spot_img

நாம் தமிழர் கட்சியின் அண்மைக்கால போராட்டங்கள் : கவனயீர்ப்பும் கருத்துருவாக்கமும்

செப்டம்பர் 2025

நாம் தமிழர் கட்சியின் அண்மைக்கால போராட்டங்கள் : கவனயீர்ப்பும் கருத்துருவாக்கமும்

நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசியத்தைத் தமிழ்நாட்டில் வேரூன்றவைத்து, சாமானிய மக்களும் விவாதிக்கும் பேசுபொருளாக்கி மூன்றாவது பெரிய கட்சியாகி அரசியல் அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டது. அடுத்தகட்ட பாய்ச்சலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாம் தமிழர், அண்மையில் நடத்தும் போராட்டங்கள் தமிழக அரசியல் களத்தைத் தகிக்க வைத்திருக்கின்றன. இதுவரை தமிழ்நாட்டில் ஏன் உலக அளவில் கூட வேறெந்த அரசியல் கட்சிகளும் செய்யாத செய்யத் துணியாத நகர்வுகளை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்திருப்பது தான், பலரையும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. இவற்றின் பின்னணியும், அதனூடே உள்ளார்ந்து பொதிந்திருக்கும் நுண்ணரசியலையும் உற்றுநோக்கும்போது தான், இவை தமிழ்ச்சமூகத்தில் உருவாக்கியிருக்கும் தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

தன் இளமைக்காலம் முதல் பல சித்தாந்தங்களுடனும், அதன் மீச்சிறந்த ஆளுமைகளுடனும், பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் பயணித்த அனுபவமுடைய சீமான் அண்ணன், சாமானிய மக்கள் படும் துயரங்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுகளைக் காணும் முனைப்பினை இயல்பிலேயே கொண்டவர். என்ன செய்தால் ஒரு சிக்கலுக்கு விடிவு கிடைக்கும் என்பதை அறிந்து அதனைச் சாத்தியப்படுத்துவதே மக்களரசியலில் இயங்கும் ஒரு களப்போராளி, துயருரும் மக்களுக்கு நல்கும் உதவி.

தமிழ்நாட்டின் இன்றைய மிக முக்கியமான பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகளோடு, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பே பல்வேறு தகவல்கள், செயல்திட்டங்கள், உலக அளவிலான ஒப்பீட்டு ஆதாரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்பாட்டு வரைவினை 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தான் பங்கேற்ற முதல் தேர்தலிலேயே தேர்தல் அறிக்கைகளுக்கு மாற்றாக வெளியிட்டது நாம் தமிழர் கட்சி. ஏட்டளவில் மட்டுமின்றி நடைமுறையிலும் அவற்றைச் செயல்படுத்துவதை உறுதி செய்யும் விதமாகவே அண்மைக்கால போராட்டங்கள் நாம் தமிழர் கட்சியால் முன்னெடுக்கப்படுகின்றன. இன்றும் மக்களரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும் அந்த ஆவணம், தமிழ்த்தேசிய ஆட்சியை நாம் தமிழர் அரசு எவ்வாறு செய்யப்போகிறது என்பதற்கான கொள்கை விளக்கப் பேரறிவிப்பாகும்.

சூழலியல் விழிப்புணர்வு & இயற்கை வேளாண்மை:

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முதன்மைப்படுத்தி தற்சார்புப் பசுமை தாய்ப்பொருளாதாரத்தை முன்வைக்கும் நாம் தமிழர் கட்சி, திராவிடக் கட்சிகளின் சாராயச் சுரண்டல் பொருளாதாரத்துக்கு மாற்றாக பனைப்பொருளாதாரத்தை முன்வைக்கிறது. இதனால் தான் பனை கனவுத் திருவிழா, தடையை மீறி கள் இறக்குதல் போன்றவை நடத்தப்பட்டன.

சாதீய அடிப்படையிலான முன்னெடுப்பு இது என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று நிறுவவே பல்வேறு சாதியைச் சார்ந்த ஆயிரம் பனையேறிகள் பங்கேற்ற நிகழ்வும் நடந்தது. தமிழ்நாட்டின் நீர்வளத்தை கொள்ளை கொண்டு, மனிதவளத்தைச் சீரழிக்கும் சீமை மதுபான வகைகளை முற்றிலுமாக ஒழித்து, குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, உழவர்களுக்கும் வாழ்வாதாரப் பயனளிக்கக் கூடிய, பன்னெடுங்காலமாய்த் தமிழர் உணவில் ஒரு பகுதியாக இருந்தது என சங்க இலக்கியமே மேற்கோள் காட்டும் கள் எனும் பனம்பால் & தென்னம்பாலை மாற்றாக நிறுத்துவதே இக்கட்சியின் நிலைப்பாடு.

இயற்கை உழவு சார்ந்த பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு முக்கியமானது. உணவுக்காக மட்டுமின்றி அன்றாட உழவு வேலைகளிலும் பங்கெடுக்கும் விலங்குகள் தொடர்பான சிக்கல்களான ஆடு மாடு மேய்ச்சல் நிலவுரிமை மீட்பு, மலையேறி மாடு மேய்த்தல் குறித்த போராட்டங்களும் நடத்தப்பட்டன. புவி வெப்பமடைதல், சூழலியல் பேரழிவுகள் தொடர்பான சிக்கல்களுக்கு மரம் நடுதலும், காடு வளர்ப்புமே தீர்வு என்பதால் மரங்களின் மாநாடு நடந்து முடிந்திருக்க, உலகளவில் பெரும் பிரச்சனையாக உருமாறியிருக்கும் நீர்ப்பற்றாக்குறையை பற்றி விவாதிக்க தண்ணீர் மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கனிமவளக் கொள்ளையை எதிர்த்து மலையைக் காப்போம் மண்ணை மீட்போம் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளன.

ஒடுக்கப்பட்டோர் மேம்பாடு:

ஆதித்தமிழர் இல்லாது மீதித்தமிழர் விடுதலை வெல்லாது எனும் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாட்டுக்கேற்ப பல்வேறு தமிழ்க்குடிகளை ஒன்றுதிரட்டி, சாதிவாரி கணக்கெடுப்பு & பஞ்சமி நில மீட்பு, தேவேந்திர குல வேளாளர் பட்டியலின வெளியேற்றம் போன்ற பல விடயங்களுக்குக் குரல்கொடுக்கத் தொடர்முன்னெடுப்புகள் செயலாக்கம் பெற்றுள்ளன. தென் தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவப்படுகொலையை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்ததோடு ஆணவப் படுகொலைக்கான தனிச்சட்டம் இயற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டது. சமூகம் மற்றும் பொருளாதார அடிப்படையில் வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர் போராட்டங்களில் முன்னணியில் நின்றதோடு, அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்த பாசிச திமுகவின் அரசபயங்கரவாதத்துக்குக் கடும் கண்டனம் விடுக்கப்பட்டது.

தமிழர் மெய்யியல் மற்றும் வழிபாடு:

தமிழில் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு, வள்ளலார் பெருவெளி மீட்பு, அய்யாவழி உருவாக்கிய வைகுண்டரை அவமதித்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்துக்குக் கண்டனம், முல்லை நில இறைவன் மாயோன் பெருவிழா போன பல நிகழ்வுகள் மெய்யியல் சார்ந்து நடத்தப்பட்டுள்ளன. மேலும் இசுலாமிய மற்றும் கிறித்தவ மார்க்கங்களில் பயணிக்கும் தமிழர்களின் தமிழ்த்தேசியம் சார்ந்த ஐயங்களைத் தீர்க்கும் உரையாடல் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. வக்ப் வாரியச் சட்டத்திருத்த எதிர்ப்புக்கான போராட்டம், பாசிச பாஜகவால் கொல்லப்பட்ட இறை பணியாளர் ஸ்டேன்சுவாமி அவர்களுக்கான நினைவேந்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக சாதி, மதம், வட்டாரத்தைத் தாண்டி தமிழர் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் மக்கள் திரள வேண்டி இந்நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு:

உழவர், மீனவர், நெசவாளர் வாழ்வுரிமைக்கான போராட்டங்களில் முதலாளாய் வந்து கூட நிற்பது நாம் தமிழர் கட்சி தான். பரந்தூர் உழவர் போராட்டம், அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு, தூய்மைப்பணியாளர் போராட்டம், சாம்சங் தொழிலாளர் பிரச்சனை ஆகியவற்றுக்கு உரக்கக் குரல் கொடுத்தது நாம் தமிழர் கட்சி. திமுக கொடுத்த தேர்தல்கால வாக்குறுதிகளை நான்கரை ஆண்டுகளாகியும் நிறைவேற்றாததால் தெருவில் இறங்கிப் போராடும் ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவளித்து உடனிற்பது நாம் தமிழர் கட்சியே. நிர்வாகத் திறனற்ற திமுகவின் விடியாத அரசின் மோசமான சட்ட ஒழுங்கு காரணமாக நிகழும் தொடர் கொள்ளை, கொலை, போதைப்பயன்பாடு, சமூக ஆர்வலர்கள் மீதான தாக்குதல், தம்பி அஜீத்குமார் உள்ளிட்ட பல விசாரணை மரணங்கள், காவல்நிலையக் கொலைகளை உடனுக்குடன் தட்டிக் கேட்பதும் நாம் தமிழர் கட்சி தான்.

தமிழ்த்தேசிய எழுச்சி:

பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த தமிழினம் எழுச்சியுற்று மீட்சி பெற தமிழர் அடையாளத்தை முன்னிறுத்துதலும், அதற்காக தமிழ்த்தேசிய ஆளுமைகளை விழாக்களைக் கொண்டாடுவதும் மிக மிக அவசியம் என்பதை அறிந்தே புலவர்
கலியபெருமாள், ஆனைமுத்து ஐயா, அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், ம.சி.இராசா உள்ளிட்ட பல தமிழ்ப்பேராளுமைகளுக்கான நினைவேந்தல்களை நடத்துவதோடு, ஒவ்வொரு கூட்டத்திலும் ஆரிய திராவிடப் புரட்டர்கள் மறைத்த தமிழின வரலாற்றைத் தக்க தரவுகளோடு விவரிக்கும் வரலாற்றுப் பாடவகுப்புகளாக நாம் தமிழர் கூட்டங்கள் இருக்கின்றன.

ஈழத்தாயகத்திலே கொத்துக்கொத்தாகக் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மூலம் தமிழின அழிப்புக்கு உறுதியான ஆதாரமான செம்மணி படுகொலையைத் தமிழகத்தில் நாம் தமிழரை விட்டால் யார் பேசுவார்? பல இலட்சக்கணக்கில் உயிர்விட்ட நம்மினச் சொந்தங்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் பெருங்கூட்டமாக தமிழர்களை ஒன்றிணைக்கும் மே தமிழ் இன எழுச்சி நாளை உணர்வெழுச்சியோடு கடைபிடிக்க தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி போல இன்னொரு அமைப்பு உண்டா? ஆரிய டெல்லி அரசு மராத்தியர்களின் கோட்டையாக அறிவித்த செஞ்சிக் கோட்டை எம் தமிழ் மண்ணன் கோனேரிக்கோன் கட்டியது என வரலாற்று ஆதாரங்களோடு கோட்டை மீட்புப் போராட்டத்தை முன்னெடுக்க இன்னொரு தலைவரால் தமிழகத்தில் முடியுமா?

தமிழகத்தினை பல ஆண்டுகள் நாசம் செய்த திமுக மற்றும் அதிமுக, அதிமுகவின் புறமுதுகில் ஏறித் தமிழகத்தில் கால்பதிக்க நினைக்கும் இந்துத்துவ பாஜக, பொதுவுடைமைத் தத்துவத்தைக் காற்றில் பறக்க விட்டு திராவிடப் பண்ணையாளர்களுக்கு எடுபிடிகளாக மாறிப்போன கம்யூனிஸ்டுகள் ஆகிய திராவிட தேசியக் கட்சிகளோடு, திரைக்கவர்ச்சியால் மயங்கிக் கிடக்கும் கொள்கையற்ற கூமுட்டைக் கூட்டத்தோடும் கருத்தியல் போர் புரிந்து மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டிக் களமாடுகிறது நாம் தமிழர் கட்சி.

பெருவாரியான அச்சு காட்சி ஊடகங்களைக் காசால் அடித்துக் காலடியில் கட்டிவைத்திருக்கும் திமுக அரசு, சமூக ஊடகங்களையும் வாடகை வாய்களாலும், ஏவல் அடியாட்களாலும் நிரப்பி வைத்திருக்கிறது. ஊடகத் தீண்டாமை, பொய்ச்செய்திகள், போலிக் கருத்துத் திணிப்புகள் என இத்தனையும் தாண்டி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து தமிழ்நாட்டின் சமகாலச் சிக்கல்களை எடுத்துப் பேசி, தக்க தீர்வுகளையும் முன்வைக்கும் நாம் தமிழர் கட்சி, அரசியல் வானில் ஒரு விடிவெள்ளி. எள்ளலும் நக்கலுமாக நாம் தமிழர் கட்சியின் போராட்டங்களை அணுகுபவர்களுக்கும் சேர்த்துத் தான் நாம் தமிழர் போராடுகிறது.

குரலற்ற எளிய மக்களின் மனசாட்சியாக, அவர்தம் வாழ்க்கையில் ஒளியேற்றும் அதிகாரத்தை நிறுவுவதற்காக, தமிழகத்தில் எல்லாத் தளங்களிலும் தமிழர்களை ஒடுக்கிவைத்திருக்கும் பிறமொழியாளர்களைப் புறங்காண, நம் நாட்டில் நாம் தலைநிமிர்ந்து நடந்திட, தமிழும் தமிழர்களும் இனியேனும் வாழ, நமக்கான நல்லரசை நாமே அமைத்து ஆள, நமக்கு நாம் தமிழர் கட்சி தேவை. நாளை அப்படிப்பட்ட செம்மாந்ததொரு தமிழ்த்தேசிய அரசை நிறுவிட, இன்றைய போராட்டங்கள் ஒரு முன்னோட்டம். ஒவ்வொரு குறிப்பிட்டச் சிக்கலிலும் தமிழர்களின் வரலாற்று சமூகப் பொருளாதார பண்பாட்டு வாழ்வியல் அடிப்படையிலானதொரு தீர்வை வழங்க முற்படும் தமிழ்த்தேசியத்தின் பேரெழுச்சியை எடுத்துக் காட்டும் வெள்ளோட்டம். இவை ஏற்படுத்திய தாக்கம் என்னவென்று 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தெளிவாய்க் காட்டும்.

நாம் தமிழர்!

திருமதி. விமலினி செந்தில்குமார்,
கொள்கை பரப்புச் செயலாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா
.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles