டிசம்பர் 2023
சகோதரி மஹுவா மொய்த்ராவின் பதவிநீக்கம் – அதானியின் அசாதாரண வளர்ச்சியைக் கேள்வி கேட்டதற்கு வழங்கப்பட்ட பரிசு
கடந்த டிசம்பர் 8 அன்று, பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், திரிணாமூல் காங்கிரசின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்முறையாகப் பாராளுமன்றத்தில் நுழைந்த மஹுவா, தனது முதல் உரையிலேயே ஆளும் பாஜகவின் அலங்கோல ஆட்சியைக் கடுமையாகச் சாடினார். அவரது “கொடுங்கோன்மையின் ஏழு அறிகுறிகள்” போன்ற பல அறச்சீற்றம் மிக்க கருத்துக்கள் அடங்கிய உரைகளை நாடாளுமன்றம் கண்டுள்ளது.
பதினேழாவது மக்களவையைச் சேர்ந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஒரு சில மாதங்களே என்பதால் ஒரிரு முறை மட்டுமே அவை கூட வாய்ப்பிருக்கிறது. இருந்தும் தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில், மஹுவாவின் உக்கிரமான கேள்விகளை மக்கள் மன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் பாஜக, இந்த அடக்குமுறையை அவர் மீது ஏவி அவரை வெளித்தள்ளியிருக்கிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ள மஹுவாவின் வழக்கு, சனவரி மூன்றாம் நாள் விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னதாக நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராகக் கேள்வியெழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் திரிணாமூல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா கையூட்டு பெற்றார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இது குறித்து பாஜகவின் வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில் மஹுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்யப் பரிந்துரை செய்யப்பட்டது. இப்பரிந்துரை டிசம்பர் 8 வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோது கடும் கூச்சலுக்கு நடுவேயும் மஹுவா தனது தரப்பு கருத்தை முன்வைக்க விரும்பினார். ஆனால், அவருக்கு அவையில் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. மஹுவா இந்த விடயம் தொடர்பில் தன்னிலை விளக்கம் தர அனுமதி அளிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பியும், அதற்குச் செவிசாய்க்கப்படாமல் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுகையில், “மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரைத்த அறிக்கையை இந்த அவை ஏற்றுக்கொள்கிறது. மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கை அறமற்றது; அநாகரிகமானது; அவையின் மாண்பைச் சிதைக்கும் வகையில் மஹுவா செயல்பட்டுள்ளார். அதனால் அவர் மக்களவை உறுப்பினராகத் தொடர இயலாது” என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மஹுவா, “சம்பந்தப்பட்ட தொழிலதிபரிடம் நான் பணம் பெற்றதற்கு எந்த ஆதாரமும் உறுதிப்படுத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், மிகத்தவறான முறையில் இதுவரை இல்லாத அளவு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் விதமாக பாஜக நடந்து கொள்கிறது. எனது நாடாளுமன்றக் கணக்கு தொடர்பான கடவுச்சொல்லைப் பகிர்ந்து கொண்டதனால் தேசப்பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டது என பாஜக குற்றம் சாட்டுகிறது. ஆனால் நிலக்கரி கொள்முதல் விடயத்தில் முப்பதாயிரம் கோடி ஊழல் செய்த அதானி, நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளைக் கைப்பற்றி அவற்றைத் தனது வணிகத் தோழர்களான வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் திறந்து விடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உள்துறை அமைச்சகமும், ஒட்டுமொத்த அரசாங்கமும் உணர்ந்துள்ளதா?” என வினவினார்.
மேலும் “சம்பந்தப்பட்ட தொழிலதிபரை நேரில் வரச்செய்து விசாரிக்கவோ, குறுக்கு விசாரணை செய்யவோ, என் தரப்பு நியாயத்தை விளக்கவோ அனுமதி அளிக்காது, அவசரம் அவசரமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவதூறு செய்யும் விதத்தில் நடந்து கொண்ட நாடாளுமன்ற நெறிமுறைக் குழு, விசாரணையின் போது அசிங்கமான கேள்விகளைக் கேட்டு அவமானப்படுத்தியதோடு, வழக்கமான நடைமுறையின்றி கட்டப்பஞ்சாயத்து போல மக்களவையின் ஒரு பெண் உறுப்பினரை பதவிநீக்கம் செய்துள்ளது. சிறுபான்மையினரையும், பெண்களையும், அவர்களுடனான அதிகாரப்பகிர்வையும் வெறுக்கும் பாஜக அரசின் முடிவுக்கான தொடக்கம் இது. நாற்பத்தொன்பது வயதாகும் நான் பாராளுமன்றத்துக்கு உள்ளும் புறமும், அடுத்த முப்பதாண்டுகள் வரை அநீதிக்கெதிராக முழங்குவேன்” என்றார்.
தனது முன்னாள் காதலரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் காழ்ப்புணர்ச்சியோடு இப்பொய்க் குற்றச்சாட்டை முன்வைக்க, அதனை பாஜக மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் துபே பயன்படுத்திக் கொண்டு பழைய பகையைத் தீர்த்துக் கொள்ள முனைந்துள்ளார் என மஹூவா தெரிவித்துள்ளார். மோடி தலைமை அமைச்சர் பொறுப்பேற்ற பின், அசாதாரண வளர்ச்சி கண்டிருக்கும் அதானி குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் கேட்டதற்காக அவர் இவ்வாறு அறமற்ற முறையில் தண்டிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராகவும், மஹுவாவுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பியுள்ளன.
அப்பட்டமாகவே மக்களவையில் பகுஜன் சமாஜ் உறுப்பினர் டேனிஷ் அலி குறித்து வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன் கொடுஞ்சொற்களைப் பேசிய பாஜக உறுப்பினர் இரமேஷ் பிதூரி மீதோ, நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கேள்விக்கும், சர்வதேசத்தின் கேலிக்கும் உள்ளாக்கிய புகைக்குண்டு வீச்சுக்குக் காரணமான இரு இளைஞர்களுக்குப் பார்வையாளர் அனுமதி பெற்றுத் தந்த பாஜக உறுப்பினர் பிரதாப் சிம்ஹா மீதோ, ஒப்புக்கேனும் நடவடிக்கை எடுக்கத் துணியாத இந்த அரசு, தனது பாரபட்சமான பாசிச முகத்தை மஹுவா மொய்த்ராவை மக்களவையிலிருந்து வெளியேற்றியதன் மூலம் இன்னொரு முறை இந்திய ஒன்றியத்துக்கு மட்டுமின்றி அனைத்துலகுக்கும் காட்டியுள்ளது. எந்த வகையிலும் நாட்டில் சனநாயகத்தின் கூறுகள் செயல்பாட்டில் இருப்பதை விரும்பாத பாஜக, பாராளுமன்றத் தேர்தலின் நெருக்கத்தில் இன்னும் தரம்தாழ்ந்த முறையில் நடந்து கொள்ளும் என்றே இந்நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன. இவ்வாறு அடக்கப்படும் குரல்களுக்கும், ஒடுக்கப்படும் நபர்களுக்கும், மறுக்கப்படும் நீதிக்கும், ஒறுக்கப்படும் ஆளுமைகளுக்கும் பரியும் வரலாறு, பாஜகவின் இந்த அட்டகாசங்களைக் கறுப்புப் பக்கங்களில் எழுதி காலமெல்லாம் பிறர் காண வைத்திருக்கும்.
திருமதி.விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.