செப்டம்பர் 2023
தொடரும் காவிரி நீர் பங்கீட்டுச் சிக்கல்: தீர்வு தான் என்ன?
குடகுமலையில் உற்பத்தியாகி கர்நாடகாவை ஊடறுத்து தமிழகத்தின் வடமேற்கே உள்நுழைந்து, விளைநிலங்களைப் பசுமையாக்கி பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது காவிரி ஆறு. எத்தனை எத்தனையோ ஆண்டுகளாகப் பாய்ந்தோடி எண்ணிறந்த மக்களை வாழவைத்த காவிரி ஆற்றின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் எப்போதுமே கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் பிரச்சனை தான். இந்திய ஒன்றியமும், பாகிஸ்தானும் கூட சச்சரவின்றி நீர்ப்பங்கீடு செய்துவரும் நாட்டில் தான், அண்டை மாநிலமான கர்நாடகா நமக்கு தண்ணீர் தர மறுக்கிறது. பலர் நினைப்பது போல இது புவிசார் பிரச்சனை அல்லாது வாக்கரசியல் சார்ந்த சிக்கலாக மாறி பல ஆண்டுகளாகிறது.
தமிழகத்தை ஆளும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, கர்நாடகத்தோடு ஒன்றிய அளவிலும் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் பாஜக மற்றும் காங்கிரசு இவர்களுக்கிடையேயான வாக்கரசியல் வெற்றிக்கான போட்டியில், அப்பாவிகள் குறிப்பாக உழவர்கள் சொல்லொணாத் துன்பத்தை ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வருகிறார்கள். வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி நதியின் மூலம் அமைந்துள்ள கர்நாடகாவில், பருவமழை நன்கு பெய்யும் காலங்களில் வெள்ள அபாயத்தைத் தவிர்க்கும் பொருட்டு உபரி நீர் எவ்வித சிக்கலுமின்றி திறந்துவிடப்படுகிறது. ஆனால் பருவமழை முடியும் தருவாயில் அதாவது ஆகத்து மற்றும் செப்டம்பர் காலங்களில் நீர்வரத்து குறையும்போது தகராறுகள் தொடங்கிவிடுகின்றன.
அனைத்துலக நீர்நிலை மேலாண்மை விதிகளின்படி, ஒரு ஆறு அதன் தோற்றுவாய் உள்ள மாநிலம் அல்லது நாட்டைக் காட்டிலும், அது கடலில் சென்று சேரும் மாநிலம் அல்லது நாட்டிற்கே அந்நதி மீது அதிக உரிமைகள் இருப்பதாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. காரணம் மலையினின்று வேகமாக நீர் ஓடிவரும் பகுதியைக் காட்டிலும், வண்டலைப் படியவிட்டு மெதுவாக நகரும் சமவெளிப்பகுதியில் அதிகளவு விளைநிலங்கள் ஆற்றினால் பயன் பெறுகின்றன. அதனால் தான் உலகெங்கும் கழிமுகப் பகுதிகள் பெருமளவு தானியங்கள் விளையும் உணவுக்களஞ்சியங்களாக உள்ளன. காவிரி ஓடி வளப்படுத்தும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் ஒரு காலத்தில் முக்கனிகளும் நெல்லும் கொழிக்கும் பகுதிகளாக இருந்தன. ஆனால் இப்போது அப்படியில்லை. காரணம் அரசியல்வாதிகளின் அதிகாரப்போட்டி தான்; அதிலும் குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் உறுதியற்ற நிலைப்பாடு மற்றும் செயல்பாடு தான்.
கர்நாடகம் முழுக்க, உழவர்களிலிருந்து கலைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட சாமானியப் பொதுமக்கள் வரை, இனத்துக்கும் இனவுரிமைக்கும் ஒரு சிக்கல் என்றால் சாதி, மத, வர்க்க, வட்டார வேற்றுமைகளைத் தாண்டி, ஒரணியில் நின்று குரல் கொடுக்கின்றனர். அதனால் தான் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றை நோக்கத்தோடு தெளிவுடன் இயங்குகின்றனர். ஆனால் இங்கோ திட்டமிட்டு வெண்டுமென்றே அரசியல்படுத்தப்படாத மக்கள், அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் காவிரிச் சிக்கல் குறித்த அடிப்படைப் புரிதலோ, அது நமது மாநிலத்துக்கு எவ்வளவு முக்கியம் என்ற விழிப்புணர்வோ இல்லாமல், அது மற்றுமொரு தலைப்புச் செய்தி என்ற அளவில் கடந்து போய்விடுகின்றனர். கடந்த மாதத்திலிருந்து கனன்று வரும் காவிரிப் பிரச்சனைக்கும் கூட தமிழ்ப்பொதுச்சமூகம் பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலினை மிகவும் கேவலமாக சித்தரித்து போராட்டம் செய்த கன்னடர்களை நாம் தமிழர் கட்சியினர் கண்டித்த அளவு கூட திமுகவினர் கண்டுகொள்ளவில்லை. இந்திய ஒன்றியத்தின் பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரசைப் பகைத்துக் கொள்ள விரும்பாத திமுக, அமைதியாக இக்கேவலத்தைக் கடந்து சென்றுவிட்டது. அந்த அரம்பர்களின் இந்த அசிங்கமான செய்கையைத் தடுக்கவோ கண்டிக்கவோ என்னால் இயலாது என கர்நாடக முதலமைச்சர் கைவிரித்துவிட்டார். காரணம் காவிரி தொடர்பான விவகாரங்களில் கன்னடர்களுக்கெதிராக ஒரு சொல் சொன்னால் போதும்; அவர் அந்த மாநில அரசியலில் இருந்து துடைத்தெறியப்படுவார். தேர்தலில் நின்றால் அவர் குடும்பத்தினரே கூட அவருக்கு வாக்கு செலுத்தமாட்டார்கள். அந்த அளவு மக்கள் அச்சமூட்டி ஆட்டிப்படைக்கின்றனர் அம்மாநில அரசியல்வாதிகளை.
தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டுமென்று சொல்வதற்கே நாம் தமிழர் கட்சியினரைப் பிரிவினைவாதிகள் என்று பேசும் தேசியக்கட்சிகள், அங்கே கட்சிக்கொடிகளுக்கெல்லாம் மேலே அம்மாநிலக் கொடி பறப்பதை அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன. இந்திய ஒருமைப்பாடு குறித்து இங்கு வந்து நமக்குப் பக்கம் பக்கமாகப் பாடம் எடுத்துவிட்டு, அங்கு போய் கன்னடர்களின் பக்கம் நிற்கும் தேசியக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டுக்குக் காரணம், நாம் இனவுணர்வு இல்லாமல் இருப்பதாலும், மாற்றி மாற்றி ஏமாற்றும் திமுக அதிமுகவை நம்பி ஆளும் வாய்ப்பளிப்பதாலும் தான். பாலாறு என்று வந்துவிட்டால் ஆந்திர ஆட்சியாளர்களுக்கும், முல்லைப்பெரியாறு என்று வந்துவிட்டால் கேரள ஆட்சியாளர்களுக்கும், காவிரி என்று வந்துவிட்டால் கர்நாடக ஆட்சியாளர்களுக்கும் வரும் கோபமும், இனப்பற்றும், திமிரும், துணிவும் ஏன் தமிழக ஆட்சியாளர்களுக்கு வருவதில்லை?
இத்தனைக்கும் நம் உரிமையை, உரிய பங்கை, நியாய தர்மங்களுக்கு உட்பட்டு தான் நாம் கேட்கிறோம். நீதி நம் பக்கம் இருக்கும்போதே, நமது தரப்புக்கு சாதகமாக ஒரு சிறு நகர்வு ஏற்பட்டாலே தமிழர்களை அடித்து, தமிழர்களது தொழில்நிறுவனங்களைச் சூறையாடி, சொத்துக்களை அழித்து அட்டூழியம் செய்யும் கன்னடர்களை அம்மாநில அரசோ, ஒன்றிய அரசோ கட்டுப்படுத்துவதோ, தடுப்பதோ இல்லையே ஏன்? தாக்குதல் நடத்தியவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே காணொளிகள் வெளியிடும்போது அவர்களுக்கெதிராக ஒரு வழக்கு பதிவு செய்து விடுமா கர்நாடக அரசு? குற்றத்துக்கு தண்டனை வழங்குவது இருக்கட்டும், குறைந்தபட்சம் சட்ட ஒழுங்கு பாதுகாப்பை முன்னிட்டேனும் ஒரு எச்சரிக்கை விடுமா அந்த அரசு? வாய்ப்பேயில்லை. காரணம் அம்மாநில மக்கள் அப்படிப்பட்டவர்கள். எல்லாவித நியாயங்களை வைத்துக் கொண்டும், பல ஆண்டு சட்டப்போராட்டம் நடத்தி உச்சநீதிமன்ற தீர்ப்புகளை வைத்துக் கொண்டும், இவ்வளவு பெரிய மாநிலத்துக்கென்று ஆளும் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தும், உரிய அளவு நீரைப் பெற்றுத் தராததற்குக் காரணம் தமிழக அரசின் கையாலாகாத்தனமா? அல்லது மக்களின் ஏமாளித்தனமா? மக்கள் சிந்திக்க வேண்டும்.
இருக்கும் அத்தனை ஆறுகளின் படுகைகளிலும் மனச்சான்றின்றி எவ்வித கட்டுப்பாடுமின்றி மணலையள்ளி விற்றுத் தின்பதற்கும், அதன் மூலம் ஈட்டும் காசை விட்டெறிந்து மக்களின் வாக்குகளைப் பறித்து வெற்றியை வாங்குவதற்கும் தான் திமுகவும், அதிமுகவும் மும்மரமாக இயங்கி வருகின்றன. கர்நாடகத்தில் மட்டைப்பந்து விளையாட்டு வீரன் முதல் கடைநிலை துணை நடிகன் வரை இயற்கையைப் புரிந்து கொள்ளாமல், காவிரி எங்களுக்கு மட்டுமேயான சொத்து என்று உளறுகையில், இங்கிருப்போர் தனக்கு விருப்பமான நடிகரின் இசை வெளியீட்டு விழா இல்லையென்று புலம்பித் தீர்ப்பதையும், கர்நாடகாவில் அப்படத்தின் வசூல் குறையும் என்று குறைப்பட்டுக் கொள்வதையும் என்னவென்று சொல்வது? மக்களிலிருந்து தான், மக்களுக்கேற்றார்போல் தான் தலைவர்கள் உருவாகிறார்கள். மக்கள் திருந்தும்போது, எது அவசியம்? எது அநாவசியம் என்று உணரும்போது, மக்கள்நலத்தை முன்னிறுத்தும் ஒரு நல்லாட்சியைத் தேர்ந்தெடுக்கும்போது தான் மாநில உரிமைகள் மீட்டெடுக் கப்படும். மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் பல சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்கும்.
நாம் தமிழர் கட்சியின் தம்பி பா.விக்னேசு காவிரிச் சிக்கலைத் தீர்க்க வேண்டி தனது இன்னுயிரீந்து ஆண்டுகள் ஏழாகி விட்டன. அன்றிருந்த அவல நிலையே இன்று வரை தொடர்கிறது. ஆட்சிகள் மாறி, ஆளும் கட்சிகள் மாறி வந்தாலும், மக்களின் குறைகள் தொடர்ந்தபடி, முன்னைவிடவும் அதிகரித்தபடியே இருக்கின்றன. ஆனால் தமிழ்ச்சமூகத்தால் எவ்வித சலனமுமின்றி இது ஆண்டுக்காண்டு நடப்பது தானே என இலகுவாக எப்படிக் கடக்க முடிகிறது? அண்மைக்கால வெள்ளித்திரையில் நிரம்பி வழியும் வன்முறைக் காட்சிகளைக் கூப்பாடு போட்டுக் கொண்டாடும் தமிழ் இளையோர், தனது உரிமைப் பறிப்புக்கெதிராக அழுத்தமான குரலை அறவழியில் பதிவு செய்ய வேண்டும். தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் ஊறு வரும்போது ஒற்றுமையுடன் நிற்க வேண்டும். பொழுதுபோக்கு கேளிக்கைகளுக்குத் திரள்வதில் காட்டும் ஆர்வத்தை, நமக்கு அநீதி இழைப்பவர்களுக்குப் பாடம் கற்பிப்பதிலும் காட்ட வேண்டும். தமிழர் ஒன்றுபட்டால் கிடைக்கும் ஓர்மையின் வலுவுக்கு காவிரிப் பிரச்சனை என்ன? அதைவிடவும் சிக்கலான பட விடயங்களுக்குத் தீர்வுகளைத் தரும் ஆற்றலுண்டு என்பதற்கு ஏறுதழுவுதலை மீளக் கொண்டுவந்த தைபுரட்சியே தெள்ளியதோர் சான்று.
திருமதி. விமலினி செந்தில்குமார்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.