மே 2023
விதைகளான உயிர்கள்!!!
உதிரம் சிந்தி உயிரைக் கொடுத்தோம்!
உணர்வைச் சுமந்து உயிர்களை விதைத்தோம்!
உண்ணா நோன்பிருந்தும் விடுதலையை உலகறியச் செய்தோம்!
உறக்கமின்றி நாள்தோறும் தமிழீழம் காத்து நின்றோம்!
நயவஞ்சகர் ஆடிய சதுரங்க ஆட்டமோ!
கொடியவர் நடத்திய கொடுங்கோல் ஆட்சியோ!
வெள்ளந்தி மக்களும் வெள்ளைக் கொடியேந்தி வந்தனரே!
வெறியர்களின் வேட்டைக்குப் பலியாகி மாய்ந்தனரே!
நச்சுக் குண்டுகளும் நாற்புறமும் பாய்ந்தனவே!
பார்க்கும் திசையெங்கும் மரணத்தின் ஓலங்களே!
பதுங்கு குழிகளே எங்கள் தலைமுறையின் பாடசாலைகள்!
அவைகள் கூறிடும் பல்லாயிரம் மாவீரர்களின் வீரக்கதைகள்!
எங்கள் பசியறிந்துச் சோறுமிட யாருமில்லை!
பச்சிளங் குழந்தைக்குப் பாலூட்டிடத் தாயுமில்லை!
கையேந்தி நின்றதில்லை ஒருவேளை சோற்றுக்கு!
உப்பில்லாக் கஞ்சியைத்தான் நித்தமும் குடித்து வாழ்ந்தோமே!
உலக வல்லாதிக்கமும் கைகட்டி வேடிக்கை பார்த்திட,
கருநாகங்களும் எம்மினம் மீது விடத்தை உமிழ்ந்ததே!
தேசமெங்கும் பிணக்குவியல் வீதியெங்கும் தேங்கிக் கிடந்ததே!
மாவீரர் உலவிய மண்ணும் மதியிழந்த மாந்தரின் கைகளிலே!
முள்வேலிக்குள் மூச்சுக்காற்றைச் சுவாசித்து நாங்களும் நகர்ந்திட,
முள்ளிவாய்க்காலின் கரையினிலே எம்மவர் முகங்கள் பல தொலைந்திட!
முடிவுரை தமிழருக்கு இல்லையென்பதற்கு எம் வரலாறே சாட்சி!
பேசாது நின்ற பூகோளமும் கண்டிடும் இனி தமிழினத்தின் மீட்சி!
களங்கள் பல கண்ட தமிழீழ மண்ணே!
காலங்கள் கடந்தாலும் மீட்போம் உன்னை!
உதிரம் சிந்தி உயிர்களை விதைத்தோம்!
உணர்வைச் சுமந்த தமிழ்ப்பேரினமாய் மீண்டெழுவோம்!
திரு.பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.