spot_img

கொடுங்கோல் மன்னராட்சியின் குறியீடு – புதிய  நாடாளுமன்றக்  கட்டிடத்  திறப்பு

சூன் 2023

கொடுங்கோல் மன்னராட்சியின் குறியீடுபுதிய  நாடாளுமன்றக்  கட்டிடத்  திறப்பு

கடந்த மே 28ம் நாள், சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தில் தற்போதைய தேவைக்கேற்ப போதுமான இட வசதி இல்லாததால், புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுமாறு மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்த அரசு, அதற்கான அடிக்கல்லை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி நாட்டியது.

புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளதாகவும், 4 மாடிகளைக் கொண்டதாகவும், 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுள்ளதாகவும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தக் கட்டிடம் ஞான வாயில், சக்தி வாயில், கர்ம வாயில் என மூன்று வாயில்களைக் கொண்டுள்ளது என்றும், உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் செல்வதற்குத் தனித்தனி நுழைவாயில்கள் இருக்கும்படியும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவையில் 888 இருக்கைகள், மாநிலங்களவையில் 300 இருக்கைகள், இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும்போது மக்களவையில் 1,280 பேர் அமரக்கூடிய வகையில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் புதிய பாராளுமன்றத் திறப்பிற்கான அழைப்பிதழ்கள் மெய்நிகர் வழியில் அனுப்பிவைக்கப்பட்டன. அதில், 28-ந் தேதி காலையில் இருந்து பூஜை, கீர்த்தனைகள், சடங்குகள் நடைபெறும்; பிற்பகலில் திறப்பு விழா நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தது. விருந்தினர்கள் அனைவரும் காலை 11.30 மணிக்குள் இருக்கையில் அமர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அழைப்பிதழைப் பெற்றவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுக்குள் விவாதிக்க தொடங்கிட, கருத்தொற்றுமை கொண்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டன. இந்த ஆலோசனையில், திறப்பு விழாவைக் கூட்டாக புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

“மாநிலத்துக்குச் சட்டமன்றம் போல ஒன்றியத்திற்கு நாடாளுமன்றம் இருக்கும். அந்த நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை, மக்களவை என்ற இரு அவைகளைக் கொண்டிருக்கும் என்று இந்திய அரசியல் சாசனத்தில் 79-வது பிரிவு கூறுகிறது. அதன்படி பார்த்தால், குடியரசுத் தலைவர் என்பவர் நாட்டின் தலைவர் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமும் ஆவார். குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் இயங்க முடியாது. ஆனாலும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இல்லாமலேயே புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க பிரதமர் முடிவு செய்துள்ளார். இந்த கண்ணியமற்ற நடத்தை குடியரசுத் தலைவரை இழிவுபடுத்துகிறது. அரசியல் சாசன வரிகளை மீறுகிறது. ஜனநாயகத்தின் ஆன்மா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்ட போது, புதிய கட்டடத்திற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதைப் பார்க்கிறோம். ஆகவே, புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்பதில்லை என்ற எங்களது கூட்டு முடிவை இதன் மூலம் அறிவிக்கிறோம்” என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு கூட விடுக்கப்படவில்லையே? ஏன்? அவர் வருணசிரமத்துக்கு அப்பாற்பட்ட பழங்குடியினர் என்பதாலா? ஆரியச் சமூகம் வெறும் உடைமையாக மட்டுமே கருதி ஒடுக்க நினைக்கும் பெண்குலம் என்பதாலா? அல்லது சனாதனம் எப்போதும் ஒதுக்கி வைக்கும் கைம்பெண் என்பதாலா? குடியரசுத் தலைவர் தான் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறக்க வேண்டும் என மக்களவைச் செயலகத்துக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது என்பது எதைக் காட்டுகிறது? ஒன்றிய அரசியலமைப்பைப் பொறுத்தவரையில் பிரதமர் என்பவர் அரசின் தலைவர் மட்டுமே! ஆனால் குடியரசுத் தலைவரே நாட்டின் தலைவர்.  அவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய மூன்றும் சேர்ந்ததே நாடாளுமன்றம் என்பதை  பாஜக மறந்து விட்டதா? மறுத்து விட்டதா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் நமது நாட்டின் சின்னமே தவிர, தனியார் நகைக்கடையில் செய்து, ஒரு குறிப்பிட்ட மதத் தலைவர்களால் வழங்கப்படும் செங்கோல் அன்று. சோழப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னாகவே 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆதீனங்கள் தோன்றின. அவர்களை இந்த அரசியல் விளையாட்டில் கோர்த்துவிட்டு குளிர்காயும் போக்கைத் தமிழ்ச்சமூகம் இரசிக்கவில்லை. நமது அரசியலமைப்பின் முகவுரையில் இந்திய ஒன்றியம், இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி மிக்கக் குடியரசாக இருக்க வேண்டும் என்ற விடுதலை இயக்க முன்னோடிகளின் கனவு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய விழுமியங்கள் அனைத்துமே அப்பட்டமாக கடந்த 9 ஆண்டுகளில் மீறப்பட்டதன் பட்டவர்த்தனமான வெளிப்பாடு தான் புதிய நாடாளுமன்றத் திறப்பு தொடர்பான நிகழ்வுகள். அவ்வகையில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உலகின் மிகப்பெரும் மக்களாட்சியாக இருக்கும் இந்திய ஒன்றியத்தின் அதிகார பீடமாகவல்லாது, மதத்தின் பெயரால் இரத்தம் குடிக்கும் ஓநாய் போன்ற ஒரு கொடுங்கோல் மன்னனது கூடாரத்தின் பலிக்கூடமாக மட்டுமே புதிய நாடாளுமன்றக் கட்டிடம் வரலாற்றில் பதிவாகும் அபாயம் இருப்பதை நம்மால் மறுக்க முடியவில்லை.

திருமதி. விமலினி செந்தில்குமார்,

செய்தித் தொடர்பாளர்,

செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles