spot_img

ஏன் கேட்க வேண்டும் நாடாளுமன்றத்தில் நாம் தமிழரின் குரல்?

ஏப்ரல் 2024

ஏன் கேட்க வேண்டும் நாடாளுமன்றத்தில் நாம் தமிழரின் குரல்?

“இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கின்பம் தரும்படி வாய்த்த நல்லமுது” எனும் புரட்சிக்கவிஞர்  பாரதிதாசன், தமிழைப் பலப்பல விதங்களில் பாடித் திளைத்தாலும், காலத்தால் மூவாத முத்தமிழ் தமிழர்க்கு உள்ளும் புறமும் நின்றியக்கும் உயிர் போன்றது என உருகிச் சொல்கிறார். உலகெங்கும் தேசிய இனங்கள் தத்தமது மொழியினாலே அடையாளப்படுகின்றன; அம்மொழி பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகளினாலேயே நவீன காலத்தில் நாடுகளும் உருவாக்கம் பெறுகின்றன. தமிழால் ஒன்றாகிய தமிழரினம் உலகம் முழுக்க விரவி வாழ்ந்தாலும், தமிழ்ப்பேரினத்தோர் பெரும்பான்மையாக வசிக்கும் முக்கியமான மரபுவழித் தாயகம் இன்றைய நாளில் இப்புவியில் தமிழ்நாடு மட்டுமே.

தமிழர் எனும் இனத்தின் இருப்பை நிர்ணயிக்கும் சிறிய பெரிய கூறுகள் அனைத்தையும் தீர்மானிக்கும் இடமும் இதுவே. நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழும் தமிழரின் வாழ்வு சார்ந்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இடத்தில், இந்தத் தமிழ்நாட்டின் அரசு இருந்தது; இருக்கிறது; இனியும் இருக்கும். நேர தூர தேச அரச எல்லைகளைக் கடந்து வசித்தாலும், ஒற்றைத் தமிழருக்கு ஒரு சிக்கலென்றால் உதவிக்கான முதல் குரல் இந்நிலத்திலிருந்து தான் எழ வேண்டும். அக்குரல் தமிழ்க்குரலாக இருந்தால் மட்டுமே ஒப்புக்காகவன்றி உரிமைக்காக எழுப்பப்படும் குரலாக அது இருக்கும்.

இனம் எழுச்சியுற:

முதுமொழியாம் கன்னித்தமிழ் பேசும் தமிழர் பாராண்ட புகழ் பெற்றிருந்தாலும், சமகாலத்தில் வீழ்ந்துவிட்ட வலிமையிழந்த இனமாக தமிழ்நாட்டிலேயே நாம் மாற்றப்பட்டிருக்கிறோம். சீர்மிகு சோழப்பேரரசுக்கும், பெருமைமிகு பாண்டியப் பேரரசுக்கும் பின்னாக, கடந்த ஆயிரம் ஆண்டுகளில் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல நாம் சிறுமைப்பட்டுக் கிடக்கிறோம். செல்வத்தைத் தண்ணீராக இறைத்து இறைக்குப் பெருங்கோவில்கள் கட்டிய நாம், இருக்க இடமின்றி ஏதிலிகளாக அலைகிறோம்; கலம் கட்டிக் கடல் கடந்து நாடுகளை வென்ற நாம் நாடற்றவர்களாகத் திரிந்து கொண்டிருக்கிறோம்;

பெருநிலங்களை ஆண்ட பேரரசர்களாலும் வெல்ல முடியாத அரசுகள் அமைத்த நாம், நமக்கான அரசின்றி அநாதைகளாக அபலைகளாக நிற்கிறோம். கழகங்கள் தோறும் கவி செழிக்க புலமை பெருக்க செவ்விலக்கியம் படைத்த நாம், நம் மொழியை இழந்து முழுதாக நம் அடையாளம் தொலைத்துத் தவிக்கிறோம்! எனவே நாம் மனதளவில் ஊக்கம் பெற்று, விழிப்புற்று மேலெழுந்து வர நம்மை ஒன்றிணைக்கும் சித்தாந்தமாக தமிழ்த்தேசியம் இருக்கிறது. கொடும் இனவழிப்பின் பின்னாக, பெரும் விலை கொடுத்துப் பெற்ற பாடங்களின் மூலம், தமிழினம் தன்னை மீட்டுருவாக்கம் செய்து மேன்மையடையும் வழியில் பயணிக்கத் தமிழ்த்தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சி தமிழரினத்தின் எழுச்சியைக் கோருகிறது.

உரிமை மீட்க

இந்திய ஒன்றிய நாடாளுமன்றம், ஒட்டுமொத்த நாட்டுக்குமான கொள்கை வகுப்பில் ஈடுபடுகிறது.  நிர்வாகத்துக்குத் தேவையான அனைத்து சட்டங்களையும், அவற்றைச் செயலாக்கம் செய்யத் தேவையான முடிவுகளையும் தீர்மானிக்கும் இடமாக பாராளுமன்றம் இருக்கிறது. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களும், மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களும் இந்திய ஒன்றியத்தின் குடிமக்கள் சார்பாகச் சேர்ந்தியங்கும் வகையில், அரச விவகாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விரு அவைகளுக்கும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வரும் பிரதிநிதிகள், தத்தமது மக்களின் நலனைப் பேணுகின்ற சட்டங்களை ஆதரித்தும், ஊறு விளைவிக்கிற சட்டங்களை எதிர்த்தும் செயல்பட வேண்டியுள்ளது.

கடந்த காலத்தில் தங்களுக்காகப் பேசும் தகுதியான பிரதிநிதிகளைத் தேர்வு செய்து அனுப்பாததின் காரணமாக மற்ற தேசிய இனங்களைக் காட்டிலும், தமிழினம் அதிகமான உரிமைகளை இழந்து விட, தமிழ்நாட்டின் வாழ்வாதாரச் சிக்கல்கள் மலிந்து விட்டன. கல்வி, மருத்துவம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் மேம்பாடு, வளப்பாதுகாப்பு ஆகியவற்றில் இவ்வுறுப்பினர்கள் சார்ந்த கட்சிகள் தன்னலத்துடன் செய்து கொண்ட சமரசத்தால் ஒட்டுமொத்த தமிழினமும் பல்வேறு துயரங்களுக்கு முகங்கொடுக்கும்படி ஆகிவிட்டது. எனவே இழந்துவிட்ட நம் வாழ்வாதார உரிமைகளை மீட்க, இனி மிச்ச சொச்சம் இருக்கும் உரிமைகளையேனும் காக்க, பழையவர்களைத் தவிர்த்து புதியவர்களான நாம் தமிழர் உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்ப வேண்டியது அவசியமாகிறது.

மக்கள் நலம் பேண

கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழ்நாடு சார்பாக நாடாளுமன்றத்தை நிறைத்தோர் பெரும்பாலும் திராவிடக் கட்சி உறுப்பினர்களே. ஒன்றிய அமைச்சரவையில் பங்கெடுக்கும் அளவுக்கு அதிகாரத்தை வழங்கிய தமிழக மக்களுக்கு, அக்கட்சியின் உறுப்பினர்கள் அதிகமாகத் தந்தது ஏமாற்றத்தையும், ஆயாசத்தையும் மட்டுமே. தொண்ணூறுகளின் பின்னாக ஒன்றியத்தில் அரசியல் நிச்சயமற்ற நிலை ஏற்பட, வலுவற்ற அரசுகள் வருவதும் போவதுமாக இருந்த சூழலில், பாஜக காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியிலும் முக்கியமான துறைகளைப் பல ஆண்டுகள் கையில் வைத்திருந்த திமுக, தமிழர்களுக்கு செய்ததைக் காட்டிலும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கும், தனிப்பெரும் முதலாளிகளுக்கும் செய்தது தான் அதிகம். அங்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள் நமக்குப் பெருமை தேடித்தந்ததைக் காட்டிலும் சிறுமைப்படுத்தும்படி நடந்து கொண்டதே நாம் அறிந்த வரலாறு.

ஒன்றியத்திலேயே நான்காவது பெரிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியைக் கொண்ட  தமிழ்நாட்டிலிருந்து(39 + 1) இதுவரை சென்ற திமுக அதிமுக உறுப்பினர்கள் நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் தமிழினத்தை, தனக்குத் தேவையானதைத் தக்க முறையில் கேட்டுப் பெறும்  வலிமைமிக்க இனமாக மாற்றியிருக்கவியலும். ஆனால் உலகறிய நடந்த தமிழினவழிப்பைக் கூடத் தடுக்கவும், தட்டிக் கேட்கவும் இயலாத, ஏற்பட்ட இழப்புகளைத் தணிக்கும் முறைகளைக் கூடச் செய்யாத இழிநிலையில் தான், இந்த திராவிட ஆட்சியாளர்கள் நம்மை வைத்திருந்தனர். இனியும் இந்நிலை தொடர அனுமதிக்காது, எவ்வித சமரசமும் இன்றித் தம்மின மக்களின் நலங்காக்கும், உலக அரங்கிற்குக் கேட்கும் விதமாக உரிமைக்குரல் எழுப்பும் நாம் தமிழர் உறுப்பினர்களைத் தமிழ் மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

தூய அரசியல் மலர

இந்திய ஒன்றியம் உருவான காலத்தே அன்றைய அரசியல் சூழலுக்கேற்ப எழுதப்பட்ட அரசியலமைப்பில், காலவோட்டத்துக்கேற்ப சட்டக்கூறுகளை நீக்கியும் சேர்த்தும் மாற்றங்கள் செய்யாமல் இருப்பது, எண்ணிலடங்காச் சிக்கல்களுக்கு வழிவகுப்பதோடு, பல்வேறு தேசிய இனங்களுக்கிடையே பிணக்குகளையும் ஏற்படுத்துகிறது. மாநிலங்களில் தன்னாட்சி – ஒன்றியத்தில் கூட்டாட்சி என்ற அடிப்படைக் கொள்கை நீர்த்துப்போய் ஒற்றையாட்சி முறையில் அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றியத் தலைமையிடம் குவிக்கப்பட்டு, மாநிலங்களது அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூடக் கையேந்தும் நிலை வந்துவிட்டது மிகவும் மோசமான முன்னுதாரணம். எனவே சட்டமியற்றி மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசுகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையிலும், அவை அரசமைப்பின்படி ஆட்சி செய்கின்றனவா என்று உறுதி செய்யும் நீதித்துறையிலும் சமகாலத் தேவைகளுக்கேற்ற சீர்திருத்தங்களை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சொல்கிறது.

