செப்டம்பர் 2022
எண்ணுவது கைக்கெட்டும்
“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய உயர்வு”
குளத்தில் இருக்கின்ற தாமரையின் உயரம் என்பது அந்தக் குளத்தின் நீர் மட்டம் எவ்வளவு இருக்கிறதோ, அதுதான் குளத்தில் இருக்கின்ற தாமரையின் உயரம். அதைப் போன்று ஒரு மனிதனுடைய உள்ளத்தில் இருக்கின்ற எண்ணத்தின் வலிமையை கொண்டு ஒருவரின் வாழ்க்கையின் உயரம் நிர்ணயிக்கப்படுகின்றது என்பது வள்ளுவன் கூற்று.
நம் வாழ்க்கையில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த இடத்தில் இருந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால், முதலில் இலக்கை தீர்மானிக்க வேண்டும். இலக்கை தீர்மானிக்க வேண்டும் என்பதற்காக பலர் தங்களது இலக்கையே தவறாகத் தீர்மானித்து விடுகின்றனர்.
மயில் ஆடுவதை பார்த்து வான்கோழி, தானும் தோகை விரித்து மயில் போல ஆட வேண்டுமென ஆசைப்பட்ட கதையாக இருக்கக்கூடாது. பல சமயங்களில், பவர், சிலரை பார்த்து தவறான ஒன்றை இவக்காகத் தீர்மானித்து, முயற்சித்துக் கொண்டு வாழ்க்கையை வீணடிக்கின்றனர்.
ஓர் இலக்கை தீர்மானிப்பதற்கு முன்னால், நான் எந்த இடத்தில் இருக்கிறேன்? என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எதனைக் கடந்து வந்திருக்கிறேன்? என்னைச் சுற்றி யாரெல்லாம் இருக்கிறார்கள்? நம்மை சுற்றி இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? இது போன்ற கேள்விகளை தனக்குத்தானே உருவாக்கி அதற்கு பதிலும் அளித்துக்கொள்ள வேண்டும்… அதன் பிறகு இலக்கை தீர்மானியுங்கள். நமக்கு ஒரு தெளிவான பார்வை கிடைக்கும். அந்தத் தெளிவு நம்மை இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும், நாளைய இலக்கை அடைவதற்காக தினந்தோறும் பணிகளுக்கு இடையே சிறிதேனும் முயற்சிகள் அவ்வப்போது செய்து கொண்டே இருக்க வேண்டும்.
எதற்கும் தயாராக இருங்கள், உங்களை சுற்றி இருப்பவர்களிடமிருந்து சற்று விலகி, உங்களுக்கென ஒரு இலக்கை தீர்மானித்தப் பின்பு எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இது மிக, மிக முக்கியமான ஒன்று. உங்களது எண்ணம் இலக்கை நோக்கி பயணிக்க துவங்கியவுடன், உங்களுடைய இலக்குடன் தொடர்புடைய பல்வேறு நபர்களை உங்களுக்கு இயற்கை அறிமுகப்படுத்தும், அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள், நான் எதையும் சரியாக செய்து முடிப்பேன்! என்ற முனைப்போடு எதையும் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
மண்ணில் விதைக்கப்பட்ட விதை பல நாட்களாக நீரின்றி அப்படியே கிடக்கின்றது. ஒருநாள் இரவு மழை பெய்கின்றது. சிறிய மழை நீரை ஆதாரமாகக் கொண்டு வேர் விட்டு முளைக்க ஆரம்பிக்கின்றது. விதை எப்பொழுதும் தயாராக இருந்தது, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தனது புதிய பயணத்தை தொடங்கியது. விதை போலத் தயாராக இருங்கள்.
சுய ஒழுக்கத்தோடும், நல்ல எண்ணங்களோடும் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அதற்கான நற்பலனை தந்து கொண்டே இருக்கும். தனித்துவமானவர்களின் செயலும், பெயரும் ஒரு நாள் தலை நிமிர்ந்து நிற்கும்!.
செயல்படுத்தி பாருங்கள். நீங்களும் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள்.
“எதுவரை உன் செயலும்
உன் பெயரும் தெரியுமோ
அதுவரை உன் பேச்சு கவனிக்கப்படும்
“எவருக்கெல்லாம் உன் செயலும்,
உன் பெயரும் தெரியாதோ
அவருக்கெல்லாம்
ஆயிரம் சத்தத்தில் அதுவும் ஒன்றாம்“
உங்கள் குரல் எதுவரை கேட்கும்!
நீங்கள் நினைக்கும் இடமெல்லாம் கேட்க வேண்டும்!!
ஒரு குட்டிக்கதை:
தென்பாண்டி நாட்டில், ஒரு சிற்றூரில், ஒரு இளம் சிறுவன் இருந்தான். அவன் தன் தந்தையிடம் எப்படியாவது நாம் அரண்மனைக்குச் சென்று அங்கு வாழ வேண்டும் என்று நீண்ட காலமாக கேட்டுக் கொண்டே இருந்தான். தந்தையோ விறகு வெட்டும் தொழிலாளி. தந்தை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவன் கேட்பதாக இல்லை. மனதில் தெளிவான சிந்தனையோடு அரண்மனைக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான் சிறுவன், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று மீண்டும், மீண்டும் தந்தையிடம் கேட்டுக் கொண்டே இருந்தான்.
இங்க பாரு, அரண்மனையில் வாழ வேண்டும் என்றால், ஒன்னு மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சராகவோ, அரசு அதிகாரியாகவோ இருக்க வேண்டும். இதில் எந்த இடத்திலும் நாம் இல்லை. நாம் அங்கு செல்லவும் முடியாது, என்றார் சிறுவனின் தந்தை.
நான் அமைச்சராகவோ, அரசு அதிகாரியாகவோ ஆக வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அப்பா, என்றான் சிறுவன். அதைச் சொல்லும் அறிவு எனக்கு இல்லை. நீ படிக்கின்ற இடத்தில்தானே அமைச்சர்களின் குழந்தைகளும் படிக்கின்றனர். அதனால் உங்கள் ஆசானுக்கு இந்த கேள்விக்கு பதில் நன்றாகத் தெரியும். உங்கள் ஆசானிடம் கேட்டுத்தெரிந்துகொள். இருந்தாலும்… இப்படிப்பட்ட ஆசை உனக்கு தேவையில்லை என தயங்கியபடி சொன்னார் சிறுவனின் தந்தை. நீங்கள் பேசி என் நேரத்தை வீணடிக்காதீர்கள் அப்பா. நான் என் ஆசானை பார்த்துவிட்டு வருகிறேன் எனச் சொல்லிச் சென்றான் சிறுவன்.
ஆசான் இருப்பிடத்துக்குச் சென்ற சிறுவன் தன் எண்ணத்தை அனைத்தையும் தன் ஆசானிடம் சொன்னான். அதனைக் கேட்ட ஆசான் கண்டிப்பாக நீ அரசவையில் பணியாற்ற முடியும். நான் சொல்லும் கருத்துக்களை நினைவில் வைத்துக்கொள்.
1. சொல் அறிந்து சொல்
2. இந்த கணத்தில் வாழ்
3. உனக்குள் தோன்றும் நல்ல எண்ணங்கள் நீ செய்வதற்காகவே வருகிறது.
4. இது உனக்கான வாழ்க்கை, அதை நீதான் கட்டி எழுப்ப வேண்டும்.
இதை சரியாக பயன்படுத்து என்றார் ஆசான்.
பத்து ஆண்டுகள் கழிந்தது. பத்து ஆண்டுகள் திறம்பட கல்வி கற்ற நீ, இன்று முதல் உன்னை அமைச்சராக நினைத்துக்கொள், ஒரு மாதம் நாட்டைச் சுற்றிவந்து நிறை குறைகளை என்னிடம் சொல். எந்த சூழலிலும் உன் எண்ணத்தை முழுவதையும் பிறரிடம் சொல்லாதே எனக் கூறி அனுப்பி வைத்தார் ஆசான்.
ஆசான் வழிகாட்டியபடி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று குறிப்பு எடுத்துக்கொண்டான். ஒரு மாதமும் கடந்துவிட்டது. காலம் தாமதிக்காமல் ஆசானிடம் சென்றான். தான் குறித்து வைத்திருந்த நாட்டின் நிறை குறைகளை ஆசானிடம் கூறினான்.
நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது உனது குறிப்புகள், அரண்மனையில் உனக்கென ஓர் இடம் உள்ளது. உன் திறமையால் மன்னரை நீ சந்திக்க வேண்டும். நீ உள்வாங்கியவற்றில் குறையை மன்னரிடம் சொல். நிறையை அமைச்சரிடம் சொல். நல்ல மனிதனாக மக்களிடம் செல் என்று கூறி அனுப்பினார் ஆசான்.
சிறுவன் வீட்டுக்கு வந்தான். நான் நமது மன்னரை சந்திக்க வேண்டும் ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் அப்பா என தொடர்ந்து கேட்டு நச்சரித்தான்.
அவனது அப்பா கோபமாக, மன்னர் நகர் வளம் வரும்பொழுது குறுக்கே சென்று சாலையின் நடுவே நின்று கொள். போ… மன்னரின் பாதுகாவலர்கள் உன்னை கைது செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அரண்மனைக்குச் சென்ற பின்பு, மன்னர் முன் உன்னை தேர் நிறுத்துவார்கள்.
நீ சந்தித்து பேசுவியோ, சவுக்கு அடி வாங்குவியோ எனக்குத் தெரியாது. தப்பிப்பது உன்னுடைய சாமர்த்தியம். என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்றார்.
சிறுவன் யோசித்தான். இப்படி செய்ய முடியுமா? செய்யலாமா? இப்படி செய்தால் அரசனிடம் பேச முடியுமா? என்று சிறிய யோசனைக்குப் பிறகு மன்னர் வரும் வழியில் குறுக்கே நிற்பதாக முடிவு எடுத்தான். மன்னர் எப்பொழுதுவருவார் என காத்துக் கொண்டிருந்தான்.
சில தினங்கள் கழிந்தன. சிறுவனின் பக்கத்து நகரத்திற்கு மன்னர் வருகிற செய்தி அறிந்த சிறுவன் தயாராக இருந்தான். அந்த நகரின் சாலை வழியாக மன்னர் வருகிற செய்தி அறிந்ததும் மக்கள் அனைவரும் சாலையை விட்டு ஓரமாக ஒதுங்கி நிற்கிறார்கள். இவன் மட்டும் சாலையை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தான்.
மன்னரின் தேர் காவலர்கள் சத்தமிட்டு ஒதுங்கும்படி கூற சாலையை விட்டு நகர்வதாக இல்லை அவன்.
மன்னர் நகர் வலம் வரும் பொழுது வழியில் இடைமறித்து நின்ற குற்றத்திற்காக உன்னை கைது செய்கிறோம் எனக் கூறி. தேர் காவலாளிகள் சிறுவனை சிறை பிடித்து வாகனத்தில் ஏற்றினார்கள். அரண்மனை வாகனத்தில் பயணிக்கிறோம் என்ற ஆனந்தத்தில் சிறுவன் பயணித்துக் கொண்டிருந்தான்.
சிறுவனை கைது செய்து அழைத்துச் செல்வதை கண்ட, அங்கு கூடியிருந்த ஊர் மக்கள் கவலையோடு இருந்தனர். ஆனால் சிறுவனோ நாம் நினைத்தது நிறைவேறப்போகிறது என்ற எண்ணத்தில் ஆனந்தமாக அரண்மனைக்கு பயனித்தான். அடுத்த நான் அரண்மனை நீதிமன்றத்தில் மன்னரின் முன்னால் அவனை நிறுத்தினர்.
அப்பொழுது மன்னர், அமைச்சரே! சிறுவன் ஏதாவது சொன்னானா? எதற்காக வழியை மறைத்தான் என்று உங்களுக்குத் தெரிந்ததா? என்றார்.
இல்லை மன்னா! ஒரு தகவலும் தெரியவில்லை. வந்ததில் இருந்து அவனை நாங்கள் கண்காணிக்கின்றோம். நீ செய்த செயலுக்காக உன்னை கைது செய்து இருக்கின்றோம் என்று பலமுறை கூறியும், அவனது முகத்தில் மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவுமே பதிலாக எங்களுக்கு கிடைக்கவில்லை மன்னா! என்றார் அமைச்சர்.
அப்படியா! சிறுவனே உனது பெயர் என்ன? என்கின்றார் மன்னர்.
அன்று தொட்டு இன்று வரை மக்களின் அன்பிற்கு பாத்தியமான பாண்டிய மன்னரின் பாதங்களை வணங்குகின்றேன். எனது பெயர் தெய்வமுகன் அரசே.
நாட்டு மக்கள் பெரிதும் மதிக்கின்ற உன்னுடைய நாட்டின் அரசர் வலம் வருகின்ற பொழுது எதற்காக குறுக்கே நின்று மறைத்தாய். நீ செய்தது குற்றம் தானே? என்றார் மன்னர்.
நான் செய்தது குற்றம் தான் மன்னா. தன்மையின் பொருட்டு நாம் சொல்கின்ற பொய் மற்றும் செயல்கள் குற்றமாகாது என்று எனது ஆசான் கூறியிருக்கிறாரே மன்னா, என்றான் சிறுவன்.
