spot_img

எழுத்தோலை – சுவடி திரட்டுதல்

சனவரி 2024

எழுத்தோலை

சுவடி திரட்டுதல்

ஓலைச்சுவடிகளின் அழிவையும் அதற்கான காரணிகளையும் பார்த்தோம். இத்தகைய அழிவுகளிலிருந்து ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதற்கும், காலந்தோறும் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான தேவைகளுக்காகவும் ஓலைச்சுவடிகள் திரட்டப்பெற்றிருக்கின்றன. இப்பகுதியில் சுவடி திரட்டுதலின் நோக்கம், சுவடி திரட்டும் முறைகள், சுவடி திரட்டுதலினால் ஏற்படும் பயன்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

சுவடி திரட்டுதல்

   சுவடி திரட்டுதல் என்பது பல்வேறு இடங்களில் பரவலாக தனித்தனியாக இருக்கின்ற ஒரு பொருளுடைய அல்லது பல்வேறு வகைப்பட்ட சுவடிகளை ஓரிடத்தில் கொணர்ந்து சேர்ப்பதாகும். இப்பணி சங்ககாலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகும்.

   சுவடிதிரட்டும் பணி சங்ககாலத்திலேயே தொடங்கியுள்ளது. ஆயினும் இடைக்காலத்தில்  இயற்கைச் சூழல்கள், செயற்கைத் தன்மைகள், அறியாமை ஆகியவற்றால் சுவடிகள் பல அழிந்துபட்டன; அவையும் கேட்பாரற்றுக் கிடந்தன. ஆய்வுத் திறனுடைய சிலரால் சுவடிதிரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அச்சு வசதி ஏற்பட்ட பிறகு மொழியுணர்வும், பழம்பொருளுணரும் ஆர்வமும், நிலையான பணிபுரியும் வேட்கையுமுடைய சான்றோர் சிலர், தங்களால் இயன்றவரை சுவடிகளைத் திரட்டி அச்சிட்டு வெளியிடத் தொடங்கினர்; சில நிறுவனங்களின் மூலமும் திரட்டிவைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர்; இம்முயற்சியில் அரசினரும் பங்குகொண்டனர். அப்பணிகளை  இன்றும் ஒரு சில உணர்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆயினும் அதிமுக்கியமான ஆகச்சிறப்பான இப்பணி தொடர்ந்து நடைபெற வேண்டியுள்ளது.

   சுவடி திரட்டுதலின் நோக்கம்

   இன்றைய நிலையில் சுவடிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அருகியே காணப்படுகின்றது. சுவடிகளில் உள்ள செய்திகள் இதுவெனத் தெரியாமலேயே பலர் சுவடிகளை வைத்திருக்கின்றனர். அவற்றிலுள்ள செய்திகளை அறிந்துகொள்ளும் ஆவலும் அவர்களுக்கு இல்லை. இதனால் அவர்களிடம் உள்ள சுவடிகளைப் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிடுகின்றனர். இவ்வாறு பயன்படுத்தாத நிலையில் உள்ள சுவடிகள், சுவடிகளைப் பாதிக்கும் காரணிகளால் தாக்கப்பெற்று அழிவுக்குள்ளாகுகின்றன. சுவடிகளைப் பயன்படுத்தாததாலும், பாதுகாப்புணர்வு மக்களிடையே இல்லாததாலும் சுவடிகள் பெருமளவு அழிந்திருக்கின்றன. இவ்வழிவில் இருந்து சுவடிகளைக் காத்தலே சுவடி திரட்டுதலின் முதன்மை நோக்கமாகத் திகழ்கின்றது. மேலும், இவ்வாறு திரட்டப்பெற்ற சுவடிகளிலிருந்து இதுவரை அச்சாகாத நூல்களை அச்சிடுவதும், அச்சான நூலாயின் திருத்தப்பதிப்பு கொணர்வதும் இப்பணியின் துணைமை நோக்கமாகத் திகழ்கின்றது.


   சுவடி திரட்டும் முறைகள்

   காலந்தோறும் சுவடி திரட்டும் பணி நடைபெற்றிருக்கிறது என்றாலும் அவ்வக்காலத்துத் திரட்டுதலின் நோக்கம் வெவ்வேறாக இருந்திருக்கிறது. காலநிலைக்கேற்ப சுவடி திரட்டும் முறைகளை மூன்றாகப் பகுக்கலாம். அவை, 1. சங்க கால சுவடி திரட்டும் முறைகள், 2. இடைக்கால சுவடி திரட்டும் முறைகள், 3.உணர்ந்து சுவடி திரட்டும் முறைகள் என அமையும்.

   சங்க காலச் சுவடி திரட்டும் முறைகள்

   சுவடி திரட்டும் பணி சங்க காலத்திலேயே தொடங்கப்பெற்றுள்ளது. சங்கப் புலவர்கள் நாடெங்கும் பரவி தங்கள் கருத்துக்களை எழுதியிருக்கின்றனர். இவை தனி நூல்களாக இல்லாதவை. பலவகை நூல்களும் செய்யுட்களும் காலவோட்டத்தில் தமிழ்நாட்டவரால் புறக்கணிக்கப்பட்டோ வேறுவகையில் மறைந்தோ அருகின போலும். அக்காலகட்டத்தில் இப்பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த புலவர்களும் அரசர்களும் தமிழாராய்ச்சியில் ஊக்கங்கொண்டு பழந்தமிழ்ச் செய்யுட்களைத் தொகுக்கத் தொடங்கினர். உதிரியாக இருந்த பாடல்களையெல்லாம் தேடித் திரட்டி ஒருபொருளுடைய பாடல்களையெல்லாம் ஒருங்குபடுத்தித் தொகுத்துச் சேர்த்திருக்கின்றனர். இவ்வாறு சேர்த்த பாடல்களின் தொகுப்புதான் இன்று நாம் படித்துக்கொண்டிருக்கும் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும். ஆகச் சங்ககாலத்தில் சிதறிக் கிடந்த புலவர்களின் முயற்சியால் ஒன்று திரட்டும் முறை வெளிப்பட்டிருக்கிறது.

பழந்தமி்ழ் மன்னர்களின் சுவடி திரட்டல்

    சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தும், நூல்பல இயற்றச் செய்தும், இலக்கண இலக்கியங்களை வகுத்தும் வாழ்ந்த தமிழ்ச் சமூகம், கால ஓட்டத்தில் இடருற்ற காலத்திலும், தொடர்பறுந்த நிலையிலும் அரும்பெரும் ஓலைச்சுவடிகளின் அருமை உணர்ந்து மன்னர்களும், புரவலர்களும், புலவர்களும் திரட்டி வந்துள்ளனர். தமிழ் மன்னர் பலர் பலவிடத்தும் வாழ்ந்துவந்த பெரும் புலவர்களை ஒன்றுகூட்டினர்; இடம் அமைத்து, பொருளீந்து உதவினர்; பல நூல்களைத் தொகுக்கச் செய்தனர். எழுதச்செய்தும் பாதுகாத்தும் வந்தனர். இதனை, “இத்தொகை முடித்தான் பூரிக்கோ; இத்தொகை பாடியகவிகள் இருநூற்றைவர். இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது” என்னும் தொன்மைச்சான்றே நன்கு புலப்படுத்தும்.

  
  அறிஞர் புலவர் சுவடி திரட்டல்

    மன்னரின் ஆதரவோடு புலவர் பெருமக்களும் தமிழறிஞர்களும் சுவடிகளைத் திரட்டித் தொகுப்பதில் பெரும்பங்கு கொண்டிருந்தனர். இப்பணியினை நன்கு உணர்ந்த சான்றோர், குறுந்தொகை, நூல் இறுதிச் சுவடிகளில் “இத்தனை முதுமக்களது அரும்பெரும் வாக்குகளை நாமெல்லாம் அறிந்து சுவைக்கும்படி திரட்டிக்கொடுத்த பழைய சான்றோர்களை யாம் எங்கனம் புகழவல்லோம்!” என்று கூறி அவர்களைப் பாராட்டினர்.

  மேலும், “நாட்டில் அங்கங்கே சிதறி வழங்கிய தனிப்பாக்களை முயன்று தொகுத்துக் குறிப்புக்களுடன் இன்னோர் நமக்களித்திலரேல், சங்ககாலத்துப் புலவர்களின் அருமைப் பெயர்களையேனும், பெருமைச் செய்திகளையேனும், முற்காலத்து நிலைமை நிகழ்ச்சிகளையேனும் நாம் சிறிதேனும் அறிய இட முண்டோ?! என்று கூறி நன்றி செலுத்தினர்.

   “சங்ககாலச் சான்றோர்கள் அவ்வப்போது பாடிய புறத்திணைக்குரிய பாட்டுக்களுள், நானூறு பாட்டுக்களைத் தேர்ந்து, பண்டைநாளையச் சான்றோர் ஒருவரால் தொகுக்கப்பெற்றது இப்புறநானூறு என்பது உலகறிந்த செய்தி என்று பாராட்டி அச்சுவடியை ஆய்ந்து பதிப்பித்தனர். இச்சான்றோர் கருத்துகள் சங்க நூல்கள் திரட்டித் தொகுக்கப்பட்டனவே என்பதை வலியுறுத்துகின்றன.

   இடைக்காலச் சுவடி திரட்டும் முறைகள்

   பக்திக் காலமான இடைக்காலத்தில் பல ஆதீனங்களும், மடாலயங்களும், தேவாலயங்களும் அவரவர் சமயச் சார்புடைய சுவடிகளைத் திரட்டிப் பாதுகாத்து வந்துள்ளனர். சோழர்கள் காலத்திலும், பல்லவர்கள் காலத்திலும் கோயில்கள் கல்விச் சாலைகளாகத் திகழ்ந்திருக்கின்றன. பாண்டியர் காலத்தில் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பெற்று தமிழறிஞர்களை ஒன்று கூட்டி தமிழ்ப் பணிகளைச் செய்திருக்கின்றனர். கோவில்களில் உள்ள கல்விச் சாலைகளிலும், தமிழ்ச் சங்க நூலகங்களிலும் சுவடிகள் சேகரித்து வைக்கப்பெற்றும், புதியதாக எழுதப்படும் சுவடிகளை பொதுமக்கள் கற்கும் பொருட்டும் வைத்திருந்திருக்கின்றனர். ஆக இடைக்காலத்தில் எல்லோரும் கல்வி பெறவேண்டி சுவடிகளைத் தொகுத்து நூலகமாக்கிய முறை வெளிப்பட்டிருக்கிறது.

   வரலாற்றுச் சான்று

  “இராசராசன் தேவாரப்பாக்களைத் திரட்டி முறைப்படுத்த எண்ணினான்; அதற்கு உதவி செய்பவர் நம்பியாண்டார் நம்பி என்பவரே என்பதை வல்லார் கூறக்கேட்டுத் திருநாரையூர் சென்றான். அவரிடம் தன் கருத்தை அறிவித்தான். நம்பியாண்டார் நம்பியவர்கள், தேவாரத் திருமுறை ஏடுகள் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் மேற்றிசையில் மூவர் கையிலச்சினை பெற்ற காப்பினையுடைய அறையில் இருத்தலை உணர்த்தினார்.  அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் ஒருசேர வந்தால் தான் அறைவாயில் திறக்கும் என்பதனையும் உரைத்தார். அரசன் அவருடன் பொன்னம்பலம் சென்று தில்லைவாழ் அந்தணர் எதிர்ப்பையும் தாண்டி அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் படிமங்களை ஊர்வலமாக வரச்செய்து அரண்மிக்க அறையிலிருந்த தேவார ஏடுகளை எடுத்தான். சில ஏடுகள் புற்றினால் அழிந்து கிடந்தன. எஞ்சியவற்றை நம்பியார் முறைப்படுத்தினார். அவ்வெஞ்சிய ஏடுகள் தான் நமக்கு கிடைத்த தேவாரத் திருமுறைப் பாடல்கள்.

  இலக்கியச்சான்று

    பெருங்கதை மூன்றாங்காண்டத்தினிறுதியில், “முன்னாளின் மூவருரைகண்ட சோழன் முறைமையைப்போல் இந்நாளிலே கொங்கு வேண்மாக் கதை கண்டெழுதுவித்தான் பன்னாளுங் கீர்த்திப் பழைசை யடைஞ்சான்மெய்ப் பாலினியன் நன்னா வலர்புகழ் சின்னடைஞ் சான்றொண்டை நாட்டவனே” என்னுங் கட்டளைக் கலித்துறையில்  காணப்படுகிறது, இதனால் மூவரருளிச்செய்த திருமுறைகளைப் போலவே இந்நூல் பண்டைக் காலத்திலேயே படிப்பாரும் ஆதரிப்பாருமின்றி அருகி வழங்கி வந்தது என்பதும், அத்திருமுறைகளின்  அருமையறிந்து முயன்று பெற்றுக் கிடைத்த அளவில் எழுதுவித்த திருமுறை கண்ட ராஜ ராஜ அபய குலசேகரசோழ மகாராசாவைப் போலவே இதன் அருமையறிந்து முயன்று பெற்றுக் கிடைத்த அளவில் எழுதுவித்த உபகாரி பழைசை என்னும் ஊரிலுள்ள அடைஞ்சான் என்பவருடைய புதல்வராகிய சின்னடைஞ்சான் என்னும் பெயரின ரென்பதும்…வெளியாகின்றன”.
இந்த இலக்கிய இறுதிப் பாடலும் பதிப்பாசிரியர் விளக்கமும் தேவாரத் திருமுறைகளைத் தொகுத்த செய்தியையும், பிற்காலத்தில் கவனிப்பாரின்றி இருந்த சுவடிகளை தொகுத்ததையும் புலப்படுத்துகின்றன.

   செப்பேட்டுச்சான்று

   “அகத்திய னொடு தமிழாய்ந்தும்…… நூற்கடலைக் கரைகண்டு நோன்பகடா யிரம் வழங்கியும் மன்னெதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனி லருந்தமிழ்நற் சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும்”.

“வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில்வகுத்தும் உளமிக்க மதியதனால் ஒண்டமிழும் வடமொழியும் பழுதறத்தா னாராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும்”

என்பன செப்பேட்டுச் செய்திகள். இவற்றால் இடைக்காலத் தமிழ் மன்னர்களும், அறிஞர்களும், புலவர்களும் சுவடிகள் திரட்டுவதில் பங்கு கொண்டிருந்த நிலை தெளிவாகிறது.


திரு. ம. இராமகிருசுணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles