யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
– கணியன் பூங்குன்றனார் (பாடல் 192, புறநானூறு)
பொருள்
எல்லா ஊரும் எம் ஊர்; எல்லா மக்களும் எம் உறவினரே. நன்மையும் தீமையும் அடுத்தவரால் வருவதில்லை; அது போல துன்பமும் அதற்கு மருந்தான ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை. சாதலும் பிறத்தல் போலத்தான்; வாழ்தலை இனிது என்று நம்பி மகிழ்ந்து மயக்கமுறுதலும் இல்லை; வாழ்தலை தீயது என்று எண்ணி வெறுத்தலும் இல்லை. வானத்தில் மின்னலுடன் வருகின்ற சிறுதுளி மழைநீர் ஒன்றுசேர்ந்து வெள்ளமாகி பெரிய கல்லைக் கூட பேராற்று நீர்வழி ஓடிப் பள்ளத்தில் தள்ளுகிறது. அது போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று என்பது போல சான்றோர் பார்வையில் தெளிந்த வண்ணம் ஆகும். ஆதலினால், பெருமையில் பெரியோரை வியந்து போற்றுவதும் தவறு; அதைவிட
சிறியோரை இகழ்ந்து தூற்றுவதும் மிகவும் தவறு.
பாடலின் சிறப்பு:
புறநானூறு என்று சொன்னாலே பலருக்கும் நினைவில் வரும் முதற்பாடல் இதுதான். பலராலும் பல நேரங்களிலும் எடுத்தியம்பப்பட்ட இதன் முதல் வரி தமிழரல்லாதவரிடமும் பெரும்புகழ் பெற்ற சிறப்புடையது. உலகில் பல இனங்களும் அயலவரை ஆபத்தானவராகக் காணும்போது எல்லாரும் நம் உறவினரே என்று எண்ணத்துணியவே மிகவுயர்ந்த மனமும், மிகப்பரந்த சிந்தனையோட்டமும் வேண்டும். அவ்வகையில் தமிழரது வாழ்வியல் நெறிகளை, சீரிய பண்பாட்டைப் பறைசாற்றும் முக்கியமான பாடல் இது.
சுட்டாலும் வெண்மை குறையாத சங்கொத்த சில மேன்மக்கள் கூடவே, பிறவி எட்டாலும் பாவக்கணக்கைத் தீர்க்க முடியாத பல இழிமக்களும் வாழ்கின்றனர். கானமயில்களும், அதைக் கண்டிருந்த வான்கோழிகளும் ஒரே புவியைத் தான் பகிர்ந்து கொள்கின்றன. ஆழிசூழ் பேருலகில் எல்லாமே கலந்துதான் கிடக்கின்றன. இரவும் பகலுமாய், ஒளியும் இருளுமாய், மலர்தலும் உதிர்தலுமாய், விசுவாசமும் துரோகமுமாய், நேர்மறைகளும் எதிர்மறைகளும், ஒற்றை இரத்தத்துளியில் உருவான ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளைகள். ஒன்றிருந்தால், மற்றொன்று அதனுள்ளேயே மறைந்திருக்கும். அத்தனையும் கண்டு பக்குவப்பட்டவன், ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்படும் மரத்துண்டாகக் கடந்து செல்லத் தன்னைப் பழக்கிக் கொள்வான்.
சிங்கத்தின் வலுவை, பாம்பின் விஷத்தை, யானையின் எடையை, கழுகின் துல்லியத்தைப் போலப் பாதுகாப்புக்கெனத் தனிப்பட்ட குணாதியங்கள் ஏதுமில்லாத மனிதன், ஒட்டுமொத்தமாக இப்பூமியில், பல்கிப் பெருகியதோடு இன்று, வல்லாதிக்கம் செய்யும் உயிரினக்கூட்டமாகவும் மாறியதற்கு ஒரே காரணம், சிந்திக்கும் திறன் மட்டும் தான். ஆக்கமும் அழிவும், தெளிவும் குழப்பமும், அடுத்தடுத்த நொடிகளில் நிரம்ப, நிமிடத்துக்கு நூறு எண்ணங்களை மனித மனம் நினைக்கிறது. அதனால் வெளிப்படுத்தப்படும் சொற்களும், வார்த்தைகளின் விளைச்சலாக செயல்களும், தனி மனிதன், குடும்பம், சமூகம், உலகம் என பல கட்டங்களில் தாக்கத்தையும், மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. கருவில் பிறந்த எல்லாம் மரித்துப் போனாலும், அறிவில் பிறந்தவற்றுக்கு மட்டும் அழிவேது? எனவே எண்ணம் போல வாழ்க்கை என்பது வெறும் சொற்றொடரில்லை; அது ஒரு வாழ்வியல் சுருக்கம்.
கணியன் பூங்குன்றனார் பகர்ந்தது போல, வாழ்தலும், சாதலும் மனிதர்க்குப் புதிதில்லை தான். வாய்வழி மொழி பேசி, உயிர்த்தொகுதியில் வன்மை பெற்ற நம்மை, கொரோனா எனும் வாய் மூக்கு வழி உள்சென்ற நுண்கிருமி ஒன்று ஆட்டிப்படைத்தது. ஆயினும் அனைத்தையும் தாண்டி மனித இனம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. தீதும் நன்றும் பிறர்தர வாராது. அப்படி வந்தாலும் அதற்கான நோதலும் தணிதலும் நமக்குள்ளிருந்தே வருவதால் நாமே நமக்கான துணையாக இருப்போம்! விடியாத இரவும், முடியாத துயரமும் என்றுமே இருக்கப்போவதில்லை. பயணங்கள் தொடர்வதும், பாதைகள் கடப்பதும் வாழ்வின் நியதியாதலால், தொடர்ந்து நடப்பது மட்டுமே நமக்கு விதிக்கப்பட்ட கடப்பாடு. எனவே கடமையைச் செய்து அதற்கான பலனை எதிர்பாராது காலம் அதன் போக்கில் நம்மைச் செலுத்துவதைக் கண்டு தெளிவடை என்கிறார், கணியன் பூங்குன்றனார். எவ்வளவு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை இத்தனை எளிய சொற்களில், இவ்வளவு நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சில வரிகளில் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவதே தமிழின் சிறப்பு! அதனை ஆழப்படித்து உள்வாங்கி அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பது நம் அனைவரின் பொறுப்பு!
திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.