சூன் 2022
நம் சமூகத்தில் மனித உள்ளங்களில் ஒளிந்திருக்கும் அழுக்குதான் சாதியம். தனி மனிதர்களில் தொடங்கி அவர்கள் சார்ந்திருக்கிற சமூகம் என்று பரவி விரிந்திருக்கும் சாதி இந்த சமூகத்திற்குப் பிடித்த வியாதி. இப்போதெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா? என்ற கேள்வியே சாதியின் இருப்பையும், அதன் சிரத்தன்மையையும் உணர்த்திக் கொண்டே இருக்கும். சாதி ஒழிப்பு, சமூக நீதி, சுயமரியாதை என்று பேசி அரசியல் செய்த ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இன்று சாதியத்தை தூக்கிப் பிடிப்பது பெரும் அவலம்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களிடமிருந்து துவங்குவோம். 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த பிரம்மாண்ட பேரணியில் 89 வயதான நாராயணாப்பா என்ற திமுக தொண்டர் ஒருவரும் கலந்து கொண்டார். அவரை அறிவாலயத்திற்கு அழைத்துப் பெருமைப்படுத்திய மு.க. ஸ்டாலின் அவரிடம் உங்கள் ஊர் என்ன என்று வினவ, அவர் ஒசூர் என சொல்ல, அப்ப நீங்க கவுடாவா என அவரின் சாதியை குறிப்பிட்டது ஒரு அடிமட்ட தொண்டனிடமே சாதியை கேட்கும் அளவில் தான் திமுகவின் தலைவர் இருக்கிறாரா என்று கேள்வியை எழுப்பியது? ஊரைச் சொன்னால் சாதியைச் சொல்லுமளவுக்கு சாதி அரசியலில் திளைத்துள்ளதா திமுக தலைமை என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
வடமாநிலங்களிலுள்ள உயர் நீதிமன்றங்களில் பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒருவர் கூட நீதிபதியாக முடியவில்லை ஆனால் தமிழகத்தில் கலைஞர் முதலமைச்சரான பின்புதான் திரு. வரதராஜனை உயர்நீதிமன்ற நீதிபதியாக உட்கார வைத்தார். அதன் பின்பு ஆதித்தமிழர் இனத்தைச் சார்ந்த ஏழு, எட்டு பேர் நீதிபதியாக இருந்தார்கள். இது திராவிடம் போட்ட பிச்சை என்று பேசினார் திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு ஆர் எஸ் பாரதி. திமுக அமைப்புச் செயலாளரான ஆர் எஸ் பாரதிக்கு பட்டியலினத்தவர் நீதிபதிகளாவது யார் தந்த பிச்சையும் அல்ல அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமை என்பது தெரியாமல் போனது வருத்தம்தான். அவரது பேச்சுக்கு கடுமையான விமர்சனங்களும் எதிர்வினைகளும் வர, வருத்தம் தெரிவித்த அவர், அந்த சர்ச்சை நடந்த சில காலங்களிலேயே எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மீண்டும் ஒரு கருத்தை சொன்னார், “என் ட்ரைவர் அரிஜன்தான், என் பி.ஏ -வும் அரிஜன்தான், என்னை சுத்தி இருப்பவர்கள் அனைவரும் அரிஜன்தான்” என்றார். நான் உயர்ந்த சாதி என்ற பண்ணையார் மனநிலையில் இருக்கும் ஒருவர் தான் மற்றவரை இப்படி பேச முடியும் என்பது தெளிவு. அவர் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் வெற்றி பெற்றதுவரை சமூக வலைதளங்களில் அவரை கொண்டாடியது அவரின் சுய சாதியினர் அதுவும் அவரின் சாதியை குறிப்பிட்டே அந்த வெற்றியைக் கொண்டாடினார்கள். அவரின் இந்த பேச்சு சர்ச்சையான நேரத்தில் கூட ஒரு சாதி சங்க நிகழ்வில் அவர் கலந்து கொண்ட புகைப்படமும் வெளியானது. ஆர்.எஸ்.பாரதிக்கு மட்டுமல்ல திமுகளின் முதன்மை மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்குக் கூட சாதிய மனநிலை வேரூன்றியே இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி தேர்தல் வேட்பாளர்கள் என அனைவரும் பெரும்பான்மை சாதிகளிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வட மாவட்டங்களில் சாதி பெயரை வைத்தே திமுக வேட்பாளர்களுக்குச் கவர் விளம்பரங்கள் எழுதப்பட்டன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளரின் சொந்த சாதியினரே கட்சியின் பலம் வாய்ந்த பொறுப்புகளுக்கு நியமிக்கப்படும் சூழலும் இருக்கிறது.
தொடர்ந்து தங்களின் சாதி கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள், திமுகவின் முதன்மை செயலாளர்களான கே.என்.நேருவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனும், அதன்பின்னர் திருச்சியில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு பெரும்பான்மை சாதியினர் மாவட்டச் செயலாளராக ஆகிவிட்டீர்கள் உங்கள் உறவுக்காரர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அதே நேரத்தில் பட்டியலினத்தவரையும், சிறுபான்மைச் சமூகத்தவரையும் அரவணைத்துச் செல்லுங்கள் அதுதான் கட்சி வளர்ச்சிக்கு உதவும். நான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்ற எண்ணத்தில் இருக்கும் ஒருவரால்தான் பொதுத்தளத்தில் இப்படிப்பட்ட கருத்துக்களை வைக்க முடியும் என்பது தெளிவு. சமூகநீதியை தத்துவமாக கொண்டியங்கும் அரசியல் கட்டுதனித் தொகுதியை தவிர்த்து பொதுத் தொகுதியில் பட்டியலினத்தவரை வேட்பாளராக நிறுத்த தயங்குவதே எவ்வளவு பெரிய அவலம்.
பெரும்பான்மை சமூகங்களுக்கே தேர்தலில் போட்டி யிடுவதற்கான வாய்ப்பினை வழங்கி ஏற்கனவே சமூக ரீதியாக ஆதிக்கமாக இருப்பவர்களை அரசியல் ரீதியாகவும் வலுவாக மாற்றி பிற சாதியினரை ஒடுக்கும் சூழலை உருவாக்குவதுதான் சமூகநீதி பாதுகாவலர்களின் சாதனையா? தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சாதியை நிறுவனமயப்படுத்தி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவே முடியாது என்ற சூழலை ஏற்படுத்தியதும் இந்த சமூக நீதி பாதுகாவலர்கள்தான். தேர்தல் வெற்றிக்காக சாதி ஒழிப்பு என்ற கொள்கையை காற்றில் பறக்கவிட்ட சந்தர்ப்பவாதிகள் இவர்கள்.
ஐயா கருணாநிதியின் புதல்வியான கனிமொழி கூட கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டி மீட்டதும் அதுவரை தனது டுவிட்டரின் முகப்புப் படமாக இருந்த பெரியார் படத்தை நீக்கிவிட்டு பனைமரத்தை படமாக வைத்ததும் இயல்பாக நடந்த விடயங்களா? தேர்தலில் கூட்டணி வைக்கும்போது பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் என சாதியக் கட்சிகளை உச்சி முகர்வதும் பின்னர் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் சாதிய கட்சிகள் என்று வசை பாடுவதும் இவர்களின் இயல்பு. கடந்த தேர்தலில்கூட திமுகவின் பரப்புரைக்கு விசிக வினர் மட்டும் எந்த பகுதிகளில் பரப்புரை செய்ய வேண்டும், எந்த பாதை வழியாக போக வேண்டும் எனத் தனியாக அட்டவணை கொடுக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகளின் பெயரை மட்டும் நீக்கி விட்டு சுவர் விளம்பரம் எழுதப்பட்டதும் வெளிப்படையாக நடந்தது. என்னதான் அறிவில் சிறந்தவராகவும், கல்வி கற்றவராகவும் இருந்தாலும் ஆ.ராசாவை பொது தொகுதியில் வேட்பாளராக நிறுத்தாமலிருப்பது திராவிடத்தின் நவீன காலத் தீண்டாமை இல்லையா? அப்படி தனித் தொகுதியில் நின்று, வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகும் ஒருவருக்கு நாடாளுமன்ற நடைமுறையின்படி கிடைத்த மாற்று சபாநாயகர் பொறுப்பை கொடுத்தது எல்லாம் எங்களின் சாதனைதான் என டி.ஆர்.பாலு பட்டியலிடுவது வேதனையிலும் வேதனை. போக்குவரத்து அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரான ராஜேந்திரன் என்பவரை சாதிப் பெயர் சொல்லி இழிவாக பேசியதும் பின்னர் தமிழக அரசு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றியதும் சமீபத்திய எடுத்துக்காட்டு, சாதிய வன்மத்தோடு பேசிய ஒருவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றுவது எவ்வளவு மோசமான நடவடிக்கை.
மேலும் திமுக அரசின் ஓராண்டு சாதனை கூட்டத்தில் காலணிகளை தலையில் சுமந்த சமுதாயத்தினரை மேயராக்கியதுதான் முதல்வர் ஸ்டாலினின் திராவிடப் புரட்சி என்று பேசினார் திண்டுக்கள் ளியோனி. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரான திண்டுக்கல் லியோனி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை இப்படி இழிவாகப் பேசியதை எந்த திமுக தலைவரும் கண்டிக்கவில்லை. திமுகவில் உயர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த பெரும்பாலானவர்களின் மனநிலை, நாங்கள் ஏற்கனவே அதிகாரத்தோடு உயர்ந்த நிலையில் தான் இருந்தோம், பட்டியலின மக்கள் மட்டும்தான் அதிகாரமற்று, அரசியல் நிலையில் பின்தங்கி இருந்தார்கள், நாங்கள் தான் போராடி அந்த மக்களுக்கு உரிமைகளை வாங்கி கொடுத்தோம் என்ற அளவில் தான் இருக்கிறது.
சாதியை உருவாக்கியவனுக்கு சாதியத்தின் அடுக்கில் இருக்கும் அனைவரும் தாழ்ந்த சாதியினர்தான் என்ற அடிப்படை கூட தெரியாதவர்கள் இந்த திராவிட மாடலர்கள். சாதிகள் இல்லையடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! என்ற பாரதியின் வரிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
திரு. அருண் தெலஸ்போர்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை, வளைகுடா