சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுஉள னோஎன வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்;
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!
- காவற்பெண்டு (புறநானூறு 86)
திணை: வாகை (வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரிப்பது வாகை எனப்படும்)
துறை: ஏறாண் முல்லை (வீரம் மிகுந்த மறக்குடியை மேல் மேலும் உயர்த்திக் கூறுதல்)
விளக்கம்:
சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு, “உன் மகன் எங்கே உள்ளான்?” என்று கேட்கிறாய். புலி தங்கிச் சென்ற குகையைப் போல் அவனைப் பெற்ற வயிறு இங்கிருக்க, என் மகன் எங்கிருக்கிறான் என்பதை நான் அறியேன். அவன் போர்க்களத்தில் தோன்றுவான். அங்கு போய்ப் பார்!” என காவற்பெண்டு சொல்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.
காவற்பெண்டு அல்லது காதற்பெண்டு என்பவர் மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்து கொண்ட பெண்பாற் புலவர். இவர் சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். சங்ககால மக்களின் வீரத்தையும், தமிழ்ப்பெண்களின் நெஞ்சுரத்தையும் படம்பிடித்துக் காட்டும் இவர், புறநானூற்றில் இயற்றிய பாடல் இது ஒன்றே.
தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர், தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு அவர்களையும் அவரது தாயார் பார்வதியம்மாள் அவர்களையும் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தவறாமல் ஒருசேர நினைவூட்டும் இப்பாடல், போருக்கஞ்சாத ஒரு தலைமுறை முனைமுகத்தே நின்று முடியாதவற்றை முடித்துக் காட்டிய பேராண்மை கொண்டது என நமக்கு நினைவூட்டுகிறது.
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா