spot_img

எழுத்தோலை – ஓலைச்சுவடி வாசித்தல்

பிப்ரவரி 2023

எழுத்தோலை

ஓலைச்சுவடி வாசித்தல்

இன்றைய அச்செழுத்துக்களை வடிவமைக்கப் பெரிதும் துணையாக அமைந்தவை, ஓலைச்சுவடிகளில் முன்னோர் எழுதிப் பயின்ற வரி வடிவங்களேயாகும். ஓலைச்சுவடிகள் அழியும் தன்மையுடையனவாதலின் காலந்தோறும் அவை படியெடுத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தன. அவ்வாறு பெயர்த்து எழுதும் பொழுதெல்லாம் அக்காலச் சூழலுக்கேற்ப அவை சிறுசிறு மாற்றம் பெற்று வருதல் இயல்பு. இன்று கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஓலைச்சுவடிகளைக் காண்பது அரிது. எனவே, பழந்தமிழ் வரிவடிவங்களைக் கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும் உள்ள வடிவங்களைக் கொண்டு அறிய முடிகிறது.

கல்வெட்டு, செப்பேடுகளில் காணப்படும் எழுத்துக்களுக் கும், ஓலைச்சுவடிகளில் காணப்படும் எழுத்துக்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. அவ்வேறுபாடு எழுதும் கருவியாலும், எழுதும் முறையாலும் ஆனதேயாகும். கல்லிலும், செம்பிலும் எழுத்துக்களைத் தனித்தனியாக வரைந்து செதுக்கி அமைப்பது முறையாகும். ஓலையில் கூரிய முள் அல்லது ஆணியைக் கொண்டு எழுதுவர். ஆதனால் ஒன்றோடொன்று சங்கிலித் தொடர்போல் அமையுமேயன்றி தனித்தனியாக அமைதல் அரிதாகும். ஓரெழுத்தே கல்லில் வெட்டும்போது ஒரு வடிவாகவும், கையால் எழுதும்போது ஒரு வடிவாகவும் அமைதல் இயல்பேயாகும்.

 தமிழ் மக்கள் இடமிருந்து வலமாக விரைந்து எழுதும் பழக்கம் உடையவர்கள். ஆதலால் எழுத்துக்கள் வளைந்து, உருண்டு செல்லும் அமைப்புடையனவாக இருந்தன. கல்லிலும், செம்பிலும் வெட்டும்போது சதுரம், கோணம், வட்டம் ஆகிய நிலைகள் செம்மையாக அமையும். ஓலைச்சுவடியில் எழுதும் முறையும், கல்வெட்டில் எழுதும் முறையும் வேறு வேறு அல்லனவாயினும் ஆய்வாளர்கள், கையெழுத்து முறையில் அமைந்தவற்றை கோலெழுத்து, வட்டெழுத்து என்றும், கல்லிலும் செம்பிலும் செதுக்கி அமைந்தவற்றை தமிழி எழுத்து என்றும் கூறுவர்.

ஓலைச்சுவடிகளில் எழுத்து, வரிகள் முதலியன ஒரே சீரான அமைப்பில் அழகுறக் காணப்பட்டாலும் அவற்றை வாசிப்பதற்குத் தனித்திறனும் தனிப்பயிற்சியும்  வேண்டும். முக்கியமாக ஏடுகளில் புள்ளிபெறும் மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி இடப்படுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதனால் ஓர் எழுத்து மெய்யா, உயிர்மெய்யா என்பது எளிதில் உணரக் கூடியதாயிராது. கொம்பு பெறும் எழுத்துக்களில் குறில், நெடில் வேற்றுமையின்றி ஒன்று போலவே காணப்படும்.   ‘ரா’ வல்லின காலெழுத்துக்கும்  ‘ர’ என்னும் இடையெழுத்திற்கும் வேற்றுமை தெரியமாட்டாது. வல்லின றகரத்தினோடு நகரத்தின் வேற்றுமையும் மிக நுட்பமாகக் கவனிக்கத்தக்கதாயிருக்கும். எல்லாம் கால் போலவேதான் தோற்றமளிக்கும். ஐகாரத்தைக் குறிக்க இடப்படும் ” னை இரட்டைச் சுழிக்கும் இரண்டு சுழி ‘ன’ என்னும் எழுத்திற்கும் வேற்றுமை காண்பதும் அரிது. இவ்வாறே, ல, வ-சு, ச, த. வடிவ வேற்றுமைகளும் கூர்ந்து காணத் தக்கனவாயிருக்கும். கு, டு, ரு,- து, நு, லு, று. னு போன்ற மிக நுணுகிய வேறுபாடுடைய எழுத்துகளும் உருவ ஒற்றுமையால் திகைக்க வைக்கும்.

ஓலைச்சுவடிகளில் காணப்படும் கையெழுத்துகளிலும் ஒருவர் கையெழுத்துப் போல மற்றொருவர் கையெழுத்து இருப்பதில்லை. எந்தெந்த எழுத்தை ஏடெழுதியோர் எத்தகைய வடிவத்தில் அமைத்துச் செல்கிறார் என்பதும் சுவடி முழுமையாகப் படித்துப் பார்த்துத் தீர்மானிக்கப்பட வேண்டியதாயிருக்கும்,

ஓலைகளில் எழுதப்பட்டுள்ள செய்திகளை ஆழமாக அறிந்து கொள்ளவேண்டும். பொதுவாக ஒரு கட்டில் உள்ள சுவடிகள் ஒருவரால் எழுதப்பட்டிருந்தால் முதலிரு ஏடுகளைச் சிரமப்பட்டு படித்தால் அவர் எழுதுகின்ற முறை நமக்குப் புரிந்துபோகும். அதனை மனதில் கொண்டால் அடுத்தடுத்த  ஏடுகள் அவரது கையெழுத்து பழக்கப்பட்டதால் படிக்க எளிதாகிவிடும்.

ஏட்டுச் சுவடியில் எழுதிப் பழகியவர்கள், இந்தச் செய்திகளைத் தாமேயும் பின்பற்றியதனால் ஏனைய ஏட்டுச் சுவடிகளை வாசிப்பதிலும் படியெடுப்பதிலும் அவர்களுக்கு அதிகத் தொல்லை ஏற்படவில்லை. 

தொடக்க காலம் முதல் சுவடிகளில் செய்யுள் வடிவிலேயே எழுதி வந்தனர். தமிழ்மொழிக்கே சிறப்பாக உள்ள எதுகை, மோனையே அப்பாடலின் அடிகளைப் பகுத்துணர உதவி செய்யும்.  செய்யுள் வடிவிலுள்ளவற்றை அனைவராலும் படிக்க இயலாது.

அதனால் பல சுவடிகள் படிப்பாரற்றுக் கிடந்தன. இந்நிலை மாறவேண்டும் என்று நினைத்து எழுதத் தொடங்கியதன் விளைவாக கி.பி.15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பாடல் வடிவில் எழுதப்பெற்ற புராணச் சுவடி நூல்களைப் பாமரரும் அறியும் வகையில்  உரைநடையில் எழுதும் முறையை கைக் கொண்டனர்.   உரைநடையில் மட்டும் சுவடியில் எழுதுவதைத் தவிர்த்து,  புதுமையாக  உரைநடையுடன் ஓவியத்தை இணைத்து எழுதும் பழக்கமும் தோன்றியது.

சுவடிகளில்  கோட்டோவியம்:

பனை ஓலைகளில் எழுதுவது கடினமான பணி யாகும்.  அதைவிடக் கடினமானது பனை ஓலைகளில் எழுத்தாணி களைக் கொண்டு ஓவியம் வரைவது. ஓலைகளில் ஓவியம் வரையும் பழக்கமும் இருந்தது. பனை ஓலைகளில் அரிதின் முயன்று எழுத்தாணி கொண்டு சில கோட்டோவியங்களை வரைந்துள்ளனர்.

இத்தகைய ஓவிய ஏடுகளில் சில அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம், தர்மபுரி அகழ்வைப்பகம் போன்ற இடங்களில் கிடைக்கின்றன. சில தஞ்சை அரண்மனை நூலகத்திலுள்ளன.  அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகக் காட்சியகத்தில் உள்ள ஓர் ஏட்டுச்சுவடியில் முன்பின் பக்கங்களில் வைணவக் கடவுளான திருமாலின்  பத்து அவதாரங்களும் திருமால் பாம்பணையில் பள்ளிகொண்ட காட்சியும் கோட்டோவியங்களக வரையப்பட்டுள்ளன. 11 செ.மீ நீளமும் 3.5 செ.மீ அகலமும் கொண்ட சுவடியில் சிவன், பிரம்மா, பத்துத்தலை இராவணன், சூர்ப்பநகை என இருப்பத்தைந்திற்கும் மேற்பட்ட கோட்டோவியங்கள் வரையப்பட்டுள்ளன. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ‘திருவாய்மொழி வாசகமாலை’ எனும் சுவடியில் கிடந்த கோலத் திருமாலின் வரைகோட்டோவியங்கள் காணப்படுகின்றன. தர்மபுரி அகழ்வைப்பகத்தில் கிருஷ்ண நாடகம் எனும் ஓலைச்சுவடியில் உள்ள ஓர் ஏட்டில் நாடகக் காட்சிகள் கோட்டோவியங்களாக வரையப்பட்டுள்ளன.

சில வடமொழிச் சுவடிகளில், பலவகையான பூ ஓவிய வேலைப்பாடுகள் காணப்பெறுகின்றன. இதுபோன்று மேலும் பலவகையான சுவடிகளில் ஓவியங்கள் காணப்படுகின்றன.

இத்தகைய நுட்பமான பட்டறிவு விவரங்களை அன்றைய காலகட்டத்தில் ஓலைச்சுவடிகளில் தான் பதித்திருக்கிறார்கள். நுட்ப அறிவு முறைகள் வாய்மொழியால் கூறப்பட்டும் பயிற்றுவிக்கப்பட்டும் அடுத்தடுத்த  பல தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக ஓலைச்சுவடிகளில் அவை எழுத்து வடிவம் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன.   இப்போது நமக்குக் கிடைக்கின்ற ஓலைச்சுவடிகள்  யாவும் தமிழரின் தொன்மையான அறிவுச் செல்வங்களின் ஒரு பகுதிகளாகவே அமைந்திருக்கின்றன.

எழுத்தோலை நீளும்….

திரு. .இராமகிருசுணன்,

ஆன்றோர் பேரவைத் தலைவர்,

செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles