மே 2022
இன எழுச்சி நாளில் நினைவில் நிறுத்தவேண்டிய இலக்குகள்
அரசியல் எதிரியான திராவிடமும், சித்தாந்த எதிரியான ஆரியமும், அரச அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு, தமிழர் எனும் நம் பேரினத்தின் அடையாளத்தைத் தொடர்சிதைவுக்கும், திரிபுக்கும் உள்ளாக்கும் வரலாற்றுச் சதி, அண்மைக் காலமாக, இன்னும் அதிக வேகத்துடன் நிகழப் பல தளங்களில், தீவிர செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதை அறிகிறோம்.
மக்களின் வாக்குக்களைக் காசைக் கொடுத்துப் பெறும் வரை, தமிழ், தமிழர் நலன் என்று முழங்கியவர்கள், அதிகாரத்தைப் பெற்றவுடன், நான் திராவிட இனக்கூட்டத்தவன் என்ற முகக்கவசம் அணிந்து வந்து, ஏமாற்றினர்; அடுத்தடுத்த அறிவிப்புகளின் வழி, சத்தமில்லாமல் சூழ்ச்சிகள் பலவற்றைத் திட்டமிட்டு நடத்திவருகின்றனர் என்பதும் தெளிவாகப் புரிகிறது.
அவற்றின் ஒரு முக்கிய பகுதியாகவே, நம்மினத்தின் மதிப்பிடமுடியாத பல்லாயிரமாண்டு அறிவுச் சேகரமான கழக இலக்கியத்தை, “திராவிடக் களஞ்சியம்” எனும் பெயரில் வெளியிடப் போவதாக வஞ்சனையான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நாம் கடுமையாக எதிர்த்ததன் பொருட்டு நிறுத்தி வைத்திருக்கிறது, திமுக அரசு. நாம் இதைத் தடுத்திருக்காவிடில் இத்தனை நாள், திராவிடம் எனும் உள்ளீடற்றக் கருத்தாக்கம், தமிழுக்கும், தமிழர்க்கும் செய்த துரோகங்களில் இது, அளவிடமுடியாத பல இன்னல்களைத் தருவிப்பதோடு, நம் தொன்மத்தின் ஊற்றுக்கண் மேலான, இனத்தின் ஆன்மாவின் மீதான அமிலவீச்சுத் தாக்குதலாகவும் ஆகிப்போயிருக்கும். இது அடிமடியில் கைவைத்து, நிரந்தரமாக நம் அடையாளத்தின் மீது சேறுபூசும், சிதிலம் செய்து மறைக்கும் தந்திரம். முதலில் குழப்பத்துக்கும், பிறகு திரிபுக்கும், இறுதியாக அழித்தொழிக்கும் எண்ணத்தோடும், நம் இலக்கிய ஆதாரங்களின் மீது தொடுக்கப்பட்ட போராகவே இது மாறியிருக்கும். இன்னும் பல நாசகார நயவஞ்சகத் திட்டங்களைத் தொடர்ச்சியாக நாம் தடுத்து நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
எல்லாவற்றுக்கும் பொய்யையும், புரட்டையும் மட்டுமே சொல்லி, தேன் தடவிய கத்தியால் நாவறுக்கும் குயுக்தியோடு, தமிழர்களை ஆளும் அதிகாரம் பெற்ற இந்தத் திராவிடத் திருவாளர்களின் தீய எண்ணத்தை இனியும் பொறுத்துக் கொள்ளவோ, கடந்து செல்லவோ, இது 2009க்கு முற்பட்ட காலமன்று. தமிழர் பிணங்களின் மீது ஏறிச்சென்று, பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் பதவிப்பிச்சை கேட்டு அலைந்தவர்களின் உண்மை முகத்தைக் கண்டு வெருண்டு, தனக்கான வரலாற்றைத் தானே எழுத முன்வந்த தமிழ்ப் பிள்ளைகளின் நேரம். ஆம்! இது இனப்படுகொலையின் இன்னும் ஆறாத காயங்களை, நெஞ்சில் தாங்கி, குருதியும், கண்ணீரும் கலந்து உகுக்கும் தமிழ்த்தேசியர்கள், செய்நேர்த்தியுடனும் வினைத்திட்பத்துடனும் கடமைகளை விரைந்தாற்ற வேண்டிய காலம்!
தமிழினப் படுகொலை நடந்து, கிட்டத்தட்டப் பதிமூன்று ஆண்டுகள் போய்விட்ட பின்பும், நம் தொப்புள்கொடி உறவுகளை இன்னும் துயரங்கள் துரத்தியபடியே தான் இருக்கின்றன. உரிமைக்குரல் எழுப்பும் போதெல்லாம் குரல்வளை நெறிக்கும் தொடர் அடக்குமுறை, இன்று வரை நிற்காத இராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றோடு, பெரும் பொருளாதாரச் சீர்கேட்டிலும் இலங்கை மக்கள் தவிக்கையில், வழக்கம்போலவே, மனிதமும், திறமையும், நேர்மையுமற்ற சிங்களத் தலைவர்களது தவறுகளின் பொருட்டு, அங்கு வாழும் தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்களக் குடிமக்களே கூட, நம் தேசியத் தலைவரின் தலைமைத்துவம், தாய்க்குணம் மற்றும் தொலைநோக்கு ஆகியவற்றை உயர்ந்தேத்திப் புகழும் நிலைக்கு வந்துள்ளனர். அவரின் அருமை இப்போது உண்மையிலேயே புரிந்தால், உள்ளபடியே அப்பாவித் தமிழர்களுக்கு வாழும் உரிமை வாங்கித் தர, இனியேனும் தமிழர் தரப்புக்கு உரிய நீதி வழங்குவதை வலியுறுத்த அவர்கள் முயலட்டும்!
அவர்கள் செய்வதைப் பற்றிப் பேசுகிறோமே! நமது தாய்த்தமிழ் உறவுகளுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? அனைத்துலகின் கள்ளமௌனமும், ஆரிய இந்துத்துவ இந்தியத்தின் துரோகமும், தமிழரல்லாத திராவிடத்தின் சதியதிகாரமும், வென்று வேர்பிடித்து நிற்கையில், நாம் குற்றவுணர்ச்சியுடனேயே, குமையும் உள்ளத்துடனே தான், இந்த மே 18யும் கடக்கப் போகிறோமா? இல்லாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நினைவேந்தலும், இனி இல்லாமல் ஆக்கப்படப் போகிறவர்களைக் குறித்த கவலைப்படல்களும் மட்டும் செய்து நகரப் போகிறோமா?
இன்னும் நமது தமிழினத்தின் சாபக்கேடுகளாகத் தொடரும், சாதிமதப் போதை, சாராயம், வாக்குக்குப் பணம், வறுமையுடன் கூடிய மறதி, அரசியல் முனைப்பின்மை, பொழுதுபோக்குகளில் நேரவிரயம், திரைக்கவர்ச்சி, அதீத நுகர்வு, அடையாளச் சிக்கல்கள், வரலாற்றுத் தெளிவின்மை ஆகிய வலைகளில் இருந்து, பெரும்பான்மைத் தமிழர்களை நாம் மீட்க வேண்டியுள்ளது. மேலும் தன்னலம், தன்முனைப்பு, தன்னினப்பகை, தான்மை, தாழ்வு மனப்பான்மை, குழப்பக்குழு மனநிலை, கடமையுணர்ச்சியின்மை, ஒப்புக்கொடுத்தலின்மை, ஒப்புரவின்மை, உளச்சுத்தியின்மை போன்ற இன்னும் பல அகச் சிக்கல்களோடு, தாய்நிலத்திலேயே அடிமையின் அடிமையாய்க் கிடக்கும் நம்மவரை, நம்மை நோக்கி அழைத்துவரத் தேவையுள்ளது.
புழுவொன்று, உடலைச் சுற்றியிருக்கும் கசடுகளைக் களைந்து, தன் கூட்டைத் தானே கீறிச் சிறகுவிரித்து வண்ணத்துப்பூச்சியாக விண்ணில் பறப்பதைப் போல, நாமே இந்த அழுக்குகளை நம் ஆளுமையிலிருந்து கழுவித் துடைத்தெறிவோம். இனவிடுதலை எனும் பெருங்கனவுக்குக் காய்தல் உவத்தலின்றி, காரண காரியம் பாராமல், நம்மை அர்ப்பணித்து, ஆகப்பெரும் நம்மினத்தின் விலங்குகளை நாமே உடைப்போம்.
நம் அளப்பரிய ஆற்றலை, நாமே அறிவோம்! செயல் ஒன்றே நம் வேகத்தை அதிகப்படுத்துமென்று தெளிவோம்!
முரண்களைத் தவிர்த்து முதுபெரும் இனமாக ஒன்று சேர்வோம்! அதிகாரம் செலுத்தும் அரியணையில் ஆகக்கூடிய விரைவில் ஏறுவோம்! பூட்டியிருக்கும் சர்வதேசத்தின் கதவுகளை ஓங்கியுதைத்துத் திறப்போம்!!! நடுவில் நண்டு, நரிகளால் வரும் தடைகளை ஏறி மிதித்து, நசுக்கிக் கடப்போம்!!!அண்டம் புகழும் தகுதி கொண்ட தமிழினத்தின் உரிமைகளை வென்று, தலைவர் சொன்னச் செந்தமிழ் நாட்டைச் சமைப்போம்!!! அதுவரை கண்ணின் மணி போல அக்கனவைச் சுமப்போம்!!!
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை! இயக்கப்பணியே உறுதி செய்யும் அதைப் பெறுதலை!!!
நாம் தமிழர்!!!
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.