வெளிநாட்டு வாழ்க்கை!!!
தேய்பிறையாக நானும்
தேய்கிறேன் தோழி!
தேசம் கடந்து நானும்
வாழ்கிறேன் தோழி!
காலம் போனப் போக்கிலே
கால்கள் ஓடுதே!
காகிதப் பணத்தைத் தேடியே
வாழ்க்கை நகருதே!
கண்ணீர் விட்டுக் கண்ணீர்
விட்டு நானும் கரைகிறேன்!
காரணமின்றி வாழ்வை
எண்ணி நாளும் நோகிறேன்!
பாலைவனத் தேசத்திலே
என் பாதம் தேயுதே!
பாசமெனும் போரிலே
பணமும் வெற்றி காணுதே!
கானல் நீரைத் தேடியே
தாகம் தீர்க்கிறேன்!
கடலைத் தாண்டும் பறவையாக
கரைசேரத் துடிக்கிறேன்!
கடமைகளை நெஞ்சில் சுமந்து
காலம்தான் கடக்குதே!
கண்காணாத் தேசத்திலே
கண்கட்டி வித்தை நடக்குதே!
தேர் போகும் வீதியில்
ஊர் போகுமோ!
ஊர் போகும் வீதியில்
தேர் போகுமோ!
வேடிக்கை பார்க்கவும் தேகம்
தான் நிலைக்குமா!
வேரறுந்த மரமும் இங்கே உயிரும்
தான் வாழுமோ!
நிலையற்ற வாழ்க்கையை நீந்திக்
கடக்க முயற்சிக்கிறேன்!
வாய்க்கும் கைக்கும் போராட்டத்தை
வாழ்க்கையாக வாழ்கிறேன்!
கூட்டை விட்டு வந்த
பறவை கூடும் சேருமா!
வீட்டைப் பிரிந்து வாழும்
வாழ்க்கை என்று தீருமோ!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.