சூலை 2023
எழுத்தோலை
செயற்கை அழிவு
கடந்த இதழில் ஓலைச்சுவடிகளின் இயற்கை அழிவுகள் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் செயற்கை அழிவுகளைப் பற்றிப் பார்ப்போம்.
செயற்கை அழிவு:
தமிழ்ச் சுவடிகள் இயற்கை அழிவுகளைவிடச் செயற்கை அழிவுகளாலேயே பெரும்பான் மையாக அழிந்திருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை,
1) வேதியியல் மாற்றங்கள், 2) படையெடுப்புகள், 3) அரசியல் மாற்றம், 4) மற்ற இன மரபுச் செல்வங்களை அழித்தல், 5) வெளிநாட்டினருக்கு விற்றல் போன்றவை காரணங்களாக அமைகின்றன.
வேதியியல் அழிவு:
சுற்றுச் சூழல் மாசடைவதாலும், வேதிப் பொருட்களின் கட்டற்ற பயன்பாட்டாலும், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் வேதிக் கழிவுப் பொருட்களினாலும், சுவடிகளின் மேலே பாதுகாப்பிற்காகப் பூசப்படும் மேற்பூச்சினாலும் சுவடிகள் வேதிமாற்றத்திற்குள்ளாகின்றன. சுவடிகளைப் பாதிக்கும் இவ்வகையான காரணிகளே வேதிக் காரணிகள்.
விஞ்ஞான வளர்ச்சியினாலும் தொழிற்புரட்சியினாலும் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்கள், இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றில் அதிகப்படியாக கந்தக- கரிம நைதரசன் ஆக்சைடு, ஐதரசன் சல்பைடு போன்ற வாயுக்கள் உள்ளன.
கடலோர நகரங்களில் உள்ள காற்றில் உப்பு நீர்த் துகள்கள் உள்ளன. இத்துகள்களில் உப்பு வளி, உப்பிறப்பு வளி எனப்படும் நைதரசன், நீரியம், நீரகவளி எனப்படும் ஐதரசன் வேதிக் கூட்டுப் பொருள்கள் உள்ளன. இது போன்ற வேதிப்பொருட்கள் காற்றில் ஈரத்துடன் சேர்ந்து சுவடிகளின் மீது கரிம அமிலம், கந்தக அமிலம் நைதரிக் அமிலம் எனப் படியும். இவ்வகை அமிலங்கள் சுவடிகளின் நார்ப்பொருட்களைத் தாக்கி நிறமாற்றம் ஏற்படுத்திச் சிதிலமடையச் செய்கின்றன.
மேலும் வேதிமப் பொருட்களால் செல்லுலோசு எனப்படும் தாவர நார்ப்பொருள் அழிவுக்கு உள்ளாவதால், சுவடிகளின் நார் பொருள்களின் சங்கிலித் தொடர்பு பாதிப்பதால் சுவடிகள் பாதிப்படைகின்றன. அமிலத் தன்மையால் இவை சுவடிகளில் உள்ள லிக்னின் என்ற பொருளுடன் வினைபுரிந்து நிறமாற்றம் அடைகிறது. காற்றில் உள்ள உயிர் வளியுடன் இணைந்து ஆக்சிசனேற்றம் அடைவதாலும் நிறமாற்றமும் சிதிலமும் ஏற்படுகிறது.
நிற மாற்றத்தால் எழுத்துகள் மங்கிப் போகும். சில சுவடிகளைப் படிக்கவே இயலாத நிலை ஏற்படும். வேதிமாற்றத்தால் ஏற்படும் ஓசோன் வாயுவினாலும் சுவடிகள் விரைவில் அழிவு நிலையை அடையும்.
ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதற்கான நவீன வேதிப் பாதுகாப்புப் பொருட்களை முறையற்று பயன்படுத்துவதாலும், அவற்றைப் பற்றிய தெளிவான விளக்கங்களை அறியாமலும், வேதிப் பொருட்களின் அளவு, பயன்படுத்தும் கால அளவு, அவற்றின் பின் விளைவுகள் குறித்தான விதிகளைப் பின்பற்றாததாலும் ஓலைச்சுவடிகள் அழிவுக்கு உள்ளாகின்றன.
கரையான், கரப்பான், பூச்சிகள், வண்டுகளை அழிக்கப் பயன்படுத்தும் வேதிக் கொல்லிகளை ஓலைச்சுவடிகளின் மீது நேரடியாக பயன்படுத்துவதாலும் ஓலைச்சுவடிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
கான்கிரீட் கட்டிடங்கள் மற்றும் வேதிக் கூட்டுப்பொருட் களினால் ஆன உட்புற வடிவமைப்புகளில் இருந்து வெளியாகும் வேதிப் பொருட்களினாலும் சுவடிகள் பாதிப்பை அடைகின்றன.
படையெடுப்புகளால் அழிவு:
மன்னர்களுக்கிடையேயான போர் காரணமாகவும் சுவடிகள் அழிவிற்குள்ளாகியுள்ளன. வெற்றி பெற்ற வேந்தன் அந்நாட்டில் பகைவரின் வரலாற்றையும் கலைகளையும் அழித்துத் தன்னுடைய தனித்தன்மையை வளர்க்க எண்ணுவர். அவ்வாறு வளர்க்க முற்பட்டபோது அழிக்கப்பட்டவைகளில் பழமை வாய்ந்த மரபுச் செல்வங்களான ஓலைச்சுவடிகளும் அடங்கும்.
படையெடுப்புகளின் ஊடான செயல்பாடுகளில் நூலகங்கள் அழிப்பு, உலகம் முழுவதும் பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்திருக்கின்றன. அவ்வகையில் உலகில் புகழ்பெற்ற பழமையான அலெக்சாண்ரியா நூலகத்தில் இருந்த நூல்கள் சூலியசு சீசரால் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டுள்ளன.
கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த ஏதன்சு நூலகம் அழிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் நூல்களுடன் ஆசியா மைனரிலிருந்த நூலகம் அழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல கோயில்களிலும், அரண்மனைகளிலும் இருந்த நூலகங்கள், வேற்று மன்னர்களின் படையெடுப்பால் அழிந்திருக்கின்றன.
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் வணிக நோக்கங்களுக்காக இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர், நாடு பிடிக்கும் எண்ணத்தில் போரிட்டுப் பல அரண்மனைகளை அழித்ததுடன், அங்கிருந்த நூலகங்களையும் அழித்தும், நூலகங்களிலிருந்தச் சுவடிகளை தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்றும் இருக்கின்றனர். அவர்களால் அழிக்கப்பட்ட நூலகங்களுள் மிகவும் முக்கியமானது மைசூர் மன்னர் திப்புசுல்தானின் அரண்மனை நூலகமாகும். திப்புசுல்தான் 1799இல் ஆங்கிலேயரிடம் தோற்ற பின் அவ்வரண்மனைப் பொருட்களையும் ஆங்கிலேயர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்நூலகச் சுவடிகளை எடுத்துச் செல்லும் முன் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகப் பேராசிரியர் சார்லசு ச்டுவார்ட் அட்டவணை ஒன்றைத் தயாரித்து அச்சிட்டுள்ளார். அவ்வட்டவணையின் ஒரு பிரதி தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்படுவதை அறியமுடிகிறது.

அரசியல் மாற்றங்களால் ஏற்பட்ட அழிவு:
சுவடிகள் மற்றும் புத்தகங்களுக்குத் தீ வைத்த முதல் நாடு சீனா எனக் கூறப்படுகிறது. கி.மு.220இல் சீனாவைச் சின் வம்ச மன்னர் ஆண்டு வந்தார். இவர் சீனப் பெருஞ்சுவரைக் கட்டத் தொடங்கியவர். இம்மன்னருக்குக் கன்பூசியம் பிடிக்காததால் கன்பூசிய நூல்களைத் தீயிலிட்டுள்ளார்.
கிட்லர் ஆட்சிக்கு வந்ததும் செருமனியில் 1933ஆம் ஆண்டு நள்ளிரவில் செருமன் பல்கலைக்கழக நூலகம் எரிக்கப்பட்டது.
1988இல் சோவியத் அறிவியல் கழக லெனின் கிரேடு நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்லாயிரம் நூல்கள் அழிவுற்றதாகக் கூறப்படுகிறது.
நாற்பத்தியிரண்டுகளுக்கு முன், ஈழத்தில் தமிழர்களது அறிவுச்சேகரமாக இருந்த பல ஆயிரக்கணக்கான சுவடிகள் கொண்ட யாழ்ப்பாண நூலகம், 1981இல் சிங்களக் காடையர்களினால் தீயிட்டுப் பொசுக்கப்பட்டது, நமக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பு. பல அரிய நூல்கள் மற்றும் படிக்கப்படாத ஓலைச்சுவடிகள் ஆகியன இந்தக் கொடும் செயலில் சாம்பலாக்கப்பட்டது, மிகவும் வேதனைக்குரியது.
பல நூற்றாண்டுகளாக இவ்வாறு ஆட்சி மாற்றங்களால் தமிழரின் ஓலைச்சுவடிகள் தீயிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஆரியர்கள், களப்பிரர்கள், விசயநகர அரசுகள், மொகலாயர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என ஆட்சி மாற்றங்களால் தமிழர்களின் அறிவுப் பெட்டகமான ஓலைச்சுவடிகள் அழித்தும், களவாடியும் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
மாற்றினத்தவரால் ஏற்பட்ட அழிவும், இன்றளவும் தொடரும் அழிப்புகளும், வெளிநாடுகளுக்குக் கப்பலில் ஏறிப் பறந்த ஓலைச்சுவடிகள் பற்றியும் அடுத்த இதழில் பார்ப்போம்.
திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.