நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே! ( 66 புறநானூறு )
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்:
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை
துறை : அரச வாகை.
விளக்கம்:
கடலில் பெரிய கலங்களைக் காற்றின் சீற்றத்தினால் பாதிக்கப்படாமல் செலுத்தியவர்கள் சோழ மன்னர்கள். அவர் வழிவந்த, மிகப்பெரும் யானைப்படையை உடைய கரிகால் வளவனே! நீ, பகைவரின் இடம் தேடிச் சென்று, உன் ஆற்றல் உலகறிய அப்போரில் வெற்றி கண்டாய். ஆனால், புறப்புண் பட்டதற்கு நாணி, வெண்ணிப் போர்க் களத்திலேயே வடக்கிருந்து உயிர் நீத்து புகழ் உலகம் சென்ற சேரமான் பெருஞ்சேரலாதன், உன்னைக் காட்டிலும் நல்லன் அல்லவோ!!!
பண்டைத் தமிழரது புறவாழ்வைச் சொல்லும் காலக்கண்ணாடி தான் புறநானூறு. அதன் பல பாடல்களுள் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது. பார் புகழும் சோழப் பேரரசின் பெருமைமிகு அரசன் தான் கரிகாலன். தஞ்சாவூர்க்கு 24 கி.மீ. தொலைவில் உள்ள “வெண்ணிப் பறந்தலை” என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில், தன்னை எதிர்த்து வந்த சேர மன்னன் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், பதினொரு வேளிரையும் ஒருங்கே தோல்வியுறச் செய்தான்.
போரில் கரிகாலன் விட்ட அம்பு சேரலாதனது மார்பைத் துளைத்து ஊடுருவி முதுகினின்றும் வெளிப்பட்டது. அம்முதுகிற்பட்ட புண்ணைப் புறப்புண்ணாகும் என்று நாணிச் சேரன் தன் கையிற் பிடித்த வாளுடன் வடக்கிருந்து பட்டினி கிடந்து உயிர் விட்டான். அக்காலத்தில் முதுகிற் புண்படல் தோல்வியாகக் கருதப்பட்டதால் வடக்கிருத்தல் என்பது வழக்கமாக இருந்தது.
பொதுவாகப் போரில் வென்ற அரசனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெறுவதே புலவர்கள் செய்யக்கூடியது; ஆனால் அரசமகள் அல்லாத சாதாரண குடிமகள் வெண்ணிக் குயத்தியாரோ பேரரசனான கரிகாலனிடமே வந்து பெருவெற்றி பெற்ற உன்னிலும், புறப்புண் பட்டுவிட்டதால் மானக்கேடு வந்ததென எண்ணி வடக்கிருந்து உயிர்விட்டானே பெருஞ்சேரலாதன், அவன் நல்லவன் என்று சொல்கிறாள். இதுவே அறிவுடைமகளிருக்கு அக்காலத்தில் இருந்த ஆற்றல்; அங்கீகாரம்; அளப்பரிய மதிப்பு.
இன்று இதுபோல முற்றதிகாரம் கொண்ட ஒரு தலைவரிடம் சென்று, ஒரு பெண் இவ்வாறு கருத்து கூறிவிட இயலுமா? அப்படியே நிகழ்ந்தாலும் அவரால் அடுத்தடுத்த நாட்களில் இயல்பான வாழ்வை வாழ முடியுமா? என்று ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இன்றைய மக்களாட்சிக்கு அன்றைய மன்னராட்சி நடந்த சோழப்பேரரசிடம் கற்க ஏராளமான படங்கள் உள்ளன என்பதே இப்பாடல் நமக்குச் சொல்லும் செய்தி.
திருமதி. விமலினி செந்தில்குமார்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.