பிப்ரவரி 2024
எண்ணூர் அமோனியா வாயுக்கசிவும் அரசின் மெத்தனப்போக்கும்
நில அமைப்பு தாழ்வானதாக அமைந்திருப்பதாலும், ஆற்று நீரைக் கடலில் கொண்டு சேர்க்கும் முகத்துவாரப்பகுதியாக அமைந்திருப்பதாலும், பெருமழை வெள்ளக் காலங்களில் நீர் வடிவதற்கு மிகவும் இன்றியமையாததாய் அமைந்திருக்கிறது, எண்ணூர் பகுதி. இத்தகைய சிறப்பு வாய்ந்த பகுதியில் 20 சதுர கிலோமீட்டர் தொலைவிற்குள், 40 அபாயகரமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன; குறிப்பாக, மூன்று அனல் மின் நிலையங்கள் (எண்ணூர், வல்லூர் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையங்கள்). அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியைக் கொண்டு வருவதற்கு மூன்று துறைமுகங்கள், அதனைச் சேமித்து வைப்பதற்கு சேமிப்புக் கிடங்கு, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மூன்று உரத் தொழிற்சாலைகள், பெயிண்ட் தொழிற்சாலை, சிமென்ட் தொழிற்சாலை மற்றும் பல ஆபத்தான தொழிற்சாலைகள் நிறைந்ததாக இப்பகுதி காணப்படுகிறது. இவ்வாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், நீரையும் காற்றையும் மாசுபடுத்துகின்றன. மனிதர்களும் பிற உயிரினங்களும் வாழத் தகுதியற்ற இடமாக எண்ணூர் மாறியுள்ளது என்பது சூழலியல் ஆர்வளர்களின் கருத்தாக இருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி சென்னை எண்ணூரில் உள்ள “கோரமண்டல் இன்டர்நேஷனல்” எனும் செயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவின் காரணமாக, மக்கள் பெருமளவிற்கு பாதிப்பைச் சந்தித்தனர். கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை குழாய் பதிக்கப்பட்டு அதன்மூலம் அமோனியா தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. அக்குழாயில் ஏற்பட்ட கசிவு கடல் நீரில் கலந்ததால் குறைந்த அளவு பாதிப்பு ஏற்பட்டது; அதுவே நிலத்தில் ஏற்பட்டிருப்பின் வடசென்னை முழுவதுமாய் பெரும் அழிவிற்கு உள்ளாகி இருக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
அமோனியா நம் தோலிலும் செல்களிலும் உள்ள ஈரப்பசையுடன் சேர்ந்து “அமோனியம் ஹைட்ராக்ஸைடு” எனப்படும் இரசாயனத்தை உருவாக்கி, அதன் மூலம் தோலுக்கு மிகுந்த எரிச்சலைத் தரக்கூடியது. மேலும் இது கண் எரிச்சல், மூச்சுத்திணறல், நாள்பட்டு சுவாசிக்கும்போது நுரையீரல் கல்லீரல் போன்றவற்றில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைகிறது. மனிதனுக்கு மட்டுமல்லாமல் இன்ன பிற கடல்வாழ் உயிரினங்களான மீன், நண்டு, இறால் போன்றவற்றுக்கும் இவை தீயது என்பதை அவை இறந்து கரையோரம் ஒதுங்கியதன் மூலம் நாம் அறிய முடிகிறது.
உலகம் முழுவதிலும் “ரெட் லைனிங்” எனப்படும் பகுதிகளில் தான் பெருமளவிற்கு தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. பெரும்பான்மையாக ஏழை, பாமர மக்களின் வாழ்விடங்களே தொழிற்சாலைகள் கட்டுவதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு தொழிற்கூடங்கள் அமைக்கப்படுகின்றன. குரலற்ற மக்களின் வாழ்விடங்களுக்கு அருகாமையில், இத்தகைய தொழிற்கூடங்களை ஏற்படுத்தும்போது பெருமளவில் எதிர்ப்புகள் வராது என்பதே இதன் உள்நோக்கமாக இருக்கிறது. இதனாலேயே மேல்தட்டு மக்களின் வாழ்விடங்கள் பாதுகாப்பு நிறைந்ததாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்விடங்கள் பாதுகாப்பற்றதாகவும் அமைகின்றன.
ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய வெள்ளை நகரம், கறுப்பு நகரம் என்ற பிரிவினை இன்றும் சென்னை மாநகரில் தொடர்வதை நாம் காண முடிகிறது. 1971 ஆம் ஆண்டு எண்ணூர் அனல்மின் நிலையம் துவங்கியது முதல் இன்று வரை, ஐம்பதாண்டு காலமாக அப்பகுதி மக்கள் நஞ்சில்லாக் காற்றும், சுகாதாரமான நீரும் வேண்டி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிற்கூடங்களின் வளர்ச்சியையே திராவிட அரசுகள் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியாக, தங்களது மிகப்பெரிய நிர்வாக வெற்றியாக பறைசாற்றிக் கொள்ளும். மண்ணையும் மக்களையும் பாதிக்காத வண்ணம் தொழிற்சாலைகள் அமையுமெனில் அதுவே நிலைத்த வளர்ச்சியாகவும், நீடித்த வெற்றியாகவும் அமையும். ஆனால் இங்கு அவ்வாறு நிகழ்த்தப்படுவதில்லை.
மக்களின் கருத்துக்களுக்கு ஒருபோதும் செவிமடுக்காது, நாசகாரத் திட்டங்களை ஏழை மக்களின் வாழ்விடங்களில் வலிந்து திணித்து அதனை வளர்ச்சி என்று கட்டமைப்பதே திராவிட அரசுகளின் போக்காக இருக்கிறது. தமிழ்நாடெங்கிலும் பார்ப்போமாயின் இதே நிலை தான் பெரும்பாலும் நிலவுகிறது. தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு, அதனின்று ஏற்படும் பொருளாதார மேம்பாடு எனும் மாய வலையினுள் எளிய மக்களைச் சிக்கவைத்து, அதன்மூலம் பெரும் பொருளையும் ஆதாயத்தையும் அரசுகள் ஈட்டுகின்றன. பெருநிறுவனங்கள் தரும் தரகுத் தொகைக்காக, தனது மக்களின் நலவாழ்வைக் கெடுத்து, சுகாதாரம் மற்றும் சூழலியல் சமரசங்களைச் செய்து கொண்டு, சமூகத்தின் நலனைக் கருத்தில் கொள்ளாது அரசியல் இலாபங்களுக்காக அப்பாவிகளின் உயிரைப் பணயம் வைக்கும் இந்த இரக்கமற்ற அரசுகளோடு, வாழ்நாளெல்லாம் போராடி குடிமக்கள் மாண்டு போகும் இழிநிலையை உருவாக்கியதே திராவிட அரசுகளின் அறுபது ஆண்டு காலச் சாதனை.
திருமதி. பவ்யா,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.