உளுத்துப்போய் உதிர்ந்து கொண்டிருக்கும் இந்த அமைப்பை, இதன் வணிகமயமான அரசியலை, அநீதிகளால் நிரம்பிவழியும் அதன் அடிப்படையை மாற்ற, நாம் தமிழர் கட்சி விரும்புகிறது. ஆனால் நம்மைப் போலவே அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றத்தைக் கோரும் தேசிய இனங்களின் ஒட்டுமொத்த விருப்பத்தின் பெயரிலும், இக்கோரிக்கையில் இருக்கும் நியாயத்தின் பெயரிலும், எதிர்காலத் தலைமுறையினருக்கு இம்மாற்றங்கள் விளைவிக்கும் நன்மையின் பெயரிலும் ஒத்திசைவில் இயங்கி, இந்தப் புரட்சிகரமான மாற்றத்தை நாம் சாதிக்க நாம் தமிழர் கட்சி போன்ற அமைப்புகள் அதிகாரம் பெற்று ஓரணியில் திரள வேண்டும். அதற்கு மாற்று அரசியல் பேசும் கட்சிகளுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகள் மூலம் மட்டுமே நல்வாய்ப்பு கிட்டக் கூடும். மேலும் நம்மை மத அடிப்படையில் பிரித்தாளும் பாஜக போன்ற பாசிசச் கட்சியையும், ஊழலில் மூழ்கித் திளைத்து பெருமுதலாளிகளிடம் விலைபோன காங்கிரஸ் கட்சியையும், அதிகாரத்தைத் தக்க வைக்க இவ்விரண்டுக்கும் ஒத்தூதும் திராவிடக் கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இதுவரை இந்திய ஒன்றிய அரசியலில் கூட்டணி ஆட்சிக் காலங்களில் தான், விரைவான வளர்ச்சியும், வியத்தகு விளைவுகளை நல்கிய சட்டங்களும், பரவலான மேம்பாடும், அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களும் சாத்தியப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டின் சனநாயகக் கட்டமைப்பைப் படிப்படியாகக் குலைத்த நிகழ்வுகள் அனைத்தும் ஒற்றைக் கட்சிக்குப் பெரும்பான்மை கொடுத்த காலத்தில் நடந்தவையே எனத் தரவுகள் நமக்கு விளக்குகின்றன. எனவே ஒரேயொரு கட்சிக்குப் பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்குவது ஆபத்தான பின்விளைவுகள் தொடரக் காரணமாகிவிடும். அதுவும் பத்தாண்டுகளாக நம்மைப் படுகுழியில் வேகவேகமாகத் தள்ளிய பாஜக போன்ற மனிதகுல எதிரிக்கு மீண்டும் ஆளும் வாய்ப்பை வழங்குவது நம் தலையில் நாமே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதற்குச் சமம். தேர்தல் பரப்புரை காலங்களில் பாஜகவைச் சரமாரியாகத் தாக்கிப் பேசும் திமுகவும், சாந்தமாகத் திட்டும் அதிமுகவும், பாஜகவை எதிர்க்க எங்களுக்கு வாக்களியுங்கள் என்று இப்போது பேசினாலும், நாளை பாஜக ஆட்சியமைக்கும் பெரும்பான்மையின்றி உதவி கோரினால் முண்டியடித்துக் கொண்டு முன்னால் போய் நிற்கக் கூடியவையே என்பதை முற்காலத்தில் நாம் தெளிவாகக் கண்டிருந்தும், மீண்டும் ஏமாறுவது மடமைத்தனமாகாதா?! எனவே மாற்று அரசியல் பேசும் நாம் தமிழர் கட்சி போன்ற புதிய ஆற்றல்களுக்கு வாக்களித்து சனநாயகத்தை வலிமைப்படுத்த மக்கள் உறுதியேற்க வேண்டும்.

சூழல் காக்க:

ஒரு நாட்டின் சிறப்பான எதிர்காலத்துக்கு அடிப்படையே அதன் நிலமும், அது சார்ந்த வளமும் தான். ஒன்றியத்தின் பெரும்பான்மையான நிலத்தைக் கையில் வைத்திருக்கும் மாநிலங்கள் அவற்றைச் சார்ந்திருக்கும் மக்களைக் காக்கும் நேரடிப் பொறுப்பினைக் கொண்டுள்ளன. இந்த நிலத்தின் வளங்கள் குடிமக்கள் எல்லாருக்கும் பொதுவாகப் பகிர்ந்தளிக்கப்படுவதையும், அதற்கு பதிலீடாக குறைந்த அளவிலான இழப்புகளுக்கான சமரசங்களோடு தேசிய இனங்கள் இந்த வளப்பங்கீட்டுக்கு ஒத்துழைப்பதையும் ஒன்றியம் உறுதி செய்யுமாறு நம் அரசமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசியக்கட்சிகள் தாங்கள் ஆளும் உயரத்தில் இருக்கும் மாநிலங்களுக்கு ஆதரவாகவும், அவ்விடத்தில் இல்லாத மாநிலங்களுக்கு எதிராகவும் அரசியல் கணக்கீடுகளை முன்னிட்டு பாகுபாட்டோடு நடந்து கொள்வதால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பெருமிழப்பைச் சந்தித்துள்ளன.

மக்கள் எதிர்ப்பையும் மீறி பல மாநிலங்களில் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்ட பேரழிவுத் திட்டங்கள் பல தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதும், இயற்கையைச் சூறையாடும் கட்டற்ற வளக்கொள்ளை மிகச்சாதாரணமாக இங்கு நடப்பதும் பொதுநலம் இல்லாத ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்ததால் ஏற்பட்ட கெடுவிளைவுகள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் குடிமக்களுக்குச் சேர வேண்டிய வளப்பங்கீட்டுப் பலன்களைத் தரகுத்தொகைக்காகப் பெருமுதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டின் சாபக்கேடுகள். இதன் மூலம் கள்ளத்தனமாகத் திரட்டப்படும் பணம், குற்றப்பின்னணி கொண்ட தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கையிலேயே வைத்திருக்க, வாக்குக்குப் பணம் கொடுக்க, கேள்வி கேட்போரின் வாயடைக்க, முறையற்ற தொழில்களில் முதலீடு செய்து மேலும் இலாபம் பெற என ஒர் அபாயச்சுழலில் சுற்றிவருகிறது. இதைத் தடுத்து உடைக்கவும், அடுத்த தலைமுறை நோயற்ற இயற்கைக்கு இயைந்தத் ஒரு வாழ்வை வாழவும், நிலமும் வளமும் சார்ந்த நீடித்த வளர்ச்சிக்கு உறுதியளிக்கும் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பதே சாதாரண மக்களுக்கு மிச்சமிருக்கும் ஒரே வழி. உலக அளவில் புவி வெப்பமடைதலால் தீவிரப்பட்டிருக்கும் காலநிலை மாற்றமும், அதனால் ஆண்டுக்காண்டு எளிய மக்களைத் துன்புறுத்தும் இயற்கை பேரிடர்கள் அதிகரித்திருக்கும் பின்னணியோடு நோக்குகையில், சூழலுக்குகந்த கொள்கை வகுப்பில் கவனம் செலுத்தும் நாம் தமிழர் கட்சியின் தேவையை மக்கள் இப்போது அதிகம் உணர்கிறார்கள்.

மகளிர் உயர

உலகெங்கும் ஒவ்வொரு பேரிடரிலும் அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களாகவே இருக்கின்றனர். ஒரு சமூகத்தின் மனித வள வளர்ச்சிக் குறியீடுகளைத் தாண்டி, பெண்களும் குழந்தைகளும் அங்கு எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதை வைத்துத்தான் அச்சமூகத்தின் செம்மாந்த நிலை உணரப்படுகிறது. தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னொரு காலத்தில் பெண்கள் பெற்றிருந்த கல்வி, கலை, பொருளாதாரம், அரசியல் மற்றும் பண்பாட்டு உரிமைகள் எப்படிப்பட்ட தாக்கத்தைப் பெண்கள் இச்சமூகத்தில் செலுத்தினார்கள் என நமக்கு விளக்குகின்றன. ஆனால் ஆரிய மாயைக்குள் வீழ்ந்து தமிழரல்லாதவரது ஆட்சிக்குட்பட்ட காலங்களில் இறுகிய சாதீயப் படிநிலைகள், தமிழ்ப்பெண்களை கொடுமையாக அச்சுறுத்தின. அதன் தாக்கம் இன்று வரை தொடர்வதையும், தாய்வழிச் சமூகமாக இருந்த நாம் ஆணாதிக்க அடக்குமுறை மிகுந்த இனக்கூட்டமாக மாறிவிட்டதையும் கண்கூடாகக் காண்கிறோம்.

நல்வாய்ப்பாக நம் தொன்றுதொட்ட புகழில் எஞ்சிய ஆகூழினால் நம்மிடையே உருவான காமராசர் போன்ற சில நல்ல தலைவர்களாலும், அவர்தம் முயன்று செய்த சீர்திருத்தங்களாலும் கல்வி பெற்று முன்னேறி இன்று நிலைமை ஓரளவுக்குச் சீரடைந்தாலும், இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகமுள்ளது. வெறும் பாலியல் இச்சையைத் தீர்க்கும் பண்டமாக, இரண்டாம் தர அடிமைகளாக எண்ணப்பட்ட பெண்களை, தமிழ்ச்சமுகத்துக்கே முன்னோடியாக விளங்கும் வண்ணம் முதன்முதலாக ஈழத்தில் அரசியல்படுத்தி, அடிப்படை உரிமைகள் அளித்து, இனத்துக்கான போரில் முன்களப் போராளிகளாக நிறுத்தியது உண்மையில் வரலாறு காணாத பெரும்புரட்சி. அப்புரட்சியின் வித்துக்கள் தமிழ்நாட்டிலும் விழுந்து முளைக்க நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் பாலின சமத்துவத்துடன் கூடிய தமிழின விடுதலை அரசியல் களத்தில் மட்டுமின்றி தமிழ்ச்சமூகப் பண்பாட்டுத் தளத்தில் நிகழும் ஒரு மிகப்பெரும் பாய்ச்சல்.

எப்படி ஓரினத்தின் உண்மையான அதிகாரம், உண்மையான விடுதலை என்பது தன்னாட்சி உரிமை கிடைத்தலோ, அதுபோல அவ்வினத்தின் பெண்களுக்கும் உண்மையான மீட்சி தங்களுக்கான முடிவைத் தாங்களே எவ்வித புறத்தலையீடுகளுமின்றி எடுக்கும்போது தான் கிடைக்கும். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை சரிபாதி பெண்களுக்குத் தரும் இடவொதுக்கீடு கடமை மட்டுமல்ல; அவர்களுக்கே உரித்தான மேலான உரிமையும் கூட. 2019 மற்றும் 2021 தேர்தல்களைப் போலவே 2024 தேர்தலிலும் நாம் தமிழர் நிறுத்தியிருக்கும் சரிபாதி பெண் வேட்பாளர்கள் அனைவருமே பட்டதாரிகள்; சமூகப் பொறுப்புமிக்கவர்கள்; மக்களிலிருந்து மக்களுக்காக உழைக்க வந்த உங்கள் வீட்டுப் பெண்கள்.

மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள், தொழில்முனைவோர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய இந்தச் செங்கொடி படையணிக்கே தமிழ்ப்பெண்களின் வாக்குகள் சேர வேண்டும். திராவிடக் கட்சிகளின் மதுக்கொள்கையால் சீரழிந்த குடும்பங்களைத் தனது கணக்கற்ற தியாகங்களாலும், காலநேரம் கடந்த உழைப்பாலும் தூக்கி நிறுத்தும் சராசரி தமிழ்ப்பெண்களின் வாழ்வு முன்னேற, ஒன்றியக் கொள்கை வகுப்பில் தமிழ்ப்பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த, மற்ற தேசிய இனங்களுக்கு முன்னோடியாக தமிழ்ப்பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திகழ, மணிப்பூர் கலவரம் போன்ற பெண்களை வதைக்கும் கொடூரக் குற்றங்களுக்கெதிராக ஓங்கிக் குரலெழுப்ப, உலக நாம் தமிழர் பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.

தமிழ் வாழ

1930 களிலும், 1960களிலும் ஒன்றிய அரசும் மாநில காங்கிரஸ் அரசும் செய்த இந்தித் திணிப்பைத் தீவிரமாக எதிர்த்த வரலாறு கொண்டது தமிழ்நாடு. மொழிப்போரில் தமிழுக்காக உயிர்நீத்தவர்களின் ஈகத்தினால் ஆட்சிக்கு வந்த திமுக, அதன்பின் தமிழுக்காக மாணவ சமுதாயத்தினர் அணிதிரளாமல் பார்த்துக்கொண்டது. தன் குடும்பத்தினரும் கட்சியினரும் மாவட்டந்தோறும் நடத்தும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தையும் இந்தியையும் கற்பித்ததோடு, தமிழில் பேசினால் தண்டத்தொகை கட்டச் சொல்கிறது திமுக. அதன் பின் வந்த அதிமுக, தமிழ்நாட்டின் பள்ளிகளில் தாய்மொழியாம் தமிழ்வழிக் கல்வியைப் புறந்தள்ளி, தமிழைப் பயிற்றுமொழி இடத்திலிருந்து விருப்ப மொழி எனும் இரண்டாமிடத்துக்குத் தள்ளிற்று. இப்போது தமிழில் எழுதப்படிக்கவே அவசியமின்றி தமிழ்ப்பிள்ளை ஒன்று பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக்கல்விப் படிப்பை முடிக்க முடியும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் பிறந்த இரண்டு தமிழ்த் தலைமுறையினர் தமிழைப் பிழையின்றியும், பிறமொழிக் கலப்பின்றியும் பேசவோ எழுதவோ இயலாத வண்ணம் மொழிப்பற்றற்ற முறையில் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது யார் செய்த தவறு? தமிழ் படித்தால் இங்கு மதிப்பில்லை; வேலையுமில்லை; தமிழுக்கு அரசு நிர்வாகத்தில் இடமில்லை; கடைகளின் பெயர்ப்பலகையில், தெருக்களின் பெயர்களில், வழிபாட்டுத் தலங்களில், வழக்காடு மன்றங்களில் தமிழ் இன்று இல்லை. தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழ்நாட்டில் தமிழரது எண்ணத்தில், சொல்லில், செயலில், பெயரில், இல்லத்தில் இனிய தமிழ் இல்லவே இல்லை. முச்சங்கத்திலும் பொங்கிப் பொலிந்த பைந்தமிழ், மூத்த தமிழினத்தால் தமிழ்நாட்டிலேயே கைவிடப்பட்ட நிலைக்குக் காரணம், தமிழர் ஆட்சி அதிகாரத்தில் இல்லை.

மாநிலத்திலேயே இந்த நிலை என்றால் ஆரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு தமிழை ஒதுக்குவதில் என்ன வியப்பு? மிக அண்மையில் தோன்றிய இந்திக்கும், இல்லாத சமஸ்கிருதத்துக்கும் வழங்கப்படும் நிதி உதவிகள், ஆராய்ச்சிகளுக்குக் கிடைக்கும் ஊக்கத்தொகை, கல்விப்புல மேம்பாட்டு ஒதுக்கீடுகள் போன்றவற்றில் சில விழுக்காடு கூட தமிழுக்குச் செய்யப்படுவதில்லை. புதிய புதிய சொற்கள் உருவாகிச் செழித்து, பயன்பாட்டில் தொடர்ந்து இருந்தால் மட்டுமே ஒரு மொழி வாழும்; அம்மொழி பேசுவோரிடம் அதிகாரம் இருந்தால் மட்டுமே அது காலாகாலத்துக்கும் நிலைத்து நீளும். சமஸ்கிருதம் உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகளைப் போலவே தமிழுக்கும் நிர்வாகத்தில் முக்கியத்துவம் வழங்க, செம்மொழியாம் எம்மொழி செழிக்கத் தேவையானவற்றைச் செய்ய, தமிழ்நாட்டிலும் தரணியெங்கும் தமிழ் வாழ, நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் தங்களது மொழி சார்ந்த உரிமைகளைக் கோரிப் பெற நாடாளுமன்றத்தில் நின்று கேள்வி கேட்க வேண்டும்.

தமிழர் ஆள

திட்டமிட்டு அடையாளச் சிக்கலில் தடுமாறும் சமூகமாகத் தமிழினம் சூழ்ச்சியுள் மாட்டிக்கொண்டு விழிக்கிறது. தமிழ்நாட்டுக்குள் இருக்கும்போது தான் சாதியும், மதமும் நம் கண்ணை மறைக்கும் விதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றதும் மற்ற இனத்தோரால் தமிழராக மட்டுமே நாம் அடையாளப்படுகிறோம்.

தாழ்வு மனப்பான்மை போன்ற அகச்சிக்கல்கள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன; தன்னினப் பகையை வளர்த்து விட்டு ஆரியம் திராவிடம் போன்ற புறச்சிக்கல்கள் நம் மீது அதிகாரம் செலுத்துகின்றன. காலைச் சுற்றியிருக்கும் சங்கிலியைப் பெயர்த்தெறிய யானைக்குப் புதிதாக ஒரு ஆற்றல் தேவையில்லை; தனக்கிருக்கும் ஆற்றல் பற்றிய நினைவும், அதைப் பயன்படுத்தும் அறிவுமே தேவை. அது போல தமிழ்ப் பேரினத்தினைச் சூழ்ந்து இறுக்கும் அடிமைத்தளை குறித்து விளக்க, அதை உடைக்கத் தேவையான வலிமை பெறும் வழியைத் தெரிந்தெடுக்க தமிழ்த்தேசியம் நமக்குத் தேவைப்படுகிறது.

காலத்தின் போக்கில், இந்திய ஒன்றியம் எனும் கட்டமைப்புக்குள் நாம் வந்துவிட்ட நிலையில், இதன் சட்டதிட்டங்களுக்குட்பட்ட நடைமுறையில், தமிழரெனும் தனித்த பேரடையாளத்தை இழக்காமல், குறைந்தபட்ச மரியாதையுடனும், சக தேசிய இனங்களுக்கிருக்கும் உரிமைகளுடனும் கூடிய வாழ்வை வாழத் தமிழர்க்கு ஆளும் அதிகாரம் தேவைப்படுகின்றது. அந்த அதிகாரத்தைச் செயலாக்கம் செய்யும் வாய்ப்பு சட்டமியற்றும் மன்றங்களான நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகமாக இருக்கிறது. அவ்விடத்தில் நம்மவர்கள், நமக்கானவர்கள், நம்பிக்கை தருபவர்கள், நம் சிக்கல்களைத் தீர்ப்பவர்கள், நல்வாழ்வை உறுதி செய்பவர்கள் இருக்க வேண்டும் எனில் அவர்கள் நாம் தமிழராக இருக்க வேண்டும். அதற்காக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இத்தேர்தல்கள் மட்டுமின்றி இனிவரும் தேர்தல்கள் அனைத்திலும்  நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இன்றுதான் – அதுவும் – ஒன்றுதான்!

இன்றுதான் – அதுவும் – ஒன்றுதான் – மிக நன்றுதான் –

தமிழ் இனமுன்னேற்றம் இனமுன்னேற்றம்

என்றே அனைவரும் கொண்டே உழைப்பது!

வென்றுதான் தீரவேண்டும் தமிழினம்!

வெல்லாது போனாலோ அனைத்தும் அழிவுறும்!

தொன்று தொட்டுதான் வந்ததே தமிழ்மொழி!

தொலைந்ததே அதுவெனில் வருமே பெரும்பழி!

அன்று தொட்டுதான் இருந்ததே தமிழினம்!

அனைவரும் பேணிட விலையெனில் அழிவுறும்!

தின்று தெவிட்டுவ தொன்றே வாழ்வெனத்

தீர நினைப்பது நன்றோ? தாழ்வு அது!

குன்றும் குலையுமே காத்திட விலையெனில்!

கோடி கொடுப்பினும் நன்று அது நிலைபெறல்!

என்றும் அழிவதே இவ்வுடற் பிறப்புதான்!

இன நலம் பேணிட அழிவதோ சிறப்புதான்!

– பாவலரேறு பெருஞ்சித்திரனார் ( கனிச்சாறு தொகுதி 2)

திருமதி. விமலினி செந்தில்குமார்,

செய்தித் தொடர்பாளர்,

செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles