ஆகத்து 2023
எழுத்தோலை – அழிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள்
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் அறிவுச் சுரங்கமான மரபுச் செல்வங்களை, பண்பாட்டுச் சுவடுகளை அழிக்கும் கொடுஞ்செயல், உலக வரலாற்றின் பக்கங்களில் கோர வடுக்களாகப் பதிந்துகிடக்கின்றன.
பல்வேறு காலகட்டங்களில் தமிழரின் அறிவுப் பெட்டகங்களான ஓலைச்சுவடிகள் மாற்றினத்தவர்களால் அழிக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பது வரலாற்று உண்மை.
யாழ் பொது நூலகம், தென் ஆசியாவின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாக, தமிழர்களின் வரலாற்றுத் தொன்மங்களின் சாட்சியாக விளங்கிய பல அரிய நூல்களைத் தன்னகத்தே வைத்திருந்த, மிகவும் புகழ்பெற்றதாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. மேலும் தொல்பொருள், வரலாற்று ஆராய்ச்சிகளுக்கான தரமிகு தரவுகளின் கருவூலமாவும் விளங்கியது எனலாம்.
இந்நூலகம், உலகத் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாகக் கருதப்பட்டது. உலகில் வேறு எங்கும் கிடைக்கமுடியாத ஆவணங்கள் மற்றும் அரிதான நூல்கள் பல, யாழ் பொது நூலகத்தில் சேகரம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. தமிழரின் மேன்மையை உயர்த்தி, பெரும் ஆலமரமாகப் பல அறிஞர்களை உருவாக்கிய பெருமையும் இந்நூலகத்தையே சாரும்.

உலகத் தமிழ் மக்களின் வரலாற்றுச் சொத்தான இந்நூலகம், தமிழரின் அறிவுப்பசிக்கு உணவாக அமைந்த நூலகம், தொன்மையான ஒரு இலட்சம் ஓலைச்சுவடிகள், பல இலட்சம் அரிய நூல்களை கொண்ட நமது யாழ் நூலகம் சிங்கள இனவாத அரசால் ஏவிவிடப்பட்ட காடையர்களால் 1981 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் நாள் நம் கண் முன்னே எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் முக்கியமான ஒரு மிகப்பெரும் வன்முறையாக யாழ் நூலக எரிப்பு கருதப்படுகிறது. யாழ் நூலக எரிப்பு பரவலாக அறியப்பட்டாலும், எழும்பூர் ஆவணக் காப்பகம் எரிக்கப்பட்டது பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்; திட்டமிட்டு வேண்டுமென்றே பலருக்கும் தெரியாவண்ணம் மறைக்கப்பட்ட நிகழ்வு அது.
கருணாநிதி தன்னைத் தெலுங்கராக அடையாளங் கண்டுகொண்ட பின்பு, தமிழர்களின் ஆவணங்கள் பலவற்றையும் மறைக்கவும் ஒழிக்கவும் தொடங்கிய காலகட்டத்தில் அவரிடம் சிக்கியது தான் எழும்பூர் ஆவணக் காப்பகம். சென்னை என்று பெயர் வைப்பதற்காகச் சொன்ன சென்னா ரெட்டி கதை உண்மையல்ல என்று இந்த ஆவணக் காப்பகத்தில் இருந்த ஆவணங்கள் காட்டிக்கொடுத்திருக்கும். இது தெரிந்ததால் தான் கொளுத்தினாரா, இல்லை இன்னும் பல்வேறுபட்ட தகவல்களை அழிப்பதற்காகச் செய்தாரோ தெரியவில்லை. கருணாநிதி தனது வாழ்நாள் முழுவதும் தமிழையும் தமிழரை¬யும் வைத்துப் பிழைத்துக்கொண்டு தமிழர்களின் முதுகிலேயே குத்தியிருக்கிறார்.

இன்றைய ஜார்ஜ் கோட்டை போன்ற இடங்களை மதரேசன் (நாயகர் அல்லது கிராமணி) என்பவரிடமே வாங்கியிருப்பதற்கான ஆவணங்கள் இந்தக் காப்பகத்தில் இருந்துள்ளதைப் பார்த்ததாகச் சிலர் கூறியிருக்கிறார்கள்.
1996ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் பல நூற்றாண்டு தரவுகள் அடங்கிய எழும்பூர் ஆவணக் காப்பகத்தின் ஒரு பகுதி எரிக்கப்பட்டது. மிக முக்கிய வரலாற்று ஆவணங்கள் அதில் தீக்கிரையாயின. அதைப் பற்றிய எந்தச் செய்தியும் வெளிவராமல் பார்த்துக் கொண்டார்கள். இன்றும் எந்த வலைத்தளத்திலும் அந்தச் செய்தி இல்லை! தீவிபத்து தொடர்பான எந்தத் தரவுகளும் காவல் துறையிடமும், தீயணைப்புத் துறையிடமும் இல்லை. இதுவும் இனவழிப்பிற்கான சதி வேலையே.
இன்று கூகுள் போன்ற இணைய சேமிப்புத் தேடுபொறித் தளங்களில் தேடினால் கூட தரவுகள் கிடைக்காத அளவிற்கு, அழிப்பு, மறைப்பு வேலைகள் நடந்திருக்கின்றன என்பதனையும், இன்றளவும் நடந்து கொண்டிருப்பதனையும் இணைய உலவலில் உள்ளவர்கள் அறிவீர்கள்.
தஞ்சை சரசுவதி மகால், சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் காப்பகம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஓலைச்சுவடிகள் அடங்கிய நூலகங்களைச் சீரமைக்க, பாதுகாக்க, படியெடுக்க சரியான திட்டமின்றி, திராவிட அரசுகள் கண்டும் காணாமல் இருப்பதனால், அவை சரியான பாதுகாப்பின்றி அழிவுக்கு உள்ளாகி வருகின்றன. திட்டமிட்டே அவற்றை இயற்கை அழிவுக்குத் தள்ளுகிறார்கள்.
இயற்கையின் பெரும் கொடையான, தமிழர்களின் வாழ்வாதாரமான மலைகளையே வெட்டித் தரைமட்டமாக்கும் திராவிட ஆட்சியாளர்களுக்கு, வலிந்து தொட்டாலே ஒடிந்துவிடும் ஓலைச்சுவடிகள் எம்மாத்திரம்?! தமிழர்களாகிய நாமும் இந்த மரபுச் செல்வங்களின் அழிவைச் சகித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்பது பெரும் துயரம். கண் முன்னே இனத்தின் சாவையே சகித்துக் கொண்டிருந்தோமே! இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன?
நம்மை எதிரிகளாக, ஏளனத்தோடு பாவிக்கும் கேரளம், கருநாடகம் முதலான அண்டை மாநிலங்களில் நமது மரபுச் செல்வங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், கல்வெட்டு குறிப்புகள், அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், ஆவணங்கள், கலைச் சின்னங்களும் அடங்கும்.
நமது தமிழக ஆட்சியாளர்களே இவற்றைக் கண்டும் காணாமல் இருக்கும் நிலையில், அண்டை மாநிலங்களில் உள்ள நிலை என்னவாக இருக்கும்? அங்கு நமது பொருட்களை எப்படிப் பாதுகாத்து வைத்திருப்பார்கள் என்பதைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ?! ஆரியத்தின் ஆட்சியும், ஒன்றிய அரசின் சூழ்ச்சியும் தமிழர் மரபுச் செல்வங்களை அழிப்பதில் தான் குறியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழர்களின் அறியாமையினாலும், பற்றின்மையாலும், மாற்றினத்தவரின் நேரடி, மறைமுக சூழ்ச்சியாலும் தக்க பாதுகாப்பின்றி தமிழர்களின் அறிவுச் சுரங்கங்களான ஓலைச்சுவடிகள் மக்கி மண்ணாகிக் கொண்டிருக்கின்றன.
(குறிப்பு:- எழும்பூர் ஆவணக்காப்பகம் எரியூட்டப்பட்டதற்கான தரவுகள் உங்களிடம் இருந்தால் பகிருங்கள்)
திரு. ம.இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.