சூலை 2022
இந்திய ஒன்றியத்தில், ஒருவர் தனது அடையாளத்தை, அதாவது, தமிழ் என்றோ, தமிழர் என்றோ, வங்காளி என்றோ உரக்க முழங்கினால் தேசப் பாதுகாப்பிற்கு எதிரானவர் என்று சிறைப்படுத்தப்படுவது உறுதி, தேசிய இனஉரிமை பேசுவது, மாநிலத் தன்னுரிமை பேசுவது, இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்று ஆளும் ஒன்றிய அரசு உறுதிப்பட நிறுவி வருகிறது. ஒன்றிய அரசின் தொடர் பரப்புரைகள், பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் மத்தியில் இதுபோன்ற நிலைப்பாடுகள், கருத்துருக்கள் அடிப்படையிலேயே தவறோ என்ற உளவியல் மாற்றத்தை உருவாக்கி வருகிறது.
இந்திய அரசியல் சாசனம். உலகின் மேன்மையான அரசியல் சாசனம், இந்திய அரசியல் சாசனத்தை ஆய்வு செய்வது போன்ற சுவையான விடயம் ஏதுமில்லை போன்ற வாசகங்கள் காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது உச்சநீதிமன்ற “முன்மாதிரி தீர்ப்புகள்” என்று எதையும் நாம் விதியாக வைத்துக்கொள்ள இயலாத நிலை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒன்றிய அரசின் அங்கத்தினர் என்று எளிய மக்களே எண்ணும் வகையில், உயரிய நீதித்துறையின் செயல்பாடுகள் உள்ளது. ஒன்றிய அரசு என்ன விரும்புகிறதோ, அதுவே பெரும்பாலும் தீர்ப்புகளாக வருகிறது. சான்றாக 1985ல் 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட, கட்சித்தாவல் சட்டம் சொல்லும் விதிமுறைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மீறுகிறார்கள். மீறியிருக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் கடந்த காலத்தில் கண்டுள்ளோம். இச்சட்டத்தை மீறும் உறுப்பினர்களின் பதவி, ஒன்றிய அரசின் விருப்பத்தின் அடிப்படையிலேயே நீக்கவோ, காப்பாற்றவோப்படுகிறது. ஒன்றிய அரசு என்றாலே, சித்தாந்தங்கள் கடந்து, தேசிய இன எதிர்ப்பு, தேசிய இனஉரிமை மறுப்பு என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது.
இந்திய ஒன்றிய அரசின். தேசிய இனங்கள் மீதான தொடர் அழுத்தங்கள், 1952 க்கு பிறகான சுதந்திர இந்தியாவில் பல்வேறு மாநில கட்சிகள் உருவாக வழிவகை செய்தது. அதன் நீட்சியாக பல்வேறு மாநிலங்களை, மாநில உரிமை பேசும் கட்சிகள் ஆட்சி செய்து வருகிறது. அவ்வாறே தமிழ் இயக்கங்கள் உருவாக்கிய மாநில உரிமை” கருத்தியலின் பலனை அறுவடை செய்து ஆட்சிக்கு வந்தது திராவிட இயக்கங்கள். திராவிட மாடல் “அவல ஆட்சியை” பற்றி தமிழ்ச்சூழலுக்கு விளக்கவேண்டிய தேவை இல்லை என்று தோன்றுகிறது. நல்வாய்ப்பாக “திராவிடம் என்ற சொற்பதத்தின் வரலாற்றுப் பொய்மைத்தனத்தையும், அரசியல் ஏமாற்று வேலைகளையும், ஐயம் நீங்க தற்கால தமிழ்ச்சூழலில் தமிழ் இயக்கங்கள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் நிறுவிவிட்டன. குறிப்பாக இதில் முக்கிய பங்காற்றியது நாம் தமிழர் கட்சி, அரசின் அதிகாரக் குவிப்பிற்கு எதிராக, மாநில சுயாட்சி, பெண்விடுதலை, சமூகநீதி, போன்றவைப் பற்றி பேசிப்பேசி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளில் இன்று கொள்கை, தத்துவம் என்று எதையாவது நாம் தேட விரும்பினால், பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் நமக்கு ஒன்றும் கிட்டாது. சங்கரமடத்தில் உள்ளவர்கள்கூட, நாங்கள் திமுக போன்று வாரிசு முறையில் வருவதில்லை. என்று கூறும் அளவுக்கு அனைத்து நிலைகளிலும் குறிப்பாக ஆளும் திமுகவில் வாரிசு அரசியல் நீக்கமற நிறைந்துள்ளது. இதற்குச் சற்றும் சளைத்ததல்ல என்ற நிலையில் அதிமுகவின் செயல்பாடுகள் இருந்துள்ளது, இருக்கிறது. ஒருபடி மேலே, சுயமரியாதை பேசி வளர்ந்த இயக்கத்தில், மூப்பின் உச்சத்தில் இருக்கும் அமைச்சர் பெருமக்கள், மறைந்த முதல்வர் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி, சுயமரியாதைக் கொள்கையைக் காத்ததை தமிழ்கூறும் நல்லுலகு கண்டது.
திமுக குடும்பத்தின் சொத்து மதிப்பின் அளவை, தமிழ்நாட்டின் கடைக்கோடியில், வயிற்றுப் பிழைப்பிற்காக நாள்தோறும் உழைக்கும், பாமர மக்களிடம் கேட்டாலும் சொல்வார்கள். இன்னும் எத்தனை தலைமுறைக்கு அவர்கள் சொத்துக்கள் வரும் என்று கணக்கிட இயலாத அளவிற்கு சொத்துக்களை குவித்து வைத்துள்ளனர், குவித்து வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த திரைத்துறை ஒட்டுமொத்த வீட்டுமனை விற்பனை, தனியார் குடிநீர் விற்பனை என அனைத்தையும் இவர்கள் கையில் வைத்துள்ளனர். எளிய மக்கள் ரெண்டு செண்டு இடம் வாங்கமாட்டோமா என வாழ்வனைத்தும் ஏங்கும் காலத்தில், ஆயிரம், ஆயிரம் ஏக்கர் நிலத்தை திமுக குடும்ப உறவுகள் வாங்கிக்குவிக்கும் நிலை இங்கு தொடர்கின்றது. பொதுமக்கள் சேவைக்கென்று நியமிக்கப்பட்ட மிக முக்கிய பொறுப்புகளிலுள்ள அரசு செந்தமிழ் முரசு காவல்துறை அதிகாரிகள், திமுக தலைவரின் மகளுக்கு, மகனுக்கு, மருமகனுக்கு பணிசெய்ய ஒதுக்கப்பட்டுள்ளனர் என்பது கண்கூடு.
தமிழக அரசியல் கட்சிகளின் மீதான மக்களின் மதிப்பீடு மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. நாட்டின் முதல்வர் பேசும் கூட்டத்திற்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்க்க வேண்டியுள்ளது. எதிர் திராவிடக் கட்சி, பொதுக்குழு நடத்த பொதுக்குழு உறவுகளுக்கு கோடிகளில் பணம் கொடுத்து அழைக்க வேண்டியுள்ளதையும் அறிகின்றோம். கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தமிழக பாஜக, திமுக, அதிமுக அளவிற்கு இணையாக பணம் கொடுத்ததாக மேனான் சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு தெரிவித்திருந்தார். அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி இன்னும் ஒருபடி மேலே சென்று, வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பாஜக, தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சிகளும் கொடுக்க இயலாத அளவு பணத்தை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார். இதுவே தமிழக அரசியலின் நிலை.
மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு மாற்றாக மக்களால் உள்ளளவில் விரும்பத்தக்க கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. நாட்டின் முதல்வருக்கு காசு கொடுத்தும் கூடாத கூட்டம், எளிய மனிதன் அண்ணன் சீமான் அவர்களின் பேச்சை கேட்க கூடுகிறது. ஒரு ரூபாய் பணம் கொடுக்காமல், அதிகப்படியான வாக்குகள் நாம் தமிழர் கட்சி” கருத்தியலுக்குக் கிடைக்கிறது. பல்வேறு காரணங்களால் திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் பல்வேறு சமயங்களை ஏற்றுக்கொண்ட தமிழர்கள், உள்ளளவில் நாம் தமிழர் கட்சியை நேசிப்பதை கள ஆய்வில் தெரிய முடிகிறது. நாம் தமிழர் கட்சியின் சூழியல் செயல்பாடுகள் இந்திய அளவில், பிற கட்சிகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. நாம் தமிழர் சுட்சியின் வளர்ச்சி, நேரடியாகவும், மறைமுகமாகவும், தமிழர் நவனில், திராவிடக் கட்சிகள் அக்கறை காட்டவேண்டிய கட்டாயச்சூழலை உருவாக்குகிறது. உள்ளடியே சொல்லப்போனால், இன்றைய தமிழ்ச்சூழலில் மக்கள் விரும்பும், மக்கள் மதிக்கும் ஒரு அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. திராவிட, தேசிய கட்சிகள் வெறும் பிழைப்புவாத அரசியல் கட்சிகளேயன்றி மக்களுக்கும், மண்ணுக்குமானவர்கள் அல்ல என்பதை தமிழ் சமூகம் உணரத்தொடங்கிவிட்டது.
இன்று மக்கள் மனதில் உள்ள நம்பிக்கைக்குரிய கட்சியாக சக்தியாக திகழும் நாம் தமிழர் கட்சி, நாளை தமிழக அரியணையில் ஏறி அறுமுள்ள நல்லாட்சியை வழங்கும் என்பது திண்ணம். காரணம், சாதியாக மதமாக பிரித்தாளப்பட்டு ஆண்ட, ஆளுகின்ற திராவிட கட்சிகளால் தங்கள் நல்வாழ்க்கையை, வளங்களை இழந்த நம் தமிழ் சமூகம், நாம் தமிழர் கட்சியின் தொடர் முயற்சிகளால் விழிப்படைந்துள்ளது கண்கூடு.
“மக்கள் நலன் பேணும் சமரசமற்ற தமிழ்தேசிய கருத்தியல் அரசியல்’ போற்றும் நாம் தமிழர் கட்சியே தமிழரின் இறுதி அரசியல் நம்பிக்கை என பெரும்பான்மையானோர் உணர்ந்து வருகிறார்கள் எனபது உண்மையான களச்சூழல்.
திரு. கோபாலகிருஷ்ணன்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை, வளைகுடா.