டிசம்பர் 2022
மூன்றாம் தலைமுறை பணமுதலைக் குட்டிக்கு முடிசூட்டு விழா – மக்களாட்சிக்கு மூடுவிழா
இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்பில் உள்ள முகப்புரை, குடியரசு, நீதி, விடுதலை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்ற விழுமியங்களைப் பற்றிப் பேசுகிறது. அவற்றுள் நீதி எனும் கோட்பாடு 1917 இல் நடந்த ரசியப் புரட்சியின் தாக்கத்தினால் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நீதியின் வரையறை மற்றும் வகைகளைக் கூர்நோக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளதை அண்மை நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
எல்லாருக்கும் எல்லாமும் சமமாகவும், சமரசமின்றியும் வழங்கப்படுதலே நீதி என்ற வரையறை பொதுவில் சொல்லப்படுகிறது. இது சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றது. சமூக நீதி என்பது எல்லாரும் எவ்வித பாகுபாடின்றி சமுகத்தில் நடத்தப்படுவதையும், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களை முன்னேற்றுவதையும் குறிக்கின்றது. பொருளாதார நீதி என்பது யாருக்கும் வர்க்க அடிப்படையில், செல்வம், வருமானம் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றின் பொருட்டு சிறப்புரிமை வழங்காதிருத்தலையும் ஒட்டுமொத்த சமூகத்தின் உடைமையான வளங்களைச் சரிசமமாகப் பிரித்துக் கொடுப்பதையும், பொருளாதாரம் சார்ந்த இடைவெளியைக் குறைக்க ஆவன செய்தலையும் குறிக்கிறது. இவ்விருவகை நீதியையும் பகிர்ந்தளித்தலின் நீதி வரைமுறைக் கோட்பாடாக சட்டநூல்கள் விளம்புகின்றன.
அரசியல் நீதி என்பது குடிமக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் சமமான அரசியல் சார்ந்த உரிமைகள் வழங்குதல் அதாவது பொது அலுவலங்களுக்கான அணுகல், தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் வாய்ப்பு மற்றும் அரசு விவகாரங்களில் பங்கேற்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. நவீன அரசுகளின் நடைமுறைகள், இந்த நீதி வகைகளை உறுதிசெய்யும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும் என்பதால்தான், நாம் கைக்கொள்ள வேண்டிய முக்கியமான விழுமியமாக நீதி முகப்புரையில், அண்ளால் அம்பேத்கர் உள்ளிட்ட நம் முன்னோடிகளால் அழுத்தந்திருத்தமாகப் பதியப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் சமூக நீதி என பசப்பும் திராவிட அரசுகள் அதிலும் குறிப்பாக திமுக, சம்பிரதாயங்களின் பொருட்டு சமூகநீதியைக கைக்கொள்ள விரும்பவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
அண்மையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டது தமிழகத்தை ஆளும் குடும்பத்துக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சியைத் தந்திருக்கலாம். ஆனால் தமிழக மக்களுக்கு கலவையான பல எண்ணங்களைத் தந்திருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியலுக்கு வரமாட்டேன் என்றவர், அவசர அவசரமாக பரப்புரைகளில் ஈடுபட்டதும், 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்றதும், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அமைச்சராவதும் மன்னராட்சியைத் தான் நினைவுபடுத்துகிறது.
கலைஞரின் குடும்பமல்லாத ஒருவர்க்கு இப்படிப்பட்ட துரித வளர்ச்சி திமுகவில் சாத்தியமா? திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை என்ற கலைஞரின் ஆட்சிக் காலத்தில் தான் குடும்ப உறவுகளின் ஆதிக்கம் எல்லைதாண்டிச் சென்றது. 10 வருடங்கள் ஆட்சியை இழந்ததற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, குடும்ப அரசியல். இது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களது அடியொற்றி அடுத்தடுத்த நிலைகளிலும் தொடர்வது மற்றுமொரு பெரிய சிக்கல.
இதனால் தகுதியற்றவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் கேள்வி கேட்பதற்கான தார்மீக உரிமை தலைமைக்கு இயல்பாகவே இல்லாமல் போய்விடுகிறது. கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி வரிசையை மாற்றுக்கருத்தின்றி ஏற்பவர்கள் யாரென்று பார்த்தால், தனக்குப்பின் தன் இடத்தில் தன் மகனை வைக்க விரும்புவோராக உள்ளனர்.
பேரரசர்களுக்குக் குறுநில மன்னர்கள் இருப்பது போன்ற இந்தப் போக்கு மக்களாட்சித் தத்துவத்தை எள்ளிநகையாடும் விதமாக இல்லையா? தலைமைப் பொறுப்புக்கு வருவதொன்பது, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தால் கிடைக்கும் தனியுரிமை என்றால் அது பிராமணியத்தைப் போற்றும் மனுதர்மத்தின் கூறாகாதா?
எல்லாரையும் சமமாக நடத்தவும், எல்லாருக்கும் சம வாய்ப்பு வழங்கவும் வேண்டிய அரசை அமைக்க வேண்டியவா, பிறப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவது சனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் செயல் என்பதோடு மக்களையும் ஏமாற்றும் வித்தையாகிவிடும்.
மேலும் வளக்கொள்ளையை அரசின் வருவாய் ஈட்டும் வழியாக மாற்றி, ஊழலையும் சாதியையும் நிறுவனமயப்படுத்தி வைத்திருக்கும் வரலாறு தான் திராவிட அரசுகளுடையது. இயற்கையை மாசுபடுத்தும் வளர்ச்சித் திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துக் கொள்ளும் அரசுகள், ஒரு போதும் பொருளாதார நீதியை வழங்கவியலாது. பெருமுதலாளிகளிடம் தரகுத் தொகைக்காக மான்டியிடும் அரசுகள், என்ன மாதிரியான பொருளாதாரக் கொள்கைகளை நம்மிடம் திணிக்கும் என்பதை நாம் அறியாதாரில்லை.
அரசியலமைப்புச் சட்டப்படி, விதிகளுக்குட்பட்டு பொது வேலைவாய்ப்பு மற்றும் தேர்தல்களின் மூலம் தலைமைப் பொறுப்புகளையடைய குடிமக்களுள் எவராலும் முடியும். ஆனால் முடிவெடுக்கும் உரிமை கொண்ட அதிகாரம் அனைவர்க்கும் பொதுவானது என்பதை திமுக நம்பவில்லை: அது ஒரு குறிப்பிட குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது என திமுக தனது செயல்பாடுகள் வழி நிறுவுமானால், தமிழ்நிலத்தில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை அளிக்க மறுக்குமானால், வரும் தேர்தல்களில் அதற்கான விலையைக் கொடுத்து திமுகவினர் உணர்ந்து கொள்வார்கள்.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாறை – வளைகுடா.