ஒரு ஊரில் சிக்கிரி சாமியார் என்றொருவர் வசித்து வந்தார். ஏன் அவருக்கு சிக்கிரி சாமியார் என்ற பெயர் வந்ததென்றால் அவர் யாரையும் தனது வலையில் எளிதாகச் சிக்க வைத்து விடுவார். அதனால் அவர் பெயர் சிக்கிரி சாமியார் என்றானது.
அவருக்கு அது சொந்த ஊர் கிடையாது; பிழைக்க வந்த ஊர். மலையோரத்தில் சின்ன குடில் ஒன்றை அமைத்திருந்தார். தனது தேவைக்கான இடத்தைச் சுற்றி வேலியும் போட்டிருந்தார். சாமியார் இருக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் தான் வீடுகள் இருந்தன. அவருக்கு அதுவும் வசதியாக இருந்தது.
அந்த ஊருக்கு வந்த புதிதில் மிகவும் அமைதியான சாமியாராக இருந்த அவர், சில மாதங்களிலேயே பக்கத்து ஊர்களில் தான் காட்டிய திருட்டு வேலைகளை இங்கும் தொடங்கினார்.
ஒவ்வொரு நாளும் ஆடு மேய்க்கும் முதியவர்கள் சாமி இருந்த குடிலைக் கடந்து போவார்கள். சாமியார் தியானத்தில் இருப்பது போலப் பாசாங்கு செய்தார். சாமியார் தியானத்தில் இருந்து விழிப்பதைப் போல் நடித்துக் கொண்டே, ‘என்ன மகனே?’ என்றவாறு எதிரே நின்றவரின் பெயரைச் சொன்னார்; முதியவருக்கோ மகிழ்ச்சி தாளவில்லை.
கண்மூடி தியானத்தில் இருந்தவர் தனது பெயரைச் சரியாகச் சொல்லி விட்டார் என்ற பூரிப்போடு முதியவர் துள்ளிக் குதித்தார். அன்று முதல் முதியவர் சாமியாரை நம்பத் தொடங்கினார். முதியவர் தனது அனுபவத்தை ஊராரிடம் எடுத்துக் கூறிட அவர்களும் அவரை நம்பத் தொடங்கினார்கள்.
நாட்கள் நகர்ந்தன; தங்களது மந்தையில் உள்ள ஆடுமாடுகள் காணாமல் போவது வழக்கமாகிப் போய்விட, அவர்கள் சாமியாரிடம் முறையிடத் துவங்கினர். அவர் அது இந்த இடத்தில் உள்ளது, அந்த இடத்தில் உள்ளது எனச்சொல்கின்ற இடத்தில் ஆடுமாடுகளும் கிடைத்துவிட நல்ல சாமியார் எனப் பெயரும் தானாக வந்தது.
சாமியாருக்கு தட்சிணையாக வந்த பணம் பெருகியது. குடில் இருந்த இடத்தில் பெரிய வீட்டைக் கட்டினார். சாமியார் தான் இருந்த இடத்தை செல்வாக்கான செல்வந்தர்களை வைத்து வளைத்துப் போட்டார்.
மலையையொட்டி இருந்த இடத்தைத் தனதாக்கித் தனியரசாங்கத்தையே நடத்தத் தொடங்கினார். பாவம் அந்த ஊர் குடிமக்கள்… இன்னும் குடிசையிலேயே தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருந்தார்கள்.
ஒருபுறம் சாமியார் காட்டை அழித்து மலையை வெட்டிப் பணம் பார்த்துக் கொண்டு இருந்தார். மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சாமியாரின் வளர்ச்சியில் அவர்களுக்கு ஐயம் எழுந்தது.
ஒரு நாள் மாலை நேரத்தில் மழை வருவதற்குக் கட்டியம் கூறும் வகையில் கருமேகங்கள் வானில் சூழ்ந்து கொண்டியிருந்தன. அப்போது மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுமாடுகளை அழைத்து வர முதியவர் மலையடிவாரத்திற்குச் சென்றார்.
அப்போது அங்கு நடந்தவற்றைக் கண்டு முதியவர் திடுக்கிட்டார். முரட்டுத்தனமான சிலர் ஆடுமாடுகளை ஆளுக்கொரு திசையில் இழுத்துச் செல்வதைக் கண்டார்.
முதியவர் அமைதியாக ஊருக்குள் வந்து நடந்தவற்றைக் கூறினார். மறுநாள் ஊர் ஒன்றாகத் திரண்டது. சாமியார் குடிலை நோக்கி அவர்கள் நடந்தார்கள். சாமியாருக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி. இன்று ஊரே வந்துள்ளதால் பணம் நிறைய கிடைக்கும் என எண்ணினார்.
ஊரார் செய்தியைச் சொல்ல நான்கு தடியர்களும், ஆளுக்கொரு பக்கம் சென்றார்கள். வந்தவர்கள் வெறும் கையுடன் திரும்பி வந்தார்கள். ஆடுமாடுகள் அவர்களிடம் இல்லை. ஆடுமாடுகளை ஊரார் வெளிக்கொண்டு வந்தனர். சாமியாரின் குட்டு வெளிப்பட்டது. சாமியாரின் பேச்சை நம்பி ஏமாந்ததை ஊரார்கள் எண்ணி வருந்தினார்கள்.
காட்டை அழித்த சாமியாருக்குப் பலத்த அடியும், பலகட்ட வசவும் விழுந்தது. சாமியார் வசித்த வீட்டை மக்கள் இடித்துத் தள்ளித் தரைமட்டம் ஆக்கினார்கள். ஏமாற்றுக்காரச் சாமியாரும் அவரின் திருடர் கூட்டமும் ஊரை விட்டே ஓடியது. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.