உன்னால் என்ன நன்மை நாட்டிற்கு? நீ என்ன செய்தாய் இதுவரை நாட்டுக்காக?’ என்றார் மன்னர்.
இதுவரை நான் கல்வி பயின்றேன். இனிமேல் தான் மன்னா நாட்டுக்காக உழைக்க இருக்கிறேன். அதுவும் நீங்கள் அனுமதி அளித்தால் நாட்டில் நடக்கும் தவறுகளை இப்பொழுதே உங்கள் கவனத்திற்கு எடுத்து வைக்கிறேன் மன்னா, என்றான் சிறுவன்.
அமைச்சரே, நாட்டில் அப்படி என்ன தவறு நடக்கிறது சொல்லுங்கள், என்றார் மன்னர்,
நாட்டில் எல்லோரும் நன்றாக வாழ்கின்றனர். இப்பொழுதுவரை சட்டத்துக்கு புறம்பான செயல்கள் இல்லை மன்னா. அப்படி எதுவும் நடந்தால் உங்களது பார்வையில் இருந்து தப்ப முடியுமா என்றார் ஒரு அமைச்சர்.
அரண்மனைக்குச் சென்றால் நல்ல உணவு கிடைக்கும் என்று யாராவது இந்தச் சிறுவனிடம் சொல்லி இருப்பார்கள். அதனால் தான் இங்கு வந்து ஏதோ உஊறிக் கொண்டிருக்கிறான்.. மன்னா.
நமது நாட்டில் அனைவருக்கும் நல்ல உணவு தானே இப்பொழுது வரை கிடைத்துக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்க, நீங்கள் இப்படி சொல்வதற்கான காரணம் என்ன?!..
என்ற மன்னர், யோசித்தபடி ஏதோ ஒன்று இவனிடம் இருக்கிறது என்பதை உணர்ந்த அவர் அவனிடமே கேட்டார்.
“நீயே சொல் நாட்டில் எனது கவனத்திற்கு வராமல் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது?”
மன்னிக்கவும் மன்னா, உங்கள் கவனத்திற்கு வராதவற்றை எல்லாம் என்னால் கூற இயலாது.
நான் கூறுவது உங்கள் கவனத்திற்கு வந்ததா? இல்லையா? என்பதனை தாங்கள் தான் சொல்ல வேண்டும் மன்னா…
நமது நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மலைகளை உடைத்து, பாறைகளை பளபளப்பாக மாற்றி மற்ற நாட்டு வணிகர்களுக்கு விற்பனை செய்கிறார்கள் மன்னா.
அமைச்சர் உடனே குறுக்கிட்டு, அப்படி எதுவும் நடக்கவில்லை மன்னா. ஆலயங்கள் கட்டுவதற்காக சில பாறைகள் பெயர்த்து எடுக்கப்பட்டன அவ்வளவுதான் மன்னா என்றார்.
அமைச்சர் கூறுவதை பார்த்தால் இந்த தகவல் தங்களது கவனத்திற்கு வரவில்லை. சட்டத்திற்கு புறம்பாக நடக்கிறது என்று நினைக்கிறேன்.
அமைச்சர் தவறான தகவலை சொல்லுகிறார். அங்கு வேலை செய்யும் நபர்களோடு இரண்டு நாள் தங்கியிருந்தேன், அப்பொழுதுதான் எனக்கு இந்த செய்தி தெரிந்தது மன்னா, நான் சொல்லுகின்ற செய்திகளுக்கு ஆதாரம் இருக்கிறது மன்னா என்றான் தெய்வமுகன்.
மலைகள் அடுத்த தலைமுறையின் சொத்து, அதனை பாதுகாக்க வேண்டியது நிகழ்காலத்தில் வாழும் அனைவரின் பொறுப்பு. மலைகளை உடைத்து விற்பதற்கு எந்த அனுமதியும் கிடையாது. இந்த அமைச்சரை சிறையில் அடையுங்கள். பாறைகளை உடைக்கிறவர்கள், பாறைகளை வாங்கியவர்கள் இரண்டு குழுக்களை சார்ந்தவர்களையும் கைது செய்து அழைத்து வாருங்கன்… மன்னர்.
மேலும், காவலாளிகளை நோக்கி, காவலாளிகளே! சிறுவன் அரண்மனையில் தங்குவதற்கு ஒரு அறை ஏற்பாடு செய்து கொடுங்கள். கைது செய்யப்பட்டவர்கள் வந்தவுடன் நாளை விசாரணை தொடரும்… என்று சொல்லிச் சென்றார் மன்னர்.
வள்ளலார் மாணவன் திரு. க.நாகநாதன்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.