spot_img

நன்மை கடைப்பிடி

சனவரி 2024

நன்மை கடைப்பிடி

ஒரு மாலைப்பொழுதில் வயதான பெண்மணி ஒருவர், சாலையோரத்தில்  நடந்து போய்க் கொண்டு இருந்தார். உடல் தளர்ந்திருந்ததால் தேநீர் அருந்துவதற்கு வயதான பெருமாட்டியின் மாலை நேர மெதுவான பயணம் அது.

அங்கு விளையாடிய சிறுவர்கள் ஊன்றுகோல் மூதாட்டி… ஊன்றுகோல் மூதாட்டி… என ஆரவாரம் செய்தனர். அவ்வாறு அவர்கள் சொல்வது வழக்கம்
தான் என்பது போல மூதாட்டியும் தனது ஊன்றுகோலை உயர்த்தி, அவர்களைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன் நடந்தார்.

அன்று காலையில் கனத்த மழை பொழிந்திருந்தது; வழி நெடுகிலும் தண்ணீர் தேங்கியிருந்தது. சாலையின் இருபுறமும் தண்ணீர் செல்ல வேண்டிய துளைகள் அடைத்து இருந்தன. வாகனத்தில் வருவோரும் போவோரும் அதைக் காணாதவாறே போய்க் கொண்டு இருந்தார்கள். கடந்து போகின்றவர்கள் அதற்குமேல் முகத்தைச் சுளித்துக் கொண்டு மூக்கைப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள்.

வயதான பெருமாட்டியும் சாலையில் தேங்கியிருந்த நீரை அகற்றுவது எவ்வாறு எனச் சிந்தித்துக் கொண்டே நடந்தார். தண்ணீர் எந்த இடத்தில் அடைத்து இருக்கின்றது என்பதை அவ்வளவு எளிதாக அவரால் கண்டறிய முடியவில்லை.

பெருமாட்டிக்குச் சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது. உடனே தனது கையில் இருந்த ஊன்றுகோலைக் கொண்டு சாலையின் ஒருபுறத்தில் தண்ணீர் அடைத்துள்ள வழித்தடத்தை தேடிக் கொண்டு வந்தார்.

அப்போது அங்கு நடந்து போவோரில் சிலர் அறியாமையில் “இவருக்குத் தான் கண் தெரியவில்லையே… வீட்டில் இருக்க வேண்டியது தானே!? இப்படி வெளியில் வந்து வீட்டில் உள்ளவருக்கு ஏன் சிரமம் கொடுக்க வேண்டும்?” என்று முணுமுணுத்தவாறே நடந்து செல்ல எத்தனித்தனர்.

அப்போது அங்கு வியப்பான ஒரு நிகழ்வு  நடந்தது. மூதாட்டி தனது கையில் இருந்த ஊன்றுகோல் உதவியுடன் தண்ணீர் அடைப்பை எடுத்துவிட கணப்பொழுதில் சாலையில் தேங்கிருந்த தண்ணீர் குறையத் தொடங்கியது. உடனே மூதாட்டி எதிர்த்திசைக்குச் சென்று அங்குள்ள அடைப்பைத் திறந்து விட்டதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

அப்போது தான் அங்கு கூடியிருந்தவர்கள் மூதாட்டிக்கு கண்தெரியும் என்பதையும், அவர் தண்ணீர் செல்வதற்கான வழித்தடத்தைத் தேடியுள்ளார் என்பதையும் அறிந்தனர்.  அம்மூதாட்டியினுடைய சமூகப் பொறுப்பை உணர்ந்து, தங்களுடைய தவறான எண்ணத்தை நினைத்து வருந்தியதோடு, மூதாட்டியின் செய்கையையும் பாராட்டினர்.

மூதாட்டி எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. வேடிக்கை பார்த்த மக்களை நோக்கி பெருமாட்டி ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு மனதிற்குள் பெருமகிழ்ச்சியுடன், தனது ஊன்றுகோலோடு தேநீர் கடையை நோக்கி தனது பயணத்தை மீண்டும் தொடங்னார்.

கதைசொல்லும்நீதி: வாழ்க்கையில் பொதுநலனும், சமூகப் பொறுப்பும் மூதாட்டியைப் போல் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.


திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles