ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே
(புறநானூறு 194)
எழுதியவர்: பக்குடுக்கை நன்கணியார்
துறை : பெருங்காஞ்சி
பொருள்:
ஒரு வீட்டில் சாவுப்பறை முழங்க, இன்னொரு வீட்டில் திருமண முழவு ஒலிக்கும். ஒரு வீட்டில் இளம் தலைவனும் தலைவியும் கூடி மகிழ்வர், இன்னொரு வீட்டில் கணவனைப் பிரிந்த மனைவி கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பாள். இவ்வாறு இரண்டு வகையாக உலகைப் படைத்துவிட்டான் பண்பில்லாதவன். துன்பம் நிறைந்த இந்த உலகில் இன்னாதவற்றைச் சிந்தை செய்யாது, இனியனவற்றை மட்டுமே கண்டு மகிழ்.
விளக்கம்:
தமிழர்களின் செவ்விலக்கியங்களுள் முக்கியமான புறநானூறு மூலம், தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை அணிகலன்கள் பழக்க வழக்கங்கள், வணிகம், வாழ்வியல் ஆகியவற்றைக் குறித்து நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் புறநானூற்றின் அக்காலத் தமிழ்ப்பாடல் ஒன்று, தற்காலத்தில் தமிழருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் அநீதியையும், ஆகப்பெரும் துரோகத்தையும் நமக்கு அறியத்தரும் என்று நாம் மட்டுமல்ல அதை எழுதிய பக்குடுக்கை நன்கணியாரே நினைத்திருக்க வாய்ப்பில்லை.
புவியியல் வழி கடல் பிரித்த ஈழத்தை, வரலாற்றின் போக்கில் நாம் சேர்ந்த இந்திய ஒன்றியத்தின் அரசியல் வழி, காலம் நமக்குத் தெரியாமலே உள்ளத்தால் பிரித்தது. கூப்பிடுதூரத்தில் கோடிக்கணக்கில் நாம் இருக்கையிலேயே, சிங்களக் காடையர்கள் பல இலட்சக்கணக்கான நம் தமிழ்மக்களை வேட்டையாடுவதைக் கண்டும் ஏதும் செய்யமுடியாத கையறுநிலைக்கும் குற்றவுணர்ச்சிக்கும் நம்மை ஆளாக்கிவிட்டு, அதனை தற்செயலாக இயல்பாக நடந்த ஒரு நிகழ்வாகக் கட்டமைக்க நம் சங்க இலக்கியத்தையே பயன்படுத்தியது எவ்வளவு பெரிய கயமைத்தனம் என்பதைக் கருணாநிதி அறிந்தே தான் அதனைச் செய்தார்.
எந்தத் தமிழ் பேசுவதால் அம்மக்கள் கொல்லப்படுகின்றனரோ, எந்தத் தமிழ் ஈழ உறவுகளையும் நம்மையும் இணைத்ததோ, எந்தத் தமிழ்பேசும் மக்களின் வாக்கைப் பெற்று அதிகாரத்துக்கு வந்தாரோ, எந்தத் தமிழ் மொழியைப் பெரும்பான்மையாகக் கொண்டே ஒரே அரசான தமிழ்நாட்டு அரசின் தலைவராக இருந்தாரோ, அதே தமிழை, அதன் தொன்மையான ஒரு பாடலை, அத்தமிழருக்குத் தான் செய்த துரோகத்தை நியாயப்படுத்த, அதனால் விளைந்த பேரழிவைப் புறந்தள்ள, தனது அப்பட்டமான பதவி வெறியை ஒளித்து மறைக்க, தனது அரசியல் இலாபங்களுக்காக ஒரு இனப்படுகொலைக்குத் துணை போன பெருங்குற்றத்தை சிறியதாக்கிப் புரட்ட, தமிழர் இரத்தக்கறை படிந்த கைகளை உதறிக் கழுவிவிட அந்தத் தமிழையே பயன்படுத்தியது தான், உச்சகட்ட கோபத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
எந்த அளவுக்கு சூடு சுரணையற்ற மண்ணாந்தைகளாக, சுய சிந்தனை இல்லாத ஆட்டு மந்தைகளாக நம்மை நினைத்திருந்தால், இப்படி ஒரு மறுமொழியை, நம்முடைய சங்கப்பாடலையே மேற்கோளாகச் சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசியல் செய்திருக்க முடியும்? அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை; நம்மை நம் அறியாமையை, ஒற்றுமையின்மையை, ஏமாளித்தனத்தை, எதையும் எளிதாகக் கடந்து சென்றுவிடும் மறதியைத் தான் நொந்துகொள்ள வேண்டும். ஏன் இப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் கொஞ்சமாவது மனச்சான்று இருந்திருந்தால் இவ்வளவு பெரிய இனப்படுகொலையை எதிர்கொண்ட பிறகும், நம்மைக் கொன்றொழித்த காங்கிரசுக்கும், அதற்குக் கங்காணி வேலை பார்த்த திமுகவுக்கும் இந்த மானங்கெட்ட தமிழ் மக்கள் வாக்களித்து இருப்பார்களா? அதுவும் குறிப்பாக இக்கட்டான சூழலில் நட்டாற்றில் வைத்து திமுக நம்மைக் கழுத்தறுத்ததைப் பத்தே ஆண்டுகளில் மறந்துவிட்டு ஆளும் அரியணையை அளிப்பார்களா?
இலட்சக்கணக்கில் தமிழ் மக்கள் செத்து விழுந்த இடத்தில் சிந்திய உதிரத்தின் ஈரம் காயவில்லை; இறந்து சிதைந்த மக்களின் உடல்களை எடுக்கக்கூட ஆளில்லை; அப்படிப்பட்ட அவல நிலையிலும் சக்கர நாற்காலியில் டெல்லிக்குச் சென்று தன் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் பதவிப்பிச்சை எடுக்க அலைந்த கருணாநிதியைத் தமிழர்கள் என்றும் மறக்கக்கூடாது; மன்னிக்கவே கூடாது. உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போரை நிறுத்துகிறேன் என்று ஆறு மணி நேரம் உண்ணாநோன்பு இருந்து பதுங்கு குழிக்குள் இருந்த மிச்ச சொச்ச தமிழ்மக்களையும் கொன்றது, அது குறித்து கேள்விகேட்டதற்கு மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று எள்ளியது, தன் உயிரையையே தீக்கிரையாக்கி மக்களிடையே எழுச்சியைக் கொணர்ந்த முத்துக்குமாரின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தியது, இனப்படுகொலை நடந்த வடு மறையாது முள்வேலி முகாம்களுக்குள் வதைப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏதும் செய்யாமல் செம்மொழி மாநாடு நடத்தி கூத்தாடியது, கொத்துக்கொத்தாக தமிழர்களைக் கொன்றபோது வேடிக்கை பார்த்துவிட்டு, ஆட்சியும் பதவியும் பறிபோனதும் 2012இல் தனித்தமிழீழம் பற்றி ஒரு சொல் கூட இல்லாத தீர்மானங்களை நிறைவேற்றிய வெற்று (டெசோ) ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தி மாய்மாலமிட்டது என கருணாநிதி தமிழர் முதுகில் குத்திய நிகழ்வுகளைக் கணக்கெடுத்துப் பட்டியலிட்டால் பக்கம்பக்கமாக எழுதி மாளாது.
எத்தனையெத்தனையோ சாதனைகள் செய்த தமிழினத்தின் பெரும்புகழை, சங்க இலக்கியத்தின் மூலம் நாம் அறிகிறோம். வாழ்க்கைத் தத்துவம் ஒன்றை நமக்குச் சொல்ல எழுதப்பட்டிருந்தாலும், இந்த ஒரு பாடல் மட்டும் இனி வரும் காலம் முழுக்க திராவிடம் என்ற பெயரில் நம்மைச் சுரண்டிய, ஆரிய இந்திய ஒன்றியத்தின் இரத்த வெறிக்குத் துணை போன, இலங்கையின் அரச பயங்கரவாதத்தை வேடிக்கை பார்த்த, சர்வதேசம் தமிழர் குருதி குடிப்பதைக் கண்டும் காணாதிருந்த திமுகவின், அதன் தலைவராக இருந்த கருணாநிதியின் கொடும்பாவத்தையும், இரண்டகத்தையும் நமக்கு எந்நாளும் நினைவூட்டுவதாக இருக்கட்டும். சங்க இலக்கியத்தின் எந்தப் பாடலை மறந்தாலும், தமிழர்கள் இந்தப் பாடலை மறக்காதிருப்பது தான் நமது எதிர்காலத்துக்கு மிக நல்லது.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.