spot_img

வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையமும் வெற்றுச் சடங்காகும் தேர்தல்களும்

பிப்ரவரி 2023

வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையமும் வெற்றுச் சடங்காகும் தேர்தல்களும்

பிப்ரவரி 27ம் நாள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு. இத்தொகுதிக்கு காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. திருமகன் ஈ.வெ.ராவின் மறைவையொட்டி தேர்தல் வந்துள்ளதால், அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவனே வேட்பாளராகப் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு நாள் அறிவித்தது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. முன்பெல்லாம் இரு பெரும் திராவிடக் கட்சிகள் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் தான் பணப்பட்டுவாடாவைத் தீவிரமாகச் செய்வார்கள். ஆனால் இம்முறை கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்பே ஒவ்வொன்றாக அரங்கேற்றப்பட்ட அசிங்கங்கள், சனநாயகத்தைக் கேள்விக்குறியாக அல்ல கேலிக்கூத்தாகவே ஆக்கிவிட்டன. முதலில் அதிமுகவினைச் சேர்ந்த சில அமைச்சர்கள்தான் பணம் வழங்கத் தொடங்கினர். அதன்பின் ஆளுங்கட்சியான திமுகவினர் கற்பனைக்கும் எட்டாத அளவு காசை வாரியிறைக்கலாயினர்.

வேட்டி, சேலை, காமாட்சி விளக்கு, தங்க நாணயம், வெள்ளிக் குவளை, கொலுசு, குடம், குக்கர், ஹாட் பாக்ஸ், பரிசுக்கூப்பன்கள், அரிசிச்சிப்பம், மளிகைப் பொருட்கள், கறி, குடும்பவிழா அல்லது காதணி விழா என்ற பெயரில் அசைவ விருந்துகள், ஏற்காடு, மேட்டூர் அணை, கொடிவேரி அணை மற்றும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு இலவச சுற்றுலா என ஈரோடு கிழக்கு மக்களை எப்படி மகிழ்விப்பது என்று இருக்கும் நூற்றியிருபது பணிமனைகளிலும்  இரு கட்சிக்காரர்களால் பலப்பல உத்திகள் மாற்றி மாற்றி  கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

நடமாடும் மருத்துவமனை போன்று நடமாடும் திடீர் மருத்துவர்கள், பரோட்டா மாஸ்டர்கள் எனப்பலர் முளைக்கத் தொடங்கினர். கவர்ச்சி வாக்குறுதிகள், பரிசுகள், பணம் என்று இருந்த திராவிடக் கட்சிகளின் தேர்தல்கால ஏமாற்றுச் சுரண்டலரசியல்  வரலாற்றில் அடுத்த கட்டப் பாய்ச்சலாக மனிதப்பட்டிகள் எனும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் கருத்தாவாக இருந்து தண்ணீர் போலக் காசை இறைத்து வாக்குகளை வழிப்பறி செய்யத் திட்டமிட்டிருப்பவர், அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள். அவரது வழிகாட்டலில் திருட்டு திமுகவின் அத்தனை அடாவடிகளும் ஈரோடு கிழக்கில் தொடர்ந்து நடந்தவண்ணமுள்ளன.

அப்பட்டமான நடத்தை விதிமீறல்களான இவற்றைத் தடுக்கவும், குறைக்கவும் கண்டிக்கவும், தண்டிக்கவும் வேண்டிய தேர்தல் ஆணையம் குற்றவுணர்ச்சி கிஞ்சித்துமில்லாத செயலற்ற பார்வையாளனாக இருப்பது மிகவும் ஆதங்கத்தையும் ஆயாசத்தையும் ஆத்திரத்தையும் அடங்காக் கோபத்தையும் சாமானியர்களுக்கு அளிப்பது முற்றிலும் உண்மை. வழக்கமாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி இறக்கும் ஆள்பலம், அதிகார பலம், அமைப்பு பலம் ஆகியவற்றைத் தாண்டி சுமூகமான நிர்வாகத்துக்கு ஏதுவாக மக்கள் ஆளுங்கட்சியையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்தது தான் தமிழக வரலாறு. அப்படி தனக்கு சாதகமான சூழலிலும் கூட, இரண்டாண்டு கால நிர்வாகத் தோல்வி, குடும்ப உறுப்பினர்களது பல்துறைசார் முற்றுரிமை, சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஆகிய எதிர்மறை விளைவுகளை மறைக்க வேண்டி கட்டற்ற செலவு செய்து கடைச்சரக்காக வெற்றியை வாங்கலாம் என திமுக நினைக்கிறது. தனக்கு எதிரி பாஜக தான் என மணிக்கொருமுறை வாடகை வாய்களை வைத்துக் கூவும் திமுகவுக்குப் பரிவாக, ஒன்றிய ஆளுங்கட்சியாம் பாஜகவின் கைப்பாவையெனப் பல முறை நிறுவிய தேர்தல் ஆணையம் நடந்து கொண்டதும், பல்வேறு விதிமீறல் குறித்த ஆதாரங்களைக் காட்டிய பின்னும் கண்துடைப்பாகக் கூட நடவடிக்கைகள் எடுக்காததும், தேர்தலை நிறுத்தி வைக்காததும் பெரும் ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிப்பும், அதற்கு பாஜகவின் ஆதரவும் இறுதியாவதே பல்வேறு களேபரத்துக்குப் பின் நடந்தது. அதிமுகவின் சின்னம் குறித்த சிக்கல் உச்சநீதிமன்றம் வரை சென்று தற்காலிகமாகத் தீர்த்துவைக்கப்பட்டது. பாஜகவுடன் கூட்டணி தொடரும்போதும் அவர்களோடு சேர்ந்து தேர்தல் பரப்புரையை மிகக்குறைவாகத்தான் அதிமுக செய்தது. மேலும் மோடி பெயரையோ, பாஜகவுடனான தங்கள் உறவு பற்றியோ ஒருமுறை கூட வாய்திறக்காது தான் அதிமுக மக்களைச் சந்தித்தது. மனிதப்பட்டிகளில் வாக்காளரை அடைக்கும் கேவலத்தை திமுக அதிகமாகவும், அதிமுக ஒப்பீட்டளவில் குறைவாகவும் செய்தது. உட்கட்சிப் பிரச்சனைகளில் சிக்குண்டு அலைப்புறும் அதிமுகவிற்கு தனிப்பெரும் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி வருவதை பாஜக விரும்பாது. ஊழல் வழக்குகளின் பிடியில் இருவருமே மாட்டிக் கொண்டிருந்தாலும், காசைக் காட்டி அதிமுகவினரின் பெரும்பான்மையான ஆதரவை எடப்பாடியார் தக்கவைத்திருக்கிறார். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலோ அல்லது குறைந்த வாக்கு வேறுபாட்டில் அதிமுக தோற்றாலோ எடப்பாடியாரின் செல்வாக்கு நிலைபெறும். எனில் அவர் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இழுக்கும் இழுப்புக்கு வளையாமல் தொகுதிப் பங்கீட்டில் முரண்டு பிடிக்கலாம் அல்லது கூட்டணியையே முறித்துக் கொள்ளலாம். எனவே அதிமுகவின் மீதேறிப் பயணப்பட நினைக்கும் பாஜக, அதிமுக மோசமாகத் தோற்க வேண்டுமென்பதால் தேர்தல் ஆணையத்தின் மெத்தனப் போக்கினால் திமுகவிற்கு உதவுகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

தேர்தல் ஆணையம் உண்மையிலேயே நேர்மையாகவும் நடுநிலையாகவும் இத்தேர்தலை சட்ட வழிமுறைகளின்படி நடத்த நினைத்திருந்தால், இந்நேரத்துக்கு இரு தரப்பு மீதும் கடும் நடவடிக்கை பாய்ந்திருக்க வேண்டும். இயல்பான வாகன சோதனைகள், ரொக்கப்பணம் எடுத்துச் செல்லக் கெடுபிடிகள், வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்களை அடிக்கடி ஆராயும் பறக்கும்படை ஆய்வுகள் ஆகியவற்றை அதிகமாக அல்ல, ஒப்புக்குக் கூட நடத்தவில்லை ஆணையம். ஒட்டுமொத்த அமைச்சரவையும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் போட்டிபோட்டுக் கொண்டு கட்டுப்பாடுகள் ஏதுமின்றிச் செலவு செய்ததை ஊரே பார்க்கிறது. ஒரு வாக்குக்குப் பதினைந்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் வரை செலவிடப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருமங்கலம் ஆர்.கே. நகர் தேர்தல் பார்முலா வரிசையில் இது ஈரோடு கிழக்கு தேர்தல் பார்முலா போல.  ஆனால் அத்தனையும் கண்டும் காணாதது போல இருந்ததை விடவும் இது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான ஆதாரங்களை நம்ப முடியாது எனத் தெரிவித்து அதிர்ச்சி அளித்தது ஆணையம்.

நாம் தமிழர், அதிமுக, தேமுதிக மற்றும் சுயேட்சைகள் ஆகியோர் தொடர்ச்சியாகப் புகார்களை அளித்தும் தேர்தல் பார்வையாளராக இருந்த ஈரோடு மாநகராட்சி ஆணையர் திமுக மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, இந்தத் தன்னாட்சி அமைப்பின் மீதான நம்பிக்கையை, பாரபட்சமற்ற தன்மையை, உறுதிப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்திய ஒன்றிய அரசியல் அமைப்பின் கூறு 324 தேர்தல் ஆணையத்தின் அமைப்பு, பணிகள், கடமைகள் ஆகியவற்றைத் தெளிவாக வரையறுக்கிறது. பல கட்சி ஆட்சிமுறை அமலில் இருக்கும் ஒன்றியத்தில், அரசியல் கட்சிகளினை அங்கீகரித்து, தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, விதிமுறைகளைத் திட்டமிட்டு, திறமையாகக் கண்காணித்து எவ்வித பக்கசார்பும் இன்றி, நீதிவழுவா வகையில் தேர்தலை நடத்தி, நேர்மையான முறையில் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பைக் காப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமும், கடமையும், பொறுப்பும். அதைச் சரிவர நடத்துவதில் செய்து கொள்ளப்படும் சமரசங்கள் ஒரு சாதாரண குடிமகனுக்கு இந்த நாடு எனும் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையைக் குறைத்து, சட்டத்தின் ஆட்சியைக் குலைத்து அவ்விடத்தில் சில கும்பல்களின் ஆட்சியை நிறுவும். அது என்றுமே ஒரு நாட்டுக்கு, அதுவும் இந்திய ஒன்றியம் போன்ற உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு எண்ணிப்பார்க்க இயலாத அளவு சேதாரத்தையும், அவமானத்தையும் உறுதியாக வழங்கும்.

1973 கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பின்படி  இந்திய அரசியலமைப்பின் சில கருத்தாக்கங்கள், திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அடிப்படை அமைப்பு அடித்தளங்கள் எனப்படுகின்றன. ஆட்சித்துறையினது பாராளுமன்றப் பெரும்பான்மையின் மூலம் அவை ஒருபோதும் சட்டத்திருத்தங்கள்வழி உடைத்தெறியப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அன்று முற்றுரிமை கொண்டு சர்வாதிகாரியாக மாறிப்போன இந்திரா காந்தி அம்மையாரைக் கட்டுப்படுத்திட,  இத்தீர்ப்பே காரணமாக இருந்தது. மதச்சார்பின்மை, சமத்துவம் போன்று  சுதந்திரமான மற்றும் சமவாய்ப்புள்ள தேர்தல்களும் அடிப்படை அமைப்பு அடித்தளங்களுள் ஒன்று. நமது முகப்புரையில் கூறப்பட்டுள்ளவாறு இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி மற்றும் குடியரசுத் தத்துவத்தைக் கொண்ட ஒரு நாடாக நாம் இருக்க வேண்டுமானால், தேர்தல்கள் பாரபட்சமற்ற வகையில், நியாயமான முறையில் நடக்க வேண்டியது தான் குறைந்தபட்சத் தேவை. அதை நிறைவேற்றாமல் போகும்போது இவ்வமைப்பு தன் இருப்பையே தக்கவைக்க முடியாமல் சிதைவுறும் என்பதே அரசியல்நீதியற்றுச் சீர்குலைந்த நாடுகள் நமக்குச் சொல்லும் பாடம்.

திருமதி. விமலினி செந்தில்குமார்,

செய்தித் தொடர்பாளர்,

செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles