ஆகத்து 2023
நீட் தேர்வு எனும் மனுதர்மக் கோட்பாட்டின் நீட்சி
நீட் (National Eligibility cum Entrance Test (Undergraduate) or NEET ) இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் தேர்வு. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளைப் படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். தமிழ்நாட்டில் நீட் தேர்வு 2017 ஆம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டதிலிருந்து அரியலூர் அனிதா தொடங்கி இன்று சென்னையைச் சார்ந்த ஜெகதீஸ்வரன் மற்றும் அவனது தந்தை செல்வசேகரையும் சேர்த்து இருபதுக்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கி இருக்கிறது. தரமான மருத்துவர்களை உருவாக்குகிறோம் என்று காரணம் சொல்லி, தமிழ்நாட்டின் சமூக நீதிசார் கல்வி வாய்ப்புகளைக் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள் டெல்லியில் வசிக்கும் ஒன்றிய அரசினர். நீட்டை தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக எதிர்க்கக் காரணம் என்ன? நீட் எப்படி தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பைச் சிதைக்கிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நீட் தேர்வின் வரலாறு:
2009 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியா முழுவதும் 412 மருத்துவக் கல்லூரிகளில் 35க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதாகக் கூறி சிம்ரன் ஜெயின் மற்றும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்குப் பல தேர்வுகள் நடத்துவதற்கு பதிலாக ஒரே தேர்வு நடத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஆணையிட்டது. அப்போது ஆண்ட காங்கிரஸ் அரசும் இந்தியாவின் பன்முகத்தன்மை, ஒவ்வொரு மாநிலங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வரும் பாடத்திட்டங்களின் வேறுபாடுகள், சமூக நீதிப் பார்வை என்று எதையும் கருத்தில் கொள்ளாமல் 2010ல் இந்திய மருத்துவ கவுன்சில் வழியாக நீட் தேர்வு நடத்துவது குறித்து அறிக்கை வெளியிட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலிருந்து நீட் தேர்வுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் அரசியல் இலாப, நட்ட கணக்குகளைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் அரசு நீட்டை முழுமையாகக் கைவிடாவிட்டாலும் அதைச் செயல்படுத்தும் காலத்தைச் சற்று தாமதப்படுத்தியது. பின்னர் 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி பாஜக அரசால் நீட் தேர்வு அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. தமிழகம் தொடர்ந்து எதிர்த்ததால் ஒரு ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டு 2017 முதல் தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.
நீட் தேர்வுக்கு பின் நிகழ்ந்த மாற்றங்கள்:
தமிழ்நாடு அரசு நியமித்த நீதி அரசர் ஏ கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, நீட் தேர்வுக்கு பின் நடந்த மாற்றங்களைப் பட்டியலிடுகிறது. 2013-14 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3267 மாணவர்கள் சேர்ந்தனர். இவர்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 3251 பேர்; சிபிஎஸ்சி மாணவர்கள் வெறுமனே 4 பேர்; பிறர் 12 பேர். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே நிலைதான் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் நீடித்தது. ஆனால் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு மருத்துவம் படிக்க சேர்ந்தவர்களில் சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. 2019-20 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பு சேர்ந்தோரின் எண்ணிக்கை நாலாயிரத்தை தாண்டியது. அதில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் 2762 பேர்; சிபிஎஸ்இ மாணவர்கள் 1368 பேர்; பிற கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் 72 பேர்.
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட 2017 -18 ஆம் ஆண்டில் அரசு பள்ளியில் படித்த எவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. 2019-20 ஆம் கல்வி ஆண்டில் 6 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. 2020-21 ஆம் கல்வியாண்டில் தமிழக அரசு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அமல்படுத்தியதால் 336 பேருக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தது. இவ்வாறு நீட் தேர்வுக்கு பிறகு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வுக்கு முன்னதாக 0.39 விழுக்காடாக இருந்த சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை நீட் தேர்வுக்கு பின் 26.83 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நீட்டுக்கு முன்னால் 12.14 சதவீத தமிழ் வழி மாணவர்கள் மருத்துவம் படித்த நிலையில் நீட் தேர்வுக்கு பின்னர் அது படிப்படியாகக் குறைந்து கடந்த கல்வியாண்டில் 1.7 சதவீத தமிழ் வழி பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சமூக நீதியை அழிக்கும் நீட் தேர்வு:
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 8 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள். அதில் 6 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பயின்றவர்கள். தமிழ்நாட்டில் நீட் தேர்வை எழுதும் மாணவர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர்; அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் இருந்து நீட் தேர்வை எழுதுபவர்கள் வெறும் 14 ஆயிரம் பேர் (ஒட்டுமொத்த அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கையில் வெறும் இரண்டு சதவீதம்) இதுவே எவ்வளவு பெரிய சமூக அநீதி!
பனிரெண்டாம் வகுப்பு வரை மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் சரி, நீங்கள் மருத்துவம் படிக்க இன்னொரு போட்டித் தேர்வை எழுத வேண்டும். அந்தத் தேர்வு மாணவர்கள் 12 ஆண்டுகள் படித்த கல்வித் திட்டத்தை ஒத்து இருக்காது. அந்தத் தேர்வை எதிர்கொள்ள தனியாக பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே எவ்வளவு பெரிய சமூக வன்முறை? பொருளாதாரத்தில் பின்தங்கிய மிகவும் அடித்தட்டு நிலையில் இருந்த மாணவர்களும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று விட்டால் மருத்துவராகி விடலாம் என்ற கனவை சிதைத்து இருக்கிறது இந்த நீட் தேர்வு.
நீட் தேர்வு எழுத வேண்டுமானால் அதற்குப் பயிற்சி வகுப்புக்கு செல்ல வேண்டும்; ஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டு காலம் பயில வேண்டும்; சில இலட்சங்களைச் செலவு செய்ய வேண்டும் என்ற சூழலை வறுமையில் உழலும் கிராமப்புற மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள இயலும்? எத்தனை அனிதாக்களின் மரணங்களைத்தான் இந்தச் சமூகம் தாங்கிக் கொள்ளும்? தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் நடத்தப்பட்ட தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் இல்லாமல், மத்திய அரசின் நிறுவனத்தால் நடத்தப்படும் நீட் தேர்வு தான் நிர்ணயம் செய்யும் என்றால் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவமே சிதைந்து விடுகிறதே!
கலக்கமூட்டும் கள நிலவரம்:
நீட் தேர்வின் மூலம் திறமையானவர்கள் தான் மருத்துவராக முடியும் என்ற வாதம் இன்று சிலரால் முன் வைக்கப்படலாம். நீட் தேர்வில் 20% மதிப்பெண் பெற்றாலே ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்; அதாவது 720 மதிப்பெண்களில் 180 மதிப்பெண்கள் பெற்றாலே, அந்த மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார். பின்னர் அந்த மாணவரின் பெற்றோரால் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயை தனியார் மருத்துவக் கல்லூரிக்குத் தர இயலுமென்றால் அடுத்த ஆறு ஆண்டுகளில் அவர் ஒரு சுமார் ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து பட்டம் பெற்ற மருத்துவராகி விடுவார். இதுதான் திறமைக்கு முக்கியத்துவம் தருவதா? இப்படி ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மருத்துவராகும் ஒருவர் என்ன நோக்கத்துடன் மக்களுக்கு மருத்துவம் செய்வார்? பொருளீட்டுவது மட்டுமே அவரின் முக்கிய நோக்கமாக மாறாதா? ஏன் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு தரமற்று காணப்பட்டதா? திறமையற்ற மருத்துவர்களை தமிழ்நாடு உருவாக்கியதா? இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு தமிழ்நாடு உயர்ந்திருந்ததே! தமிழ்நாட்டின் மருத்துவத்துறைக் குறியீடுகள் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறதே!
இந்த ஆண்டு நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார், பிரபஞ்சன் என்ற சென்னை மாணவர். இந்தியாவில் முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த நான்கு பேர்கள் இடம்பிடித்து இருக்கிறார்கள். இதனால் தமிழக மாணவர்களும் நீட் போட்டித் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்; அதை எழுதத் தயாராகி விட்டார்கள் என்ற வாதமும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள் அனைவரும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தவர்கள். மேலும் ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் நீட் தேர்வுக்காக நடத்தப்படும் தலைசிறந்த பயிற்சி மையங்களில் பயின்றவர்கள். கிராமத்தில் ஒரு ஏழையின் மகளுக்கும் மகனுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமா? கூலி வேலைக்குச் சென்று அன்றாட வாழ்வை கழிக்கும் பெற்றோரால் சில இலட்சங்களைச் செலவு செய்து எப்படி தங்கள் குழந்தைகளைப் பயிற்சி வகுப்புக்கு அனுப்ப இயலும்? நீட் தேர்வு மூலம் அவர்களின் மருத்துவக் கனவு எட்டாக்கனியாகி விடாதா? இன்று இராஜஸ்தானின் கோட்டா நகரத்தின் பொருளாதாரம் பல ஆயிரம் கோடிகளுக்கு மேல் உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அங்கு நடத்தப்படும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள்தானே காரணம்.
நீட் தேர்வானது பலதரப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை மருத்துவக் கல்வியில் குலைக்கிறது. சமூகத்தில் வசதியான பிரிவினருக்குச் சாதகமாக இருப்பதோடு பின் தங்கிய நிலையில் இருப்பவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கிறது. தமிழ் வழியில் படித்தோர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், அரசுப் பள்ளியில் படித்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோர் இந்தத் தேர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வானது கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் உருவாக்குகிறது. மேலும் தரமான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதை நீட் தேர்வு உறுதி செய்யவில்லை. மாறாக குறைவான திறன் உள்ள மாணவர்கள் கூட மருத்துவராகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
தேவை நிரந்தரத் தீர்வு:
இங்கு நடத்தப்படும் ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கு பின்னாலும் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரல் இருக்கலாம். இன்று தமிழ்நாட்டில் எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஐஐடியில் படிக்க முடியும் என்று எண்ணுகிறார்கள்? தமிழ்ச் சமூகத்தின் பொதுப் புத்தியில் நம் குழந்தைகளால் இந்தியாவின் மிக உயர்ந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் நுழையும் போட்டித் தேர்வில் (யிணிணிணி) வெல்ல முடியாது என்ற எண்ணம் பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் இன்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே பெரும்பான்மையாகப் படிக்கும் கல்விக்கூடங்களாக ஐஐடிகள் மாறி இருக்கின்றன. அதுபோலத்தான் நீட் தேர்வு இன்னும் 10 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தால், நமது பிள்ளைகளுக்கு இந்தத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர்கள் ஆக முடியாது என்ற எண்ணம் வந்துவிடும்; அதைப் பொதுச் சமூகமும் உள்வாங்கிக் கொள்ளும். அதுதான், சமூகத்தில் தங்கள் மேலாதிக்கத்தை எப்போதும் நிலைநிறுத்திட வேண்டும் என்று திட்டம் போட்டு அரசியல் செய்பவர்களின் நோக்கமும் கூட. “மரம் ஏறுவதுதான் தகுதி என்றால் மீன்களால் ஒருபோதும் வெல்ல முடியாது” என்பார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நமது மாணவர்களும் இன்று அந்த மீன்களின் சூழலில் தான் இருக்கிறார்கள். கல்வி மாநில அரசுப்பட்டியலுக்கு கொண்டுவரப்பட்டாலொழிய, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அதன்படி கொள்கை வகுத்து ஆட்சி செய்யும் எண்ணம் கொண்ட அரசு வந்து அதைச் செய்தாலொழிய, நீட் என்னும் காலன் தமிழ்நாட்டுக் குழந்தைகளின் உயிர் குடிக்கும் தொடர் அவலத்தைத் தடுக்க முடியாது.
திரு. அருண் தெலஸ்போர்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா