நவம்பர் 2022
என்று கிடைக்கும் நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரத் தீர்வு?
பத்தனின் தேசம் என்று சொல்லிக் கொள்ளும் இவங்கையின் சுதந்திரத்துக்கு முன்பிலிருந்தே சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு வந்தாலும், ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு எம்மினம், இரத்தப் பசி கொண்ட 32 நாடுகளின் ஆயுதங்களுக்கு 1.75 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை சில மாதங்களில் திள்ளக் கொடுத்தது. இதை மறப்பவன் அல்லது மறுப்பவன் மனிதனாக இல்லை மிருகமாகக்கூட இருக்க முடியாது. இதற்கு நம்மால் செய்வது ஏதமில்லை என்பது நினைப்பது அதை மறப்பதைவிடக் கொடுமையானது.
கடலைத் திடலாக்கி விளையாண்ட நம் பெருமை மிகு இனம், சிங்கள தேசத்தில் சிறுமைப்பட்டுக் கிடந்த போது, அந்த நிலையை மாற்ற பிரபாகரன் எனும் பேராண்மை மிகுந்த ஒரு தலைவன், வேறு வழியேயின்றி துவக்கெடுத்த பின்பு தான், தமிழரை நாயென்ற அனைவரும் நம்மைப் புலிகளென்றனர். தான் மட்டுமல்லாது தன் குடும்பத்தினர் மட்டுமல்லாது, வீரம் செறிந்த மானமறவர்களான மாவீரர்களின் உயிரையே ஆயுதமாக்கி, தங்கள் உடலையே தமிழீழத் தாயகத்தில் விதைகளாக்கினார், அப்பெருமகள். வெற்றியையோ தோல்வியையோ எண்ணி ஈழத்துக்கான விடுதலைப் போராட்டத்தைத் துவக்கவில்லை அவர். மறத்தமிழன் நான் தொடங்கியதை மானத் தமிழனொருவன் என்றேனும் செய்து முடிப்பானென்றே களத்தில் அவர் குளுரைத்திருப்பார். அவர் கூறியது யாரையோ இல்லை! தாய்த் தமிழ் மக்களே! நம்மைத்தான்.
ஈழப் போராட்டத்தில் சிந்தப்பட்ட ஒவ்வொரு கண்ணீர்த் துளிக்கும், உதிரத் துளிக்கும், சீரழிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் மானத்துக்கும், சிதைக்கப்பட்ட ஒவ்வொரு உறவின் உடலுக்கும், சின்னாபின்னமாக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் வாழ்வுக்கும் நாம் பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் இந்த உடல் வளர்த்து, உயிர் வளர்த்து என்ன பயன்? அவர்களின் இந்த அவல நிலைக்கு யாரை விடவும் நாம் அதிகப் பொறுப்பாளியாகிறோம்! அந்த பாவத்தை எப்படி தீர்க்கப் போகிறோம்? மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் பின்னாக, அவர் தம் நல்வாழ்வையும், முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் முயற்சியில் ஓர் அங்குலம் கூட முன்னேற்றமில்லை.
நான்காம் ஈழப்போரின் இறுதிகட்ட இனப்படுகொலைக்கும், இன்று நம் தாய்த்தமிழ் உறவுகள் அரசியல் அகதிகளாக ஈழத்திலும், புவியின் பிற நாடுகளிலும் அலைந்து திரியும் இந்த நிலைக்குக் காரணம் தகுதியற்றவர்களைத் தலைமைகளாக நாம் தேர்ந்தெடுத்தது தான். இழப்புகளே இல்லாமல் நம்மினத்தைக் காத்திருக்க வேண்டிய தமிழக அரசு, இழவுக்குக்கூட நம்மை அழக்கூடாது என்று தடுத்ததை மறந்துவிடக்கூடாது.
இனியொரு முறை நம்மினம் இந்த பூமிப் பந்தில் அடி வாங்கக் கூடாது: அடித்தால் அந்த எண்ணம் இன்னொருவனுக்கு கனவிலும் வரக்கூடாது என்ற அளவுக்கு வீரமிக்க, தமிழரைத் தாங்கிப் பிடிக்கும் ஓர் ஆண்மையுள்ள அரசு தேவை. அது நாம் தமிழராயின்றி வேறு யாராயிருக்க முடியும்? அதிகாரம் என்ற ஒன்று தகுதியான ஒரு தமிழருக்கு இல்லாமல் போனதால் நம்மினம் சீரழிந்ததது போதும். இனியேனும் தமிழினம் சிறக்க, இழந்த பெருமையை மீட்டெடுக்க, நாகரீகமான, நிர்ணய உரிமையோடு, நம் ஈழ உறவுகள் இனியேனும் நிம்மதியாக தமக்கென, தமிழர்க்கென ஓர் நாட்டில் வாழ, பொது வாக்கெடுப்பு மூலம் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்ள நாம் தமிழராய் இணைவோம்! நாம் தமிழருடன் இணைவோம்!
அதிகாரமிக்க ஒரு தமிழரரசை தமிழகத்தில் முதலில் நிறுவுவோம்! அதன் மூலம் பூமிப் பந்தில் தமிழர்க்கான ஒரு நாட்டை, தமிழீழ சோசலிசக் குடியரசை நிறுவுவோம்!
நாம் தமிழர்!
திருமதி, விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.