அக்டோபர் 2023
காலக்கடலோடு தொலைந்துவிட்ட தமிழ் முத்து – திரு. ஒரிசா பாலு அவர்கள்
நீலப்புவியின் முக்கால் பாகம் கடல்நீரால் நனைந்து கிடக்க, கால் பங்கு மட்டுமே நிலம் எனும் பெருவெளியாய் நீண்டு கிடக்கிறது. காலவோட்டதின் கணக்கற்ற நொடிகளூடே வாழ்ந்த உயிர்கள் உயிரற்ற பொருட்களோடு மண்ணிலும் கடலிலும் புதையுண்டு காணாமல் போகின்றன. அவை தொல்லியல் எச்சங்களாக ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்படும்போது, வரலாற்றின் பல புதிர்கள் விடுவிக்கப்படுகின்றன. மலையேற்றத்தின்போது ஒவ்வொரு உயரத்துக்கும் ஒவ்வொரு காட்சி விரிவதைப் போல, நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும்போது அதுவரை எழுதப்பட்ட வரலாறு திருத்தப்படுகிறது; சில சமயங்களில் தலைகீழாகக் கூட… மண்ணுக்குள் மறைந்திருக்கும் சான்றுகளேனும் அவ்வப்போது திட்டமிட்ட ஆய்வுகளாலும், எதிர்பாராத வகையிலான விபத்துக்களாலும் கிடைக்கின்றன. ஆனால் மனித வாடை கூடப் படாத கடற்பரப்புகள் ஆயிரமாயிரம் அதிசயங்களை இரகசியங்களைத் தம்முள்ளே ஒளித்து வைத்துள்ளன.
*தமிழியல் அறிஞர் ஒரிசா பாலு:*
கடலைப்பற்றி மனிதன் மிகக்குறைந்த அளவே அறிந்திருக்கிறான் என்பதும், அப்பெருநீர்நிலை குறித்தான அச்சம் கலந்த ஆச்சரியம் எப்போதுமே மனிதனுக்கு உண்டு என்பதும் உலக இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறாக பழந்தமிழ் இலக்கியங்களும் கடலைப்பற்றி நிறைய பேசியிருக்கின்றன. அந்த இலக்கியக் கூறுகளும், தான் கற்ற அறிவியல் தொழில்நுட்பங்களும், தொல்லியல் ஆய்வுச் செய்முறைகளும் இணையும் புள்ளிகளைத் தன் வாழ்நாள் முழுவதும் தேடியலைந்தவர் தான், தமிழியல் ஆய்வறிஞர் ஒரிசா பாலு அவர்கள். அப்புள்ளிகள் பலவற்றையும் கண்டடைந்து அவர் வரைந்தெடுத்த உருவம், தமிழர் வரலாறு, வணிகம், கடலாண்மை, இயற்கைசார் பேரறிவு ஆகியவற்றில் இதுவரை உலகமறியாத புதுப்புது அத்தியாயங்களை காட்சிப்படுத்தியிருக்கிறது. அகவை அறுபதுக்குள் காற்றோடு கலந்து விட்ட அவரது இழப்பு, கடலாய்வியல் துறைக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழியல் ஆய்வுக் களத்தில் ஏற்பட்டுள்ள ஒரு வலி தரும் வெற்றிடம்.
*இளமைக்காலமும் இன்பத்தமிழ் மீதான ஈர்ப்பும்:*
சிவபாலசுப்பிரமணியாக திருச்சி உறையூரில் பிறந்த இவர், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்று , கடற்பொறியியல் தொடர்பான பணி காரணமாக ஒரிசாவில் பல ஆண்டுகள் வசித்திருந்தார். புலம் பெயர்ந்தபின்னே புலத்தின் அருமை அறிந்துகொள்ளும் பெரும்பாலான தமிழர்கள் போலவே, இயல்பாகவே இனத்தின் மீதும், மொழியின் மீதும் அதிகரித்த காதலே கடைசி வரை அவரைச் சலிப்பின்றிச் செலுத்திற்று எனலாம். அடிப்படையில் அவர் ஒரு தொழில்சார் வல்லுநரே தவிர ஆய்வறிதலுக்கான படிப்போ பயிற்சியோ பெற்றவரில்லை. ஆனால் கடலுக்குள் ஆய்வுகள் செய்யும் தனது துறைசார்ந்த தொழில்நுட்பம் எவ்வாறு தமிழர் வரலாற்றை அறிய உதவும் என்ற முனைப்பில், தாமாகவே முயன்று பல விடயங்களைக் கற்று பல ஆராய்ச்சிகளை நேர்த்தியுடன் செய்தவர் தான் திரு.ஒரிசா பாலு அவர்கள். தான் இருந்த ஒரிசாவுக்கும் ( கலிங்கம் ) தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் கொண்ட தொடர்பு குறித்த பல கேள்விகளுக்கான விடையறிய அவர் கொண்ட ஆர்வமும், தந்த உழைப்புமே அவரது தமிழ்ப்பற்றுக்குச் சான்று.
தமிழைத் தன் பேரடையாளமாக வரித்துக் கொண்ட பாங்கு:
ஒரு வலையொளி நேர்காணலில் பகிர்ந்து கொண்ட அவரது வாழ்வியல் அனுபவம், தற்காலத் தலைமுறைகளுக்கோர் முக்கியமான பாடம். தந்தையின் பணிநிமித்தம் புது ஊருக்குச் செல்ல நேர்ந்து, புதுப்பள்ளியில் சேர்ந்தபோது அங்குள்ள மாணவர்கள் கிண்டலும் கேலியும் செய்துவிட, வீட்டிற்கு வந்து புலம்பினார், சிறுவயது ஒரிசா பாலு அவர்கள். அந்நேரம் அவரது பாட்டி, ” நீ யாரு தெரியுமா? நீ பொறந்தியே உறையூரு! அதுக்கு கோழியூரு நு இன்னொரு பேரு இருக்கு… பெரிய யானைய கோழி ஒன்னு தொரத்தியடிச்ச வீரத்தைப் பார்த்து அந்த ஊருக்கு அப்படி ஒரு பேரு வந்திச்சாம். அது தான் கரிகாலன் உள்ளிட்ட முற்காலச் சோழர்களுடைய தலைநகரமும் கூட… அப்படிப்பட்ட ஊர்ல பொறந்திட்டு, இப்படி அலுத்துக்கறியேடா! தமிழனா நெஞ்ச நிமித்தி நில்லுடா! என்ன பண்ணிடுவாங்க?! பாத்துக்கலாம்” என்றாராம். அதைக்கேட்டு புது உற்சாகம் கொண்ட அவர், மறுநாள் தன்னிடம் வம்பிழுத்தவர்களைத் துணிவோடு எதிர்கொண்டதை நினைவுகூர்ந்து, இதற்குத்தான் நமது வரலாற்றைப் படிக்க வேண்டியுள்ளது; அதன் தொன்மையை நிறுவ வேண்டியுள்ளது; அதனை உள்வாங்கிச் சிறப்பான பல பங்களிப்புகளை இனத்துக்கும், சமூகத்துக்கும், ஏன் ஒட்டுமொத்த உலகுக்கும் நல்க வேண்டியுள்ளது என அவர் தெரிவிக்கிறார்.
*ஒரிசா பாலு – பெயர்க்காரணம்:*
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப நிபுணராக கடல்சார் ஆற்றல் பயன்பாட்டுத் துறையில் இயங்கிய ஒரிசா பாலு அவர்கள், ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை நடத்தி வந்தார். ஒரிசாவில் கனிம வளக் கண்டுபிடிப்பு ஆய்விற்காக ஆஸ்திரேலிய புவி இயற்பியல் நிறுவனத்தின் துணை கொண்டு கடலை ஆய்ந்தறியும் பணியின்போது, தமிழர்களின் கடல்சார்தொன்மை தொடர்பான ஆய்வுகளையும் சேர்த்துச் செய்து வந்தார். ஒரிசா புவனேசுவர தமிழ்ச் சங்கத்தில் துவக்க உறுப்பினராகச் சேர்ந்து, பல பொறுப்புகளில் இருந்து 2002-2003 ஆண்டுகளில் செயலர் ஆகப் பணியாற்றி ஒரிசாவில் வாழும் தமிழர்களையும், உலகத்தமிழர்களையும் ஒருங்கிணைத்தார். இந்த ஆய்வுகளின் பொருட்டு, உலகத் தமிழ் அமைப்புகளை நேர்கோட்டில் இருத்தி, தமிழர் தொன்மை குறித்த உண்மைகளை வெளிக்கொணர ஆவன அனைத்தையும் செய்ய முயன்றார். மேலும் ஓரிசா உள்ளிட கிழக்குக் கடற்கரை முழுவதுமாக குறிப்பிட்ட காலங்களில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கவரும் ஆலிவ் ரிட்லி எனப்படும் பங்குனி ஆமைகள் உள்ளிட்ட பிற கடல் ஆமை இனங்களுக்கும், தமிழ்க் கடலோடிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்த நுண்ணாய்வுகள் பல செய்துள்ளார். இத்தகு சீரிய பணிகளால் தான் இன்று வரை ஒரிசா பாலு என்ற சிறப்புப் பெயரோடு அவர் விளிக்கப்படுகிறார்.
*தமிழ்க்கடலோடிகளும் ஆமைவழித்தடங்களும்:*
உலகம் முழுவதும் கடற்பரப்பில் மேலும் கீழுமாக குளிர் மற்றும் வெப்ப நீரோட்டங்கள் இருப்பது சென்ற சில நூற்றாண்டுகளில் தான் விவரமாக அறியப்பட்டது. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இனப்பெருக்கத்திற்காக சோழமண்டலக் கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளை அறிவியல்பூர்வமாக அணுகி, நீரோட்டங்களின் உதவியால் தான் ஆமைகள் பன்மடங்கு தொலைவினைக் குறுகிய காலத்தில் கடலில் கடந்து பயணிக்கின்றன எனக் கண்டறிந்து, அவை தொடர்பான இடங்களிலெல்லாம் இருந்த வணிகத்துக்கு உதவும் துறைமுகங்களில் ஆதிக்கம் செலுத்தினர் என்ற கருத்தாக்கத்தை ஒரிசா பாலு அவர்கள் முன்வைத்தார்.
ஆமைகள் முட்டையிடுவதற்கு ஏதுவான கடற்கரைகளைத் தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகளை பின்பற்றியே தமிழ்க் கடலோடிகள் உலகம் முழுவதையும் வலம் வந்தனர் என்ற ஆய்வுக் கருத்தை வெளியிட்டு, ஆமைகள் தொடர்பான இடங்கள் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்டு தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டதை விளக்கிச் சொன்னார்; அந்த இடங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடுகள் இன்றும் இருப்பதை நிருபித்து வந்தார். கடலோடிகளை, மீனவர்களை பாய்மரத்தில் மீன்பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல், கடலியல் சார்ந்த சுற்றுசூழல் அறிவு பெற்றவர்களாகக் கருதி, கடல் வள மேலாண்மையின் உலக நடப்புகளை அறிந்துகொள்ள பயிற்சிகள் தந்து வந்தார்.
தமிழரது கடல்சார் மரபுகள் மற்றும் சுற்றுச் சூழலைக் காக்க வேண்டி, தமிழகம் முழுவதும் காணொளிக் காட்சிகள் நடத்தியும், முகநூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்தோடு, “கடலார்” என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கும் தொடர்ச்சியாகப் பங்களித்தார். மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள், மானுடவியல், விலங்கு மற்றும் தாவரங்களின் பரவல் சார்ந்த கோட்பாடுகள், கடல்சார் தொல்லியல், ஆமைகள் வழித்தடங்கள், பாறை ஓவியங்கள், புவி சுழற்சி தொடர்பாக செய்மதி குழுமம், கடல் ஆராய்ச்சி அமைப்புகளில் உறுப்பினராக இருந்து இறுதிக் காலம் வரை இயங்கியவர் ஒரிசா பாலு அவர்கள். புற்றுநோயால் அவதியுற்று அண்மைக்காலமாக சென்னையில் வசித்து வந்த இவர், “உலகாண்ட தமிழன்” எனும் தலைப்பில் தான் செய்த ஆய்வுகளைத் தொகுத்து நடத்திய உரைகள் இன்றும் வலையொளியில் காணக் கிடைக்கின்றன. அது போலவே ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், நிகழ்வுகளை நடத்தி பொதுத்தளத்தில் பேசுபொருளாக இவ்வுண்மைகளை நிறுத்தியவர் ஒரிசா பாலு அவர்கள்.
*குமரிக்கண்டம் இலெமூரியா கருதுகோள்களுக்குச் செய்த பங்களிப்பு:*
இந்தியப் பெருங்கடலினை குமரிக்கடல் என்று அழைப்பதே பொருத்தம் எனச் சொல்லிய ஒரிசா பாலு அவர்கள், ஈழத்தைத் தனிநாடு என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் கூறுகிறார். கடற்கோளினால் தனித்தீவாக மாறிய இலங்கையின் பல்லுயிர்ப் பெருக்கக் கூறுகள், தமிழ்நாட்டுடனான நெருக்கத்தை விளக்க தெளிவான எடுத்துக்காட்டு என்பதோடு, நேர்மையான ஆழமான தொல்லியல் ஆய்வுகளைச் செய்து, அத்தொடர்பை அறுதிபட நிறுவ முடியும் என்கிறார். மேலும் இலங்கை போலவே தமிழகத்துக்குத் தெற்கேயுள்ள அந்தமான், நிக்கோபர் எனும் நக்காவரம், டியோ கார்சிக்கா, செஷல்ஸ், கேமரூஸ் தீவுகள், மடகாஸ்கர் ஆகிய தீவுகள் நீண்டிருந்த குமரிக்கண்ட நிலத்தின் முகடுகளாக இருந்திருக்க வேண்டும் என்கிறார். அதற்கேற்றார்போலவே “இலெமூர்” எனப்பட்ட தேவாங்கு விலங்கு மற்றும் “குமரா” என கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வழங்கப்படும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகிய விலங்கு மற்றும் தாவரப் பரவல், இரும்பு நாகரீகத்தில் பாறைகளைச் செதுக்க உதவிய உளிக்கருவியின் ஒற்றுமை ஆகியன நிலவழித் தொடர்பு மூலமாகவே நிகழ்ந்திருக்கக்கூடும் எனச் சான்றுகள் தருகிறார்.
மக்கள் வாழ்ந்து கைவிட்ட நகரங்களின் இடிபாடுகளை உள்ளடக்கிய ஆழம் குறைந்த பரப்புகள் அதிகமாக இருப்பதை விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட இந்தியப் பெருங்கடலின் துணைக்கோள் புகைப்படங்கள் மற்றும் கடலடி ஆய்வுக்கலங்களின் தரவுகள் மூலம் அறிய இயலும் என்கிறார் அவர். அதுபோலவே குமரி முனையினை “உலகத்தின் நுழைவு வாயில்” என அழைக்கப் பொருத்தமான வகையில் குணக்கடல் முதல் குடக்கடல் அதாவது கீழைக்கடல் முதல் மேலைக்கடல் தொட்ட இடங்கள் அனைத்திலும் தமிழருக்கு வணிகத் தொடர்புகள் இருந்ததைத் தொல்லியல் ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. 2005 முதல் இந்தோ பசிபிக் கடல் பகுதிகளில் தொடர்ச்சியான பயணங்கள் செய்து பலரைச் சந்தித்து குமரிக்கண்ட ஆய்வை நடத்தி வந்த ஒரிசா பாலு அவர்களின் நண்பர் பாறை ஓவிய ஆய்வர் திரு. நாராயணமூர்த்தி அவர்கள் தொடர்ந்த வழக்கில், ஒரிசா பாலு அவர்கள் நீதித்துறைக்குத் தேவையான தகவல்களைத் தந்துதவிடுமாறு மதுரை உயர்நீதிமன்றம் கோரியது.
கடல் கொண்ட தென்னாடு, தென்புலத்தார் வழிபாடு தொடர்பான கழக இலக்கியங்களின் குறிப்புகளைக் கொண்டு குமரிக்கண்ட ஆய்வினை மற்றொரு கோணத்திலும் அணுகினார் இவர். இன்றைய தமிழ்நாட்டின் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்பரப்பில் பல்துறைசார் சோதனைகள் நடத்திட, குறிப்பாக மரக்காணம், சாந்தோம், மாமல்லபுரம், பாண்டிச்சேரி, அரிக்கமேடு, பட்டினப்பாக்கம், பூம்புகார், நாகப்பட்டினம், தனுஷ்கோடி ஆகிய இடங்களில் விரிவான கடலடித் தொல்லியல் ஆதாரங்களைத் தேட வேண்டும் என்கிறார். சங்க இலக்கியங்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் சொல்லப்பட்ட எயிற்பட்டினம் தான் அரிக்கமேடு அருகேயுள்ள நிரம்பை எனும் இடத்தில் கடலுக்கடியில் கண்டறியப்பட்ட மதில்சுவர் கட்டமைப்பு என எண்ணுவதற்குப் பொருத்தமான பல ஒற்றுமைகளை ஒரிசா பாலு அவர்கள் விவரிக்கிறார். பரந்துபட்ட நவீன ஆய்வுகளை நிலத்திலும், கடலிலும் செய்து தமிழ், தமிழர் பண்பாடு, வணிகம் உள்ளிட்ட வரலாற்றினை உலக அரங்கில் ஐயந்திரிபற நிலைநிறுத்துதலே அவரது வாழ்நாள் கனவு என்றால் அது மிகையன்று!



செந்தமிழர் பாசறை அமீரகம் சார்பில் துபாயில் தமிழர் மரபியல் மீட்பு மாநாடு கடந்த 2018 ம் ஆண்டு அக்டோபர் 26 அன்று நடந்தபோது, அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழர் வரலாறு குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்த திரு. ஒரிசா பாலு அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
*உலகத் தமிழர்களை தமிழியல் ஆய்வுத்தளத்தில் ஒருங்கிணைத்த சாதனை:*
மெய்நிகர் தமிழ்ப்பாராளுமன்றம் போன்ற ஒரு அமைப்பை, உலகெங்கும் பரவி வாழும் தமிழ்ச்சங்கங்கள் மூலம் உருவாக்கி, 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழ் அன்பர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் பலரை ஒருங்கிணைத்து, தமிழியல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தினார், ஒரிசா பாலு அவர்கள். தென்புலத்தார், திரைமீளர், பழந்தமிழர், ஐயை போன்ற பகிரிக்குழுக்களை இணைய வழியில் நடத்தி பல தகவல்களைத் தொகுத்ததோடு, பல புலம்பெயர் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டல்களை நல்கும் பணியும் அவரால் செய்யப்பட்டது. ஆங்காங்கே பல நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தமிழர் சார்ந்த கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாய்வு எச்சங்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட தொல்லியல் ஆதாரங்கள் குறித்துப் பகிரவும், செவிவழிக்கதைகள், வட்டாரத் தகவல்கள் தொடர்பான மக்கள் பண்பாட்டுத் தேடல்களை விரிவுபடுத்தவும் இக்குழுக்கள் உதவின.
இதே குழுக்களின் பங்களிப்பில் தமிழகத்தில் பல நற்பணிகள், மக்கள் நலத் தொண்டுகளும் செய்யப்பட்டன. மேலும் அரேபியம், கிரேக்கம், சீனம், கொரிய மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி மொழியியல் சார்ந்தும், இடங்களுக்கு வைக்கப்பட்ட தமிழ்ப்பெயர்கள் குறித்த உசாவல்கள் பற்றியும்
ஆராய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவை குறித்த தரவுகள் நூல்களாக ஆவணப்படுத்தப்படவும், அடுத்த தலைமுறையினருக்கு இவ்வாய்வுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி மேலதிகப் பயிற்சிகள் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தில் கீழடி வைகை நதி நாகரீகத்தைப் போலவே குண்டாறு, வைப்பாறு, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட 17 ஆற்றங்கரை நாகரீகங்களின் ஆய்வு தொடங்கப்படவும், இயற்கை சார்ந்த மரபு மருத்துவம், சித்தர் வழி தமிழ் மருத்துவம் போன்றவை குறித்த நிலைப்பாட்டு உரையாடல்களின் எல்லைகளை விரிவுபடுத்தவும் முயலப்பட்டது. ஆனால் ஐயாவின் இறப்பினையடுத்து இவையன்ன தமிழியல்சார் பணிகள் தொய்வையடையும் அபாயம் ஏற்படுள்ளது என்பதை மறுக்கவியலாது.
*ஒரிசா பாலு அவர்களின் வாழ்வும் மரணமும் தரும் செய்தி:*
வெறும் கடல்சார் ஆய்வாளராக மட்டும் ஒரிசா பாலு அவர்களை நாம் குறுக்கிவிடக்கூடாது. தமிழ்ப் பேரினத்தின் பாதச் சுவடுகள் நிலத்தில் மட்டுமின்றி நீருக்குள்ளும் பொதிந்துகிடக்கின்றன என உலகுக்கு உரக்கச் சொன்னதோடு, மொழி, வணிகம், கலை, பண்பாடு, பல்லுயிர்ப்பரவல், அறிவுத்தளப் பழக்கம், ஆய்வுக்களப் பெருக்கம் என விரிவான கிளைகளோடு வேர்பரப்பிய மரமாகச் செழித்த தன் பணியை “தமிழியல் ஆராய்ச்சி” என அவர் குறிப்பிட விரும்புகிறார். இவ்வரும் பணிகள் அனைத்தையும் தனிமனிதனாக முன்னின்று, தமிழ்ச்சமூகத்தின் பெரும் உதவி மற்றும் பேராதரவோடு நடத்தினாலும், அவர் எண்ணிய இலக்குகளை அடைய இவ்வேகம் போதவே போதாது. புற்றுநோய் பல மாதங்களாக வாட்டியபோதும், ஓய்வு ஒழிச்சலின்றி வேலை செய்த அவர், இனி வரும் அனைத்து தமிழாய்வர்களுக்கு வழிகாட்டும் ஓரு கலங்கரை விளக்கம். தமிழம் – திராவிடம் எனும் துருவ அரசியல் மோதல்களினால் சிக்கல்கள் ஏற்பட்ட போதும், துணிவோடு தமிழின் பக்கம் நின்றதால் அவர் எதிர்கொண்ட ஆபத்துக்கள் ஏராளம். உடல்நிலை நலிவிற்கும், அரசு உதவி கிட்டாமைக்கும், இறப்புக்குப் பின்னும் உரிய அங்கீகாரம் மற்றும் அரசு மரியாதை வழங்கப்படாததற்கும் அது ஒரு முக்கிய காரணமும் கூட.
