அக்டோபர் 2022
ஓலைச்சுவடி உருவாக்கம்
சென்ற இதழில் ஓலைச்சுவடி குறித்த அடிப்படைத் தரவுகளை பார்த்தோம். இந்த இதழில் ஓலைச்சுவடி உருவாக்கும் நுட்பத்தை காண்போம்.
சுவடி:
தொடக்க காலத்தில், கல், களிமண், பலகை, உலோகத் தகடு, துணி, இலை, மரப்பலகை, தோல் போன்றவைகள் தான் எழுது பொருனாக நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும் இலக்கியங்களை, பெரும் காப்பியங்களை கல்லிலோ, களி மண்ணிலோ, தோலிலோ பதிக்க இயலாததால், இவையெல்லாம், வாய்மொழி இலக்கியங்களாகவே காலம் தோறும் தொடர்ந்தன.
பழங்கால ஆசிரியர், தான் இயற்றிய நூலையோ, தன் ஆசிரியரிடம் அவர் கற்று வந்த நூலையோ, மனதில் நிறுத்தி, மனப்பாடம் செய்து, தன் மாணவர்களுக்கு, வாய்மொழியாகவே பாடம் சொல்லுவார்.
மாணவர்களும் மனப்பாடம் செய்து, பிறருக்குப் பரப்புவர். இப்படித்தான் நம் இலக்கியங்கள் மெல்ல மெல்லப் பரவின.
“நக்கீரர் செய்த களவியல் உரையை தம் மகனார் கீரங் கொற்றனாருக்கு உரைத்தார் கீரம்கொற்றனார் தேனூர் கிழாருக்கு உரைத்தார்”.
என்னும் வரிகள் இதனையே உறுதி செய்கின்றன.
பெரும் காப்பியங்களைக் கல்லில் வடிக்க வழியில்லை. வாய்மொழியாகவே எத்துனை காலம்தான் தொடர்வது?
வேறு வழியே இல்லையா? என ஆராய்ந்தப் பழந்தமிழர், பனையோலையைக் கண்டு பிடித்தனர். ஓலைச்சுவடி பிறந்தது.
சுவடி படைத்தல்:
பனை ஒலைகள் ஓலைச்சுவடிகள் செய்ய பயன்படுத்தப்பட்டன.
பனை மரங்களில் நூற்றுக்கும் அதிகமான வகைகள் இருப்பினும் அவற்றுள் மூன்று வகையான பனை மரங்களின் ஓலைகள் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. அவை,
1. நாட்டுப்பனை (Borasus Flabellifer) Palmyra
2. சீதளப்பனை எனப்படும் கூந்தற்பனை Coripha Umbra Califera
3. லந்தர் பனை Coripha Utan
இவற்றுள் நாட்டுப்பனை தமிழகத்தில் அதிகமாக வளர்கின்றது.
இவ்வகைப் பனை மரங்களின் ஒலைகள் 4 செ.மீ. முதல் 6. செ.மீ. அகலமும் இரண்டடி முதல் மூன்றடி நீளமும் கொண்டவை. தடிமனாகவும் இருக்கும். ஆனால் கூந்தற் பனை ஓலைகள் மிகவும் நீளமாகவும், 8 முதல் 10 செ.மீ. அகலமும், மிக மெல்லியதாகவும் இருக்கும்.
இவ்வகைப் பனை மரங்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரை, இலங்கை, மலேசியக் கடற்கரைப் பகுதிகளில் அதிகமாக வளர்கின்றன. கூந்தற் பனையின் ஓலை நாட்டுப்பனை ஓலையை விட மிகவும் வழவழப்பாகவும் நன்கு வளைந்து கொடுக்கும் தன்மையும் கொண்டது.
இவ்விரண்டு வகை தவிர மூன்றாவது வகைப் பனையான லத்தர் பனை ஓலைகளும் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இவ்வகைப் பனை மரங்கள் அதிகமாக பர்மா, தாய்லாந்து, இந்தியாவின் வடகிழக்கு, பகுதிகளில் வளர்கின்றன. இப்பனை மரங்களின் ஓலைகள் கூத்தற் பனை ஓலைகளைப் போல் நீள, அகலமாகவும், நாட்டுப்பனை போல் மிகத் தடிமனாகவும் உள்ளன. இவ்வகைப் பனை ஓலைகளில் எழுதிய சுவடிகள் ஒருசில, பல நூலகங்களில் உள்ளன. இவ்வகையைச் சார்ந்த ஒரு கவடி தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்திலும், சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பனைமட்டையிலிருந்து எழுத்தோலை உருவாக்குவது தொழில் நுட்பம் மிக்க ஒரு கலை.
சுவடிகள் செய்தல்:
பனை மரங்களில் ஆறு மாதம் வளர்ந்த இளம் பதமுள்ள பனையோலையை வெட்டி எடுக்க வேண்டும். (இவை நீண்ட நாட்கள் அழியாமல் இருக்கக்கூடியவை) நீண்ட தலையோலைகளின் குறுகிய அடி நுனிகளை, அளவுக்குத் தக்கவாறு நறுக்குவார்கள். குழந்தைக்கு நகம் வெட்டுவது போல் நளினமாக ஓலைகளின் நரம்பை களைவார்கள். இதனை ‘ஓலைவாருதல்’ என்பர். ஒத்த அளவாக உள்ள ஓலைகளை ஒன்று சேர்த்தலைச் ‘சுவடி சேர்த்தல்’ என்பர்.
பனை ஓலைகளின் மேற்பரப்பு கடினமானதாக இருப்பதால் பதப்படுத்தாமல் ஓலைகளில் எழுத முடியாது. அவற்றை எழுதுவதற்குத் தக்க மிருதுவாக்க வேண்டும். அப்போதுதான் எழுதுவதற்கு எளிதாகவும் சேதமுறாமலும் இருக்கும். பதப்படுத்துவதால் ஓலைகள் விரைவில் அழியாமலும், பூச்சிகளால் அரிக்கப்படாமலும் பாதுகாக்கப்படுகின்றன.
அதனால் எழுதுவதற்காக வெட்டப்பட்ட ஓலைகளைப் பதப்படுத்த நிழலில் உலர்த்தல், பனியில் போட்டுப் பதப்படுத்தல், வெந்நீரில் போட்டு ஒரே சீராக வெதுப்பி எடுத்தல், சேற்றில் புதைத்தல் போன்ற பல முறைகளைக் கையாண்டுள்ளனர்.
சுவடிகள் எவ்வாறு உருவாக்கி பதப்படுத்தப்பட்டன என்பதை பார்ப்போம்.
சுவடிகள் பதப்படுத்தல்:
சுவடிகள் உருவாக்குவதற்கு முதலில் பனையோலைகளைத் தேவையான அளவில் கத்தரித்துக் கொள்வர். இவ்வாறு அளவு செய்து கொள்ளப்பட்ட ஏடுகள் மிக நன்றாக உலர்த்தப்படும். சற்றும் ஈரமின்றி நன்றாகக் காய்ந்த பிறகு இவ்வோலைகள் தண்ணீரில் இட்டு வேகவைக்கப்படும். ஏடுகள் நீரில் கொதிக்கக் கொதிக்க, அதன் விரைப்புத் தன்மை நீங்கி, மிருதுவாகி, நெகிழ்வுத் தன்மையினைப் பெறும்.
ஏடுகளில் ஒரு துவள்வு ஏற்படுகிறது. பிறகு ஓலைகள் மறுபடியும் நன்கு காயவைக்கப்படும், காய்ந்த பிறகு கனமான சங்கு அல்லது மழுமழுப்பான கல்கொண்டு ஓலைகளை நன்றாகத் தேய்ப்பார்கள். இப்படிச் செய்வதால் ஏட்டிற்கு ஒரு பளபளப்பு ஏற்படும். மேலும் நேராகத் தகடுபோல ஆகிவிடும். இப்போது ஏடு எழுதுவதற்கு ஏற்ற நிலையை அடைந்துவிட்டது. இம்முறைக்கு ‘ஏட்டை பாடம் செய்தல்” அல்லது பதப்படுத்துதல் என்று பெயர்.
ஓலையைப் பதப்படுத்த பலமுறைகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுள் சில முறைகள்.
அ. ஓலைகளைத் தண்ணீர் அல்லது பாலில் வேகவைத்தல்,
ஆ. நீராவியில் வேகவைத்தல்,
இ. ஈரமணலில் புதைத்து வைத்தல்,
ஈ. நல்லெண்ணெய் பூசி ஊறவைத்தல்,
உ. ஈரமான வைக்கோற் போரில் வைத்திருத்தல்.
சில முறைகளில் ஓலைகளின் மேல்பரப்பு மிருதுவானதும் அதில் உள்ள லிக்னின் என்ற பொருள் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஓலைகள் விரைவில் சிதிலமடைவதில்லை. சில இடங்களில் பாதுகாப்பிற்காக மஞ்சள் நீர் அல்லது அரிசிக்கஞ் சியில் ஊறவைத்துப் பதப்படுத்தினர்.
இவ்வாறு பதப்படுத்திய சுவடிகளைக்கட்டி வைக்க மத்தியில் (இரண்டு துளைகள் துலையை மூன்று பகுதிகளாகப் பிரிக்குமாறு சுள்ளாணியால் துளைகளிடுவர். இதனை ‘ஓலைக்கண்’ என்பர்.
சுவடி பெரிய அளவில் இருந்தால் இரு துளையிடப்பட்ட ஓலைகளில் இடப்பக்கத் துளையில் அழகான நூல் கயிறு அல்லது பட்டுக் கயிறு கோர்த்து ஒலையைப் பிரித்துப் புரட்டுமாறு தளர்வாக இருக்குமாறு கட்டப்படும். இக் கயிறு சுவடியின் ஏடுகளைச் சிதறாமல் பாதுகாத்து நிற்கும்.
