மார்ச் 2023
அறமற்ற ஊடகங்களும் அடிமை ஊடகவியலாளர்களும் சனநாயகத்தின் சாபக்கேடுகள்!
சென்ற மாதம் சமூக வலைத்தளங்களெங்கும் பேசுபொருளாக இருந்தது பத்திரிக்கையாளர்கள் சிலர் கையூட்டு வாங்கும் காணொளிகள் தாம். அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் சொல்லாத பல விடயங்களை உடனுக்குடன் தருவதாலும், திறன்பேசி பயன்படுத்துவோரின் விருப்பமான தேர்வாக சமூக வலைத்தளங்கள் இருப்பதாலும், அவற்றில் பணிபுரிவதாலேயே இளைஞர்களிடையே சிறந்த நடுநிலை ஊடகவியலாளர்களாக அறியப்பட்ட பலரின் முகமூடிகள் இக்காணொளிகளில் கிழிந்து தொங்கின. இதை எடுத்தவர்களுக்கும், இதில் இருந்தவர்களுக்கும் நோக்கங்கள் பலவாக இருக்கலாம்; ஆனால் உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் ஊடகத்துறை எந்த அளவு பாழ்பட்டுக் கிடக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் மேற்காண் நிகழ்வு.
எந்தவொரு சனநாயக நாட்டிலும் சட்டமியற்றும் துறை (சட்டமன்றங்கள் & பாராளுமன்றங்கள்), ஆட்சித்துறை ( அமைச்சரவை மற்றும் அதிகாரவர்க்கம்) மற்றும் நீதித்துறை ( நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாணையங்கள்) ஆகியனவே நவீன அரசுகளை நடத்துகின்றன. இவற்றில் நாட்டுக்கு நாடு நடைமுறைகள் வேறுபடுகின்றன. ஆனால் எல்லா நாடுகளிலும் மற்ற மூன்று துறைகளில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை ஊடகத்துறையே மக்களுக்குச் செய்திகளாகத் தருகிறது. அதாவது தன் வாழ்வின் எல்லா கூறுகளையும் நிர்ணயிக்கும் அரசியல், எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என ஒரு சாமானியனுக்குத் தெளிவாக உணர்த்துவதும், மக்களின் பார்வைக்கு இம்மூன்று துறைகளின் எண்ணம், சொல் மற்றும் செயல்களைப் பாரபட்சமின்றிக் காட்சிக்கு வைப்பதுமே ஊடகத்தின் முக்கியமான பணி. ஒரு நாட்டின் சமூகம், பொருளாதாரம், பண்பாடு, அரசியல், வாழ்வியல் என அனைத்திலும் ஊடகங்களின் தாக்கம் அளப்பரியது. தனிமனித விழுமியங்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் தொடங்கி தேர்தல்களில் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது வரை ஊடகங்கள் மக்களின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதனால் தான் கருத்துக்கணிப்புகள் தடை செய்யப்படுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளில் ஒன்றாக அண்மையில் மாறியிருக்கிறது. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறை, இந்திய ஒன்றியத்திலும், தமிழ்நாட்டிலும் எவ்வாறு இயங்குகிறது என்று பார்த்தால் நமக்கு கோபமும், குற்றவுணர்ச்சியும், ஆத்திரமும், ஆயாசமுமே மிஞ்சுகிறது.
பிரான்சின் பாரீசிலிருந்து இயங்கும் “எல்லைகளைக் கடந்த பத்திரிக்கையாளர்கள்” எனும் அமைப்பு, ஊடக சுதந்திரம் குறித்த தரவரிசையை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது. 180 நாடுகளை உள்ளடக்கிய இப்பட்டியலில் 2002ம் வருடம் 80வது இடத்திலிருந்த இந்திய ஒன்றியம், 2012ல் 131வது இடத்திலும், 2022ல் மிக மோசமான 150வது இடத்துக்கும் சென்றுவிட்டது. பல்வேறு சிற்றரசுகள் வலிந்து ஒன்றாக்கப்பட்டு உருவாகிய இந்த இந்திய ஒன்றியம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தபோது ஊடகங்கள் கடும் அடக்குமுறைக்குள்ளானதை நாம் அறிவோம். ஆயினும் சுதந்திரத்தைக் கோரும் முக்கிய பரப்புரைக் களங்களாக, தலைவர்களுக்கும் மக்களுக்குமான பாலமாக செய்தித்தாள்களும், சஞ்சிகைகளையும் இருந்தன. அவற்றை நடத்திய பத்திரிக்கையாளர்களின் கடும் முயற்சி, துணிவு மற்றும் ஈகத்தினாலுமே இந்திய ஒன்றிய விடுதலை சாத்தியமானது.
விடுதலைக்குப் பின்னும் நேரு காலம் வரை ஊடகங்கள் அப்படிப்பட்ட அறம் சார்ந்த விழுமியங்களை முடிந்தளவு பின்பற்றின எனலாம். இந்திராகாந்தி காலத்தில் ஊடகத்துறையில் ஏற்பட்ட மோசமான மாற்றங்கள் இன்றுவரை சாபம்போலத் தொடர்கின்றன. இந்திய ஒன்றியத்தின் சனநாயகத்தின் மீது நிரந்தரமாகச் சேற்றைப் பூசிய அவசரநிலைப் பிரகடனத்தின்போது, ஊடகங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன. தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள பல ஊடக நிறுவனங்கள் ஆளுமரசு சார்பு நிலைப்பாட்டை எடுத்தன. அதன்பின் அரசு தரும் விளம்பரங்கள் மூலமாகவே பல்வேறு செய்தித்தாள்கள் உயிர்வாழ்ந்தன. தொலைக்காட்சி அறிமுகமான பின்னர் அரசு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்திய இடத்தில், தனியார் அலைவரிசைகளும் 1990க்குப் பின் கால் பதித்தன. அதன் பின்னாக இணையத்தின் வருகைக்குப்பின் சமூகவலைத்தளங்கள் மூலம் செய்திகளை நுகர்வது அதிகமானதால், செய்தித்தாள்கள் மற்றும் செய்தி அலைவரிசைகளின் பயன்பாடு குறைந்துள்ளது. இப்போது மின்னல் வேகத்தில், எண்ணிக்கையற்ற அளவில் வரும் செய்திகள் மக்களின் திறன்பேசியைப் போட்டிபோட்டுக் கொண்டு நிறைக்கின்றன.
பெரும்பாலும் நட்டமடையும் வாய்ப்புள்ள இந்தத் துறையில் பழம்பெரும் நிறுவனங்களே தத்தளிக்கையில், ஆளுமரசு சார்புள்ள செய்திகளைப் போடுவதனால் மட்டுமே சிலர் அலுவலகங்களைத் திறந்து வைத்துள்ளனர் என்பது கசப்பான உண்மை. அதைவிடவும் ஒருபடி மேலே போய் அரசின் தவறுகளை மறைக்கவும், எதிர்க்கட்சிகளின் போராட்டங்களைத் தவிர்க்கவும், தேவையற்ற செய்திகளைப் போட்டு மக்களைத் திசைதிருப்பவும், அரசை நோக்கி எழுப்பப்படும் நியாயமான கேள்விகளைத் திரிக்கவும் பல வேலைத்திட்டங்களை கையூட்டு பெற்றுக் கொண்டு ஊடகங்கள் செய்யத் தொடங்கின. காங்கிரசு தொடங்கி வைத்த இந்த மோசமான உத்தி, பாஜகவால் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குஜராத் முதல்வராகப் பல்வேறு தகிடுதத்தங்கள் செய்து உச்சகட்டமாக இசுலாமியர்களுக்கெதிராக ஒரு இனப்படுகொலையை நடத்திய நரேந்திர மோடியை ஊடகங்கள் நிர்வாகத்திறன் நிரம்பப்பெற்ற பேராளுமையாகக் காட்டியதோடு மட்டுமின்றி, குஜராத் வளர்ச்சி மாதிரி எனும் அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டு 2014 பாராளுமன்றத் தேர்தலில் வென்று பிரதமராகுமளவு வளர்த்துவிட்டன.
சற்றொப்ப 9 ஆண்டுகளாக “மோடி மீடியா – கோடி மீடியா” எனப் புகழுமளவு பாஜகவின் திட்டங்களைச் செயலாற்ற அனைத்து உதவிகளையும் இந்த அடிப்பொடி ஊடகங்கள் மடிநாய்கள் போல செய்து முடிக்கின்றன. ஓரளவுக்கேனும் சமரசமின்றி இயங்கிவந்த என்.டி.டி.வியையும் அண்மையில் ஹிண்டன்பர்க் அறிக்கை புகழ் அதானி வாங்கி முடித்தார். கற்பனைக்கும் எட்டாத வகையில் சனநாயக விழுமியங்களைச் சீரழித்து, அரசை நடத்த உதவும் அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் சட்டரீதியாகவே கைப்பற்றிக் கொடுங்கோலாட்சி செய்ய மோடி – அமித் ஷா இரட்டையருக்கும், அவர்களை வழிநடத்தும் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கும், இந்த ஊழல் ஊடகங்கள் கடுமையாக உழைத்துவருகின்றன. வெறுப்புப் பரப்புரைகளையும், வீண் அவதூறுகளையும் அள்ளித்தெளித்து கூச்சல்களுக்கிடையே எதிர்க்கட்சிகளின் குரல் மக்களுக்குக் கேட்காதவாறு இவை பார்த்துக் கொள்கின்றன.
ஒன்றியத்தில் தான் இந்த நிலை என்றால், தனது எசமானர்களின் அடியொற்றி கடந்த ஆட்சியிலிருந்த அதிமுகவும் ஊடகங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொண்டது . அதன் முன்னாள் தலைவரான ஜெயலலிதா தான் ஒன்றியத்திலேயே அதிகப்படியான அவதூறு வழக்குகளைப் பத்திரிக்கையாளர்கள் மீது போட்டு அலைகழித்த சாதனைக்குரிய பெருமாட்டி. திமுகவும் இதற்கு விதிவிலக்கா என்ன? “அடிப்படையில் நானொரு பத்திரிக்கைக்காரன்” என்று பீற்றிக் கொண்ட கருணாநிதி, ஈழப்போர் உச்சத்திலிருந்தபோது ஊடகங்களை எவ்வாறு நடத்தினார்? ஊடகங்களும் அவருக்கு எவ்வாறு ஒத்துழைத்தன என்பதை நம்மால் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியுமா என்ன? உண்மையில் தமிழகத்தின் ஊடக பக்கசார்பை நன்கு புரிந்து கொண்டதால் தான், தமிழ்ப்பொதுமக்கள் சமூக வலைத்தளங்களை வரித்துக் கொண்டு ஆதரவை வாரி வழங்கினர். ஆனால் அவர்களும் எப்படிப்பட்டவர்கள் என்பதை அண்மையில் வெளியான காணொளி விளக்கிவிட்டது.
காசுக்கு விலைபோகும் வாடகைவாய்கள் தமிழகத்தில் மலிந்து தான் போயிருக்கின்றன. இவை சாமானியர்களின் குரலெனப் பொய்க் கேள்வி கேட்பதிலும், மக்களுக்கான அரணென்று கூறிக்கொண்டு அறமற்ற செய்கைகளில் ஈடுபடுவதிலும், உண்மைகளைத் தேடித்தந்து உங்களைத் திரும்பிப்பார்க்க வைக்கிறேனென்று சொல்லி பக்கசார்பு குப்பைகளைத் திணிப்பதிலும் மும்மரமாக உள்ளன. அவ்வப்போது நடுநிலையாக இருப்பதுபோலக் காட்டிக் கொண்டாலும், பேரெழுச்சியுடன் வளர்ந்து வரும் தமிழ்த்தேசியத்தின் மீது வன்மத்தைக் கக்குவதற்காக வாங்கிய காசுக்கு வஞ்சனையின்றி வேலை செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
கெவின் கார்ட்டர் எனும் பத்திரிக்கையாளர், சூடானின் பஞ்சத்தை ஒற்றைப் புகைப்படத்தில் காட்டிய நேர்த்திக்காக ஊடகத்துறையில் மிகவுயர்ந்த புலிட்சர் பரிசைப் பெற்றார். பசிக்கொடுமையால் எலும்புக்கூடாகத் தேய்ந்துபோன ஒரு சிறுகுழந்தையும், உணவுப்பொருள் வழங்கும் இடத்தை அடைவதற்கான பயணத்தில், அப்பிள்ளையைப் பின்தொடரும் ஒரு பிணந்தின்னிக் கழுகும் அந்தப் புகைப்படத்தில் இருப்பர். ஆனால் அப்படத்தில் அருவமாக நிற்கும் இன்னொரு பிணந்தின்னிக் கழுகென கெவின் கார்ட்டர் உருவகப்படுத்தப்பட்டார். அக்குழந்தையின் நிலையைப் பற்றிப் பலரும் விசாரித்தபோது அது குறித்து அவருக்குத் தெரியவில்லை என்பதாலும், அப்பிஞ்சின் பசியைப் போக்கும் முயற்சியை எடுக்காமல், படத்தை மட்டும் எடுத்துவிட்டு வந்த குற்றவுணர்ச்சி தாளாமலும், பரிசு பெற்ற மூன்று மாதங்களில் கெவின் தற்கொலை செய்துகொண்டார்.

வேறெந்த துறையில் தவறுகள் நடந்தாலும் சுட்டிக்காண்ட வேண்டிய பொறுப்பிலிருக்கும் ஊடகத்துறையே தவறிழைக்கும்போது, அதனால் விளையும் கேடுகள் சமூகத்தையே சிதைத்துவிடும். சனநாயக அமைப்பின் மூன்று தூண்களையும் நிலைநிறுத்தும் நான்காவது தூண் தான் ஊடகம் எனில், அதில் விழும் துளைகள் சனநாயக அமைப்பையே குலைக்கும் சாபக்கேடுகளாக மாறும். பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்ற வள்ளுவர் வாக்கு உண்மையென்பதால், ஊடகங்கள் செயலில் காட்டும் அறமே நீதியை அரச நிர்வாகத்தில் வழங்கும். தனிமனித வாழ்விலும், பொது வாழ்விலும் அது தவறிப்போகுமாயின் வெல்ல வைக்கும் அறமே கொல்லவும் செய்யும் என்பதே கெவின் கார்ட்டரின் மரணம் நமக்குச் சொல்லும் செய்தி.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.