நவம்பர் 2023
பிரபாகரனியம் – சித்தாந்தப் பின்புலமும் செயலாக்க வடிவங்களும்
அடலருந் துப்பின் .. .. .. ..
குரவே தளவே குருந்தே முல்லையென்று இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவின் அல்லது நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
– மாங்குடி கிழார் (புறநானூறு 335)
மேற்குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடலின் தொடக்கம் சிதைந்திருந்தாலும், அது சொல்ல வரும் கருத்து இது தான். பூக்களில் சிறந்தவை குரவம், தளவு, குருந்து, முல்லை ஆகியவைதான் என்றும், உணவுப் பொருட்களில் சிறந்தவை வரகு, தினை, கொள்ளு, அவரை ஆகிய நான்கு மட்டுமே என்றும், குடிகளில் சிறந்த குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளே என்றும், இறந்த வீரர்களின் நடுகல்லைத் தவிர, வழிபடுவதற்கேற்ற கடவுள் வேறு எதுவும் இல்லை என்றும் இப்பாடலை எழுதிய மாங்குடி கிழார் கூறுகிறார்.
தன்னைக் கொடுத்தேனும் இனத்தைக் காக்கும் எண்ணம் கொண்ட விடுதலை வீரர்களே எங்கள் இறையாக இருக்க, தெய்வமென்று பிரிதொன்றை வணங்க வேண்டுமா என்கிறது, தமிழர் மறம் பாடும் புறம். செருகளத்தில் கொப்பளிக்கும் குருதியால் வீரச்சரித்திரத்தை எழுதும் தூவல்களாகப் போராளிகள் இருக்க, அவர்களைத் திறம்பட வழிநடத்தித் தக்க புகழையும் தன்னாட்சி உரிமையையும் பெற்றுத்தருவது அவர்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். அப்படி இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற சுதந்திர நாயகனாக, அன்னைத்தமிழின் ஆற்றல்மிகு காவலனாக இருந்தவர் தான், தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்கள். அவரின் அடியொற்றி, ஈழக்கனவை நனவாக்கிட தன்னார்வத்தோடும் தன்னிகரற்ற தியாகவுள்ளத்தோடும், மெழுகாய்த் தன்னை எரித்துக் கொண்டு விடுதலைப் போராட்டப் பாதைக்கு வெளிச்சமளித்த ஈகிகளே மாவீரர்கள் என்றால் அம்மாவீரர்களை உள்ளிருந்து இயக்கிய மாண்புமிகு தத்துவம் தான் பிரபாகரனியம்.



*சித்தாந்தப் பின்புலத்தின் அடித்தளமும், அவசியமும்*
பிரபாகரனியம் எனும் கோட்பாடு, அடிப்படையில் தமிழர்களின் வரலாற்றினை ஆழமாக உள்வாங்கி, தமிழர்க்கேயுரிய தேவைகளைப் புரிந்து கொண்டு, தமிழர்க்காகத் தமிழரால் உருவாக்கப்பட்ட ஒரு சித்தாந்தம். இதுவரை உலகை வழிநடத்திய புரட்சிக் கருத்தாக்கங்களின் நற்கூறுகளோடு தமிழுக்கேயுரிய தனிக்குணங்களோடு, தமிழினத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த தேவைகளை நிறைவேற்றும் நுட்பங்களின் தொகுப்பே பிரபாகரனியம். தனித்தமிழீழ சோசலிசக் குடியரசை அமைக்க விரும்பிய தலைவர், உலகப்பொதுமறையாம் வள்ளுவம், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை, தமிழ் மூவேந்தர்களின் ஆட்சிமுறையின் சிறப்புகள் எடுத்துக்காட்டாக சோழர்களின் கடலாதிக்கம், பாண்டியர்களின் தனித்தமிழ்ப்பற்று மற்றும் சேரர்களின் வணிகம் மூலம் கிட்டிய பொருளாதார தற்சார்பு ஆகியவற்றை உள்ளடக்கிய தத்துவம் ஆளும் ஒரு நாடாக, அதனை நிர்மாணிக்க விரும்பினார்.
உலக அங்கீகாரம் இல்லாவிடிலும் வடக்கு – கிழக்கு இலங்கையை உள்ளடக்கிய தமிழர் பரப்பில், அவரால் அமைக்கப்பட்ட அரசினது நிர்வாகத்தில், மேற்கூறிய கோட்பாடுகள் பெருமளவு செயலாக்கம் பெற்றன. அந்த நல்லரசின் கீழ் வாழ்ந்ததால் தான், தாயக மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் தங்களது பேராதரவைப் புலிகள் இயக்கத்துக்கு வழங்கியதோடு, முழு இறையாண்மை பெற்ற விடுதலை தேசமாக ஈழம் மாற, பல்லாயிரக்கணக்கானோர் நேரடிக் களத்தில் சமராடத் துணிந்து மாவீரர்களாகவும் மாறினார்கள். அவர்களைச் சக தமிழர்கள் மட்டுமின்றி சுற்றும் பூமிப்பந்தில் வாழும் மற்ற தேசிய இனத்தின் மக்களும் மதித்துப் போற்ற வித்திட்டது தான், பிரபாகரனியம்.
தனக்குப் பிடித்த கொள்கைகளுக்காக, தான் சார்ந்திருக்கும் இனத்துக்காக ஒருவன் சாகத் துணிவது வீரம் தான்; ஆனால் பெற்றோருக்கேயுரிய பேரச்சமான பிள்ளைகளின் இழப்பு எனும் பெருவலியையும் தாண்டி, இனத்துக்கென ஒரு துண்டு நிலம் கிடைத்திட ஈன்று புறந்தந்த தன் மகவை ஈகம் செய்யத் துணிவது தான் மாவீரம். சுதந்திரத்துக்கென்று அத்தகு பெரிய விலையைக் கொடுக்க ஈழத்தாயகத்தின் தமிழ்க்குல மாதர்களை உந்தித் தள்ளிய சித்தாந்தம் தான், பிரபாகரனியம். ஈழத்தமிழ்மக்கள் தேசியத் தலைவரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்த காலங்களில், தந்தையும் தாயும் சேர்ந்து தனது பிள்ளைகளில் ஒருவரை இயக்கத்துக்கெனத் தாமாக முன்வந்து சேர்த்துவிடும் காட்சி அன்றாடம் நடக்கும் ஒரு இயல்பான நிகழ்ச்சி. காரணம் தகைமைசால் தலைவர் தனது எண்ணம், சொல் மற்றும் செயலில் காட்டிய நற்பண்புகளும், அதனால் தலைவர் நடத்திய இயக்கத்தின் மீது இருந்த நன்னம்பிக்கையுமாய்ப் பரிணமித்த பிரபாகரனியம்.
உலகின் எந்தவொரு தேசிய இனத்துக்கும் இல்லாத மாட்சிமையாக தமிழர்க்கு அறம் எனும் விழுமியம் இருக்கிறது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் ஒன்றே அறம் என தமிழ்ப்பொதுமறை சொல்கிறது. அப்படி தனக்கும், தன்னைச் சார்ந்தோருக்கும் நெஞ்சகத்து நேர்மையோடு நின்று ஒழுகுதலே அறம். அதைத்தான் தலைவர் இறுதிவரை பற்றிக் கொண்டு நின்றார். எவ்வளவு பெரிய ஆசைகாட்டல்களுக்கும், ஆபத்துக்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், அவநம்பிக்கைகளுக்கும் கிஞ்சித்தும் இடங்கொடாமல், தனது இலக்கை நோக்கி நடந்தவர் நம் தலைவர். எந்தவொரு வல்லாதிக்கத்திடமும் விலைபோகாமல், தன்னை நம்பியவரையும் விலைபோகவிடாமல் தடுத்து நிறுத்தி, வெற்றி அல்லது வீரமரணம் என்ற தெளிவோடு பயணிக்கும் உள்ளாற்றலையே நாம் அறம் என்கிறோம். அந்த வெற்றிக்கான விலையும் தனது மக்களின் நல்வாழ்வுக்கு நிரந்தரமான ஊறு விளைவிக்குமெனில், அதை விட வீரமரணத்தைத் தழுவிக் கொள்வதே மேன்மைக்குரியது எனும் தன்னலமற்ற தியாகமே அறம்; அந்த அறமே பிரபாகரனியத்தின் அடித்தளம்.
முப்பத்து மூன்றாண்டுகள் நடந்த ஆயுதப்போராட்டத்தில் கூட அறத்தைக் கடைப்பிடித்ததும், அந்த அறத்தையே தமிழர் விடுதலைக்கான ஆயுதமாக்கியதும் தான் தலைவரது தொலைநோக்கு. அதைச் சாதித்தது தலைவரது சீரிய ஒழுக்கமும், அதைப் போராளிகளிடமும் கொண்டுவந்த தலைமைத்துவமும் தான். அரசியல் போரை விட உக்கிரமானதும், வகைதொகையற்ற இழப்புகளைக் கேட்பதுமான ஆயுதப்போரை இத்தனை ஆண்டுகள் நடத்தத் தேவையான ஆன்மபலத்தை அவ்வொழுக்கமே உறுதி செய்தது; தொடர் வெற்றிகளைப் பெற அத்தியாவசியமாகவும் இருந்தது; கொண்ட கொள்கை தவறாதிருக்க, இனவிடுதலைச் சமரில் இடையூறுகள் வராதிருக்க மது, மாது, புகை உள்ளிட்ட அத்தனையும் தடை செய்யப்பட்ட மக்கள் இராணுவமாக புலிகள் இயக்கம் இருந்தது. அந்த ஒழுக்கமே சிங்களத்தின் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சிதறிவிடாமல் ஈழத்தமிழ் மக்களை இறுகக் கட்டி வைத்திருந்த கயிறாக இருந்தது. அந்த ஒழுக்கம் தலைவரிடமிருந்து தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்ட சொத்தாக இருந்தது. அதுவே வயது வேறுபாடின்றி அவரை விரும்பிய தமிழ்மக்களின் அளவிட முடியாத அன்புக்குப் பாத்திரமாக்கியது.
தலைவரின் அறமும், தமிழர்களின் ஒழுக்கமும் இயல்பாகவே நெஞ்சுரம் மிக்க சமூகமாக ஈழத்தமிழ் மக்களை ஆக்கியிருந்தது. எவ்வித புற உதவிகளுமின்றி இரக்கமற்ற இலங்கையின் பொருளாதாரத் தடைகளுக்கு முகங்கொடுத்தவாறே தமது தன்னம்பிக்கையையும் தற்சார்பையும் அவர்கள் கைவிடாமல் இருந்தனர்; அதுவே அவர்களுக்கு ஒரு தனித்துவமான துணிவைக் கொடுத்தது; அது தொல்தமிழர் வரலாற்றினூடே நமக்கு மரபணுக்களில் கடத்தப்பட்டது. அதனால் தான் தொடர்ச்சியான போருக்கு நடுவிலும் தொய்வடையாத இயங்கியலை அத்துணிவே சாத்தியப்படுத்தியது.
திரிகோணமலைக்கான ஒரு சிறு சமரசம் செய்திருந்தால் உலக நாடுகள் சேர்ந்து வந்து தனி நாட்டினைத் தந்து, தங்கமும் வெள்ளியுமாகத் தலைவரின் காலடியில் கொட்டி இறைத்திருக்கும். ஆனால் அலங்காரமாக ஒரு அடிமை வாழ்வு தான் அப்போதும் தொடருமேயொழிய, உண்மையான அதிகாரத்தோடு நாம் ஆளமுடியாது என்பதைத் தலைவர் உணர்ந்திருந்தார். அதனால் தான் அறத்தின்வழிப்பட்ட முழுமையான விடுதலைப் பாதையைத் துணிவுடன் தேர்ந்தெடுத்தார். அவர் காலத்தில் ஈழம் கிடைக்காவிடிலும், அடுத்த தலைமுறை வென்றெடுக்கத் தேவையான உளத்தின் ஊக்கத்தை, உண்மையின் தாக்கத்தை நம்மிடையே ஊட்டி வளர்த்திருக்கிறார். பிரபாகரனியம் எனும் சித்தாந்தத்தின் அடிப்படையில், தொடர் செயலாற்ற முனையும் தமிழினம் உறுதியாக ஒருநாள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் என்பதை மட்டும் நாம் அறுதியிட்டுக் கூறவியலும்.
*நேற்றைக்கும் நாளைக்குமான செயலாக்க வடிவங்களின் ஒப்பீடு:*
தலைவருக்கு முன்பு முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்த அரசியல் போராட்டத்தின் இயலாமையும், இரண்டாம் தரக் குடிமக்களாகச் சட்டப்படி நடத்தியவாறே அரச பயங்கரவாதத்தைத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்ததும் தான், துவக்குகளை நம் கையில் திணித்தது. ஆயுதப் போரை நோக்கி நம்மைத் தள்ளிய சிங்களப் பேரினவாதத்தோடு மட்டுமின்றி பல்முனைக் களங்களில் போராட்டத்தைத் தலைவர் தொடர்ந்து நடத்த வேண்டி இருந்தது. எதிர்காலத்துக்கான தந்திரோபாய அரசியல் நடவடிக்கைகளை, அனைத்துலகம் வழங்க வேண்டிய தமிழர் இறையாண்மை எனும் அங்கீகாரத்துக்காக அவர் எடுத்துக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து தனது நியாயமான போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்புக்கும், இந்தியப் பெருங்கடல் பகுதியின் சமாதான சூழ்நிலைக்குமான அக்கறை அவரிடம் இருந்தது. சொல்லப்போனால் தமிழீழத்தின் தேச நலன் என்றுமே இந்திய ஒன்றியத்துக்கோ, இலங்கைக்கோ, மற்ற எந்த நாட்டுக்கோ எதிரானது அல்ல என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தன்னை இராணுவ பலத்தினால் சிதைத்தழிக்க நினைக்கும் இலங்கையின் நலன் குறித்தும் அவர் அடிக்கடிப் பேசி வந்திருக்கிறார். ஒன்றாக இருந்து இருவருமே துன்புறுவதைக் காட்டிலும், பிரிந்து சென்று நிம்மதியாக வாழ்வது நலம் பயக்கும் எனப் பலமுறை அவர் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அந்த அறிவுரையைக் கேட்காத பட்சத்தில், உயிரைத் துச்சமாக எண்ணிய மாவீரர் படையினைக் கொண்டு அவர்தம் ஈகம், துணிவு, அர்ப்பணிப்பு, மாண்பு ஆகியவற்றால் தக்க பாடங்களையும் அவர் படிப்பித்திருக்கிறார். அவர்களும்
“புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து
எனும் குறளுக்கேற்ப இந்த நூற்றாண்டின் தீரமிகு ஈக மறவர்களாக, தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், அச்சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையது என எண்ணும் பெருவீரர்களாக இருந்து, சிங்களத்தின் சூழ்ச்சிகளைப் பலமுறை முறியடித்திக்கிறார்கள். மற்றொரு பக்கம் தன்னை நம்பிய மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய கடமையும் அவருக்கு இருந்தது. அதனை ஈழத்தமிழ் மக்களினுடைய ஆற்றல், ஆதரவு மற்றும் கடமையுணர்ச்சி மூலம் நிறைவேற்றியும் காட்டினார்.
மேற்கூறிய தளங்களோடு, தன்னுடைய தமிழ்மக்களின் ஆகப்பெரும் அகச்சிக்கல்களான சாதி, சமயம், வட்டாரம், துரோகம், தான்மை, தன்னினப்பகை, தாழ்வு மனப்பான்மை மற்றும் பல இனவிடுதலைக்கான தடைகளைச் சுக்குநூறாக உடைத்து நொறுக்கிடவும் முயன்றார். அதற்கெனவே சட்டங்கள், முன்னெடுப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், தனித்துவமான அமைப்புகள் இவற்றோடு தனிமனித மற்றும் சமூக உளவியல் மாற்றங்களைக் கொணரவும் கடுமையாக உழைத்தார். அவற்றில் பெற்ற வெற்றிகளுக்காகவும், விழுப்புண்களுக்காகவும் வரலாற்றில் என்றுமே மக்களை முதன்மையாக வைத்திருந்த சமூகப்போராளியாக அவர் அறியப்படுவார்.
வெறும் போரியல் வெற்றிகளை மட்டுமே குவித்த நிபுணரல்ல நமது தலைவர்; அவர் முன்னிறுத்திய தத்துவமான பிரபாகரனியம், கடந்த காலப் பாடங்களைக் கொண்டு, நிகழ்காலத் திட்டங்களைத் திறமையுடன் செயல்படுத்தி, எதிர்காலத்துக்கான இலக்குகளை எட்ட ஓடும் பெரும்பயணம். தலைவர் வருங்காலத்தைப் பற்றி அடிக்கடி எண்ணிப் பார்க்கும் ஒரு சிந்தனாவாதியாக இருந்திருக்கிறார். அது 1989 முதல் 2008 வரையிலான அவரது மாவீரர் உரைகளில் தெள்ளத் தெளிவாகக் சொல்லப்பட்டிருக்கும். அதிகம் பேசாத தலைவர் நமக்கென நேற்றும், இன்றும், இனி வரும் காலமெங்கும் தேவைப்படும் அத்தனை கருத்துக்களையும் அந்த உரைகளில் செய்திகளாகத் தந்துவிட்டுப் போயிருக்கிறார். அவரது வாழ்வும், விடுதலைக்கான போராட்டமும் பறையறைந்து பின்னால் சொன்ன விடயங்களை, அந்த உரைகளில் அவர் மறைமுகமாக முற்கூறியிருக்கிறார் என்பதை வரிகளினூடே வாசிக்கையில் விளங்கும்.
*பிரபாகரனியத்தின் வினையாக்கக் கூறுகளும், அவை பற்றிய அவரது மேற்கோள்களும்*
*எதிர்காலச் சந்ததியின் மீதான எதிர்பார்ப்பு:*
‘எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்’
*தமிழர் ஒற்றுமை, கூட்டுப் பொறுப்புணர்வு மற்றும் விடாமுயற்சி*
‘விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்’
*மக்கள் சக்தியின் மீதான நம்பிக்கை*
‘ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது’
*பொருளாதார தற்சார்பு*
‘சுதந்திரம் வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம் பொருளாதார வாழ்வில் தன் சொந்தக் கால்களில் நிற்கவேண்டும். அத்தகைய இனத்தால் தான் சுகந்திரத்தை அனுபவிக்க இயலுமென்பது நியதியாகும். எமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிலையாக நிற்பதால், மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது’
*கலையிலக்கியப் பண்பாட்டுத் தள வெற்றிகளைக் குவிக்க வேண்டிய கட்டாயம்*
கலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.
எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்.
மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது
*தமிழகத் தமிழர்களும் உலகத்தமிழர்களும் இனி செய்ய வேண்டியதென்ன?*
உலகெங்கும் அரச பயங்கரவாதத்தின் வழியாக தேசிய இனங்களை ஒடுக்க நினைக்கும் வல்லாதிக்கங்களை எதிர்த்து எளிய மக்கள் போராடுவது புதிதல்ல; குர்திஷ் இன மக்களும், பாலத்தீனர்களும் ஏன் இந்திய ஒன்றியத்திலேயே சீக்கியர்களும் நிகழ்கால எடுத்துக்காட்டுகளாக நம் கண்முன்னே நிற்கின்றனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு செம்மாந்த தலைவர் நமக்குக் கிடைத்திருக்கிறார். அவரது கொள்கையுறுதியும், கோட்பாடும் தமிழர்க்கு மட்டுமின்றி போராடும் அனைத்து தேசிய இனங்களுக்கும் வழிகாட்டும் சிறப்பு வாய்ந்தது. ஒரு தனிமனிதனாகவும், தலைவராகவும் அவரால் முடிந்த அளவுக்கும் மேல் தமிழின மீட்சிக்குப் பங்களித்து விட்டார்; இனி அவர் தொட்டவற்றைப் புரிந்து கொண்டு விட்ட இடத்திலிருந்து தொடருவதே நமது காலக்கடமை; கட்டாயம்; கடைத்தேற வழி.
ஈழத்தாயகத்தின் மக்கள் அவரது நேரடி நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்தவர்களாதலால், அவரது எண்ணவோட்டத்தோடு ஒத்திசைவுடன் இயங்கி பல சாதனைகளை முன்மாதிரியாகச் செய்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே உலகெங்கும் வாழும் தமிழர்களும் இனவிடுதலைக்கான தங்கள் கடமையை ஆற்ற உறுதியேற்க வேண்டும், குறிப்பாக தமிழகத் தமிழர்கள். ஈழ விடுதலைக்கான பெருந்தடையாக நம்முன், இந்தியத்தின் இலங்கை சார்ந்த வெளியுறவுக் கொள்கை நிற்கிறது. அதன் பாரதூரமான விளைவுகளினால் நாம் குரூரமான இனவழிப்புக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தியத்தின் ஒத்துழைப்பு அல்ல; ஒப்புதல் மட்டுமாவது தனித்தமிழீழத்தை வென்றெடுக்க நமக்குத் தேவைப்படுகிறது. அதைச் சாத்தியப்படுத்த வேண்டியது தமிழகத் தமிழர்களின் தலையாயக் கடமை என்பதை விட, அங்கிருந்துதான் 2009க்குப் பிறகான இனமீட்சி அரசியலே தொடங்குகிறது.
தமிழ்த்தேசியத்தைத் தேர்தல் அரசியலில் நம்பகமான ஒரு தத்துவமாக நிறுவி, கொள்கைச் சமரசமின்றி முயன்று மூன்றாமிடத்தைப் பெற்று, முதலிடத்தை நோக்கி முனைப்போடு முன்னேறும் இயக்கமாகத் தமிழகத்தில் வளர்ந்திருக்கும் நாம் தமிழர் கட்சி அதனைச் செய்து முடிக்க உறுதியேற்றிருக்கிறது. அவர்களின் தோளோடு தோள்நின்று தமிழ்த்தேசியத்தை ஆளும் இடத்துக்கு நகர்த்த, ஒட்டுமொத்த தமிழர்களும் சேர்ந்துதவ வேண்டும். நம்மைப் போலவே இந்திய ஒன்றியத்தில் இருக்கும் மற்ற தேசிய இனங்களும் நம் விடுதலைப் போராட்டத்தில் இருக்கும் நியாயத்தை, அதற்கு இதுவரை நாம் கொடுத்த விலையை, நம் மீது திணிக்கப்பட்ட இழப்புகளை, இன்றுவரை இட்டுக்கட்டப்படும் இழிவுகளை பக்க சார்பின்றி உணர வேண்டும். அதனை அதிகாரபலத்தோடு வந்து நாம் ஊருக்குரைக்கும்போது, உள்ளபடியே அது ஏற்படுத்தும் தாக்கம் வேறுவிதமாகவும், நம் முறையீடுகளுக்குத் தரப்படும் முக்கியத்துவமும் இதுவரை இல்லாத அளவும் இருக்கும்.
அரசியல் தளத்தில் மட்டுமின்றி அறிவுத்தளத்திலும் ஆகச்சிறந்த பங்களிப்புகளை அதிகப்படியான அளவில் நல்க வேண்டியிருக்கிறது. ஆங்கிலத்திலும், இன்ன பிற மொழிகளிலும் திருத்தமான, தீவிரமான, தகவல்கள் அடிப்படையிலான, தத்துவ விசாரத்துடனான ஆக்கங்கள் அவசியம். தலைவர், மாவீரர்கள், இதுவரை நடந்த இப்போது நாம் நடத்திக் கொண்டிருக்கிற அரசியல் போராட்டங்கள் ஆகியவை குறித்து, உலகத்தரத்திலான அதிசிறந்த படைப்புகள் கலையிலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் உருவாக வேண்டும். ஆங்கிலம், இந்திய மொழிகள், தமிழர் வாழும் எல்லா நாடுகளையும் உள்ளடக்க உலக மொழிகள் அனைத்திலும் நாம் உருவாக்கும் இந்த அறிவாயுதக் கருவிகள், நமக்காக இன்றும் நாளையும் நின்று சித்தாந்தச் சமர் செய்யும்.
காலநதியில் கரைந்து போகாத ஆயுள் கொண்ட அத்தகு அற்புதமான படைப்புகளை உருவாக்கி அளிக்கவல்ல ஆளுமைகளைக் கருவாக்கும் ஆற்றல், செந்தமிழ் இனத்துக்கு உண்டு. அவர்களைச் செதுக்கி வளர்த்து அவர்களின் தனித்திறன்களை மெருகேற்றி, படைப்புலகத்தின் மாணிக்கங்களாக, மகுடங்களாக நாம் வார்த்தெடுக்க வேண்டும். எழுத்து, பேச்சு, ஆடல், பாடல், ஓவியம், கேலிச்சித்திரம், நாடகம், திரைக்கலை உள்ளிட்ட இன்னும் பல துறைகளில் என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய வேண்டும். தத்தமது தனித்திறன்களை பிழைப்புக்காக மட்டுமின்றி, இனத்தின் விடுதலைக்காக முழுநேரமாக இல்லாவிட்டாலும் பகுதிநேரமாகவேனும் பயன்படுத்த வேண்டுமென தமிழ்த்தேசியர்களைத் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும். இதற்கென ஏற்கனவே உள்ள அல்லது புதிதாக உருவாக்கப்படும் தளங்களில் கண்டெடுக்கப்படும் முத்துக்களை வைரங்களாக மாற்ற வேண்டும். இதற்கான செயல்திட்டங்களையும் குறுகிய, மத்திம மற்றும் நீண்ட கால அளவில் நிறைவேற்றி ஆளுமை வளர்ப்பை பெரும் இயக்கமாக மாற்ற வேண்டும்.
தமிழ்த்தேசியம் சார்ந்து ஏற்கனவே உருவாக்கப்பட்ட படைப்புகளை முறையாக ஆவணப்படுத்தும் வேலையை போர்க்கால வேகத்தில் செய்யத் தொடங்கவும், அவற்றை அணுகுவதற்கும், சேமித்துப் பகிர்வதற்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அடிக்கடி கலந்துரையாடல்கள், கருத்தரங்கங்கள், வாசிப்பு முற்றங்கள் போன்ற கலை சார்ந்த நிகழ்ச்சிகளை நேரடியாகவும், மெய்நிகர் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ஒருங்கிணைக்க வேண்டும். இழப்பதற்கு ஏதுமில்லா இனத்துக்கு பெற்றுக் கொள்வதற்குத் தான் ஆயிரமாயிரம் இருக்கிறது. அறிவுப்புலத்திலும், வெகுசனக் களத்திலும் நாம் இவ்வாறு இயங்கும்போது, இக்கருத்தியலும் இதுவரை இல்லாத அளவு எழுச்சி பெறும். உலகம் என்பது வெறும் நிலம் மட்டுமன்று; அதில் வாழும் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் தாம். அதுபோல இனம் என்பது அதன் மக்களால் அறியப்படுகிறது; அங்கீகாரப்படுகிறது. எனவே ஒரு இனம் இவ்வுலகில் செலுத்தும் தாக்கம் என்பது அவ்வினத்தில் தலைசிறந்த ஆளுமைகளால் தான் என்பதை உணர்ந்து அத்தகு ஆளுமைகளை வளர்த்தெடுக்க, நாமே அப்படி ஒரு ஆளுமையாக மாற தலைவர் பிறந்த நாளிலும், மாவீரர் நாளிலும் உறுதியெடுப்போம்!
தமிழர்களின் தலைசிறந்த தலைவனாக, தலைமைத்துவத்துக்கு இலக்கணமாகத் திகழும் தலைவர் தமிழர்க்கு யாதுமானவராகவும், தமிழினத்தின் தேவைகள் அனைத்துக்கும் போதுமானவராகவும் இருக்கிறார். இப்புவியில் மனிதத்தை விரும்பும், மாற்றத்தை வேண்டும் ஒவ்வொருவருக்குமானவர் நம் தலைவர். ஐம்பூத ஆற்றல்களுள் ஒன்றான நெருப்புக்கு மட்டுமே தன்னைச் சேர்ந்தவற்றையும் தானாக மாற்றும் ஆற்றலுண்டு. அத்தகு தழல் போன்ற தலைவர் தந்த தத்துவம் தான் பிரபாகரனியம். அதனை கொழுகொம்பாகக் கொண்டு பற்றிப்படர்ந்து ஓங்கியுயரும் தமிழினம், சீரிய ஆளுமைகளின் மூலம் நடத்துகின்ற செவ்விலக்கியத்தை ஒத்த இனவிடுதலைப் போராட்டத்தின் மூலமாகவே, நம்மைச் சூழ்ந்திருக்கும் அடிமை இருள் விலகும். அதற்கு நம்மால் எப்படிப் பங்களிக்க முடியும் என விழித்திருக்கும் பொழுதுகளில் மட்டுமில்லாது விழிமூடி உறங்கும் கனவுகளிலும் சிந்தித்துச் செயலாற்ற, மறத்தால் மானத்தமிழினத்துக்குப் பெருமை சேர்த்த மாவீரர் மீது ஆணையிட்டுச் சூளுரைப்போம்!
தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.