சூன் 2023
எழுத்தோலை
சுவடிகளின் அழிவு
பல்லாயிரம் ஆண்டுகளாக வழிவழியாக எழுதப்பட்ட நம் முன்னோர்களின் அறிவுச் சுரங்கங்களான சுவடிகள், பல்வேறு காரணங்களால் அழிவிற்கு உள்ளாகின்றன. அழிவை ஏற்படுத்தும் காரணிகளின் அடிப்படையில் சுவடிகளின் அழிவை மூன்று வகைகளாகக் கொள்ளலாம்.
அவை,
1. இயற்கை அழிவு
2. செயற்கை அழிவு
3. அறியாமை அழிவு
ஓலைச்சுவடிகளின் தாழ்வும் மறைவும் இம்மூன்றையும் ஒட்டியே அமையும் எனலாம்.
ஓலைச்சுவடிகளின் இயற்கை அழிவு:
சுவடிகளுக்கு இயற்கையாக நிகழ்ந்த அழிவுகளை இயற்கை அழிவு எனக் கூறலாம். உலகில் உருவாக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் இயற்கையாக ஏற்படும் தூசு, ஒளி, தட்பவெப்ப நிலை, நீர், மழை, வெள்ளம், தீ என பல்வேறு காரணிகளால் அழிவிற்குள்ளாகின்றன.
பொதுவாக ஓலைச் சுவடிகள் நீண்ட வாழ்நாள் கொண்டவை. எனினும், கறையான், இராமபாணம் எனும் வெள்ளிமீன், ஈரப்பதம், புகை, நெருப்பு ஆகியவற்றால் விரைவில் பாதிக்கப்படக்கூடியவை. காற்று, மழை, வெயில், தீ ஆகிய இயற்கைக் கூறுகளின் தாக்கத்தில் சிக்கி விரைவில் அழியக்கூடிய தன்மை கொண்டவை.
சுவடிகள் கடல்கோளாலும் தீயாலும் பெரும்பான்மையாக அழிந்தன. தமிழுக்கும் தமிழர் நிலத்திற்கும் ஊறு விளைவித்த பெரும் இயற்கைச் சீற்றத்தால் பொங்கிய இரண்டு பேரூழிகளில் குமரியாறும் அதன் தெற்கிலிருந்த நாடுகளும் பெருங்கடலின் வாய்ப்பட்டு அமிழ்ந்திய போது, கபாடபுரம், தென்மதுரையின்கண் இருந்த பெரும்பாலான ஓலைச்சுவடிகளையும் கடல் தனக்குள் புதைத்துக் கொண்டது.
தமிழர் நிலத்தைக் கடல் கொண்டதை, சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில், தென்பகுதி நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்லம் முதலிய பனிமலை நாடும், நதியும், வீதியும், நீர்க்குமரி வடபெருங் கோட்டில் காடும் கடல் கொண்டொழிந்தது எனக் குறிப்பிடுகிறார்.
பல்வேறு சூழல்களில் இயற்கையால் விளைந்த தீ விபத்துக்களாலும் பெரும்பாலான ஓலைச்சுவடிகள் சாம்பலாயின.
இவ்வாறு நீரினாலும் தீயினாலும் அழிவு ஏற்படுதலை “நீரும் தீயும் வெளிப்பட நின்றழிப்பன” எனக் குறிப்பிட்டுள்ளனர். இவற்றைப் புறப்பகை எனலாம்.
சுவடிகள் நாள்பட மட்கியும், பூச்சிகளால் அரிக்கப்பட்டும் அழிந்தன என்பதை, “ இனி அகப்பகை இரண்டுண்டு; அஞ்சத்தக்கபகை அவையே” எனக் குறிப்பிடுகின்றனர். கறையான் முதலிய பூச்சிகளின் அரிப்பும், துளைப்பும், ஒரு பகை; ஏடுகள் நாட்பட நாட்பட மட்கி மடிந்து ஒழிவது மற்றொரு பகை.
சுவடிகள் கடல் கோளாலும், தீயினாலும், பூச்சிகளாலும், தானாக மட்கி அழிந்தனவற்றுள் சிலவே நமக்குத் தெரிகின்றன. பலகோடி சுவடிகள் அழிந்தவிதம் நமக்குத் தெரியாமலே போய்விட்டது.
பலவேறுபட்ட சூழ்நிலைகளில் சுவடிகள் மறைவதற்கு இயற்கை ஓர் காரணியாக இருக்கின்றது. ஓலைகளில் எழுதப்பட்ட சுவடிகள் மட்டுமன்று; கல்லில் வெட்டப்பட்டக் கல்வெட்டுகளும் செப்புத் தகடுகளில் எழுதப்பட்டச் செப்பேடுகளும் இயற்கையின் செயலோட்டத்தில் மறைந்திருக்கின்றன. மாறுபடும் தட்பவெப்பப் சூழ்நிலையே இதற்கு முக்கிய காரணமாகிறது. ஓலைச்சுவடிக்குப் பெரும்பாலும் குளிர்ச்சியானச் சூழ்நிலையே தேவைப்படும். எனவேதான், இந்நிலப்பரப்பை பொருத்தமட்டில் வடக்கைவிட தெற்கில் அதிகமான சுவடிகளின் மறைவுகள் நிகழ்ந்திருக்கின்றன.
சுவடியின் அதிகமான பயன்பாடு, தக்க பாதுகாப்பு இல்லாத சுவடிகள், சுவடிக்குள் உருவாகும் இராமபாணம், கறையான் போன்ற சுவடி அழிப்பான்களினால் சுவடிகள் மறைகின்றன. மழைநீரோ, பனித்துளியோ, சாக்காற்றோ சுவடியின் மீது படும்போதும், பெருமழையின் காரணமாக ஏற்படும் நில அரிப்பாலும், ஈரப்பதத்தாலும், புகைபடுவதாலும், தீயினாலும், வெப்பத்தினாலும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் சுவடிகள் அழிந்தும் மறைந்தும் வருகின்றன என்பது உண்மை.
ஓலை மற்றும் காகிதச் சுவடிகள் ஈரத்தை உறிஞ்சி வெளிவிடுவதால் உறுதித்தன்மை குறைவது மட்டுமின்றி, வளைந்து கொடுக்கும் தன்மையும் குறைகிறது. மேலும் சுவடிகளில் சுருக்கங்களும் ஓரங்களில் வெடிப்புகளும் ஏற்படும். மழைக் காலங்களில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அதிக நாட்கள் ஈரத்துடன் இருப்பதால் சுவடிகளின் நார்ப்பிடிப்பு பாதிப்படையும். ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் சுவடிகளின் மீது படிந்து பூஞ்சைக் காளான்களாக வளரும். சுவடிகளின் மீது வளரும் பூஞ்சைக் காளான்களை உணவாக உண்ண வரும் பூச்சிகளால் சுவடிகள் அழிவிற்குள்ளாகின்றன.
தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஒரு தொடர் அழிவிற்கான சூழ்நிலை ஏற்படும். பொதுவாக சுவடி வைப்பறையில் 28 டிகிரி செல்சியஸ் முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமும், காற்றின் ஈரப்பதமும் ஒரே சீராக இருக்குமாறு அமைத்தால் சுவடிகளை அழிவிற்குள்ளாகாமல் பாதுகாக்கலாம். மாறாத வெப்பமும், ஈரப்பதமும் இருக்கச் சீரமைக்கப்பட்ட குளிர்பதன வசதி செய்யலாம். ஆனால் குளிர்பதன வசதி 24 மணிநேரமும் இடைவிடாது செயல்பட்டு வரவேண்டும். அவ்வாறு இல்லாமல் மாறுபட்ட தட்பவெப்ப நிலை ஏற்படுமானால் பூஞ்சைக் காளான் வளர்ச்சி மிக விரைவாக ஏற்படும் பூஞ்சைக்காளான் சுவடிகள் அழிவிற்கு ஒரு முக்கிய காரணியாகும். தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு தனியார் சுவடித் தொகுப்புகள் உள்ள இடங்கள் தட்பவெப்ப நிலை மாறுபாட்டைத் தொடர்ந்து, சரியாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதால் பூஞ்சைக் காளான் மற்றும் பூச்சிகளின் பாதிப்புக்குள்ளாகின்றன.
பொதுவாக, நூலகங்களுக்கு நீரின் பாதிப்பு என்பது மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படுகிறது. மழை நீரால் சுவடிகள் நேரிடையாக பாதிப்படைவதில்லை. எனினும், தொடர் பருவ மழையின் காரணமாக தட்பவெப்ப நிலை மாற்றத்தினால் பூஞ்சைக் காளான் ஏற்பட்டு சுவடிகளை அழிவுக்குள்ளாக்குகின்றன. மேலும் அதிகமான ஈரப்பதம் உள்ளபோது சுவடிகளைக் கையாளுவதால் சிதிலமடைந்து பாதிப்படைகின்றன. காகிதச் சுவடிகள் மழை நீர் பட்டால் அவற்றிலுள்ள எழுத்துக்கள் கரைந்துவிடும்.
உயிரியல் காரணிகளான சுவடிகளின் அகப்பகைகளாம் நுண்ணுயிரி பூஞ்சைக் காளான், சிறு உயிரினங்களான புத்தகப்புழு, கரப்பான் பூச்சி, புத்தகப்பேன், வெள்ளிமீன் (இராமபாணம்) ; பிராணிகளான சுண்டெலி, அணில் போன்றவற்றால் சுவடிகள் அழிவுக்குள்ளாகின்றன.
பூஞ்சைக் காளான்:
கரிமப் பொருட்களால் ஆன பாரம்பரியப் பொருட்களும் சுவடிகளும் உலகில் அதிக அளவில் பூஞ்சைக் காளானால் அழிவிற்கு உள்ளாகின்றன.
வெப்ப மண்டல நாடுகளில் இதன் தாக்கம் மிக அதிகம். இப்பூஞ்சைக் காளான்களில் பல வகைகள் இருப்பினும் கருப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்கள் கொண்ட சில குறிப்பிட்ட நுண்ணுயிர்கள் மட்டுமே சுவடிகளின் அழிவிற்குக் காரணமாக இருக்கின்றன. பூஞ்சைக் காளான்கள் நுண்ணிய தாவரத்தின் அமைப்பைக் கொண்டிருக்கும். இதன் வேர்கள் சுவடிகளின் நார் இணைப்புகளுக்குள் ஊடுருவி வளர்வதால் சுவடிகளின் உறுதித் தன்மை குறைகிறது. சுவடிகளின் நார்ப்பொருட்களை, சேர்ப்புப் பொருட்களை இவை உறிஞ்சுவதால் நார்களின் இணைப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் பூஞ்சைக் காளான்களின் வேர்களின் மூலம் வெளியிடப்படும் திரவத்தால் தாள்களும், ஏடுகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.
பூஞ்சைக் காளானின் தாக்கத்திற்குள்ளான சுவடியை உடனடியாக வெப்பமான குழ்நிலைக்குக் கொண்டு வருவதால் சுவடியில் உள்ள ஈரப்பதம் ஆவியாகி ஏடுகள் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும், சுத்தம் செய்ய முடியாத அளவிற்குக் கறைகளை ஏற்படுத்தும். சுவடிகளின் மீது பூஞ்சைக் காளான் வளர்வதால் ஏற்படும் நாற்றத்தால் ஈர்க்கப்பட்ட பூச்சிகள் காளானைச் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சேர்மங்களின் பதத்தால் மிருதுவாக்கப்பட்ட சுவடிகளையும் சேதமுறச் செய்கின்றன. பூஞ்சைக் காளான்களால் பாதிக்கப்பட்ட சுவடிகளைச் சரியான நேரத்தில் உரிய முறையில் பாதுகாக்காவிடில் அவற்றைச் சில வகையான பூச்சிகள் பாதிப்படையச் செய்யும்.
சுவடிகள், சுவடிச் சட்டங்கள், புத்தகங்கள்,அவற்றின் அட்டைகள் மற்றும் கரிம வகையைச் சார்ந்த எழுதுபொருட்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றையும் இவை பாதிக்கும்.
சுவடிகளைத் துளையிட்டுச் சேதப்படுத்தும் புழுக்களைப் புத்தகப்புழு என்று அழைப்பர். இவ்வகைப் புழுக்களானது உலகில் உள்ள சுமார் 200 வகையான பூச்சிகளின் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் எனக் கூறப்படுகிறது. சுவடிகளின் மீது பூஞ்சைக் காளானின் தாக்கம் இருக்கும் பொழுது காளானை உணவாக உட்கொள்ள வரும் பூச்சிகளின் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், புத்தகப் புழுக்கள் எனப்படுகின்றன. இப்புழுவானது காரட் போன்று தலைப்பகுதி பெருத்தும், வால்பகுதி சிறுத்தும் இருக்கும். இப்புழு 5மி.மீ நீளமுடையதாகவும், வெண்மை நிறத்தையும் கொண்டிருக்கும்.
சுவடிகளின் மேற்புறத்திலிருந்து கீழ்ப்புறம் வரை இவை துளையிடும் தன்மை கொண்டன. புழுக்கள் வளர்ந்து பூச்சிகளாக வெளியேறும் பொழுது மேலும் முட்டையிட்டுச் செல்லும். சுவடிகளைச் சரியாகப் பாதுகாக்க சில செயல்முறைகளைச் செய்யவில்லையெனில், செப்பனிட முடியாத அளவிற்கான தாக்கத்தை இவை ஏற்படுத்தும். ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதியபின் மஞ்சள் அல்லது தாவர இலைச் சாற்றுடன் கரி பூசாத ஓலைச்சுவடிகள் மிக வேகமாக அழிவிற்குள்ளாகின்றன. இப்புழு உலோகத் தகடுகளைத் தவிர மற்ற பொருட்களில் ஊடுருவும் திறன் கொண்டது. ஓலைச்சுவடிகளைத் தாக்கும் புத்தகப் புழுவினைக் காஸ்டல்ஸ் இன்டிகஸ் (Gastrallus indicus) என்பர்.

கரப்பான் பூச்சி:
சுவடிகளை அதிகமாகத் தாக்கக் கூடிய பூச்சிகளில் கரப்பான் பூச்சியும் ஒன்று. இது பல வகைப்படும். உலகெங்கும் சுமார் 1200 வகை கரப்பான் பூச்சிகள் இருப்பதைப் பூச்சியியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கரப்பான் பூச்சிகள் சுவடிகளுக்கும் புத்தகங்களுக்கும் முக்கிய எதிரி. பொதுவாகக் கரப்பான் பூச்சிகள் வீட்டுச் சமையல் அறைகளிலும், கழிவறைகளிலும் அதிகமாகக் காணப்படும். இப்பூச்சிகள் பகலில் மறைந்திருந்து இரவில் உணவு தேடப் புறப்படும். இவை 2.3செ.மீ. முதல் 5 செ.மீ. வரை நிளம் உடையதாக இருக்கும்.
கரப்பான் பூச்சிகளின் வாய் அமைப்பு ஓலைச்சுவடிகளையும் காகிதச் சுவடிகளையும் கடித்துச் சேதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பூச்சிகள் 16 முதல் 30 முட்டைகள் வரை வைக்கும் எனக் கூறப்படுகிறது. கரப்பான் பூச்சிகள் ஆறு மாதங்கள் முதல் ஈராண்டுகள் வரை வாழக் கூடியவை. சுவடிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் பொழுதோ சுவடிகளின் மீது பசைப்பொருட்கள் தடவியிருந்தாலோ கரப்பான் பூச்சிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். அதன் வாய் அமைப்பு சுவடிகளின் மேற்புறத்தைச் சுரண்டிச் சாப்பிடும் தன்மையில் அமைந்துள்ளதால், சுவடிகளைச் செப்பனிட முடியாத அளவிற்கான சேதத்தை இவை உண்டாக்கும். கரப்பான் பூச்சிகளின் தாக்கம் சுவடிகள் ஈரமாக இருக்கும் பொழுதோ, வைப்பறையில் உணவுப் பொருட்கள் பயன்படுத்துவதனாலோ அதிகமாக இருக்கும்.
கறையான் :
கறையான் சுவடிகளைச் செப்பனிட முடியாத அளவிற்கு முழுமையாக அழிக்க வல்லது. கறையான்கள் வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. கறையான்கள் உலோகத்தால் ஆன பொருட்களைத் தவிர கரிம வகைத் தாவரப் பொருட்கள் அனைத்தையும் சேதமடையச் செய்யும். கறையான்களில் 1800 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்றும், அவை சுமார் பல மில்லியன் காலத்திற்கு முன்பிலிருந்தே பூமியில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. கறையான்கள் கூட்டம் கூட்டமாக வாழக் கூடியவை. அவைகளில் ராஜா, ராணி, வேலைக்காரர்கள், காவலாளி, என்ற நான்கு பிரிவுகள் உண்டு. இராணி கறையானுக்கு இறக்கைகள் உண்டு. இது மற்ற கறையான்களை விட உருவத்தில் பெரியதாக இருக்கும். இவை வெளிச்சத்திற்கு அஞ்சியே இருளில் தமது செயல்களை மறைவாகச் செய்யும்.
இராணி கறையான் 24 மணி நேரத்தில் 30,000க்கும் மேற்பட்ட முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கறையான்கள் பூமிக்குள் ஈரப்பதம் இருக்கும் இடங்களில் நடமாட்டத்தைக் கொண்டிருக்கும். மழைக்காலங்களிலும் அல்லது வேறு காரணங்களாலும் ஈரம் பூமியின் மேற்பகுதி வரை வரும்பொழுது கறையான்களின் செயல்பாடுகள் தரையின் மீது ஏற்படும். அச்சமயங்களில் தரையில் உள்ள சுவடிகள், மரச்சாமான்கள், பாதுகாப்புச் செய்யப்படாத மர நிலைப்பேழைகள் போன்றவற்றை சேதமுறச் செய்யும். இவை பொருட்கள் மற்றும் சுவடிகளின் வெளிப்பகுதி அப்படியே இருக்க உட்பகுதியைச் சாப்பிட்டு அழிக்கக் கூடியவை.
தமிழகத்தின் பலபகுதிகளிலும் கரையான்களால் சுவடிகள் அழிந்துள்ளன. அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழனால் மீட்டெடுக்கப்பட்ட சிதம்பரம் கோவிலிருந்த தேவாரச் சுவடிகள், கறையான்களால் அரிக்கப்பட்டு மண் மலைபோலக் காட்சியளித்ததைக் கண்டு, குடம்குடமாக எண்ணெய் ஊற்றிக் கறையான்களால் அழிந்தது போக கிடைத்த மீதிச் சுவடிகள் செப்பனிடப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

புத்தகப்பேன் மற்றும் வெள்ளிமீன்:
வெள்ளிமீனை இராமபாணம், (தமிழுக்கும், தமிழருக்கும் தீங்கிழைப்பதை குறியாக கொண்ட ஆரியர்களின் இராமபாணம். என்னே ஒரு பெயர் பொருத்தம்?!) சக்கரைப் பூச்சி எனப் பல பெயர்களால் அழைப்பர்.
இப்பூச்சி கேரட்டின் அமைப்புடன் சுமார் 25மி. மீட்டரிலிருந்து 3.5 செ. மீட்டர் நீளம் கொண்டது. சிறிய தட்டையான உடலுடைய, இறக்கையற்ற பூச்சி வகையைச் சேர்ந்த உயிரினம் ஆகும். உடல் வெண்மையான, வெள்ளி போன்ற பளபளக்கும் செதில்களால் மூடப்பட்டிருப்பதாலும், விரைவாக இடம் பெயர்ந்து செல்வதாலும் இது வெள்ளிமீன் என்று அழைக்கப்படுகிறது. இது வெளிர்ச்சாம்பல் நிறமுடையது. இதன் தலையில் இரு உணர்கொம்புகள் போன்ற அமைப்பும் மூன்று வால்களும் இருக்கும். இதன் வாயமைப்புப் பொருட்களின் மேற்பகுதியைச் சுரண்டிச் சாப்பிடும் வகையில் அமைந்துள்ளது. இவை இரவாடுதல் இயல்புடையவை. ஆகையால் இந்த பூச்சிகள், ஒளிபடாத இடங்களில் ஒளிந்து கொண்டு சுவடிகள், புத்தகம் மற்றும் துணியில் உள்ள மாவுப் பொருளை மென்று தின்று சேதமாக்கி துளைத்து விடுகின்றன. இதனால் இவற்றை எழுத்தாணிப் பூச்சி என்றும் குறிப்பிடுவர். இவை இருண்ட குளிர்ச்சியான இடங்களில் காணப்படுகின்றன.
சிறுவிலங்குகளான சுண்டெலி, எலி, அணில் போன்ற வற்றாலும் அழிவிற்குள்ளாகின்றன சுவடிகள். இப்பிராணிகள் சுவடிகளை உணவாக உட்கொள்வதில்லை. இவற்றின் பல்லமைப்பினாலும், தங்குவதற்கு மிருதுவான இடத்தைத் தேடுவதாலும் சுவடிகளைக் கடித்துத் தூளாக்கிச் சேதமடையச் செய்கின்றன.
இதுபோன்ற இயற்கை காரணிகளும், உயிரியல் காரணி களும் ஓலைச்சுவடிகளில் செப்பனிட முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மையன.
எழுத்தோலை நீளும்…
திரு. ம.இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.