spot_img

கரூர் கூட்ட நெரிசல் மரணங்களும் திரைக்கவர்ச்சியால் சீரழியும் தமிழ்ச் சமூகத்தின் அவல நிலையும்

அக்டோபர் 2025

கரூர் கூட்ட நெரிசல் மரணங்களும் திரைக்கவர்ச்சியால் சீரழியும் தமிழ்ச் சமூகத்தின் அவல நிலையும்

கடந்த செப்டம்பர் 27 அன்று, தமிழக வெற்றி கழகம் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 41 பேர் மரணமடைந்ததோடு நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். முன்னதாக 2024 பிப்ரவரி மாதம் தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்று அறிவித்த நடிகர் விஜய், அதன் பின்னாக 27 அக்டோபர் 2024 அன்று நடந்த விக்கிரவாண்டி மாநாட்டில் தனது கொள்கைகளை அறிவித்தார். 21 ஆகத்து 2025 மதுரையில் இரண்டாம் மாநில மாநாடு நடத்தியதன் பின், 2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரையை திருச்சியில் தொடங்கி ஒவ்வொரு வார இறுதியின் பொழுதும் மக்கள் சந்திப்பு நடத்தத் துவங்கினார். அதற்கடுத்து டெல்டா மாவட்டங்களில் மக்களைச் சந்தித்த அவர், என்ன காரணத்தினாலோ அவரது பயண பட்டியலை மாற்றி டிசம்பரில் நடக்கவிருந்த கரூர் கூட்டத்தை முன்னதாகவே செப்டம்பர் இறுதியில் நடத்த உத்தேசிக்க, அதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தக் கூட்டத்தில் தான் இத்தகு பேரழிவு நடந்து தவெகவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய அவப்பெயர் வந்து சேர்ந்தது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அதாவது விக்கிரவாண்டி மாநாட்டில் தொடங்கி அண்மையில் நடந்து முடிந்த கரூர் கூட்டம் வரை தவெகவின் தொண்டர்கள், ஒவ்வொரு நிகழ்விலும் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறுகள் அளிக்கும் வண்ணமே முதிர்ச்சி இன்றி நடந்து கொண்டனர். காவல்துறை தொடர்ந்து அளித்து வந்த உத்தரவுகளைப் பின்பற்றாமல், எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் ஊர்வலமாகச் சென்று சாலைக் காட்சி நடத்துவதும், பொது மற்றும் தனியார் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும் தொடர்கதையானது. ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு சில உயிரிழப்புகளும் அதிக உடமை இழப்புகளும் நடந்தன. மதுரை மற்றும் திருச்சி விமான நிலையங்கள் கிட்டத்தட்ட சூறையாடப்பட்டன.

நிகழ்வு முடிந்த இடங்கள் போர்க்களம் போல காட்சி அளித்ததை நம்மால் ஊடகங்கள் வழி காண முடிந்தது. இது குறித்து நடிகர் விஜயோ அக்கட்சியின் பொறுப்பாளர்களோ தக்க பதில் கூறவில்லை என்பதோடு இதற்கான பொறுப்பையும் ஏற்க மறுத்தனர். உயர்நீதிமன்றத்தில் வந்த வழக்கு ஒன்றில் இதுபோன்ற பொது நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க நீதியரசர்கள் உத்தரவிட்டனர். ஆயினும் தக்க நடவடிக்கைகள் எடுக்கும் முன்னர் கரூரில் பெருந்துயரம் ஒன்று நடந்து விட்டது. இது தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்க, ஒன்றிய புலனாய்வு நிறுவனமும் இவ்வழக்குகளை விசாரித்து வருகிறது.

கரூர் சம்பவம் – அன்று முதல் இன்று வரை:

செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் தான் ஊடகங்களில் இந்த உயிரிழப்புகள் பற்றி செய்திகள் வரத் தொடங்கின. நிலைமை மோசமாவதை கருதி நடிகர் விஜய் உடனடியாக புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தார். கட்சி தொடங்கியதிலிருந்து ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தாத அவர், இந்த பேரவலத்துக்குப் பின்னும் செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். அன்று இரவு கீச்சு ஒன்றை இது தொடர்பில் பதிவிட்ட அவர், மறுநாள் இழப்பீடு வழங்குவது தொடர்பாக மற்றொரு கீச்சைப் பதிவு செய்தார். அதன்பின்னர் ஐந்து நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டு, இறந்தவர்களுக்கு இரங்கல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல், பேரழிவுக்கு பொறுப்பேற்றல் என ஏதுமின்றி, திமுக அரசைக் குற்றம் சாட்டி, திரைப்பட வசனம் போல சவால் விட்டார்.

நடிகர் விஜய் பனையூரில் மூடங்கிவிட, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்பாளர்கள் தலைமறைவாயினர். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட பலர் எவ்வித நேரடித் தகவலும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர். ஆனால் அக்கட்சிக்கு ஆதரவானவர்கள் மட்டும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சதி கோட்பாடுகள், விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை கரூருக்கே நேரில் சென்று சந்திக்காமல், இணைய வழியில் இழப்பீட்டை அளித்துவிட்டு கடந்த அக்டோபர் 27 அன்று, சென்னை அருகே மாமல்லபுரம் விடுதி ஒன்றுக்கு அவர்களை வரவழைத்து ஆறுதல் பெற்றுச்செல்ல வைத்திருக்கிறார் நடிகர் விஜய். இது தமிழக அரசியல் வரலாறு காணாத மிக மோசமானதொரு முன்னுதாரணம். தவெகவின் வருகைக்கு பின்னர், தமிழக அரசியல் களத்தில் நடந்த பல விடயங்கள், எந்த அளவு தமிழ்ச் சமூகம் திரைக்கவர்ச்சியால் சீரழிந்துள்ளது என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.

தமிழ்ச்சமூகமும் திரைக்கவர்ச்சியும்:

மற்ற எந்த தேசிய இனத்துக்கும் இல்லாத தனித்துவமாக, தமிழ்ச் சமூகம் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியங்கள் வரை பேசுகின்றன. ஒரு பண்பட்ட சமூகமாக கலைகளின் மீது பெரு விருப்பம் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம், ஒரு கட்டத்தில் மித மிஞ்சிய அளவில் கலைகளுக்கு அதிலும் குறிப்பாக நாடகக் கலைக்கு, அதிக இடத்தை வழங்கி விட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. சிலப்பதிகாரக் காலம் தொட்டு தமிழ்ச் சமூகத்திற்கு இருந்த கூத்துக் கலை மீதான மையல், காலனி ஆதிக்கக் காலத்தில் கூட வளர்ந்து கொண்டே இருந்தது. கூத்தின் நவீன வடிவமான திரைப்படங்கள், 1900 களின் பின்னாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது தமிழ் மக்களின் பிரியமான பொழுதுபோக்கானது. எந்த அளவுக்கு என்றால் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்து அருகே தொடர்வண்டிப் பாலம் கட்ட கூலிகளாக தமிழர்கள் பெருமளவில் செல்ல, மிக முக்கிய காரணம் வாரத்துக்கு ஒரு திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்ற அறிவிப்பு தான். இன்று சயாம் மரண ரயில் பாதை என்று அழைக்கப்படும் அப்பாதையின் ஒவ்வொரு குறுக்கு கட்டைக்கும் ஒரு தமிழர் பலியானதாக கூறப்படுவதுண்டு. இது குறித்த நூல்களும் குறும்படங்களும் கூட வந்ததாய் நினைவு.

தமிழர்களுக்குத் திரைப்படங்களின் மீது இருந்த அதீத காதலை நன்கு அறிந்து கொண்ட திராவிட இயக்கம், திரைப்படங்கள் மூலம் தனது அரசியல் கருத்துக்களை விதைக்கும் வித்தையைக் கற்று அதிகாரத்தைப் பெறப் பயன்படுத்திக் கொண்டது. நடிகர்களும் கதையாசிரியர்களும் மிகப்பெரிய செல்வாக்கு மிக்க ஆளுமைகளாக தமிழ்ச் சமூகத்தில் மதிப்பு பெற்றனர். திரைத்துறையும் தமிழக அரசியலும் பின்னிப்பிணைந்து பிரிக்க முடியாதபடி போனதன் விளைவு, இதுவரை ஐந்து தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் திரைத்துறையில் இருந்து வந்திருக்கின்றனர். இன்றைய முதல்வர் ஸ்டாலினும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்க, அவருக்கு அடுத்ததாக துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினும் ஒரு நடிகராக அறியப்பட்டிருப்பவர் தான்.

மூத்த நடிகரான ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று கால் நூற்றாண்டு காலம் அலைக்கழிக்க, இன்னொரு மூத்த நடிகரான கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்று கட்சி தொடங்கி இன்று திமுகவில் கரைந்து போயிருக்கிறார். அவர் மட்டுமின்றி கட்சி தொடங்கிய தமிழ் திரைப்பட நடிகர்களை கணக்கெடுத்தால் சிவாஜி தொடங்கி விஷால் வரை ஒரு நீளமான பட்டியல் தேறும். ஒரு சில படங்களில் நடித்து அவை வெற்றி பெற்று விட்டாலே முதலமைச்சராகும் கனவு எனும் நோய் தொற்றிக் கொள்ளும் போல. கட்சி தொடங்குவது பிரச்சனை இல்லை. ஆனால் இவ்வாறு மக்களை கூட்டி மரணம் வரை இழுத்துச் செல்வது நடிகர் விஜய்யின் கட்சி கூட்டத்தில் தான் நடந்திருக்கிறது. பல்வேறு நெரிசல் மரணங்கள் இதுவரை நடந்திருந்தாலும் கூட இந்தியா ஒன்றியத்திலேயே ஒரு நடிகரை பார்க்க வந்து இத்தனை பேர் மரித்திருப்பது இதுவே முதல் முறை. ஒரு சமூகப் பேரவலமாக இதை அறிவாளுமைகள் சீராய்வு செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கையாக இருக்கிறது. இந்நிகழ்வு காட்டும் சித்திரம் என்பது தமிழ் சமூகத்தின் அரசியல் பொருளாதார சமூக சீரழிவின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம்.

திரைத்துறையும் தமிழக அரசியலும்:

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எப்போதுமே இந்திய ஒன்றியத்துக்கு பல விடயங்களில் வழிகாட்டும் முன்னோடி மாநிலமாக இருந்திருக்கிறது. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம். இந்தி மொழியால் தனது தாய் மொழியைச் சிதையக் கொடுத்த சில மாநிலங்கள், இன்று இந்தி எதிர்ப்பைப் பேசுகின்றன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பே வேறு எந்த மாநிலத்திலும் நிகழ்ந்திடாத அளவு, இங்குதான் இராணுவம் வந்து அடக்கும் வண்ணம் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம் குறிப்பாக மாணவர் போராட்டம் நடந்தது. அப்படிப்பட்ட இளையோர் கூட்டத்தினால்தான் கரூரில் இத்தகு நெரிசல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பது எவ்வளவு பெரிய முரண். இது எந்த அளவுக்கு தமிழ் இளைய சமுதாயம் சீரழிந்து இருக்கிறது என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

1967-ல் ஆட்சிக்கு வந்த திமுக மற்றும் 1977-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக, இவ்விரு கட்சிகளும் தான் இன்று வரை தமிழகத்தை மாற்றி மாற்றி ஆண்டுள்ளன. திராவிட கட்சிகளின் ஆட்சியில் சிதைக்கப்பட்ட கல்வி கட்டமைப்பு, திணிக்கப்பட்ட போதைப் பொருட்கள், பறிக்கப்பட்ட வேலை வாய்ப்புகள், முடக்கப்பட்ட தொழில்துறை, உடைக்கப்பட்ட சமூக அமைப்புகள் இவை அனைத்தும் சேர்ந்து சமூகப் பொறுப்பற்ற உதிரிகளாக பெருமளவில் இளையோரை மாற்றி இருக்கிறது. புகழுக்கும் பணத்துக்கும் மயங்கி, கயவர்களையும் நடிகர்களையும் தலைவர்களாக நினைத்துக் கொண்டு தெரியும் பதர்க் கூட்டம், தானும் அழிந்து பிறரையும் பலி வாங்கும் அளவு மதிமயங்கிக் கிடக்கிறது. இந்த உயிரிழப்புகள் குறித்த குற்ற உணர்ச்சி கிஞ்சித்தும் இன்றி, இது ஏன் நடந்தது என்று ஆராயவோ, இனி இவ்வாறு நடவாமல் இருக்க என்ன செய்வது என்று சிந்திக்கவோ எண்ணாத இவர்களை அடையாளச் சிக்கல் தான் ஆட்டிப்படைக்கிறது. தன்னையே தெரியாதவனுக்கு தன் தலைவன் யார் என்றா தெரியப்போகிறது?

தனக்கு எது முக்கியம்? எது என் இலக்கு? எது என் குடும்பத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும்? என் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் தலைவர்கள் யார்? என் சமூகம் வளர்ச்சி பெற சிறப்பான தத்துவம் எது? என்றெல்லாம் சிந்திக்க முடியாத தலைமுறையை உருவாக்கிய சாதனை, திராவிட கட்சிகளையே சாரும். தமிழர்களிடையே திரைக்கவர்ச்சியை ஒரு போதையாக்கி, திரைத் துறையில் அதிக ஆதிக்கம் செலுத்தி, தமிழர் விழுமியங்களை மழுங்கடித்து, உண்மையான தமிழர் வரலாற்றை மறைத்துவிட்டு, அறம் சார்ந்த வாழ்வை மறக்கடித்ததில் திராவிட கட்சிகளுக்கு குறிப்பாக திமுகவுக்கு அதிக பங்கு உண்டு. இந்த விஷச்சுழலில் மாட்டிக்கொண்டு தமிழர்கள் தத்தளிப்பது கரூர் சம்பவத்தின் மூலம் நமக்குத் தெளிவாக உணர்த்தப்படுகிறது.

நடிகர்கள் நாடாள கூடாது என்று நாம் சொல்லவில்லை. எவர் ஒருவரும் பிறக்கும்போதே தலைவராக பிறப்பதில்லை. தலைவராகும் முன் ஒருவருக்கு ஏதேனும் ஒரு தொழிலில் அனுபவம் இருக்கத்தான் செய்யும். நடிப்பை ஒரு தொழிலாக பார்க்கும் வரை சிக்கலில்லை. ஆனால் அது நாட்டை ஆளும் அரியணையை அடைவதற்கான குறுக்கு வழியாக மாறினால், அதை தடுக்க வேண்டியது நல்ல குடிமக்களின் கடமை. தகுதியற்றவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது, அரச நிர்வாகக் கட்டமைப்பைச் சிதைப்பதோடு, ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக கூடும் என்பதை வரலாற்றின் பாதையில் பல கொடுங்கோலர்களின் கதை மூலம் அறிகிறோம். எனவே குடிமக்கள் தங்களின் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியது மிக மிக அவசியம். அதுவும் குறிப்பாக உலகமயமாக்கலுக்குப் பின்னாக பல புதிய புதிய சிக்கல்கள் உருவாகி இருக்கும் நேரத்தில், தங்களின் தலைவர்கள் மூலமும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தத்துவத்தின் மூலமுமே ஒரு நாட்டின் தலையெழுத்து தீர்மானிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டிய நேரம் இது.

அரசியல் தலைமை ஏன் முக்கியம்?

நவீன அரசுகள் உருவாக்கத்தில் பெரும்பான்மையான நாடுகள் மக்களாட்சியைத் தங்களது தத்துவமாக ஏற்றிருக்கின்றன. நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைப்பட்ட அரசியல் கட்டமைப்புகள், ஒரு நாடு எப்படி இயங்குகின்றது என்பதை முடிவு செய்கின்றன. பொதுவாக்கெடுப்பு, முன் முயற்சி, திரும்ப அழைத்தல் ஆகிய செயல்முறைகளின் மூலம் நேரடியாக மக்களே ஆட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்ளும் நேரடி மக்களாட்சி முறை சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது. ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய நாடுகள் பலவற்றிலும் மறைமுக மக்களாட்சி தான் மிகப் பொருத்தமான அரசியல் செயல்முறையாக இருக்கிறது. இதன் மூலம் மக்கள் தேர்வு செய்கின்ற பிரதிநிதிகள், மக்களின் பொருட்டு ஆட்சி நிர்வாகம் செய்யும் அரசை நடத்துகின்றனர். இது பிரதிநிதித்துவ மக்களாட்சி என்றும் அழைக்கப்படுகிறது. அவ்வகையில் இவ்வுலகில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட இந்திய ஒன்றியம், மிகப்பெரிய மக்களாட்சி நாடாகவும் அறியப்படுகிறது.

இந்திய ஒன்றிய அரசியல் அமைப்பின்படி, பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் மக்களாகிய நாம், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றோம். அவர்களிலிருந்து பிரதமர்களும் முதலமைச்சர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களே ஒன்றியத்திலும், மாநிலங்களிலும் ஆட்சி நிர்வாகத்துக்குப் பொறுப்பாவார்கள். இந்திய ஒன்றிய அரசியல் சூழலில், பல கட்சி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளதால், பெரும்பாலும் மக்கள் பிரதிநிதிகள் கட்சி சார்பு உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். கட்சி சார்பு இல்லாத சுயேச்சைகளும் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஆட்சி அமைக்கும் அளவிலான பெரும்பான்மை, அரசியல் கட்சிகளுக்கே கிடைக்கும் நிலை உள்ளதால், இந்திய அரசியல் சூழலில் அரசியல் கட்சிகள் மக்களின் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்திய ஒன்றியத்தை பொருத்தவரை, ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிடத் தகுந்த கொள்கையினை தனது செயல்பாடுகளுக்கான திசைகாட்டியாக வைத்திருக்கின்றன. தேசிய கட்சிகளாக தேசியவாதம் பேசும் காங்கிரஸ், பொதுவுடமை தத்துவம் பேசும் இடதுசாரிகள், இந்து தேசியத்தை முன்னெடுக்கும் பாஜக, மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களின் நலன்களை கோரும் மாநில கட்சிகள் ஆகியன, ஆட்சி நிர்வாகத்தில் பங்கெடுத்த முக்கியமான கட்சிகளாக இருக்கின்றன. பொது சேவை மற்றும் அரசு நிர்வாகம் என்பது, மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவது. அன்றாட வாழ்வில் மக்களுடைய உணவு, உடை முதற்கொண்டு, அவர்களுடைய பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்தையும் முடிவு செய்வது அரசு. அந்த அரசின் கொள்கை முடிவுகளை வடிவமைக்கும் பொறுப்பில், அரசியல் கட்சிகளின் பங்கு மிக மிக முக்கியமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு அரசியல் கட்சி என்பது, அதன் செயல்பாடுகள் மூலம் மக்களுக்கும் அரசுக்குமான இணைப்பு பாலமாக இருக்கின்றது. ஒரு அரசு மக்கள் நல அரசா அல்லது கொடுங்கோல் அரசா என்பதை, அந்த அரசை வழிநடத்தும் கட்சியின் கொள்கைகளே முடிவு செய்கின்றன. எனவே ஒரு கட்சியின் கொள்கை தொலைநோக்கு மிக்கதாகவும், மக்கள் நலத்தை முன்னிறுத்துவதாகவும் இருப்பது அத்தியாவசியம். ஆனால் இந்திய ஒன்றிய சூழலில், விடுதலைக்குப் பின்னான இந்த 75 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மக்களாட்சி விழுமியங்கள் புறந்தள்ளப்பட்டு ஊழல், கையூட்டு, நிர்வாகச் சீர்கேடு, குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளின் ஆதிக்கம், கலவர அரசியல், அரசாட்சி அமைப்புக் குலைவு, வளர்ச்சி மட்டுப்படுதல் ஆகியன தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு இந்திய ஒன்றியம் முழுக்க உள்ள தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் எவ்வளவு பொறுப்பு ஏற்க வேண்டி உள்ளதோ, அதே அளவு இவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் பொறுப்பானவர்கள். இது ஒட்டு மொத்த சமூகத்தின் சீரழிவு இன்றி ஒரு தனிப்பட்ட ஆளால் விளைந்தது அன்று.

தனி மனிதர்கள் சேர்ந்து குடும்பங்களை உருவாக்குகின்றனர். குடும்பங்கள் சேர்ந்து ஒரு சமூகம் உருவாகின்றது. ஒரு சமூகம் தான் நாகரிகமான வாழ்வை வாழ ஒரு ஆட்சி முறையை உருவாக்கி, நிர்வாகத்திற்கு என தனது பிரதிநிதிகளை தனக்கான ஆட்சியாளர்களாகத் தானே தேர்ந்தெடுக்கிறது. மன்னராட்சியில் மக்களுக்கான தேர்வுகள் மிகக் குறைவு. ஆனால் மக்களாட்சியில் அப்படி இல்லை. குறைந்தபட்ச விழிப்புணர்வு, அடிப்படை அரசியல் அறிவு, பொறுப்பான தலைவர்களை உருவாக்குவதில் ஆர்வமிகு பங்கேற்பு, நல்ல அரசியலை ஊக்குவித்தல், மக்கள் நலத்தை முன்னிறுத்த அழுத்தம் தந்து அரசைப் பணித்தல் ஆகியன நல்ல குடிமக்களின் கடமைகள்.

ஒரு மக்கள் நல அரசுக்கும் அதன் செயல்பாடுகளுக்கும், நமது அரசியல் அமைப்பு, வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது. இந்திய ஒன்றிய அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர், “தனது கொள்கைகளை உருவாக்கும் பொழுது ஒரு அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை புறக்கணித்தால் அது தேர்தல் நேரத்தில் வாக்காளர்களின் முன் அதற்காக கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டி இருக்கும்” என்று கூறினார். இது தேர்தலில் வென்றால் அரசை அமைக்கக்கூடிய அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கும் மிகவும் பொருந்தக்கூடியதே. மேலும் நவம்பர் 25 1949 அன்று இந்திய அரசியலமைப்புக் குழுவில் அவர் ஆற்றிய இறுதி உரையில், “அரசியலில் நாயக வழிபாடு என்பது நிச்சயமாக அடிமைத்தனத்துக்கு இட்டுச் செல்லும் எதேச்சாதிகாரத்துக்கான பாதையே. இந்திய ஒன்றிய அரசியலில் நாயக வழிபாடு, மற்ற எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெரிய பங்காற்றுகிறது. அரசியலில் நாயக வழிபாடு என்பது வீழ்ச்சிக்கும் இறுதியில் ஏகாதிபத்தியத்திற்கு வழிவகுக்கும் உறுதியான பாதை” என்கிறார்.

நாட்டிற்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த மகத்தான மனிதர்களுக்கு நன்றி கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நன்றிக்கும் ஒரு வரம்பு இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த பேராண்மை மிக்க தலைவர்களையே பற்றிச் சொல்லும் பொழுது, தற்குறித்தனமான நடிகர்கள் எம்மாத்திரம்?

வேட்டைச் சமூகமாக இருந்து வேளாண் சமூகமாக மாறி வணிகச் சமூகமாக வளர்ந்திருக்கும் மனித இன வரலாற்றில், தலைவர்களும் தத்துவங்களும் அளித்த பங்களிப்பு அளப்பரியது. எனவே தற்கால தமிழ் சமூகம் தனது தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் தெளிவாக இருப்பது, இந்த தலைமுறை மட்டுமல்ல அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும்.

திருமதி. விமலினி செந்தில்குமார்,
கொள்கை பரப்புச் செயலாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles