செப்டம்பர் 2022
திமுகவின் போதை ஒழி (ளி)ப்புப் பரப்புரையும் கவலைக்குரிய கள நிலவரமும்
சென்னை விமான நிலையத்தில், எத்தியோப்பியாவிலிருந்து கடத்திவரப்பட்ட நூறு கோடி மதிப்புள்ள “கொக்கைன்” எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான செய்தி, பெருங்கவலையையும், பேரதிர்ச்சியையும் தமிழக மக்களுக்கு அளித்திருக்கிறது. ஒரு வருட திமுக ஆட்சியில், இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கமும், பயன்பாடும் அதிகரித்திருப்பது பேரபாயத்தின் புறக்கணிக்க முடியாத அறிகுறி. மாவட்டந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து நடக்கும் இவ்வணிகத்தினால், சீர்குலைவது அவர்களின் வாழ்வு மட்டுமன்று; தமிழகத்தின் எதிர்காலமும் தான். இதற்கு இரும்புக்கரங்கள் கொண்டு, போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலொழிய, இந்த சமூகத்தீமையைக் கட்டுப்படுத்துவது கடினம்.
ஐ.நா. மன்றத்தின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம், அண்மையில் வளர்ந்த நாடுகளில் உயர்கட்டுப்பாடுகள், கடும் தண்டனைகள், விழிப்புணர்வு காரணமாகக் குறைந்துள்ள போதைப்பொருள் பயன்பாடு, வளரும் நாடுகளில் இப்போது அதிகமாகியுள்ளதாகத் தரவுகள் மூலம் தெரிவிக்கிறது. உலகளவில் இருபதில் ஒருவர், இதற்கு அடிமையாக இருப்பதாக 2022ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றுக்கு, இந்த போதைப்பொருள் சார்ந்த வணிகமும் முக்கிய காரணமெனக் கூறப்படுகிறது. இந்திய ஒன்றியத்தின் முக்கிய நகரங்களில், இப்பயன்பாடு அச்சத்துக்குரிய வகையில் பெருகியுள்ளதற்கும், துறைமுகங்கள் தனியார்மயமாக்கப்பட்டதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்பதை உற்றுநோக்குகையில் உணரமுடிகிறது. எனவே தான் குஜராத் நீதிமன்ற நீதிபதி பவார் அவர்கள், அதானிக்குத் தாரை வார்க்கப்பட்ட முந்த்ரா துறைமுகத்தின் மூலம் இப்பொருட்கள் மாநிலத்தில் நுழைகிறதா என நேரடிக் கேள்வியை எழுப்புகிறார். ஆனால் பதில் சொல்லத்தான் ஆளில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்துதான் போதைப்பொருட்கள் கடத்திவரப்பட்டு விதியோகிக்கப்படுகின்றன. கஞ்சா, குட்கா, பாள் மசாலா, மாத்திரைகள், ஸ்டாம்புகள், ஊசிகள் போன்ற பல்வேறு தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடந்த ஒரு வருடத்தில் மிக அதிகமாகப் புழங்குவதை திமுக அமைச்சர்களே ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் இதற்கு ஒன்றிய அரசு தான் காரணம் என்று ஒப்புக்குப் பழி போட்டுவிட்டு நகர்ந்துவிட்டால், சட்டம் ஒழுங்கைக் காப்பதும், குற்றங்களைத் தடுப்பதும் மாநில அரசின் கடமையில்லையா என்ற கேள்வி எழுகிறது. சைபர் செல் அமைப்பு, நுண்ணறிவுப் பிரிவில் தனி அதிகாரி, மாநாடு நடத்தி அனைவரையும் உறுதிமொழி ஏற்கச் செய்தல் போன்ற வழமையான சடங்குகளைத் தாண்டி, உறுதியான நடவடிக்கைகளையே பொதுச் சமூகம் அரசிடம் எதிர்பார்க்கிறது. 1988ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உலக அளவிலான போதைப்பொருள் மற்றும் மனக்கிளர்ச்சி மருந்துகளுக்கான ஒப்பந்தம், அரசுகளின் கடுமையான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை மூலமாகவே இது போன்ற சமூகத் தீமைகளைக் களைய இயலும் என்று வழிகாட்டுகிறது.
அரசுகளின் திறன்குறைவினாலும், ஊழல்மலிந்த அரசியல்வாதிகளின் மறைமுக உதவியினாலுமே இப்போதைப் பொருட்கள் சந்தையை நிறைக்கின்றன. அதிமுக ஆட்சிக்கால குட்கா ஊழலில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கினை மத்தியப் புலனாய்வு முகமை இன்னும் விசாரித்து வருகிறது. இதுபோலவே கனமான தரகுத்தொகையை முன்னிட்டு, திமுக அரசும் போதைப்பொருட்களை தமிழகத்தில் அனுமதிக்கிறதா என்று வினவத் தோன்றுகிறது. பஞ்சாபின் அகாலி தளம் மற்றும் பாஜக கட்சிப் பொறுப்பாளர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு போதைப்பொருட்களைக் கடத்த உதவியதால், அம்மாநிலத்தின் மிகப்பெரும் சவாலாக இன்று இவ்விடயம் மாறி நிற்கிறது. தமிழகத்தில் வாக்குக்குப் பணம் ஆறாய் ஓடியதைக் கண்டு மலைத்ததைப் போலவே, பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலிலும் அளவுக்கதிகமான போதைப்பொருள் கைமாறியதைக் கண்டு, கடும் கண்டன அறிக்கையைத் தலைமைத் தேர்தல் ஆணையம் வழங்கியது.
“தங்கப்பிதை” எனப்படுகிற ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தாள் ஆகிய நாடுகளின் சிறு பகுதிகளை உள்ளடக்கிய இடமும், “தங்க முக்கோணம்” எனப்படும் தாய்லாந்து, லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் சிறு பகுதிகளைக் கொண்ட இடமும்தான். உலக அளவில் ஓப்பியாய்டுகள் எனப்படும் ஒரு போதை மருத்துவகை உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்திய ஒன்றியத்திற்கு மிக அருகில் இப்பகுதிகள் இருப்பதால்தான் பஞ்சாபில் இக்குற்றத்தைத் தடுக்க முடியவில்லை என்று சாக்கு சொன்ன ஆளும் அரசைப் பதவியிலிருந்து இறக்கி, இவ்விடயத்தில் கடும் நடவடிக்கைகள் எடுப்போம் என்று உறுதி கூறிய ஆம் ஆத்மி கட்சியை அங்கு பஞ்சாப் மக்கள் உட்கார வைத்ததிலிருந்தே, எவ்வளவு பெரிய சமூகச் சிக்கலாக போதைப்பொருட்கள் பயன்பாடு இருக்கிறது என்பதை அறிய முடியும். ஆனால் தமிழகம் இன்னொரு பஞ்சாபாக மாறாமல் இருக்க ஆவன செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் திமுக அரசு, போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டுகிறதோ என்று திமுகவின் மோசமான வரலாற்றை முன்னிட்டு மக்கள் அச்சப்படுகின்றனர்.
சாராயப் பொருளாதாரக் கொள்கையைக் கைக்கொண்டு, தமது வருவாய்க்கு டாஸ்மாக்கை நம்பியிருக்கும் திராவிட அரசுகள், மக்கள் குடித்தே செத்தாலும் தமக்கு இலாபம் தந்துவிட்டுச் சாகட்டும் என நினைக்கும் குரூரத்தை நாம் பல்லாண்டுகளாக அவதானிக்கிறோம். போதைப்பொருளை விற்பவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அரசு சொல்லும்போதெல்லாம், அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் விற்கப்படுவது என்ன என்ற நகைப்புக்குரிய வினாவும் எழும்போது, அதற்கு அரசின் பதில் என்னவாக இருக்கும்: நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வர் சொல்லும்போது, டாஸ்மாக்குப் போட்டியாக இப்போதைப் பொருட்கள் இருப்பதனால் இந்த நிலைப்பாடா? என்று எண்ணத் தோன்றுகிறது. அறிவு வளர்ச்சியை அளிக்கும் படிப்பகங்களைத் திறக்க வேண்டிய அரசு, குடிமக்களின் நல்வாழ்வை அழிக்கும் குடிப்பகங்களை இலக்கு வைத்து நடத்திக் கொண்டிருக்கையில், சமூகப்பொறுப்பற்ற இந்த அரசா மக்களைக் காக்கும் பணியைச் செய்யப்போகிறது என்ற ஆதங்கமும், ஆயாசமுமே நமக்கு மிஞ்சுகிறது.
“கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்” (கள்ளுண்ணாமை அதிகாரம், குறள் எண் 925)
எனத் தமிழ்மறை திருக்குறள் சொல்வது போன்று, தன்னிலை மறக்க வைக்கும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒத்த அறியாமை வேறெதுவுமில்லை; அதைப்போலவே இந்த இழிநிலையைத் தடுக்க முடியாத அரசின் செய்திறனின்மை போன்ற அவமானம் வேறெதுவுமில்லை. இதை ஆளும் திமுக
அரசு உணர்ந்து செயல்படுதல் நலம்; இவ்வாவிடில் அதற்கான பின்விளைவுகளை அரசு எதிர்கொள்ளும் என்பது திண்ணம்.
திருமதி. விமலினி செந்தில்குமார்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை, வளைகுடா