தமிழினம் ஓடாய்த் தேயும் உழைப்பாளிச் சமூகமாகவே இருந்துவிடாமல் பல்தொழில் முனையும் முதலாளிச் சமூகமானால் மட்டுமே உயர்வடைய இயலும்; தமிழை வளர்த்துத் தமிழரை வளர்க்கும் விதமாக பண்டைய நம் பேரினத்தின் சாதனைகளை விளம்பும் நினைவுச்சின்னங்களை எண்ணிறந்த அளவில் நிறுவுதலும், பெருமைமிகு அடையாளமான ஆளுமைகளின் பங்களிப்புகளை அடிக்கடிப் புகழ்ந்தேத்தும் விழாக்களைக் கொண்டாடுதலும், இன்னும் சிறப்பான பல நல்ல தலைவர்களை உருவாக்கிட தமிழர் வரலாற்றைத் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்துதலுமே தமிழினம் மீட்சியடைய அன்னார் சொல்லும் வழிகள். எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாதிருந்தாலும் மர்மமான முறையில் புற்றுநோய் வந்தபோதும் தளராத ஒரிசா பாலு அவர்கள், அந்நோயின் கொடுமையைக் காட்டிலும் தனது பணிகள் தக்க முறையில் இன்னும் ஆவணப்படுத்தாமல் இருப்பது குறித்தும், இனியும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் பல இருப்பது குறித்துமே கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
அரசமைத்தல் – வணிகம் – சமயம் ஆகியவற்றின் பொருட்டே பெருமளவு இடம்பெயரும் மனித இனத்தில், முதல் உழவுச் சமூகமாயும், வணிகச்சமூகமாயும், கடலோடிச் சமூகமாயும் தமிழினமே இருந்ததற்குக் காரணம், உலகின் முதல் மொழியாயிருந்த தமிழே என்பது அவரது அசைக்கமுடியாத நம்பிக்கை. சாதி, சமயம், வட்டாரம், வாழுமிடம், அரசியல் நிலைப்பாடுகள், கட்சிசார்புகள் தாண்டி இது போன்ற அற்புதமான ஆற்றலும், அளவிடற்கரிய அறிவும் கொண்ட ஆசான் போன்றவர்களை, தமிழ்ச்சமூகம் கொண்டாட வேண்டும் என்பதை விட குறைந்தபட்சம் கைவிட்டிடக் கூடாது எனக் கோரும் அவலம் தான், சமகாலச் சூழலாக உள்ளது. இது மாற வேண்டும்; நாம் தான் இதனை முயன்று மாற்ற வேண்டும்.
ஏதேனும் ஒரு விடயம் பற்றித் தெரியவில்லை என்றால் “தெரியாது” என்று சொல்லவேண்டுமே தவிர “அது இல்லவேயில்லை” என்று சொல்லக்கூடாது என்று அவர் அடிக்கடி கூறுவார். இன்று அவர் இல்லை என்றாலும் அவர் செய்து விட்டுப் போன பணிகள் அவர் யார் என்பதைச் சரித்திரமெங்கும் தெரியப்படுத்தும். ஏனெனில் தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டு செய்தோரது உடல் அழிவுற்றாலும், உற்ற புகழ் அழிவதேயில்லை என்பதே கடந்துகொண்டேயிருக்கும் காலக்கடல் நமக்குச் சொல்லும் செய்தி. அதில் முத்தாய்த் தொலைந்து போன ஒரிசா பாலு அவர்கள் தமிழர் வரலாற்றில் பாய்ச்சிய மின்னும் வெளிச்சத்தைக் கடலுக்கடியில் போகும் ஒவ்வொரு தமிழனும் கண்ணுறுவான். அதுவே அத்தமிழ்முத்து நமக்கு விட்டுச் சென்ற சொத்து!!!
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.