மே 2023
எழுத்தோலை
சுவடிக் கலை வடிவங்கள்
மனித இனத்தின் குறிப்பாக தமிழினத்தின் வாழ்க்கை முறையினது வரலாற்று ஆவணமாகச் சுவடிகளைக் கருதலாம். மனிதனின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இலக்கியங்களாகவும் கலைகளாகவும் உருவெடுத்துக் காலங்காலமாக மனித வாழ்வுடன் உறவாடி வருகின்றன. மனித வாழ்வில் அறிய வேண்டுபவை அளவில்லாதன என்றாலும், வித்தைகளும் கலைகளும் இன்றியமையாதவை. இவற்றுள் வித்தைகள் முப்பத்திரண்டு; கலைகள் அறுபத்து நான்கு என்று பாகுபடுத்தி வாழ்வியல் முறையாகக் கடைபிடித்து வந்தவர்கள் தமிழர்கள். பழங்காலத்திருந்தே தமிழ் மக்கள் ஓவியம், கட்டிடம், சிற்பம், இசை, நடனம் போன்ற கலைகளில் திறம்பட்டு விளங்கியுள்ளனர். கலைகளை வளர்ப்பதற்காகப் பல நூல்களையும் இயற்றியுள்ளனர். அத்தகைய நூல்களாக ஓலைச் சுவடிகளில் உள்ள கட்டிடச் சாத்திரம், இசைச் சாத்திரம் போன்றவற்றைக் கூறலாம். அச்செய்திகளைத் தாங்கி நிற்கும் ஓலைச்சுவடிகளையே கலைநயத்துடன், கலை வடிவங்களாக வடிவமைத்திருக்கிறார்கள்.

சுவடிக் கலை வடிவங்கள்:
ஓலைச்சுவடி என்றாலே பட்டையாக, நீளமாக மட்டுமே அமைந்திருக்கும் என எண்ணுவோம். ஆனால் வியப்புக்குரிய வகையில் பல வடிவங்களில் ஓலைச்சுவடிகளை நம் முன்னோர் படைத்திருக்கிறார்கள். அத்தகைய சுவடிகளைக் காணும் போது, முன்னோர்களின் அறிவும், திறமையும், கலையார்வமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. நமது அறிவுப் பெட்டகங்களில் இருக்கும் இன்னறிவு, தற்கால ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்டு, மழுங்கடிக்கப்படுவதை எண்ணி உள்ளம் குமுறுகிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமர்ந்தால் மட்டுமே, இத்தகு இன்னறிவை மீட்டெடுக்க முடியும். அதற்கான செயல்திட்டங்களை தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுத்து வருவது பெருமைக்குரியதாகும்.
சுவடிகளின் வடிவமைப்பு என்பது சுவடிகளின் புறவடிவங்களைச் சுட்டிக் கூறுவதாக அமைந்துள்ளது. சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும் பொருண்மைக்குத் தக்கவும், நூலின் அளவினைப் பொறுத்தும், ஏடெழுதுபவரின் திறமை, கலையுணர்வைப் பொறுத்தும், இறைவுணர்வுக்கு ஏற்பவும் அவற்றின் வடிவத்தை அமைத்துள்ளனர். அதன் பொருட்டே சுவடிகளின் மாறுபட்ட வடிவங்கள் நமக்கு காணக் கிடைக்கின்றன. அவற்றில் சிறிய, பெரிய சுவடிகள், பம்பர வடிவச் சுவடி, சிவலிங்க வடிவச் சுவடி, சிவன் கண்மணி (உருத்திராக்க) வடிவச் சுவடி, வட்ட வடிவச் சுவடி, சக்கர வடிவச் சுவடி, மீன் வடிவச் சுவடி, விசிறி வடிவச் சுவடி என பல்வேறு வடிவங்களில் சுவடிகளைக் கலைநயத்துடன் அமைத்துள்ளனர்.
அவ்வாறு கலைநயத்துடன் அமைக்கப்பட்ட சுவடிகள் பற்றி இங்கு காண்போம்.
சென்னையில் உள்ள அரசினர்க் கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலும், வேறு சில இடங்களிலும் இத்தகைய சுவடிகள் உள்ளன.

சிவலிங்க வடிவச் சுவடி:
தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களை நீள்வடிவ ஏடுகளில் எழுதாமல், சிவலிங்கமாக அமையும் வண்ணம் ஏடுகளை வெட்டி உருவாக்கியுள்ளனர்.
ஒரே அளவுடைய வட்டமாக ஓலைகளை நறுக்கி, இடையில் துளையிட்டு இணைக்கப்பட்ட சிவலிங்க வடிவமானது, நீண்ட சதுரத்தில் பல ஏடுகளால் ஆன பீடத்தின் மேல் பொருந்துமாறு துளையிட்டுக் கோர்க்கப்பட்ட சுவடியும் உண்டு. பீடமாக அமைந்த ஏடுகளிலும், சிவலிங்க வடிவிலான ஏடுகளிலும் திருவாசகம் எழுதி வைத்திருக்கிறார்கள். திருமுருகாற்றுப்படை, திருவாசகம் ஆகிய பாடல்கள் எழுதப்பட்ட இச்சுவடிகளைப் பூசையில் வைத்து வழிபட்டனர்.
அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் இரு சிவலிங்க வடிவச் சுவடிகள் உள்ளன. ஒன்று வெள்ளோலையைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் திருவாசகப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இச்சுவடி மதிலைப்பட்டியைச் சேர்ந்த சிங்காரவேல் கவிராயரிடமிருந்து பெறப்பட்டது. திருச்சிராப்பள்ளி அருங்காட்சியகத்திலும் சிவலிங்க வடிவச் சுவடி ஒன்றுள்ளது.

வட்ட வடிவச் சுவடி:
நான்கு செ.மீ. விட்டத்தில் வட்டவடிவமாக நறுக்கி எழுதப்பட்டுள்ள திருமுருகாற்றுப்படை சுவடி ஒன்று அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது.
பம்பர வடிவச் சுவடி:
ஓலைகளை வட்டவடிவமாக நறுக்கி இடையே துளையிட்டுக் கோர்க்கப்படும் அவ்வட்டவடிவமான ஓலைகளின் குறுக்களவில் (விட்டம்) ஒன்றிற்கொன்று ஒரு ஓலையின் கன அளவு குறைவாக வெட்டப்பட்டுக் கோர்க்கப்படுவதால் அதன் முழுவடிவம் ஒரு ‘பம்பரம்’ போலக் காட்சியளிக்கும்.
சக்கர வடிவச் சுவடி:
சக்கர வடிவில் அமையப்பெற்ற சுவடிகளும் உள்ளன. சக்கர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு ஓலைச்சுவடியில் சூலினி எனும் தேவதையின் மீது பாடப்பட்ட மந்திரம் எழுதப்பட்டுள்ளது.
சிறிய சுவடி:
சுவடிகளில் நீள, அகல, எண்ணிக்கைகளில் குறைந்த அளவுகளை உடையவற்றைச் சிறிய சுவடி என்று அழைக்கலாம். இதற்குச் சான்றாக சென்னை அரசினர்க் கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலுள்ள “கரிநாள் விளக்கம்” என்னும் சுவடியைக் கொள்ளலாம். விரல் அளவு நீளமே உள்ளது இச்சுவடி. இச்சுவடி எட்டு செ.மீ. நீளமும், முக்கால் செ.மீ. அகலமும் உடையது. பதினாறு ஏடுகளை உடைய அச்சுவடியில் பக்கத்திற்கு இரண்டுவரிகள் மட்டும் எழுதப்பட்டுள்ளன.
பெரிய சுவடி:
சுவடிகளின் நீள, அகல, எண்ணிக்கைகளில் அதிக அளவுகளை உடையவற்றைப் பெரிய சுவடி என்று அழைக்கலாம்.
பெரிய சுவடிக்கு சான்றாகச் சென்னை அரசினர்க் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ள கந்தபுராணச் சுவடியைக் கொள்ளலாம். இச்சுவடி ஐம்பது செ.மீ. நீளமும், நான்கு செ.மீ. அகலமும் கொண்டது. இச்சுவடி ஆயிரத்து நூற்று எண்பத்திரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் ஒரு பக்கத்திற்குப் பத்து வரிகள் காணப்படுகின்றன. வேறு இடங்களில் இதைவிடப் பெரிய சுவடிகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது.
விசிறி வடிவச் சுவடி:
ஒரு சில சுவடி நூலகங்களில் பல்வேறு விசிறி வடிவங்களிலான சுவடிகள் உள்ளன.

சிவன் கண்மணி (உருத்திராக்கம்) வடிவச் சுவடி:
சிவன் கண்மணி வடிவிலான திருமுருகாற்றுப்படை சுவடி சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது.
அரிய கலைப்படைப்பாக சிவன் கண்மணி வடிவ மாலையாக, செவ்வனே வெட்டி வடிவமைத்து எழுதிக் கோர்க்கப்பட்ட ஓலைச்சுவடி பெருவியப்பைத் தருகிறது. திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக் கழகக் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் இருப்பதாக அறியப்படும் இச்சுவடி பற்றி முழுமையான தரவுகள் இல்லை. (இச்சுவடி பற்றி அறிந்தவர்கள் தரவுகளைப் பகிரலாம்)
எழுத்தோலை நீளும்…
திரு. ம.இராமகிருசுணன்,
ஆன்றோர் பேரவைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.