வலப்பக்கத் துளையில் மெல்லிய குச்சி அல்லது ஆணியைச் செருகியிருப்பர். இதற்குச் ‘கள்ளாணி’ என்று பெயர். சுவடிகளுக்கு மேலும் கீழும் மரத்தாலான சட்டங்களை வைத்து சுவடி தொய்வடையாமல் கட்டி வைக்கப் படுகின்றது. சட்டங்கள் மரம், தந்தம் போன்ற பொருள்களில் செய்யப்பட்டுள்ளன. சுவடிக் கட்டின் அமைப்புகவடியின் முன்னும் பின்னும் முதுகு நரம்பு நீக்கப்படாத ஈட்டங்கள் சிலவற்றை அமைத்தும் சுவடிக் கட்டினை உருவாக்குவர். மரம் மற்றும் தந்தத்தால் சட்டங்களை அமைப்பதும் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
சட்டங்களின் அமைப்பு :
மருத்துவச் சுவடிகள் பலவற்றின் சட்டங்களில் இலைச்சாறு, மஞ்சள், சுண்ணாம்பு போன்ற பொருன்களால் ஆக்கப்பட்ட பலவகை வண்ணங்களால் மூலிகைகளின் படங்கள் வரையப் பெற்றுள்ளன.
ஓலைச்சுவடிகளை மரம், தந்தம் போன்ற சட்டங்களிட்டு நூல் கயிறு கட்டும் பொழுது இறுக்கமாகச் சுற்றாமல் சுவடி முழுவதும் ஒரே மாதிரியான அழுத்தம் கொடுக்கும் அளவிற்குச் சுற்றிக் கட்ட வேண்டும்.
கட்டியச் சுவடியினை அழகிய துணியில் சுற்றிவைக்கும் முறையும் இருந்துள்ளது.சுவடியின் ஓலைகளின் பாதுகாப்புக்காக இரு முக்கோணங்கள் இணைந்தாற்போல வெட்டப்பட்ட தரம்போடு கூடிய, கிளிமூக்கு என்னும் ஓலைத்துண்டு கயிற்றின் நுனியில் கட்டப்பெற்றுக் கயிறு கழன்று வராதபடி பாதுகாக்கும் துளையிடப்பெற்ற செப்புக்காக, உலோகத்தகடு ஆகியவை கிளிமூக்கிற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.
பதப்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஓலைமீதும் மஞ்சளையும் வேப்பெண்ணையையும் கலந்து பூசுவர். கோவை இலை, ஊமத்தை இலை ஆகியவற்றின் சாறுகளைப் பூசுவர். மாவிலை, அருகம்புல் ஆகியவற்றை எரித்த கரியை மையாகத் தடவுவர். இதன் மேல்தான் எழுத்தாணி கொண்டு எழுதி, அதன் மேல் சுடர்க்கரி அல்லது மீண்டும் மஞ்சள் தடவ, ஓலைச்சுவடி உருவாகிறது.
மேலும் அது பூச்சிகளின் அரிப்பிற்கு உள்ளாகாமலிருக்கும் பொருட்டு, அதன்மேல் வேம்பு அல்லது வசம்பு போன்ற திரவியங்கள் அல்லது எண்ணெய்கள் தடவப்படுவதும் உண்டு. மேலும் எலுமிச்சை புல் எண்ணெய் அல்லது கற்பூர எண்ணெய் ஓலையின் நெகிழ்வுத்தன்மைக்காக தடவப்படும்.
நவீன காலங்களில், ஓலைகளை பூஞ்சை அரிக்காமல் பாதுகாக்க, ‘தைமோல் நீராவி புகையூட்டம்’ கொண்டு பதனிடப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக கோர்க்கப்பட்ட ஓலைகளின் மறுமுனைத் துளையிலும் கயிறு கோர்த்து பொத்தகமாக கட்டப்படும். கட்டப்பட்ட சுவடி ஒரு துணியினால் சுற்றப்பட்டு, தூசு படியாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆண்டுகள் செல்லச்செல்ல ஓலை வறட்சியடைந்தால், மீண்டும் அதன்மீது எண்ணெய் தடவப்படும். காலப்போக்கில மெல்ல மெல்ல ஓலையின் நிறம் கருமையை தழுவ ஆரம்பித்திருக்கும். இந்திலையில் ஓலையை படியெடுக்கும் பணிகளை துவங்க வேண்டும். ஆனால், தலைமுறை தலைமுறையாக பயின்று வந்த ஓலைகளை கற்றறிந்த சான்றோர் படியெடுப்பார்கள், தமது மாணாக்கர்களையும் படியெடுக்க வைப்பார்கள். அதன் அருமை உணராத பலரால் அரிய பல ஓலைச்சுவடிகள் படியெடுக்கப்படாமல், பாதுகாக்காமல் கைவிடப்பட்டதால் பெரும்பான்மையான அருந்தமிழ் சுவடிகள் அழிந்து போனது.
எழுத்தோலை நீளும்…
திரு. ம.இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.