சனவரி 2024
பிரிவு 370 நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு: தேசிய இனங்களின் உரிமைப்பறிப்புக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ அங்கீகாரம்
“பிரிட்டிஷ் ராஜ்” எனப்பட்ட பிரித்தானிய இந்தியப் பேரரசு, பிரிவினையின் மூலம் இந்திய ஒன்றியம் மற்றும் பாகிஸ்தான் எனும் இரு நாடுகளானது. சிறியதும் பெரியதுமான பல சிற்றரசுகள் இவ்வாறு இணைக்கப்பட்டபோது இறையாண்மையுள்ள தனி நாடாக காஷ்மீர் இருக்க விரும்பியது. ஆனால் பஷ்தூன் பழங்குடியினர் மூலம் காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க முயல, காஷ்மீர் அரசர் ஹரிசிங் இராணுவ உதவி கோரியபோது உருவான இணைப்பு ஒப்பந்தத்தில் அடிப்படையில், காஷ்மீர் இந்திய ஒன்றியத்துடன் சேர்ந்தது. இது தொடர்பில் 1947ல் ஏற்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போரில் ஐ.நா தலையிட்டபோது, பொது வாக்கெடுப்பு மூலம் காஷ்மீர் மக்களே தமது எதிர்காலத்தை முடிவுசெய்வார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்றுவரை அது நடத்தப்படவேயில்லை.
சட்டக்கூறு 370 மற்றும் 35அ பிரிவு – வரலாற்றுப் பின்னணி:
காஷ்மீரி மக்களின் தன்னாட்சி உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய ஒன்றியம் தந்த சிறப்பு உரிமைகள், அதிகாரங்கள், வாக்குறுதிகளை முன்னிட்டே காஷ்மீர் ஒரு மாநிலமாக ஒன்றியத்துடன் இணைந்தது. இதற்கெனவே சட்டக்கூறு 370 மற்றும் 35அ பிரிவுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அசாத்தியமான சூழலில் இணைவு முடிவு எடுக்கப்பட்டதால், பிற மாநிலங்களைப் போலல்லாமல் தனிப்பட்ட முறையில் காஷ்மீர் நிர்வகிக்கப்படும் என இந்தச் சட்டக்கூறுகள் உறுதிப்பாட்டை அம்மக்களுக்கு வழங்கின. இதற்கென காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் முடிவுகளை உள்ளடக்கிய குடியரசுத் தலைவர் ஆணையும் 1954ல் வெளியிடப்பட்டது. மேற்காண் கூறுகளின்படி இராணுவம், வெளியுறவு, தகவல்தொடர்பு ஆகிய துறைகள் தவிர பிற துறைகளில் சட்டமியற்றுதல், நிலம் மற்றும் சொத்துக்கள் வாங்கும் உரிமை, அரசுப்பணிகளில் இடவொதுக்கீடு, உதவித்தொகை, அரசுத்திட்டப்பலன்கள் உள்ளிட்டவற்றில் காஷ்மீரிகளுக்கான முற்றுரிமை ஆகியன நடைமுறையில் இருந்தன.
ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 :
ஆகத்து 5, 2019 அன்று காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியிருந்தபோது, ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்ட முன்வரைவு மாநிலங்களவையிலும், பின்பு மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. இதன் மூலம் பிரிவு 370 நீக்கம், சிறப்புரிமை அளிக்கும் பிரிவு 35ஏ நீக்கம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றம், ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், சட்டமன்றம் இல்லாத லே – லடாக் யூனியன் பிரதேசமாகவும் மறுசீரமைத்தல் ஆகியன நிகழ்ந்தன. சூலை மாத இறுதியில் இருந்தே காஷ்மீரில் படைத்துருப்புகள் குவிப்பு, தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிப்பு, முக்கிய தலைவர்களின் வீட்டுச்சிறை போன்ற கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினூடே இந்தச் சட்டம், அதிக விவாதங்களின்றி அவசரகதியில் அம்மக்களிடம் திணிக்கப்பட்டது என்பதே உண்மை. இன்று வரையிலுமே அதீத காவலுக்கும், கண்காணிப்புக்குள்ளான பகுதியாக காஷ்மீர் இருக்கிறது.
தேசிய இனங்களின் கவலைகளை அதிகப்படுத்திய தீர்ப்பு:
பிரிவு 370 நீக்கத்தை எதிர்த்துப் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. அவற்றுக்கான தீர்ப்பு கடந்த டிசம்பர் 11, 2023 அன்று வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்புரிமை வழங்கும் பிரிவு 370ஐ ஒன்றிய அரசு நீக்கிய அரசியல் சாசன உத்தரவு செல்லும் என்றும், மறுசீரமைக்கப்பட்ட காஷ்மீரின் சட்டமன்றத்துக்கு 30 செப்டம்பர் 2024ம் ஆண்டுக்குள் தேர்தல் நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக ஒன்றிய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசங்கள் தங்களை பெருமளவில் தன்னாட்சி உரிமை கொண்ட மாநிலங்களாக மாற்றக் கோரி வரும் நிலையில், தனித்த அதிகாரங்கள் கொண்ட ஒரு மாநிலத்தை, அதுவும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றம் செயல்படாத நிலையில் புழக்கடை வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சியின் மூலம் அம்மாநிலத்தைத் துண்டாடுவது, அந்தத் தேசிய இன மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி; உலகின் பெரிய மக்களாட்சி நடக்கும் (?!) நாட்டுக்கு நிகழ்ந்த அவமானம்.
மக்களின் முடிவே இறுதியானது என்ற ஜனநாயகக் கோட்பாட்டுக்கு எதிராக, ஒன்றியப் பாராளுமன்றத்தில் அசுரப்பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் எந்த மாநிலத்திலும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, அரசு நிர்வாகச் செயலின்மை, பாதுகாப்பு ஏற்பாடு என ஏதோவொரு காரணத்தைச் சொல்லி, ஒன்றிய அரசின் முகவர்களாக இயங்கும் ஆளுநர்கள் மூலம், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவந்து ஒன்றியத் தலைமையின் விருப்பத்துக்கேற்றவாறு மாநிலங்களைப் பிரித்தாண்டுகொள்ள முடியும் என்றால், இன்று காஷ்மீர் பிளக்கப்பட்டது போல, பாண்டிய நாடு பல்லவ நாடு என்றோ, கொங்கு நாடு தனி நாடு என்றோ, வட தமிழகம் தென்தமிழகம் என்றோ தமிழ்நாட்டை வெட்டிக் கூறு போடமாட்டார்கள் என்பதை நம்பமுடியுமா? மொழிவழி மாநிலங்கள் பிரிப்பை வலதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்த்த காரணமே அவர்கள் அதிகாரப்பகிர்வை என்றுமே விரும்பாதவர்கள் என்பதால் தான். அரசியலமைப்பின்படி காஷ்மீர் மட்டுமின்றி பகுதி 11 பிரிவு 371 இன் மூலம் தங்களது சமூகப் பொருளாதார பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்க வேண்டி, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் நலன் சார்ந்து பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சிறப்புரிமைகள் பெற்றிருக்கின்றன. பல தரப்புகளில் இருந்து வந்த எதிர்ப்புகள், அடக்குமுறைகள், அரசபயங்கரவாதத்தைத் தாண்டி தங்களது தன்னாட்சி உரிமைக்காகப் பல பத்தாண்டுகளாய்ப் போராடிய காஷ்மீரிகளுக்கே இந்த நிலை என்றால், இந்திய ஒன்றியம் மற்ற தேசிய இனங்களும் அடிமைத்தனத்தை அமைப்புரீதியாகவே ஏற்றுக்கொள்ள விடுக்கும் எச்சரிக்கை கலந்த அறைகூவல் எனும் அபாயமான சமிக்கை தான் இந்த நடவடிக்கை என்று உள்வாங்கவேண்டியுள்ளது.
படிப்படியாகத் தகர்க்கப்பட்ட கூட்டாட்சித் தத்துவம்:
பிரிவினையின் கசப்பான நினைவுகள் காரணமாக, அவசரகால நடவடிக்கைகளுக்காகவே மாநிலங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வண்ணம் ஒற்றையாட்சியின் ஒருசில கூறுகளோடும், மற்றபடி சாதாரண காலங்களில் மாநிலங்களை அரவணைக்கும்படியாக அதிகமான கூட்டாட்சியின் கூறுகளோடும் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது. ஆனால் அதனைத் துருப்புசீட்டாகப் பயன்படுத்தி இந்திராகாந்தி காலத்தில் அதிகமாக நடக்கத் தொடங்கிய அதிகாரக் குவிப்பு, இன்று மோடியின் ஆட்சியில் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்கள் தந்த உறுப்பினர் எண்ணிக்கை வலுவைக் கொண்டு, முதலமைச்சராக இருந்தபோது தான் எதிர்த்த சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டுவந்து, மாநிலங்களின் பொருளாதார உரிமைகளைக் குறைத்து, வருவாய் ஆதாரங்களை முடக்கி, அவற்றைப் பெயரளவுக்கே அதிகாரங்கள் கொண்ட அலங்கார அமைப்புகளாக மாற்றிய பெருமை பாஜகவின் மோடியையே சாரும். இந்த வரிக்கட்டமைப்பு மாநிலங்களது பேரிடர் கால உடனடி நடவடிக்கைகளுக்குக் கூட ஒன்றியத்திடம் பிச்சை கேட்டு நிற்குமளவு முதுகெலும்பை உடைத்திருக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ஆடு மாடுகளைச் சந்தையில் வாங்குவது போல, பாஜக விலைபேசி பல மாநிலங்களில் ஆளும் உரிமையை அறமற்ற வழியில் அடித்துப் பிடுங்கியிருக்கிறது.
சட்டத்தின் ஆட்சியை சட்டப்பூர்வமாகவே இவ்வாறாக நீர்த்துப் போகச் செய்து எவ்வித நியாயமுமற்ற கொடுங்கோலாட்சியை நடத்திவரும் பாஜக, இந்திய ஒன்றியத்தில் வாழும் தேசிய இனங்களின் “நாம் இந்நாட்டில் உரிமையோடு இல்லாவிட்டாலும் மரியாதையோடேனும் நடத்தப்படுவோம்” என்ற நம்பிக்கையைக் கொடூரமாகக் கொலை செய்தது என்றால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதனைக் கேள்விகேட்காமல் குழிதோண்டிப் புதைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. எதேச்சதிகார நாணயத்தின் எடுப்பான இரு முகங்களாக மாறிப்போயிருக்கும் மோடி – அமித் ஷா இரட்டையரின் பத்தாண்டு கால ஆட்சி, அடையாளம் தெரியாத அளவு ஒன்றியத்தின் ஆன்மாவைச் சிதைத்திருக்கிறது. அகத்தில் இல்லாவிடினும், ஒப்புக்கெனப் புறத்தேனும், உலக நாடுகளின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்குமே என்ற அச்சத்தினாலேனும் நியாயவான் முகமூடி அணிந்து அலைந்துகொண்டிருந்த நிலையில், “அதற்கெல்லாம் அவசியமேயில்லை” என தேசிய இனங்களை ஒடுக்கி ஒறுக்கும் அரக்கனாக வெளிப்படையாகவே கோரப்பற்கள் தெரியச் சிரித்து, பாஜக ஆட்சியில் ஒளிர்கிறது இந்திய ஒன்றியம்.
அழிவுமேகங்கள் சூழ்ந்து கருத்திருக்கும் ஒன்றியத்தின் அரசியல் எதிர்காலம்:
நூற்றாண்டு விழாவை 2025 இல் எதிர்கொள்ளவிருக்கும் ஆர். எஸ். எஸ் இயக்கத்தின் தீவிர இந்துத்துவச் சித்தாந்தப் பின்புலத்தோடு, அதன் அரசியல் பிரிவாக இயங்கிக் கொண்டிருக்கும் பாஜக தனது மூன்று முக்கிய தத்துவார்த்த இலக்குகளில் ஒன்றாக, பிரிவு 370 நீக்கத்தை வைத்திருந்தது. அடிப்படையில் பெரும்பான்மைவாத இந்துதேசியம் பேசும் கட்சியான பாஜகவுக்கு, ஒன்றியத்தில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலமான காஷ்மீர் தனியுரிமைகளோடு இருப்பது எவ்வளவு பெரிய உறுத்தலாக இருந்திருக்கும் என்பது, இன்றுவரை காஷ்மீரின் மீதான இறுக்கமான பிடியைத் தளர்த்தாததில் இருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது. இன்னொரு இலக்கான இராமர் கோவில் திறப்பும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரிசாக மக்களுக்கு வழங்கப்படவிருக்கிற நிலையில், ஏற்கனவே மூன்று குற்றவியல் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவந்து, பொது உரிமையியல் சட்டத்தின் கூறுகளை மறைமுகமாக உள்ளடக்கியது போலல்லாமல், நேரடியாகவே அந்த மூன்றாவது இலக்கையும் எட்டிச் செயல்படுத்திவிட்டால் “அகண்ட இந்து இராஜ்ஜியம்” எனும் அவர்களின் பெருங்கனவு சாத்தியப்பட்டு விடும்.
பிறகென்ன? தங்களுக்கு விருப்பமில்லாத தற்போதைய அரசியலமைப்பைக் கிழித்தெறிந்துத் தூரப்போட்டுவிட்டு, மனுதர்மத்தின் அடிப்படையில் மாற்றியெழுதி, மாநிலங்களையெல்லாம் ஒழித்துக்கட்டி நூறு ஜனபதங்களாக்குவதன் மூலம் மன்னர்களுக்கும் மேலே மதகுருக்கள் அதிகாரம் செலுத்தும் வேதகால சனாதனத்தின் ஆட்சியை மீளக் கட்டமைத்துவிடலாம் என்று எண்ணுகிறது பாஜகவை வழிநடத்தும் நாக்பூர் தலைமை. சனநாயக ஆற்றல்களுக்கான சிக்கல்கள் இப்பத்தாண்டுகளில் பல்கிப் பெருகியிருந்தாலும், இனிவரும் காலமும் அடுத்து வரவுள்ள தேர்தலும் அமிலச் சோதனைகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் என்பது மட்டுமின்றி, அவர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அச்சத்தையும் அதிகரிக்கும். புதிர் போடும் காலத்தின் விடைகளுக்காகக் காத்திருப்போம்! இருள் போக்கும் நம்பிக்கை ஒளிக்கீற்றுகளை எதிர்பார்த்திருப்போம்!
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.