மார்ச் 2024
தமிழ்நாட்டை அச்சுறுத்தும் போதைக் கட்டமைப்பு – கேள்விக்குறியாகும் மக்கள் பாதுகாப்பு!
புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வு, புதுச்சேரியை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த பச்சிளம்பிள்ளையைக் கடத்தி, கஞ்சா மற்றும் மது போதை காரணமாக மனிதத்தன்மையற்ற முறையில் கொடூரமாகக் கொலை செய்து சாக்கடையில் வீசிச் சென்றிருக்கின்றனர் என்று அறிகையில் பிள்ளைகளைப் பெற்றோர் நெஞ்சமெல்லாம் பதைபதைக்கிறது. அவசரத்துக்கு அருகில் உள்ள கடைக்கு அனுப்பக்கூட அச்சப்பட்டு, வீட்டை விட்டு வெளியில் வராவண்ணம் பிள்ளைகளைப் பூட்டி வைத்துப் பாதுகாக்க வைக்க வேண்டிய நிலைக்கு நம்மைத் தள்ளியிருக்கின்றன, அதிகரித்தபடியே இருக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள்.
பெருநகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை தாராளமாகப் புழங்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், பள்ளி கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் சீரழித்து வருகிறது. கல்வி நிலைய வளாகத்துக்குள்ளேயே எளிதாகக் கிடைக்கும் கஞ்சா பொட்டலங்கள், கூல் லிப் போன்ற போதை மாத்திரைகள், ஊசிகள், போதைப்பொருள் கலந்த சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம்கள் ஆகியவை தங்கள் பிள்ளைகள் கைகளில் கிடைத்தால் என்னாவது என்ற பயம், பெற்றோர்களைப் பீடித்திருக்கிறது. ஒரு சில முறை பயன்படுத்தினாலே மீட்டெடுக்க முடியாத வகையில் போதைக்கு அடிமையாக்கி, இளம்பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீர்குலைக்கும் இந்த போதைப்பொருள் விற்பனையைத் தடுக்காத ஆளும் அரசின்மேல் ஏற்கனவே நாம் அதிருப்தியில் இருக்கும்போது, திமுகவின் முதல்குடும்பம் வரையில் நெருக்கமாக இருக்கும் பிரமுகர் ஒருவரும் அவரது சகோதரர்களும், சர்வதேச போதைவலைப்பின்னல் ஒன்றுக்கே மூளையாக இருந்துவந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது, மேலும் தமிழக மக்களைக் கடுங்கோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது.
டெல்லியில் வணிக நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கிடங்கில் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தினரால் (NCB) கிலோ கணக்கில் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் கைப்பற்றப்பட்டு, அதில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த வணிக நிறுவனம் திமுகவின் அயலக அணிச் செயலாளர்களுள் ஒருவரான ஜாபர் சாதிக் என்பவருடையது என்றும், அவரது சகோதரர்கள் அனைவரும் இத்தொழிலில் கூட்டாளிகள் என்பதும் துறைசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் தேங்காய்த்தூள் மற்றும் சத்துமாவுப் பெட்டகங்களுக்குள் வைத்து இந்த போதைப்பொருட்கள் பலமுறை கடத்தப்பட்டுள்ளதும், 2000 கோடிக்குமேல் இவ்வணிகம் நடந்துள்ளது என்றும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் போதைப்பொருள் விற்பனைச் சங்கிலியை உருவாக்கிட, வேதிமருந்து உற்பத்தித் தொழிற்சாலை, சேமிப்புக் கிடங்குகள், தூதஞ்சல் (Courier) நிறுவனம், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சரக்குப் போக்குவரத்து அலுவலகம் எனப் பல நிறுவனங்கள் மூலம் இவ்வணிகம் நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் தொழிலதிபர் என்ற முறையிலும், ஆளுங்கட்சிப் பொறுப்பாளர் என்ற முறையிலும் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவில் நன்கொடை கொடுத்து பல அரசியல் பிரமுகர்கள், முக்கிய அதிகாரிகளுடன் பழக்கத்தில் இருப்பதோடு அரசு விழாக்களிலும் முதல் வரிசையில் அமரும் செல்வாக்கோடு கைது செய்யப்பட்ட நபர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, அரசின் ஆதரவோடு அமைப்புசார் உதவிகளோடு தான், இக்குற்றச்செயல்கள் நடந்துள்ளனவா என்ற ஐயத்தையும் கிளப்புகின்றது.
வணிகம், அரசியல் மட்டுமின்றி திரைத்துறையிலும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவக்கி, அதன் மூலம் இன்றைய முதல்வரின் மருமகளும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி இயக்கிய திரைப்படம் ஒன்றும் அண்மையில் வெளியாகியுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சில திரைப்பிரபலங்களுக்கும் இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்பிருக்கலாம் என்பதால், அந்தக் கோணத்திலும் விசாரணை தொடர்கிறது. 2013ம் ஆண்டிலேயே போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஒரு வழக்கில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருப்பது தெரிந்தும், அவருக்குக் கட்சிப்பொறுப்பு வழங்கி இவ்வளவு தூரம் திமுக வளர்த்துவிட்டிருப்பதன் மூலம், அரசின் முழு ஆசியுடன் தான் இது அத்தனையும் நிகழ்ந்திருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.
ஜாபர் சாதிக் இவ்வழக்கில் தொடர்புடையவராக விவரங்கள் கசிந்தவுடனேயே அவரைக் கட்சியிலிருந்து திமுக நீக்கியதாகக் கடிதம் வெளியானது. திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலர் ஊடகத்துக்கு இது தொடர்பில் அளித்த பேட்டிகளில், தேர்தல் காலத்தில் திமுகவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து ஆதாயம் தேடும் பாஜகவின் சதி இது என்றும், பாஜக ஆளும் குஜராத் துறைமுகத்தின் மூலம் தான் இந்த போதைப்பொருட்கள் அதிகம் கடத்தப்படுகின்றன என்றும் அரசியல்ரீதியான பழிபோடல்களுடன் திமுக நிறுத்திக் கொள்கிறதே தவிர, பல்வேறு கேள்விகளுக்கான உரிய விளக்கங்கள் இதுவரை தெளிவாக அளிக்கப்படவில்லை என்பதையும் உற்றுநோக்கவேண்டியுள்ளது.
அண்மைக்காலங்களில் தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றச்செயல்களின் பின்னணியில் இந்த போதைப்பொருள் பயன்பாடு இருப்பதைச் செய்திகளின் மூலம் அறிகிறோம். போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் துன்புறுத்தல்கள், அடிதடி மோதல்கள், பொதுமக்களைத் தொந்தரவு செய்தல், விபத்துக்கள் போன்றவை அதிகரித்திருப்பது குறித்து காவல்துறையே தரவுகளை வெளியிட்டுள்ளது. மேலும் சமூகப்பாதுகாப்பினைக் கேள்விக்குறியாக்கி, சட்ட ஒழுங்குக்குச் சவால் விடும் அளவுக்கு சென்னை, திருச்சி, நெல்லை, கோவை உள்ளிட்ட பெருநகரங்கள் முதல் இரண்டாம்நிலை நகரங்கள் ஏன் கிராமங்கள் வரை போதைப்பொருள் சார்ந்த வழக்குகள் பதிவாதல் மிகவும் ஆபத்தான அறிகுறி.
ஒருபக்கம் “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” என்று மாநாடு நடத்தியும், ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0, 3.0, 4.0…. என காவல்துறை மூலம் தீவிர நடவடிக்கைகள் எடுத்துக் கண்காணிப்பது போல காட்டிக் கொண்டாலும், ஆளும் திமுகவின் கட்சிப்பொறுப்பாளர் ஒருவரே இவ்வளவு பெரிய குற்றச் செயலில் ஈடுபட்ட தகவல்களும் வரும்போது, இந்த அரசு மீதான நம்பிக்கை சிதைவதைத் தடுக்கவியலாது. மேலும் இதனைச் சட்ட ஒழுங்கு சார்ந்த சிக்கலாக மட்டும் பார்க்க முடியாது; ஏற்கனவே அரசே டாஸ்மாக் மூலம் விற்கும் மதுவுக்கு அடிமையான குடிநோயாளிகளால் தமிழ்ச்சமூகம் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்குபோது, நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதமாக போதைப்பொருள் பயன்பாடும் சேர்ந்து கொண்டால், தமிழக மக்களின் பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்கும் குறைந்தபட்ச உத்தரவாதத்தைக் கூட அரசால் வழங்க முடியாமல் போய்விடும். தனக்கு வாக்களித்து அதிகார அரியணையில் அமர வைத்த மக்களைக் காக்காமல், அவர்களைப் போதைக்குக் காவு கொடுக்கும் கொடுமையை திமுக தொடர்ந்து செய்து வந்தால் தமிழக மக்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.