spot_img

இந்திய ஒன்றிய அரசும் திமுக அரசும் கொண்டிருந்த ஈழப்போர் நிலைப்பாடு

மே 2025

இந்திய ஒன்றிய அரசும் திமுக அரசும் கொண்டிருந்த ஈழப்போர் நிலைப்பாடு

போரில் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குதல் என்பது யுத்த காலத்தில் ஒரு நாட்டில் அவதியுறும் உயிர்களைக் காக்கும் பெரும் வழி மற்றும் மனித குலத்தின் மாண்பைப் பறைசாற்றும் செயலாகும். இத்தகைய உயிர்காக்கும் கடமை இந்திய ஒன்றிய அரசிற்கும் தமிழக அரசிற்கும் இருந்த போதும் இனப்பகை கொண்டு அவை கண்மூடி வாய்மூடி மௌனித்து இருந்தன. புலிகளின் இயக்கத்திற்கு ஆதரவு நிலைப்பாடு கொண்டது திராவிடம் என்று பரவலாக அறியப்பட்டாலும், புலிகளது வளர்ச்சியையும் தமிழ் இனத்தின் விடுதலையையும் தேசியம் மற்றும் திராவிடம் விரும்பவில்லை என்பதே உண்மை.  அதற்குத் தக்க சான்று தான் பின்வரும் நிகழ்வு. 

2009-ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு அந்நிலம் சூறையாடப்பட்டது. அந்நேரத்தில், உலக நாடுகளிலுள்ள பல்வேறு தமிழ்ச் சமூக அமைப்புகள் இணைந்து ஈழத்தில் யுத்த பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்ப முயற்சி மேற்கொண்டனர். இதற்காகச் சேகரிக்கப்பட்ட 884 டன் பொருட்களை, எம்.வி. கப்டன் அலி என்று பெயரிடப்பட்ட ‘வணங்கா மண்’ எனும் கப்பலின் மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டது. ஈழத்தமிழருக்கு நிவாரண உதவிகள் ஏதும் கிடைக்க கூடாது  என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருந்தது. அதனால் இக்கப்பல் இலங்கை அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப்பட்டு, அருகில் இந்திய ஒன்றியக் கடற்பரப்பில் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே 18 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் நங்கூரமிட்டு நின்றது. ஈழத்தமிழர் நலன் கருதிப் புறப்பட்ட கப்பல் என்பதனால் இக்கப்பலையும் தீண்டத்தகாதது போன்று கருதி சென்னை துறைமுகத்துக்குள் அனுமதிக்க இந்திய ஒன்றிய அதிகார வர்க்கம் மறுத்துவிட்டது.

இந்திய ஒன்றிய அரசு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிரந்தரமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து செயற்பட்டது. 1991 ஆம் ஆண்டு நடந்த இராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு, இந்திய ஒன்றிய அரசின் நிலைப்பாடு முழுமையாகவே புலிகளுக்கு எதிராக மாறியது; இயக்கத்திற்கும் மக்களுக்கும் தேவையான நிவாரணப் பொருட்கள் சென்றடைந்துவிட்டால், புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்கும் என்றெண்ணி அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இலங்கை சீனாவுக்கு இடையேயான இணக்கமான உறவு மற்றும் சீனாவின் தெற்காசியா முழுமைக்கான ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கில், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதைத் தவிர்த்து இலங்கை அரசுடன் இந்திய ஒன்றியம் நட்பு பாராட்ட விரும்பியது.

வணங்கா மண் கப்பலை அனுமதித்திருந்தால், இலங்கை அரசு, அதனை இந்திய ஒன்றியத்தின் வெளிப்படையான எதிர்ப்பாக எடுத்துக் கொண்டிருக்கக்கூடும். மேலும், தமிழ்நாட்டில் அக்காலத்தில் வளர்ந்து வந்த ஈழ ஆதரவு உணர்வு, சில அரசியல் அமைப்புகள் மற்றும் மாணவர் இயக்கங்களில் பிரிவினைவாத எண்ணங்களைத் தூண்டும் என்னும் பொய்ப் பிரச்சாரத்தை ஊடகங்கள் வாயிலாக இந்திய ஒன்றிய அரசு பரப்பியது. இதன் மூலம் வணங்கா மண் கப்பலை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் முயற்சியை மேற்கொள்ளாமல் தாமதித்தது இந்திய ஒன்றிய அரசு. இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் நிலைப்பாடும் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. அவர் தலைமையிலான திமுக கட்சி, ஒன்றிய அரசின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ஒரு முக்கிய பங்காற்றிய கட்சி என்பதால், அரசியல் இலாபம் கருதி அவர் முழுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க கருணாநிதி போட்ட வேடம் வெகுவாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டது. ‘மனிதம்‘ அறக்கட்டளையின் செயல் இயக்குனர்  அக்னி சுப்பிரமணியம் வணங்கா மண் கப்பல் தொடர்பாக கனிமொழி மற்றும் முதல்வரின் உதவியாளரான சண்முகநாதனிடம் உதவி நாடி வர, கனிமொழியும் அவர்களுக்கு உதவ அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறேன் என்று வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆயினும் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள அரசியல் நாடகமாடி, எந்த ஒரு முயற்சியையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது திமுக அரசு. இதனால் நிவாரண பொருட்கள் அனைத்தும் கெட்டுப்போகும் நிலை ஏற்பட்டது. மேலும் கப்பலில் பயணப்பட்டு வந்தவர்கள் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுப் பெரும் அவதிக்குள்ளாக்கப்பட்டனர். பல மனிதநேய அமைப்புகள் கண்டனக்குரல் எழுப்பியபிறகே, அந்தக் கப்பலில் இருப்பவர்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் குடிநீரைத் துறைமுக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அக்கப்பலில் உள்ள பொருட்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கிடைத்துவிடும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வாக்குறுதியளித்துக் காலம் தாழ்த்தினாரே அன்றி வேறேதும் செய்ய முற்படவில்லை.

இந்நிலையில் கப்பலில் உள்ள பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு சென்று இறக்க அனுமதிக்க வேண்டும் அல்லது சென்னை துறைமுகத்தில் இந்தப் பொருட்களை இறக்கிவிட்டு கப்பலைத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி ‘மனிதம்’ அறக்கட்டளையின் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம் புதுதில்லியில் செஞ்சிலுவைச் சங்கத் (இந்திய ஒன்றியப் பிரிவு) தலைமைச் செயலாளரைச் சந்தித்து மனு அளித்தார்; செஞ்சிலுவைச் சங்க உதவியோடு வெளியுறவுத்துறை, கப்பல் போக்குவரத்துத்துறை பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் உயரதிகாரிகளைச் சந்தித்து, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார். இதனிடையே வணங்கா மண் கப்பலை ஆய்வு செய்த தமிழக உளவுத்துறையினர், ‘மனிதம்’ அறக்கட்டளையின் நிர்வாகி ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்று, அவரை ஓரிடத்தில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரில் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர்.

கப்பல் கடலில் நிற்கும் ஒவ்வொரு நாளும் பல இலட்ச ரூபாய் செலவாகும் என்பதனால், கப்பலில் இருக்கும் நிவாரணப் பொருட்களை இலங்கையிலோ தமிழகத்திலோ இறக்க அனுமதி வழங்கினால்தான், உலகத் தமிழர்களின் ஒருமித்த முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும் என்பதனாலும், கப்பலிலிருக்கும் ஊழியர்கள் பலருக்கும் உடல்நிலை சரியில்லாததால் அவர்களை விமானம் மூலமாக சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்பதனாலும், தமிழக அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு உதவவேண்டும் என்ற கோரிக்கையை உலகத்தமிழர்கள் முன்வைத்தனர். ஆனால், உலகத் தமிழர்களின் அழுகுரல் ஏதும் ஆட்சியாளர்களின் காதுகளில் விழவே இல்லை.

இந்திய ஒன்றியக் கடற்பரப்பில் 21 நாட்கள் வணங்கா மண் கப்பல் இருந்த நிலையில், ஈழத்தமிழர் விவகாரத்தை மையமாக வைத்துத் தமது அரசியல் பகடைக்காய் விளையாட்டை முன்னெடுத்த  தமிழக முதல்வர் கருணாநிதி, பெயரளவில் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  பல நாள் போராட்டத்திற்குப் பிறகு, உலகத் தமிழர்களின் பெரும் முயற்சியால் இந்திய ஒன்றிய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆயினும் நிவாரணப் பொருட்களை பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகே, முள்வேலிக்குப் பின் உள்ள தமிழர்களுக்கு விநியோகிக்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முடிவெடுத்தது.

“இந்தியா மற்றும் புலிகள் உறவில் முரண்பாடு ஏற்பட முக்கியமாக என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று தேசத்தின் குரல் அன்றன் பாலசிங்கம் அவர்களிடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில், இந்தியா – புலிகள் இடையேயான உறவு நிலை பற்றித் தெளிவாக விளக்கும்.

“தமிழீழம் சுதந்திர நாடாக உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து எம் மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். அதனால் தான் எம் மண்ணை மீட்டெடுத்து, எமக்கான சுதந்திரத் தமிழீழத்தை உருவாக்குவதில் தெளிவாக இருந்தோம். ஆனால், இந்திய அரசு இதை விரும்பவில்லை.

தமிழீழத்தில் ஒரு தனியரசு உருவானால், அது தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற சமூகங்களிடத்திலும் பிரிவினை எண்ணத்தைத் தோற்றுவிக்கும் என்ற அச்சத்தினால், எமது இலட்சியத்தை அவர்கள் ஏற்க மறுத்தார்கள். இந்த அடிப்படையில்தான் முரண்பாடு எழுந்தது”.

இந்திய ஒன்றிய அரசும் அன்றைய திமுக அரசும் ஈழப் போரில் ஒரே நிலைப்பாட்டையே கொண்டிருந்தன. அது முழுக்க முழுக்க தமிழர்களுக்கும் தமிழின விடுதலைக்கும் எதிரான நிலைப்பாடு என்பதில் எள்ளளவும் நமக்கு ஐயம் தேவையில்லை.

ஈழத்தில் சந்திப்போம்!

திருமதி. பவ்யா,

செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles