைச்சருக்கு வருமானம் சென்றால்
கள்ளச் சாராயம்!
வீதியெங்கும் குடிப்பகம்
வீட்டுக்கொரு குடி மகன்!
நாட்டைக் காக்க மதுக்கடையில்
நாள்தோறும் ‘குடி’ மகன்!
விசமென்று தெரிந்தே
நித்தமும் உண்டு!
வீதியில் நாள்தோறும்
நிலைமறந்து உருண்டு!
வீரனாக வாழ்ந்த தமிழன்
வீரனால் வீழ்த்தப்பட்டான்!
வீரனுக்கும் வழியின்றி கள்ளச்
சாராயம் நாடிச் சென்றான்!
பசித்த பிள்ளைக்கு பால்
வாங்க காசுமில்லை!
பள்ளிக்கூடப் பிள்ளைக்கு
படிப்பிற்குப் பணமில்லை!
குடித்த சாராயம்
தொண்டைக்குள் விக்குதே!
குலவிளக்கை எண்ணித்
உயிர்காக்கத் துடிக்குதே!
கட்டியவள் கண்ணீர் விட்டுக்
கதறித் துடிக்க!
கட்டிய தாலிக்கு கள்ளச் சாராயம்
தீர்ப்பு எழுதியதே!
கல்விக்கு கண்
கொடுத்தவர் நாட்டிலே!
மாணாக்கரும் மதுவுடன்
சுற்றுகிறார் ரோட்டிலே!
ஊருக்கொருப் படிப்பகம்
திறந்தாரே ஏழைத் தலைவன்!
வீதிக்கொரு குடிப்பகம்
திறப்பவர் திராவிடத் தலைவன்!
பாட்டாளித் தேசமும்
பட்டினியால் சாகுது!
நாற்காலிச் சண்டையில்
நாடும் நாசமாகுது!
நாட்டு மக்கள் யாவரும்
தன்நிலை மறக்குது!
ஓட்டைக் கூறுபோட்டு
தேர்தலிலே விக்குது!
தேனாறு ஓடுமென்று
ஓலிவாங்கி கூவுது!
பாலாறு ஓடுமென்று
தெருவெங்கும் பாடுது!
மதுக்டையில் குப்பிக்கு
விலைப் பத்து ஏறுது!
குடித்துப் போட்டக் குப்பியில்
வீரன் புகழ் சேருது!
எதிர்காலக் குலக்கொழுந்தும்
விட்டில் பூச்சியாய் சாகுது!
எதிர்ப்பவரின் கைகளிலே
அரசு விலங்கைப் பூட்டுது!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.