பாடல்:
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.
- பிசிராந்தையார் ( புறநானூறு 184)
பொருள்:
விளைந்த நெல்லை அறுத்து அரிசியாக்கி உணவுக் கவளங்களாக யானைக்குக் கொடுத்தால், சிறு துண்டு நிலத்தில் விளைந்த நெல் கூட பல நாட்களுக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதை விட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக்கணக்கில் பொருட்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாது ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் தன் நாடும் கெடக் காரணமாகிவிடுவான்.
விளக்கம்:
பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஒரு ஊர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இப்புலவர், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர். மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்ததை அறிந்த பிசிராந்தையார், சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ்சோழன் இறந்தவிடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார். இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும் (67, 184, 191, 212), அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும், நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றியவர். இவர் செய்யுள்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.
பிசிராந்தையார் காலத்தே பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி, தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி வாங்கினான். அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை. அந்நிலையில், அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஒரு அரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இவ்வாறு நல்வழி நடக்க அரசனுக்கு அறிவுரை கூறுவதாகப் பாடப்படும் “செவியறிவுறூஉ” எனும் துறை, பாடாண் திணையின் நாற்பத்தெட்டு வகைகளுள் ஒன்று என தொல்காப்பியம் கூறுகிறது.
ஒரு நாட்டின் நிர்வாகத்துக்கு வரி தான் அடிப்படைத் தேவை. வரியல்லாத வருமானமும் அரசுக்கு உண்டு என்றாலும் கூட, பெரும்பாலும் வரியின் மூலம் பெறப்படும் வருவாயை வைத்தே குடிமக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்டங்கள் அன்றும் இன்றும் அரசுகளால் முன்னெடுக்கப்படுகின்றன. அத்தகைய வரியை அரசன் மக்களுக்கு உகந்த வகையில், அவர்களை இன்னலுக்குள்ளாக்காத முறையில் பெற வேண்டும் என்பதையே இப்பாடல் உணர்த்துகிறது. ஆனால் நாம் வாழும் இந்த இந்திய ஒன்றிய நாட்டின் வரிவிதிப்பு முறைகள், பாரபட்சமாகவும், அடாவடித்தனமாகவும் அண்மையில் மாறியிருப்பது குறித்து பலரும் பேசி வருகின்றனர். சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பில், ஏழை மக்கள் பயன்படுத்தும் அன்றாடத் தேவைக்கான பொருட்களுக்கு அதிக வரியும், பணக்காரர்கள் வாங்கிக் குவிக்கும் தங்கக்கட்டிகளுக்குக் குறைந்த வரியும் விதிக்கப்பட்டது அப்பட்டமான அநீதி எனப் பேசப்பட்டது.
வேலியே பயிரை மேய்வது போல, இடர் காத்து நிற்க வேண்டிய அரசே, சகிக்க முடியாத அளவு கடுமையுடனும், இரக்கமின்றியும் வரியை மக்களிடமிருந்து பிடுங்கினால், மக்களின் பாடு சொல்லிமுடியாது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிதி நிர்வாகம் குறித்துப் பாடிய தமிழ்ப்புலவரது கருத்து, இன்றைக்கும் பயன்படுவதே சங்க இலக்கியத்தின் சிறப்பு.
நகைமுரணாக இதே பாடலை 2019 நிதி நிலை அறிக்கையை வெளியிடும்போது மேற்கோள் காட்டிப் பேசினார் பாஜகவின் ஒன்றிய நிதியமைச்சர். அதே அமைச்சரால் இவ்வாண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னான நிதிநிலை அறிக்கை இம்மாதம் வெளியிடப்பட்டது. அரசின் வரிவாங்கும் முறை எப்படியிருக்க வேண்டும் என்று பாடமெடுத்த அவரது கட்சி நடத்தும் அரசு, பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்குப் பாதகமாகவும், பெருமுதலாளிகளுக்குச் சாதகமாக நடந்து வருவது அவர்களின் உண்மையான எண்ணத்தைக் காட்டுகிறது. தமிழையும் தமிழரையும் ஒரு அலங்காரப் பொருள் போல் பயன்படுத்தும் பாஜக அரசு, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதை அதுவும் புறத்தை ( புறநானூற்றை) வைத்தே பேசுவதை என்னவென்று சொல்ல? காலத்தின் கோலமென்றா? நம் குருதி குடிக்க அலையும் ஓநாயின் பொய் ஓலமென்றா?
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.