பாடல்:
கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
தொண்டைமான் இளந்திரையன் ( புறநானூறு 185)
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக்கூழ் அள்ளற் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே
பொருள்:
சக்கரத்தோடு அடிமரமும் சேர்ந்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம். வண்டியைச் செலுத்துபவன் திறமை உடையவனாக இருந்தால் வண்டி இடையூறு இல்லாமல் செல்லும். அவன் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ளும். அது போல், மன்னன் மாட்சிமை பொருந்தியவனாக இருந்தால் நாடு நலம் பெறும். மன்னன் தெளிவில்லாதவனாக இருந்தால், பகை என்னும் சேற்றில் நாடு மூழ்கி, ஒவ்வொரு நாளும் பலவிதமான கொடிய துன்பங்கள் மேலும் மேலும் வந்து சேரும்.
விளக்கம்:
“ஒரு நாட்டை ஆளும் அரசன் ஆட்சி புரியும் ஆற்றல் உடையவனாக இருந்தால் அந்நாடு நலம் பெறும்; அவன் ஆற்றல் அற்றவனாக இருந்தால் பலவகையான துன்பங்கள் வந்து சேரும்” என்று தொண்டைமான் இளந்திரையன் கூறுகிறார். இவர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த தொண்டைமான் மரபைச் சேர்ந்தவர். இவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படைக்குப் பாட்டுடைத் தலைவனும் ஆவார். சிறந்த அரசனாகவும், கொடை வள்ளலாகவும் இருந்தது மட்டுமல்லாமல் நல்ல தமிழ்ப்புலமை உடையனாகவும் விளங்கிய இவர், நற்றிணையிலும் மூன்று பாடல்களை (94, 99, 106) இயற்றியுள்ளார்.
உலகின் மிகப்பெரும் மக்களாட்சியான இந்திய ஒன்றியத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்யப்போகிறவர் யார் என்ற கேள்விக்கு, உலகிலேயே அதிகமான மக்கள் பங்கு கொண்ட தேர்தலின் மூலம் விடை கிடைத்துள்ளது. முன்பு ஆட்சியிலிருந்த பாஜக பெரும்பான்மையான இடங்களைப் பெற்ற கட்சியாக இம்முறையும் இருந்தாலும், ஆட்சியமைக்கப் போதுமான எண்ணிக்கை கிட்டாததால், தெலுங்கு தேசக் கட்சி மற்றும் ஜனதா தள உறுப்பினர்களின் ஆதரவில், முதன்முறையாக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக அதிதீவிர வலதுசாரிக் கட்சியாக இந்தியை, இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடித்து, ஒற்றைமயம், அதிகார மையப்படுத்தல், மதச்சிறுபான்மையினர், பட்டியலினத்தோர், பழங்குடியினர், மொழிச்சிறுபான்மையினர் ஆகியோரை ஒதுக்கி வைத்தல், வரைமுறையற்ற ஆதரவைப் பெருமுதலாளிகளுக்குக் குறிப்பாக அதானி அம்பானிக்கு நல்குதல், அரச நிறுவனங்களைக் கைப்பற்றுதல், மாநில அரசு உரிமைப்பறிப்பு மற்றும் ஒடுக்குதல் போன்றவற்றைச் சட்டப்பூர்வமாகவே செய்து வந்த பாஜகவுக்கு, அசுரப் பெரும்பான்மை அதிகமாக உதவியது. அது இப்போது இல்லை என்பது ஒரு சிறு ஆறுதல் என்றாலும், கவலைகள் குறைந்து விடும் என்று தோன்றவில்லை.
மன்னராட்சியில் ஒரு அரசனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், நம்பிக்கைகள் ஆட்சி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துவதைப் போல, மக்களாட்சியில் ஆளும்கட்சியின் தத்துவார்த்த பின்புலம் கொள்கை வகுப்பிலும், அதன் செயலாக்கத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. அவ்வகையில் கடந்த பத்தாண்டுகளில் பாஜகவின் வலதுசாரிப் போக்கு அரச நிர்வாக அமைப்புகளில் மட்டுமின்றி, குடிமக்களின் சிந்தனையோட்டம் மற்றும் மனப்பாங்கிலும் சில மாற்றமுடியாத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது கண்கூடு. முன்பெப்போதிலும் இல்லாத வகையில் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் கூர்மைப்பட்டுள்ளன. உண்மையான ஊடகங்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன மற்றும் அடிமை ஊடகங்கள் பாதிக்கப்படுவோர் மீது ஏவப்படுகின்றன. அநீதிக்கெதிராகக் குரல் எழுப்பும் வழிகள் யாவருக்கும் அடைக்கப்பட்டுள்ளன என்பதோடு நீதி வழங்கும் அமைப்புகள் மட்டுமின்றி நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கூட சிதைக்கப்பட்டுள்ளது இதுவரை ஒன்றியம் காணாதது.
கட்டற்ற அதிகாரம் கட்டற்ற ஒடுக்குமுறைக்குத் தான் காலமெல்லாம் வரலாற்றில் இட்டுச் சென்றிருக்கிறது. அதை நாம் மௌன சாட்சியாகக் காணும்படி சென்ற ஆண்டுகள் இருந்தன. ஆயினும் அது கடந்தகாலமாகவே இருந்துவிடும் என்று நாம் நிம்மதி கொள்ள முடியாது. ஏனெனில் அடுத்த ஐந்தாண்டுகளும் பாஜகவின் ஆட்சி தான்; மோடியின் ஆட்சி தான் என்பது நிகழ்கால உண்மை. எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடிய நிகழ்தகவைத் தேர்தல் முடிவுகள் அளித்திருக்கின்றன. எனவே மக்களைக் கூறுபோடும் அரசியலை இனியும் தொடராது, மக்களின் முக்கியமான சில காயங்களுக்கு மருந்து போடும் மக்கள் நல அரசியலைப் பாஜக முன்னெடுப்பது நல்லது. அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. அரசனும் அவன் செயல்பாடுகளும் தான் ஒரு நாட்டின் எழுச்சி அல்லது வீழ்ச்சியைத் தீர்மானிக்கிறது. அவ்வாறு மதத்தை முன்னிறுத்துவதை விட்டுவிட்டு மக்கள் முன்னேற்றத்தை முன்னிறுத்தி ஆளும்கட்சியான பாஜக இனி அரசியல் செய்ய விழைவது அக்கட்சிக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும். அது நடக்கும் என நம்புவோம்!
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.